Language Selection

புதிய ஜனநாயகம் 2009

''ஈழத் தமிழர்களின் இன அழிப்புப் போருக்கு சோனியா தலைமையிலான காங்கிரசு ஆட்சி அதிகாரத்தை முறைகேடாகப் பயன்படுத்தி அனைத்து உதவிகளையும் இலங்கை அரசுக்கு வழங்கி வருகிறது. இந்நிலையில் காங்கிரசுக்கும் காங்கிரசுக்குத் துணை போகும் தி.மு.க.வுக்கும் தமிழர்கள் பாடம் புகட்ட வேண்டும். காங்கிரசு ஆட்சி அகற்றப்படுவதன் மூலமே ஈழத்தில் இனப்படுகொலைகளைத் தடுத்து நிறுத்த முடியும்.

 எனவே, காங்கிரசுதி.மு.க. வேட்பாளர்களைத் தோற்கடிப்பதே இத்தேர்தலில் தமிழர் கடமையாக இருக்க முடியும். களத்தில் சம போட்டியில் நிற்கக் கூடிய வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்வதன் மூலமே, இவர்களைத் தோற்கடிக்க முடியும். இவர்களை எதிர்த்து நிற்கும் வலிமையான கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டும். நிச்சயமாக அந்த வலிமையான கூட்டணி அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணிதான்!'' என்று இச்சந்தர்ப்பவாதத்துக்குக் கொள்கை சாயம் பூசி பேட்டியளித்துள்ளனர். பெரியார் தி.க.வின் கோவை இராமகிருஷ்ணனும் "விடுதலை' இராசேந்திரனும்.


பார்ப்பனபாசிசத்தைச் சித்தாந்தமாகக் கொண்டுள்ள அ.தி.மு.க. தலைவி ஜெயலலிதா, தொடக்கத்திலிருந்தே ஈழ விடுதலைப் போரை எதிர்த்தும் ஈழ ஆதரவாளர்களை ஒடுக்கியும் வந்தவர் என்பது நாடறிந்த உண்மை. ஈழத் தமிழர்கள் மீதான சிங்கள பாசிச அரசின் தற்போதைய கொடிய போரின்போது கூட, ''போர் என்றால் மக்கள் மடியத்தான் செய்வார்கள்'' என்று திமிராகப் பேசிப் போரை ஆதரித்து நின்றார். காங்கிரசுக்குத் தூதுவிட்டு பேரம் படியாத நிலையில், தேர்தல் ஆதாயத்துக்காக கூட்டணி கூஜாக்களின் ஆலோசனையின்பேரில், போர் நிறுத்தம் கோரி உண்ணாவிரத நாடகமாடிய அவர், இப்போது ''தனித் தமிழ் ஈழம்தான் ஒரே தீர்வு'' என்று சவடால் அடித்து வருகிறார்.


இருப்பினும், ''கடந்த காலங்களில் ஈழத் தமிழர் விவகாரத்தில் துரோகத்தனமான நிலைப்பாடுகளை எடுத்து வந்துள்ள ஜெயலலிதா, தற்போது சந்தர்ப்பவாதமாக ஈழத் தமிழருக்கு ஆதரவாகக் குரல் கொடுத்த போதிலும், அவர் தமிழர்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கிறார். ஜெயலலிதாவின் சந்தர்ப்பவாதம் தமிழர்களின் உணர்வுகளுக்கு ஆதரவாகவும், கருணாநிதியின் சந்தர்ப்பவாதம் தமிழர் உணர்வுகளுக்கு எதிராகவும் இருப்பதால், ஜெயலலிதாவின் சந்தர்ப்பவாதத்தை ஆதரிப்பதே இச்சூழலில் சரியான முடிவாக இருக்க முடியும்'' என்று தமது பச்சையான சந்தர்ப்பவாதத்துக்கு கூச்சநாசமின்றி இவர்கள் நியாயம் கற்பிக்கின்றனர்.


