"யாருக்கு வாக்களிக்க வேண்டும் - பகுதி ஒன்று" கட்டுரைக்குப் பதிலளித்த தோழர் ஒருவர், கள்ளரை வெளியேற்ற அனுரவுக்கு வாக்களிக்க வேண்டுமென்று ஒரு கருத்தை முன்வைத்துள்ளார்.
அதில் "நான் வெளிப்படை. நான் குமார் குணரத்தினத்தின் கொள்கைகள் கருத்தை விரும்பும் ஆள். ஆனால் அவர்களால் இப்பொழுது வெல்ல முடியாது. ஆனால் இந்தக் கள்ளரை வெளியேற்ற அனுரவுக்கு ஆதரவு. ஆனால் எனக்கு வோட்டுரிமை இல்லை" இந்தத் தர்க்கமானது, அரசியல் ரீதியாக சரியானதாவெனின், இல்லை.
பொதுப்புத்தியில் கூறுவதையும், நம்புவதையும்.. முன்வைத்து, புரட்சிகர அரசியல் நடைமுறையை முன்னிறுத்த முடியாது. குறிப்பாக புரட்சிகர மக்கள் அரசியலை முன்வைத்து வழிநடத்த வேண்டிய இடத்தில் இருக்கும் தோழர்கள், பொது அலையில் இழுபட்டு, வால்பிடித்து செல்ல முடியாது. மாறாக மக்களை அரசியல்ரீதியாக கற்றுக் கொடுக்கும் வண்ணம் வழிநடத்திச் செல்ல வேண்டும்.
மக்கள் போராட்ட முன்னணியால் (அவர்களால்) "இப்பொழுது வெல்ல முடியாது" என்ற தர்க்கமானது, புரட்சிகர அரசியல் வரலாற்றில் நிகழ வேண்டிய அரசியல் கூறுகளை மறுதலிக்கின்றது.
1. தேசிய மக்கள் சக்கி மூடிமறைக்கும் (அரசியல் - பொருளாதார) ஊழலுக்கு எதிராக, எதிர்க்கட்சியாக மக்கள் போராட்ட முன்னணி செயற்பட முடியும் என்ற அரசியல் உண்மையை, அரசியல்ரீதியாக மறுதலிக்கின்றது.
2. தேசிய மக்கள் சக்தி பெரும்பான்மை (அறுதி) பெறமுடியாத சூழலில், மக்கள் போராட்டக் முன்னணி அரசியல் நிபந்தனையுடன் ஊழலுக்கு.. எதிரான புரட்சிகர அரசியலை முன்னெடுக்க நிர்ப்பந்திக்கும் அரசியலுக்கும், கண்காணிப்புக்குமான ஜனநாயக அரசியலை மறுக்கின்றது.
தேசிய மக்கள் சக்தி தோற்றுப் போகக் கூடாது வெல்ல வைக்கவேண்டும் என்ற அரசியல், மறைமுகமான பொதுப்புத்தி மூலம் தேர்தல் முடிவுகள் குறித்த அரசியல் உண்மைகளை மறுதலிக்கின்றது.
1. தேசிய மக்கள் சக்தி அரை வெற்று அரசியல் அதிகாரத்தைப் பெற்றுவிட்ட உண்மையை மறுதலிக்கின்றது.
2. கிடைத்துள்ள அரை வெற்றி 90 முதல் 100 தொகுதிகளைத் தெளிவாக தேசிய மக்கள் சக்தி வெல்லும் என்ற உண்மையை வெளிப்படுத்தி இருக்கின்றது. இதைக் கண்டுகொள்ளாது மக்கள் போராட்ட முன்னணிக்குக் கிடைக்கும் வாக்குகளைத் தடுப்பது, எந்த வகையில் புரட்சிகரமான அரசியலாக இருக்கும்?
மக்களை முன்னின்று வழிநடத்த வேண்டிய புரட்சிகர சக்திகளுக்கு வரலாற்று உதாரணமொன்றில் இருந்து எடுத்துக் காட்டுவது அவசியமாகின்றது.
இந்த வகையில் சோவியத் (ருசியப் புரட்சியின்) புரட்சியின் போது, நடந்த சம்பவங்கள் இன்று பொருந்தும். அன்று ருசியக் கம்யூனிஸ்ட் கட்சியில் (அன்று சமூக ஜனநாயகக் கட்சி) இருந்து உருவான போல்சிவிக் (பெரும்பான்மை – வர்க்கக் கட்சி), மென்சிவிக்குகள் (சிறுபான்மை – முதலாளித்துவக் கட்சி) கட்சிகள், 1917 ஆண்டு புரட்சிகளின் போது என்ன அரசியல் முடிவுகளை எடுத்தன என்பதை இங்கு பொருத்திப் பார்ப்பது அவசியமானது.
