இலங்கையில் யுத்தத்தின் பின்னான அமைதியும் சமாதானமும், பண்பாட்டுச் சிதைவைத் தமிழ்ப் பிரதேசங்களில தேசிய மயமாக்கியுள்ளது. எங்கும் பணமும், பணப் பண்பாடுகளுமே அனைத்தையும் தீர்மானிக்கும் சக்தியாகியுள்ளது. இந்தப் பணம் உருவாக்கிய ஆடம்பரம், அந்தஸ்த்து, திமிருடன் கூடிய வக்கிரம், சிறுபான்மையினரின் பண்பாக இருந்த போதும், அவர்களே சமூகத்தின் முழுமையையும் தீர்மானிக்கும் சக்தியாகியுள்ளனர்.
இந்தப் பண்பாட்டுக் கலச்சாரச் சிதைவு தமிழ் பிரதேசங்கள் எங்கும், இலங்கைத் தமிழர் செறிவாக வாழும் பிரதேசங்களில் பொதுவாக நடக்கின்றது. இந்தச் சிதைவு பொருளாதார ரீதியான சமூக ஏற்றத்தாழ்வின் இடைவெளி அதிகரிப்பால் தேசியமயமாகின்றது. இந்த சமூக ஏற்றத் தாழ்வு பொதுவாகவே இரண்டு தளங்களில் பிரதானமாக நடக்கின்றது.
1. புலம் பெயர்ந்த மேற்கு நாடுகளில் இருந்து, சொந்த மண்ணுக்கு சென்று வரும் ஒரு பிரிவால் நடக்கின்றது.
2. யுத்தப் பொருளாதரத்தை அடிப்படையாகக் கொண்டு உருவான திடீர் பணக்கார கும்பலால் நடக்கின்றது.
இதுவும் மூன்று வகையைக் கொண்டது. இது தமிழ் மக்களை எல்லை இல்லாது வகையில் சுரண்டியதால் உருவானது. மற்றையது புலம் பெயர்ந்த நாட்டில் வாழ்வோரிடம் உறவை முன்நிறுத்தி சுரண்டுவதன் மூலம் உருவானது. இறுதியாக புலம் பெயர் சமூகத்துக்கு சேவை செய்வதன் மூலம், உயர் நுகர்வைப் பூர்த்தி செய்யும் வக்கிரமான நடைமுறை மூலம் உருவாகின்றது.
ஒட்டுமொத்தத்தில் உலகமயமாதல் பண்பாடு இதற்கு அக்கம்பக்கமாகச் செயல்படுகின்றது. இலங்கையில் இனவாத யுத்தம் தொடங்கும் முன் இருந்த சமூகமும், யுத்தம் தொடங்கியவுடன் இருந்த சமூகமும் இன்று இல்லை. சமூகம் மேலும் கீழுமாக பிளந்ததனால், வக்கிரம் பிடித்து வெம்பிக் கிடக்கின்றது.
இந்தச் சமூகப் பிளவில் போராடிய இயக்கங்களின் பங்கும் பணியும் குறிப்பாக இருந்துள்ளது. இந்த பணப் பண்பாடு போராட்ட அடிப்படையையும், போராட்டத்தில் பங்கு கொள்வோரையும் கூடத் தகர்க்கின்றது. அவர்களும் இயல்பாகவே அதுவாக மாறிவிடுகின்றனர். பல போராட்ட உணர்வுகள், பணப் பண்பாட்டுக்குள் தேசியமயமாகின்றது. அவற்றை இக் கட்டுரை இதற்குள் ஆராயவில்லை. சமூக அமைப்புக்குள் நடக்கும் பணப் பண்பாட்டு மாற்றத்தையும், அதன் சமூகச் சிதைவையும் பார்ப்போம்.
அமைதி சமாதானம் என்பது மேற்கு நோக்கிய புலம்பெயர் சமூகத்தின் குசியான உல்லாசப் பயணங்களை உருவாக்கியுள்ளது. சொந்த மண்ணை நோக்கி நகர்ந்துள்ள இந்த உல்லாசம், பணப் பண்பாடாகி தேசிய வக்கிரமாகின்றது. ஜரோப்பிய நாடுகள் பலவற்றில் இருந்து, இலங்கைக்கான விமானச் சேவையை இலங்கை விமானங்களே நாள்தோறும் நடத்தும் அளவுக்கு, புலம் பெயர் சமூகத்தி;ன் உல்லாச பயணங்கள் விரிவடைந்துள்ளது.