நாடாளுமன்றத் தேர்தலில் பார்ப்பனபாசிச ஜெயலலிதாவுடன் கூட்டணி கட்டுவதற்கான உந்து பலகையாக, ''இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம்'' என்ற பெயரில் ஒரு அணியை உருவாக்கி ஏய்த்த வை.கோ., நெடுமாறன், ராமதாசு, தா.பாண்டியன் ஆகியோர், பின்னர் தேர்தல் கூட்டணி கட்டிக் கொண்டு ஜெயலலிதாவுக்குக் கூஜா தூக்குகின்றனர். இத்தகைய ஓட்டுக்கட்சி சந்தர்ப்பவாத அரசியலுக்கு அப்பாற்பட்ட கொள்கைபூர்வ இயக்கமாகக் காட்டிக் கொள்ளும் சில தமிழின குழுக்களும் காங்கிரசையும், தி.மு.க.வையும் தேர்தலில் வீழ்த்துவதே முதன்மைப் பணி என்று கூறிக் கொண்டு பிழைப்புவாதத்தில் மூழ்கி, பார்ப்பனபாசிச ஜெயாவுக்கு வெட்கமின்றி காவடித் தூக்குகின்றன.


இச்சந்தர்ப்பவாதத்தை நியாயப்படுத்த, ''கருப்பனைக் கட்டி வைத்து அடித்தால், வேலன் வேலியை முறித்துக் கொண்டு ஓடுவான்'' என்ற பழமொழியைக் கூறுகிறார். தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலரான பெ.மணியரசன். ''ஓர் ஊரில் கருப்பையா, வேலையா என்று இரண்டு திருடர்கள் இருந்தார்கள்; இரண்டு பேரும் பிடிபடாமல், திருடித் திரிந்தார்கள்; ஒருநாள் கருப்பையா மட்டும் பிடிபட்டார்; அப்போது சொன்ன பழமொழி இது'' என்று அவர் விளக்கமளிக்கிறார். அதாவது காங்கிரசு, பா.ஜ.க. எனும் இரண்டு திருடர்களில், இப்போது காங்கிரசு பிடிபட்டு விட்டதாம். காங்கிரசைத் தேர்தலில் வீழ்த்தினால், அத்வானியும் ஜெயலலிதாவும் தமக்கும் இதுபோல் நேர்ந்துவிடும் என்று அஞ்சி ஈழ விடுதலையை ஆதரிப்பார்களாம். தமது பிழைப்புவாதத்துக்கு இப்படி விளக்கமளித்து காதில் பூ சுற்றுகிறார் மணியரசனார்.


''இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம்'' என்ற பெயரில் ஒரு அணியை அமைத்து பார்ப்பனபாசிச ஜெயாவுக்கு விசுவாச சேவை செய்த பழ.நெடுமாறன், இப்போது ஈழத் தமிழர் படுகொலைக்குத் துணைபோகும் காங்கிரசு தி.மு.க. கூட்டணியை தேர்தலில் வீழ்த்தக் கோரியும், ஜெயலலிதாவுக்கு வாக்களிக்கக் கோரியும் தமிழருவி மணியன் முதலான காங்கிரசு பிரமுகர்களையும் இணைத்துக் கொண்டு வாகனப் பிரச்சாரம் செய்யக் கிளம்பிவிட்டார். பெரியார் தி.க.வினரும் இதேபோல பேனர்கள், வாகனப் பரப்புரை, பொதுக் கூட்டங்கள் என அமர்க்களப்படுத்துவதோடு, அ.தி.மு.க. பிரமுகர்களையும் தமது மேடையில் அமர்த்தி தேர்தல் பிரச்சாரம் செய்யவும் துணிந்துவிட்டார்கள். சென்னைஇராயப்பேட்டையில் பெரியார் தி.க.வைச் சேர்ந்த பத்ரி நாராயணன் என்ற முன்னணி ஊழியரின் கொலையில் சம்பந்தப்பட்டுள்ள பன்னீர் செல்வம் என்ற உள்ளூர் அ.தி.மு.க. பிரமுகரை தமது மேடையில் அமர்த்தி தேர்தல் பரப்புரை செய்யுமளவுக்கு பெரியார் தி.க.வினரின் பிழைப்புவாதம் எல்லோரையும் விஞ்சி நிற்கிறது.


