Language Selection

07_2006.jpgஉழைக்கும் மக்களின் வாழ்வுரிமைக்காகப் போராடுவது, பொதுக்கூட்டங்கள் ஊர்வலங்கள் மறியல் நடத்துவது, தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்வது இப்படி இதுநாள் வரை அரசியல் சாசனத்தில் இருந்துவந்த சட்டபூர்வ ஜனநாயக உரிமைகளை அடுத்தடுத்து நீதிமன்றம் சட்டவிரோதனமானதாக அறிவித்து வருகிறது. இத்தீர்ப்புகள் ஒருபுறமிருக்க, இந்தியக் குற்றவியல் சட்டத் தொகுப்பையே ""பொடா''விற்கு இணையாகத் திருத்தி எழுதும் முயற்சியில் மைய அரசு

 ஏற்கெனவே இறங்கி விட்டது. தனியார்மயம் தாராளமயம் என்ற பெயரில் திணிக்கப்படும் மறுகாலனியாக்கத்துக்கு ஏற்றவாறு சட்டபூர்வ பாசிச கொடுங்கோலாட்சி படிப்படியாக அரங்கேறி வருவதையே இவையனைத்தும் நிரூபித்துக் காட்டுகின்றன.

படர்ந்துவரும் இப்பாசிசப் பேரபாயத்தை உழைக்கும் மக்களுக்கு உணர்த்தும் வகையில், மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் கடலூர் கிளை, 3.6.06 அன்று மாலை விருத்தாசலம் இளங்கோ நினைவு அரங்கில் (மக்கள் மன்றம்) ""உலகமயம் தனியார்மயம் தாராளமயம்: நமது வாழ்க்கையைச் சூறையாடும் சுனாமிகள்'' எனும் தலைப்பில் கருத்தரங்கை நடத்தியது.

இக்கருத்தரங்கில் ""உலகமயமாக்கலுக்காக நமது நாட்டின் இறையாண்மையைக் காவு கொடுக்கும் புதிய சட்டங்களும் புதிய தீர்ப்புகளும்'' என்ற தலைப்பில் பெங்களூர் உயர்நீதிமன்ற வழக்குரைஞர் தோழர் பாலன் சிறப்புரையாற்றினார். பன்னாட்டுக் கம்பெனிகளின் பகற்கொள்ளைக்காக சிறுவியாபாரிகள் நசுக்கப்படுவதையும், இதற்கேற்ப சட்டங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளதையும், இதற்கெதிராக வழக்கு தொடுத்தால் அது செல்லுபடியாகாது என்று நீதிமன்றம் புதிய தீர்ப்பு வழங்குவதையும், வாழ்வைச் சூறையாடும் உலகமயமாக்கலுக்கு எதிராக உழைக்கும் மக்கள் போராட வேண்டிய அவசியத்தையும், மக்கள் போராட்டங்களால் நேபாளத்தில் மன்னராட்சி வீழ்த்தப்பட்ட முன்னுதாரணத்தையும் விளக்கிய அவர், மனித உரிமை பாதுகாப்பு மையம் மற்றும் புதிய ஜனநாயக புரட்சிகர அமைப்புகளில் இணைந்து போராட அறைகூவினார்.

""உலகமயமாக்கலால் சூறையாடப்படும் விவசாயிகள் தொழிலாளர்கள் இளைஞர்களின் வாழ்க்கையை காஸ் ஸ்டவ்வும் கலர் டி.வி.யும் கரை சேர்க்குமா?'' என்ற தலைப்பில் உரையாற்றிய பு.ஜ.தொ.மு. பொதுச் செயலாளர் தோழர் சுப.தங்கராசு, தொழிற்சங்க உரிமையும் பணிப்பாதுகாப்பும் பறிக்கப்பட்டு தொழிலாளர்கள் வீதியில் வீசியெறியப்படுவதையும், விவசாயிகள் கடன் சுமையால் தற்கொலை செய்து கொண்டு மாண்டு போகும் அவலத்தையும், எவ்வித உரிமையுமின்றி கால்சென்டர் பி.பி.ஓ.க்களில் படித்த இளைஞர்கள் நவீன கொத்தடிமைகளாக்கப்பட்டுள்ளதையும், குமுறிக் கொண்டிருக்கும் மக்களை இலவச கவர்ச்சித் திட்டங்களைக் காட்டி ஆட்சியாளர்கள் ஏய்த்து வருவதையும், மறுகாலனிய தாக்குதலுக்கு எதிராக புரட்சிகர அமைப்புகளில் அணிதிரண்டு போராட வேண்டிய அவசியத்தையும் எடுத்துரைத்தார்.

ஏறத்தாழ 200க்கும் மேற்பட்டோர் திரண்டு வந்து சிறப்பித்த இக்கருத்தரங்கத்தின் இறுதியில், 40 பேர் தங்களை மனித உரிமை பாதுகாப்பு மையத்தில் உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டு உலகமயமாக்கலுக்கு எதிராகப் போராட உறுதியேற்றனர்.

ம.உ.பா. மையம், கடலூர் மாவட்டக் கிளை.