இப்படி இலங்கை விமானம் மூலமும், அன்னிய விமானம் மூலமும் உல்லாசம் செல்லும் தமிழர்கள், ஈரோ நாணயங்களையும், டொலர் நோட்டுகளையும் கொண்டு செல்லுகின்றனர். இந்த பணம் அங்கு 100 மடங்கு பெறுமானமுடையதாக மாறுகின்றது. இதன் மூலம் அங்குள்ள வாழ்க்கைத் தரத்தை விட, 100 முதல் 200 மடங்கு நுகரும் ஆற்றலை இயல்பாகவே இவர்கள் அடைகின்றனர். அத்துடன் உல்லாசப் பயணமாக இருப்பதால், நுகரும் ஆற்றல் 1000 மடங்கு மேலானதாக மாறுகின்றது. இந்த நுகரும் ஆற்றல் ஒரு சமூக அதிர்வை ஏற்படுத்துகின்றது. பணத் திமிரை ஏற்படுத்துகின்றது. ஒரு வக்கிரத்தை உருவாக்குகின்றது. ஒரு அலட்சியத்தை உருவாக்கின்றது. எடுத்தெறியும் போக்கை உருவாக்கின்றது. சமூகத்தை ஏறி மிதிப்பதை சமூக அந்தஸ்தாக கருதுகின்றது. உயர்மட்டக் கனவுகள் இயல்பாக நனவாக, பண்பாட்டுக் கலாச்சார சிதைவுகள் சர்வ சாதாரணமாக்கியுள்ளது. நுகர்வு சார்ந்த சமூக வாழ்வியல் இருப்பை, தீர்க்க முடியாத மனநோய்க்குள் வடிகாலக்கியுள்ளது. பண்பாட்டு கலாச்சார உறவுகள் லும்பன் குணாம்சமடைந்துள்ளது.
பணம் மூலம் கிடைத்த திடீர் சமூகத் தகுதி, அந்தஸ்த்து மிகவும் தவறான சமூக உறவாக்கங்களை வழிநடத்த தூண்டுகின்றது. அலட்சியம், எடுத்தெறிதல், வேண்டாவெறுப்பாக அணுகுதல், திமிராக விதாண்டாவாதம் செய்தல், சமூக இருப்பையும் அதன் அறிவையும் கேலி செய்தல் என நீளும் பணப்பண்பாடு, எங்கும் சிதைவையும், அவலத்தையும் நிரந்தரமாக்கியுள்ளது. பணத்தின் மூலம் கிடைத்த சமூகத் தகுதியை கையாளும் போது, அடிப்படையான சமூகப் புரிதல் இன்றி தமிழ் சமூகத்தையே சிதைக்கின்றனர். மேற்கத்தைய பண்பாட்டில் காணப்படும் ஜனநாயக விழுமியங்களை கோட்பாட்டு ரீதியாக ஏற்றுக் கொள்ளாத புலம்பெயர் தமிழ்ச் சமூகம், நடைமுறையில் அதன் ஒரு பகுதியை அனுபவிக்கின்றது. இப்படி உணர்வுக்கும் நடைமுறைக்கும் உள்ள இடைவெளியை சமூகப் பொருளாதார அடிப்படையில் புரிந்து கொள்வதில்லை. அதை இழிவாகவும் கேவலமானதாகவும் காட்டி வெறுக்கின்றனர். ஆனால் பணம் மூலம் கிடைத்த திடீர் சமூகத் தகுதியின் மேல், மேற்கத்தைய சமூக உறவுகளை கண் மூடித்தனமாக திணிப்பதன் மூலம், பல நிரந்தர மனநோயாளர்களையும், நிரந்தர சமூகப் பிளவுகளையும் ஏற்படுத்துகின்றனர்.