இந்த அளவுக்கு சந்தர்ப்பவாத புதை சேற்றில் மூழ்கி முத்துக் குளிக்காமல், அறிவார்ந்த முறையில் சந்தர்ப்பவாதத்தை நியாயப்படுத்துகிறார், பெ. மணியரசன். ''நாம் யாருக்கும் வாக்களிக்கச் சொல்லவில்லை. வாக்களிக்க விரும்புவோர் காங்கிரசுக்குப் போடாதீர் என்று வேண்டுகிறோம்'' என்று அதாவது அ.தி.மு.க. கூட்டணிக்கு வாக்களியுங்கள் என்று அதிமேதாவித்தனமாகக் கோருகிறார் அவர்.


பேராசிரியர் சரசுவதி தலைமையில், ஈழப் போரை உடனடியாக நிறுத்தக் கோரி 13 நாட்களாக சென்னையில் தொடர் உண்ணாவிரதம் இருந்த பெண்கள், கருணாநிதி உள்ளிட்டு பலரும் வேண்டுகோள் விடுத்த போதிலும் உண்ணாவிரதத்தைக் கைவிட மறுத்த அவர்கள், ஏப்ரல் 25ஆம் தேதியன்று "அம்மா'வின் வேண்டுகோளை ஏற்று உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார்கள். காங்கிரசு "அன்னை'க்கு எதிராகத் தொடங்கிய உண்ணாவிரதம் "அம்மா'வின் கடைக்கண் பார்வையால் முக்தி அடைந்துள்ளது. இப்போது பேராசிரியர் சரசுவதி தலைமையிலான அப்பெண்கள் குழு, அ.தி.மு.க. கூட்டணியை ஆதரித்துப் பிரச்சாரம் செய்யப் போகிறதாம்.


ஈழப் பிரச்சினையில் சுப்பிரமணியசாமி, சோவின் கொள்கைதான் பா.ஜ.க. அ.தி.மு.க.வின் கொள்கை என்பது உலகறிந்த உண்மை. ஆனால் இது, இந்த ஈழ ஆதரவாளர்களுக்குத் தெரியாது போலும்! வாஜ்பாயி பிரதமராக இருந்தபோது, ''யாழ் கோட்டையில் சிக்கிக் கொண்ட 20,000 சிங்கள சிப்பாய்களை விடுவிக்கா விட்டால், இந்திய விமானப்படையை அனுப்புவோம்'' என்று புலிகளை மிரட்டியது பா.ஜ.க. அரசு. அந்த "பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால், நாளை ராஜபக்சேவை மிரட்டும்' என்று நம்மை இவர்கள் நம்பச் சொல்கிறார்கள்.


ஈழம், சேதுக் கால்வாய், காவிரி, ஒகேனக்கல், முல்லைப் பெரியாறு, மீனவர் படுகொலை என அனைத்துப் பிரச்சினைகளிலும் தமிழகத்துக்கு எதிரானதுதான் காங்கிரசு, பா.ஜ.க. மற்றும் போலி கம்யூனிஸ்டுகளின் நிலை. அதற்குத் துணைபோவதுதான் பிற கட்சிகளின் நிலை. இருந்தாலும் என்ன? டெல்லியில் அதிகாரத்திலிருக்கும் கட்சிகளிடம் கருணை மனு கொடுப்பதன் மூலம் ஈழப் பிரச்சினையைத் தீர்த்து விட முடியும் என்று நம்புகிறார்கள். இந்தப் பிழைப்புவாத ஈழ ஆதரவாளர்கள். "இத்தாலி மாதா'வுக்குப் பதில் "பாரத மாதா'வின் ஆட்சியமைந்து அந்த ஆட்சி மனது வைத்தால் ஈழம் மலர்ந்து விடும் என்று பா.ஜ.க.வுக்கும் அ.தி.மு.க.வுக்கும் வாக்களிக்க சொல்லி, கடைந்தெடுத்த துரோகத்தனத்தை கூசாமல் செய்து வருகிறார்கள். காஷ்மீர்வடகிழக்கிந்திய தேசிய இன மக்கள் மீது இராணுவ அடக்குமுறையை ஏவிவரும் இந்திய அரசு, ஈழ விடுதலை மீது கருணை காட்டும் என்று நாட்டு மக்களை நம்ப வைத்து ஏய்த்து வருகிறார்கள்.