1917 ஆண்டு பெப்ரவரி நடந்த முதலாவது முதலாளித்துவப் புரட்சியின் போது, மென்சிவிக்குகள் (முதலாளித்துவக் கட்சி) ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றினர். அவர்கள் நிலப்பிரபுத்துவத்தையும், முடியாட்சியின் எச்சசொச்சங்களையும் ஒழிப்பதாகக் கூறி முதலாளித்துவப் புரட்;சியை (ஜே.வி.பி போல்) முன்னெடுத்த போது, லெனின் தலைமையிலான போல்சுவிக்குகள் அதை எதிர்த்துப் பாட்டாளி வர்க்கப் புரட்சியை முன்வைத்தனர். பெப்ரவரியில் மிகச் சிறுபான்மையினராக இருந்த லெனின் தலைமையிலான கட்சி, நவம்பர் புரட்சியின் போது பெரும்பான்மை பெற்று, வர்க்க ஆட்சியை நிறுவியதை அரசியல் வரலாற்று பாடங்களில் இருந்து கற்றுக் கொள்ளமுடியும்.
இந்த வகையில் புரட்சிகரமான அரசியலை முன்வைக்கும் மக்கள் போராட்டக் முன்னணியை ஆதரிக்க வேண்டியது அவசியமானது. அவர்களை வெல்ல வைக்க வேண்டும். "வோட்டுரிமை இல்லை" என்பதால், இது முக்கியமில்லை என்பது அரசியல் பிரச்சாரத்தையும், மக்கள் முன் முன்வைக்கின்ற நடைமுறை அரசியல் செயல்பாட்டையும் மறுக்கின்ற அரசியலாகிவிடுகின்றது. .
அரசியல்ரீதியாக ஊழலுக்கு எதிரானதே தேசிய மக்கள் சக்தி (அதாவது "கள்ளரை வெளியேற்ற") என்று கூறி, முன்னிறுத்துகின்ற அரசியல், முதலாளித்துவ அரசியல் மீதான தவறான பொது விம்பத்தை முன்வைக்கின்றது. தேசிய மக்கள் சக்தி ஊழலை, தனிப்பட்ட நபர்கள், கட்சிகளின்.. பிரச்சனையாகக் குறுக்கிக் காட்டுவதன் மூலம், ஊழல் என்பது முதலாளித்துவ அமைப்புமுறையில் இல்லை என்று கூறுகின்ற தவறான அரசியலை முன்னிறுத்துகின்றது. நபர்களை மாற்றிவிடுவதன் மூலம், கட்சிகளைத் தோற்கடிப்பதன்.. மூலம் மாற்றம் நிகழும் என்ற தேசிய மக்கள் சக்தியின் கொள்கை, அடிப்படையில் ஒடுக்கப்பட்ட மக்களை ஒடுக்குகின்ற அரசியலின் பொது நீட்சியாகும். பொதுப் புத்தி இதை நம்புகின்றது. இது அரசியல் மோசடி மட்டுமின்றி, ஊழலும் கூட.இது அரசியல்ரீதியாக ஊழலுக்கு எதிரான ஜ.எம்.எப்.யின் முதலாளித்துவக் கொள்கை, தேசிய மக்கள் சக்தியின் அரசியலின் ஒரு பகுதியாக, ஜ.எம்.எப்.யின் ஊழலுக்கு எதிரான கொள்கை மாறி இருக்கின்றது.
இலங்கையில் ஊழல் என்பது ஏகாதிபத்திய நிதிமூலதனத்தின் அச்சாணிகளை துருப்பிடிக்க வைத்து திவலாக்கிவிடுகின்றது. ஏகாதிபத்தியங்கள் தங்கள் நிதிமூலதன வட்டியையும், முதலையும் சுழற்சியாக அறவிடவும், தொடர்ந்து வைத்திருக்கவும் ஊழல் பெரும் தடையாகும். அதாவது தொடர்ந்து அறவிட முடியாத வண்ணம், ஊழல் அனைத்தையும் அரித்து விடுகின்றது.
இந்த அரசியல் உண்மையிலிருந்தே, குறிப்பாக ஏகாதிபத்திய ஆதரவுடன் தேசிய மக்கள் சக்திக்கான அரசியல் அதிகாரம் கிடைத்துள்ளது. ஒடுக்கப்பட்ட மக்களின் பொது நலன்களிலிருந்தல்ல. ஒடுக்கப்பட்ட மக்களின் நலன் என்பது, ஒடுக்கும் தரப்புக்கு எதிரான அரசியலில் இருந்து பிறக்கின்றது. ஒடுக்கும் அரசையும், அரச அதிகார அமைப்பையும் தலைமை தாங்கும் தேசிய மக்கள் சக்தி, மாற்றமாக முன்வைக்கப் போவதை அரசியல் ரீதியாக இனம்காண முடியும்.