உழைப்பை 100 முதல் 200 மடங்காகி விடும் நுகரும் ஆற்றலுடன் கூடிய பணவெறி, அனைத்தையும் இழிவாகக் கருதத் தொடங்குகின்றது. தமிழ் மண்ணில் நிகழும் மனித உழைப்பை எள்ளி நகையாடுகின்றது. கடந்த காலத்தில் உழைத்து வாழ்ந்த சொந்தப் பண்பாட்டை எள்ளி நகையாடுகின்றனர். அதைத் தமது பகட்டு வாழ்க்கையால் மூடி மறைக்கின்றனர். மேற்கத்தைய நவீன நகரங்களில் எப்படி ஒரு பணக்கார கும்பல் சொகுசாக வாழ்கின்றதோ, அதே போன்று ஒரு சொகுசு வாழ்வை ஒரு மாதத்துக்குள்ளாகவே வாழ்ந்து வக்கரிக்கின்றனர். இந்த நிலையில் தமிழ்ச் சமூகத்தின் ஒரு பகுதி இது போன்று ஆர்ப்பாட்டமாக ஆடம்பரமாக வாழ்கின்றது. பல பத்து லட்சங்களை செலவு செய்யும் மனநிலையுடன் கூடிய ஆர்ப்பாட்டங்கள், அட்டகாசங்கள் புலம்பெயர் நாட்டில் இருந்து உல்லாசம் சென்றவனின் உணர்வாக, அதை வெளியில் இருந்து மக்கள் கூட்டம் அண்ணாந்து பார்க்கின்றது.
மக்கள் இந்த பணக்காரக் கும்பலை அண்ணாந்து பார்க்கின்றார்கள் என்பதை, இந்தப் பணக்காரக் கும்பலும் அதன் செல்வாக்குக்கு உட்பட்ட பிரிவும் ஏற்றுக் கொள்வதில்லை. அப்படி அங்கு வறுமையில் மக்களா? என்று விதாண்டவாதம் செய்கின்றனர். ஆனால் உண்மை என்ன? 2003 இல் மார்கழி மாதம் வெளியாகிய புள்ளிவிபரம் ஒன்றில்; யாழ் குடாவில் 80 ஆயிரம் குடும்பங்கள் வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழ்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு குடும்பம் 5 உறுப்பினரைக் கொண்டது என்றால், 4 லட்சம் பேர் வாழ வழியற்ற வறுமைக்குள் சிக்கியுள்ளனர். இது யாழ்குடா நாட்டு மக்கள் தொகையில் பெருபான்மையை இந்த கதிக்குள்ளாக்கியுள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இதை மேலும் உறுதி செய்கின்றது. 80 ஆயிரம் குழந்தைகள் வறுமை காரணமாக வடக்கு கிழக்கில் பாடசாலைக்கு செல்லவில்லை. 65 ஆயிரம் குழந்தைகள் வறுமை காரணமாக கல்வியை இடையில் கைவிட்டுள்ளனர். இப்படி சமூகத்தின் பெரும் பகுதி வறுமைக்குள் சென்றுள்ளது. இதை எள்ளி நகையாடும் வகையில் மறுபக்கத்தில் அட்டகாசமான வாழ்க்கை ஒன்று அரங்கேறுகின்றது. நிலத்தில் கால் பதிக்காது, வாகனங்களில் பவனி வருகின்றனர். சமூக உறவுகளையும் பண்பாடுகளையும் எடுத்து எறியும் வகையில் பல சம்பவங்கள் நிகழ்கின்றன. உதாரணமாக உறவினரைப் பார்க்க ஆட்டோவில் வந்து, ஆட்டோவை வாசலில் நிறுத்தி விட்டு உறவு கொண்டாடி விட்டு மீளும் திமிர் பண்பாடாக அரங்கேறுகின்றது. ஆடம்பரமே வாழ்கையாகிப் போன யாழ்குடா நாட்டில் 35,000 வாகனங்கள் இன்று ஓடுகின்றன. மிக நெருங்கிய குடும்ப உறவுகளின் பண்பாடுகளைத் தூக்கி எறிந்து விட்டு, பணத்திமிருடன் ஆடம்பரமாக சுற்றி வருவதும், தேவைப்பட்டால் உயர் தரமான ஓட்டல்களில் கூட தங்கி நின்று தமது பெருமையைப் பீற்றுகின்றனர். இதை மையமாக வைத்து பல நவீன உல்லாச விடுதிகள், ஓட்டல்கள், சூப்பர் மக்கற்றுகள், வெளி நாட்டவருக்கு மேற்கத்தையப் பொருட்களை கொண்ட நவீன மக்கற்றுகள், சுற்றுலா மையங்கள், விசேட குளிரூட்டப்பட்ட வாகனங்கள் என்று விரிந்த அடிப்படையில் ஒரு புல்லுருவி வர்க்கத்துக்காக உருவாகியுள்ளது. விரைவில வடக்கு கிழக்கில்; பெண்களைக் கொண்ட மசாஜ் மையங்கள், முதல் பாலியல்த் தேவையை பூர்த்தி செய்யும் எல்லைவரை சூழல் விரைவில் மாறிவிடும். இன்று வெளிநாட்டுத் தமிழனின் பணத்தை ஆதாரமாகக் கொண்ட கொழும்பு வாழ் தமிழர்களுக்கு, இது ஒரு சேவைத் தொழிலாகிவிட்டது. மேற்கத்தைய தமிழனின் தேவையை பூர்த்தி செய்யும் சேவைத் தொழிலை அடிப்படையாகக் கொண்டு, வடக்கு - கிழக்கு மக்களின் வாழ்க்கையும், அவனின் பொருளாதாரக் கட்டமைப்புக்களும் உருவாகின்றது. உற்பத்தியை எடுத்தால் மேற்குத் தமிழனின் தேவையை பூர்த்தி செய்யும், ஏற்றுமதி உற்பத்தியாக தேசிய உற்பத்தி மாறிவிட்டது. இது ஏகாதிபத்திய உலகமயமாதல் தேவையை ப+ர்த்தி செய்யும் எல்லைவரை விரிவடைகின்றது.