இலங்கையிலும் தெற்காசிய வட்டகையிலும் இந்திய ஆளும் வர்க்கங்களின் அரசியல், பொருளாதார, இராணுவ ஆதிக்க நோக்கங்கள் தான் டெல்லி ஆட்சியாளர்களை வழிநடத்துமேயன்றி, ஈழத் தமிழ் மக்களின் அவலமோ, தமிழக மக்கள் அளிக்கும் வாக்குகளோ அல்ல. எத்தகைய தேர்தல் தோல்வியும் பாசிச காங்கிரசுக்குப் பாடம் புகட்டாது; எத்தகைய தேர்தல் வெற்றியும் அகண்ட பாரத வெறி பிடித்த அத்வானியையும், பார்ப்பனபாசிச ஜெயலலிதாவையும் ஈழ ஆதரவாளர்களாக மாற்றி விடாது.


இந்து இந்தி இந்தியா எனும் பார்ப்பன தேசியத்தை எதிர்ப்பதையே தமது கொள்கை இலட்சியமாக அறிவித்துக் கொண்ட இந்தப் பிழைப்புவாத ஈழ ஆதரவாளர்கள், இன்று வெளிப்படையாகவே தமிழ் விரோத பார்ப்பன பாசிச ஜெயாவையும் பா.ஜ.க.வையும் ஆதரிக்கக் கிளம்பிவிட்ட பிறகு, இத்துரோகக் கும்பலை தமிழக மக்களிடம் அம்பலப்படுத்தி முடக்காமல், ஈழத்தின் மீதான இந்தியாவின் மேலாதிக்கப் போரைத் தடுத்து நிறுத்திட முடியாது.

விரோத தமிழர் விரோத பார்ப்பனபாசிச ஜெயலலிதாவுக்கு மக்கள் மத்தியில் அங்கீகாரம் தேடித்தரும் திருப்பணியை மேற்கொண்டு, அ.தி.மு.க. கூட்டணிக்கு வாக்களிக்கக் கோரி கிளம்பியிருக்கிறார்கள், சில ஈழ ஆதரவாளர்கள். ''ஈழ மக்களைக் கொன்று குவிக்கத் துணைபோகும் காங்கிரசை, துரோகம் செய்யும் தி.மு.க.வைத் தேர்தலில் தோற்கடிப்போம்'' என்று கூறிக் கொண்டு அத்வானியையும் ஜெயலலிதாவையும் ஆட்சியில் அமர்த்தும் ஆழ்வார் வேலையில் இறங்கியிருக்கிறார்கள், இந்தத் தமிழினவாதிகள். ''காங்கிரசுக்குப் போடாதே ஓட்டு; தமிழினத்துக்கு வைக்காதே வேட்டு! காங்கிரசுக்குப் போடும் வாக்கு தமிழினத்திற்குப் போடும் தூக்கு!'' என்று பிரச்சார முழக்கங்களை வடித்துக் கொண்டு அ.தி.மு.க. வுடன் இணைந்து ஓட்டுப் பொறுக்கும் தேர்தல் பரப்புரைகளையும் அவர்கள் செய்து வருகிறார்கள்.