1. அரசு, அதிகார அமைப்பில் நபர்களை மாற்றுவதன் மூலம், ஒடுக்கப்பட்ட மக்களை ஏமாற்றுவார்கள்.
2. பொருளாதாரச் சலுகைளைக் கொடுப்பதன் மூலம், தம் மீதான நம்பிக்கையைக் கட்டியெழுப்ப முனைவார்கள்.
3. சில சமூக சீர்திருத்தங்களைச் செய்வதன் மூலம், அதை சமூகமாற்றமாகக் காட்டி ஏமாற்றுவார்கள்.
4. ஒடுக்கப்பட்ட மக்கள் மீதான ஒடுக்குமுறைகளைச் சட்டரீதியாக தடுப்பதன் மூலம் - தீர்;வுகள் மூலம் மக்களை நம்பவைக்க முனைவார்கள்.
5. அந்;நிய மூலதனங்களின் சுதந்திரமான வருகையை (ஊழலை அகற்றி) உறுதி செய்து வேலைவாய்ப்புகளை தோற்றுவிப்பார்கள்.
6. அந்நிய ஏற்றுமதியை அடிப்படையாகக் கொண்டு உள்நாட்டு உற்பத்தியையும், இதற்கு இசைவான கல்வி .. என பலவற்றைக் கொண்டு வருவார்கள்.
டொலரை உற்பத்தி செய்யும் ஜ.எம்.எப் கொள்கை அடிப்படையில் மாற்றங்கள் நடக்கும்;. மக்கள் சார்ந்த மாற்றங்களை நாங்கள் எதிர்க்கப்போவதில்லை. இதைக் கண்காணிக்கவும், முரணற்ற வகையில் முன்னெடுக்கத் தூண்டும் எதிர்க்கட்சியாகவே இருப்பது அவசியமானது.
இவை அரசியல்ரீதியாக முதலாளித்துவச் சமூக அமைப்பை அடிப்படையாகக் கொண்டது. இந்த வகையில் மக்களுக்கு எதிரான அரசியல் கூறுகளைக் கொண்டது.
1. முதலாளித்துவத்தால் மக்கள் சுரண்டப்படுவது அதிகரிக்கும்.
2. ஜ.எம்.எவ். மக்களின் வரிப்பணத்தை எடுத்துச் செல்வது அதிகரிக்கும்.
3. அந்நிய மூலதனம் வரிவிலக்குப் பெற்று மக்களின் உழைப்பை பிடுங்கிச் செல்வது பொது நடைமுறையாகும்.
4. முன்பு இடைத்தரகர்கள் (அரசியல் வாதிகள், அதிகார வர்க்கம் ..) பெற்றுவந்ததை, நேரடியாக மூலதனத்துக்குச் சட்டரீதியாக கிடைக்கச் செய்வார்கள்.
5. இப்படி பல
இதை எதிர்த்துப் போராட புரட்சிகர அரசியல் மூலம் மக்கள் தனித்துவமாக அணிதிரள்வதும், அதற்காக மக்கள் பலத்தை பெறுவதும் அவசியமானது. மக்கள் போராட்ட முன்னணியை, ஏதோவொரு வகையில் (குறைந்தது தேசியப் பட்டியல் மூலமாவது) இந்தத் தேர்தலில் வெற்றி பெற வைப்பதன் மூலம், மக்களைச் சரியாக முன்னின்று வழிநடத்துமிடத்தில் அமர்த்த வேண்டும்.
13.10.2024
இது தொடர்பான கட்டுரைகள்
1.மக்களின் குரலாக யார் இருக்கின்றனர்? யாருக்கு வாக்களிக்க வேண்டும் பகுதி - 1
2.ஜே.வி.பியின் வெற்றியும் சமூகத்தின் தோல்வியும்
3.பாராளுமன்ற ஜனநாயகத்தில் ஜே.வி.பி. குறித்த கற்பனைகளும் நிஜங்களும்
4.ஜே.வி.பி. மீதான அரசியல் அழுத்தங்கள் மூலம் மாற்றத்தைக் கொண்டு வாருங்கள்
"கள்ளரை வெளியேற்ற அனுரவுக்கு ஆதரவு" தெரிவிக்க வேண்டுமா!? - யாருக்கு வாக்களிக்க வேண்டும்-பகுதி - 2
Typography
- Smaller Small Medium Big Bigger
- Default Helvetica Segoe Georgia Times
- Reading Mode