பணப் பண்பாடடை அடிப்படையாகக் கொண்டு சமூக அந்தஸ்து பெற்ற புலம்பெயர் தமிழர்கள், தமது செல்வாக்குக்கு உட்பட்ட குடும்பங்களுக்குள்ளான சாதாரணப் பிரச்சனைகளை வெட்டொன்று துண்டு இரண்டாகக் கையாண்டு வக்கிரமாகவே பிளக்கின்றனர். சொத்துகளை உரிமை கோரவும், விற்றுத் தின்னவும் நுகர்வு வெறியுடன் சொத்துச் சண்டைகளை குடும்பங்களிடையே தொடங்கி வைக்கின்றனர். அடங்கி கிடந்த சாதி ஆதிக்கத்தைக் கூட கிண்டி கிளறிவிடுகின்றனர். எங்கும் எதிலும் தலையிடும் புலம்பெயர் சுற்றுலாத் தமிழ்ப் பயணிகள், மக்களின் வாழ்க்கைத் தரத்தை எட்டாத உயரத்துக்கு மாற்றிவிட்டனர். சந்தையின் விலையை எது தீர்மனிக்கின்றது என்று ஆராய்ந்தால், புலம்பெயர் தமிழனின் வாங்கு திறனுக்கு ஏற்ப சந்தை விலை மாறிவிடுகின்றது. ஏழைகளின் நுகர்வு என்பது முற்றாக அலட்சியமாகியுள்ளது. உதாரணமாக, கௌனவத்தை வேள்வியின் போது 800 ஆட்டுக் கிடாய் வெட்டப்பட்ட போது, கிடாய் ஒன்றின் குறைந்த விலையாக 20,000 ரூபாவுக்கு விற்பனையானது. புலம்பெயர் தமிழர்கள் தனது பணப் பலம் மூலம் ஒவ்வொரு கிடாயாக தமக்குள் போட்டியிட்டு வாங்கினர். இறைச்சிப் பங்கின் விலை 1000 ரூபாவாக இருந்தது. இது ஐரோப்பிய சந்தை விலையை விட அதிகமானதாக இருந்தது. அங்கு வாழ்ந்த மக்கள் வேடிக்கை பார்க்கத்தான் முடிந்தது. மீன் சந்தையில் மீன்கள் ஏலம் கூறும் போது, புலம்பெயர் தமிழன் சாதாரண சந்தை விலையை விட அதிகமாக ஒரே கேள்வியில் வாங்கிவிடுகின்றான்;. அங்கு வாழும் மக்களை எரிச்சல் ஊட்டக் கூடிய வகையில், பண வக்கிரம் தலைவிரித்தாடுகின்றது. இதற்கு எதிரான வெறுப்பு பல தளத்தில் வெளிப்படுகின்றது. உதாரணமாக வீதிகளில் செல்லும் இளைஞர்கள் அக்கபக்கமாக சென்று வாகனங்களுக்கு வழி விட மறுக்கும் போது, அவர்கள் கூறும் காரணம் காரில் வருவோர் வெளிநாட்டவர்கள்.
ஒருபுறம் புலம்பெயர் சமூகம் உருவாக்கிய இந்தப் பகட்டு வாழ்க்கையை மிஞ்சும் வகையில், யுத்தப் பொருளாதாரத்தை பயன்படுத்தி உருவான திடீர் பணக்கார கோடிஸ்வரர்கள் பல நூறு பேர் வடக்கு கிழக்கில் உருவாகியுள்ளனர். இவர்களின் வாழ்கைத் தரத்துடன் கூடிய ஆடம்பரங்களும் பகட்டுத்தனங்களும் புலம்பெயர் தமிழ் சுற்றுலாப் பயணிகளால் கூட வாழ முடியாத வகையில் உள்ளது. புலம்பெயர் தமிழன் மூக்கில் கை வைக்கும் அளவுக்கு வெம்பிக் கிடக்கின்றது. அங்கே உள்ளவர்கள் எப்படி வாழ்கின்றனர்? நாங்கள் எங்கேயோ ஒரு மூலைக்குள்! என்று சொல்லி புலம்பும் அளவுக்கு இந்த வெப்பிராயம் வெடிக்கின்றது. அவர்களின் நுகர்வின் அளவு லட்சங்கள், கோடிகளாக மாறிவிட்ட நிலையில், எங்கும் அதை நோக்கிய கனவுடன் தமிழ்ச் சமூகம் எல்லாவிதமான சமூகச் சீரழிவிலும் ஈடுபடுகின்றது. சமூகத்தின் தற்கொலை எதார்த்தமாகியுள்ளது.
இந்த திடீர் பணக்காரக் கும்பல் யுத்த நெருக்கடியை தனக்குச் சாதகமாக்கி, பல பத்து கோடிகளை தன்னகத்தே குவித்துள்ளது. இராணுவம் மற்றும் புலிகளுக்கு பணத்தை லஞ்சமாகக் கொடுத்து பொருட்களைக் கடத்தி வருவதன் மூலம், அத்தியாவசியப் பொருட்கள் முதல் ஆடம்பரப் பொருட்கள் மேலான தட்டுப்பாட்டை பணமாக்கினர். லஞ்;சங்கள், வரிகள் எதுவாக இருந்த போதும், அவற்றை மக்களின் தலையில் சுமத்தியதன் மூலம், இலகுவாக லாபங்களைப் பல மடங்காக்கினர். புலம்பெயர் சுற்றுலாப் பயணிகளின் அற்ப நுகர்வு வக்கிரங்களை பூர்த்தி செய்யும், பணப் பண்பாட்டுக்கு இசைவான சந்தைப் பொருளாதாரத்தை இந்தத் திடீர் பணக்காரக் கும்பல் உருவாக்கி அதையும் கட்டுப்படுத்துகின்றது. பணத்தைக் குவிப்பதில் வெற்றிபெற்றுள்ள இந்தக் கும்பல், தமிழ்ப் பிரதேசங்களின் புதிய சுரண்டும் வர்க்கமாக உருவாகியுள்ளது.
மனித சமூக உறவுகள் சிதைந்து, அதற்கு பதில் பண உறவுகள் முதன்மை அடைந்துள்ளது. அறிவு, முதுமை, சமூக ஆற்றல், அனுபவம், பெரியவர்கள் என்ற வடிவில் நீடித்த சமூக அந்தஸ்தும், சமூக பண்பும் மறுக்கப்படுகின்றது. மாறாக பணம் சார்ந்த அந்தஸ்தும் பண்பும் திணிக்கப்படுகின்றது. சமூகக் கண்ணோட்டம் சிதைந்து சுயநலம் முதன்மை பெறுகின்றது. லும்பன் வாழ்க்கை முறையுடன் கூடிய பண்பை, இந்தப் பணப் பண்பாடு சமூகப்பண்பாடாக்கின்றது. தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தின் விளைவுகளில் இதுவும் ஒன்றாகியுள்ளது.
தமிழ் தேசிய விடுதலைப் போராட்டம் பல பத்தாயிரம் உயிர்த் தியாகங்களுடன் நடக்கின்ற அதே மண்ணில், நடந்து வரும் பண்பாட்டு கலாச்சார சிதைவு ஒரு இனத்தின் அடிப்படையையே அழிக்கின்றது. பாரிய உளவியல் சிக்கலை இது உருவாக்கின்றது. தற்கொலைகளையும், மன நோய்களையும், குடும்பச் சிதைவுகளையும், சமூகப் பிளவுகளையும் நிரந்தரமாக்கின்றது. அமைதி சமாதானம் என்று தொடர்கின்ற சூழல் நிலையில், இது அவலமாக பிரதிபலிக்கின்றது.