வாக்களிக்கும் போது யாரை வெல்ல வைக்கவேண்டும் என்பதைச் சரியான இலக்காகக் கொள்வது அவசியம், அதேநேரம் வெல்ல முடியாவிட்டால், அவர்கள் குறைந்தது எதிர்கட்சியாகத்தன்னும் இருக்கவேண்டும். எதிர்க்கட்சியில் பழைய ஊழல்வாதிகளை, இனவாதிகளை, பிரதேசவாதிகளை, ஆணாதிக்கவாதிகளை, சாதியவாதிகளை விட்டுவிடுவது என்பது, ஆட்சியாளர்களின் மக்கள்விரோத அரசியலுக்குத் துணைபோவதாகும்.
இந்த வகையில் வாக்களிக்க முன், யார் உண்மையில் ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக இருக்கின்றனர் என்ற கேள்விக்குப் பதில் தெரிந்தாக வேண்டுமென்றால், இலங்கையில் யார் ஒடுக்கப்பட்ட மக்கள் என்பதற்கான, பதில் தெரிந்தாக வேண்டும். ஒடுக்கப்பட்ட மக்களில் நீங்கள் அடங்கவில்லையா என்பதற்கான, உங்கள் கேள்வியும் - பதிலும் - தெளிவும் மிகமிக அடிப்படையானது.
யார் ஒடுக்கப்பட்ட மக்கள் என்றால் யாரெல்லாம் சமூகத்தின் அடிநிலையிலிருக்கின்றனரோ, யாரெல்லாம் அன்றாடம் உழைத்து வாழக்கூடிய (நாட்கூலி, மாதச் சம்பளம் பெறுகின்ற) மக்களோ, அவர்கள் ஒடுக்கப்பட்ட மக்கள்.
இந்த வகையில் மக்கள், ஏதோ ஒரு வகையில் உழைக்கும் மக்களான இவர்கள் உழைப்புச் சுரண்டலுக்கு உள்ளாகின்;றனர். வறுமையிலோ, மாதாந்த சம்பளத்தில் வாழ முடியாதவர்களாகவோ, மருத்துவ வசதிகளின்றியோ, கல்வி கற்ற முடியாதவர்களாகவோ, சாதி இனம் பிரதேசம் மதம் பால் போன்ற சமூகக் காரணங்களால் தனிமைப்படுத்தப்படுகின்றவர்களாகவோ, சமூகம் சார்ந்து பல்வேறு உளவியல் நெருக்கடிகளால் மகிழ்ச்சியை இழந்து காணப்படுகின்ற மக்களே, ஒடுக்கப்பட்ட மக்கள். இதில் நீங்கள் அடங்கவில்லையா?
மக்கள் மீதான ஒடுக்குமுறைகளை மூடிமறைக்க இனவாதம், மதவாதம், பிரதேசவாதம், ஆணாதிக்கவாதம், சாதியவாதம், நிறவாதம், கலாச்சாரவாதம் .. போன்ற பலவிதமான ஒடுக்குமுறைகளை, ஒடுக்கப்பட்ட மக்கள் மேல் சுமத்தி விடுகின்றனர். அதாவது ஒடுக்கப்பட்ட மக்களைப் பிரித்தொடுக்க, ஒடுக்கப்பட்ட மக்களிடையில் ஒடுக்குமுறையாளர்கள் ஒடுக்குமுறைகளைப் புகுத்தி விடுகின்றனர்.
அதாவது சொந்த மக்களைச் சுரண்டுவோருக்கு ஆதரவாக, ஒடுக்குவோர் அனைவரும் இதைச் செய்கின்றனர். இங்கு ஒடுக்குவோரை மொழி, இனம், பால், சாதி, நிறம், பிரதேசம்.. என்ற எந்த அடிப்படை வேறுபாடிகளுமின்றி, கட்சி, அரசியல், சமூக நிகழ்வுகள் எங்கும் எதிலும் காணமுடியும். இந்த வகையில் சுரண்டும் அமைப்பைப் பிரதிநிதித்துவம் செய்யும் எந்த அரசும், எந்தக் கட்சியும், எந்தத் தரப்பும்.. ஒடுக்கப்பட்ட மக்களின் அனைத்து ஒடுக்குமுறைகளிலிருந்து மக்களை ஒருபோதும் விடுவிக்காது. இவர்களுக்கா வாக்களிக்கப் போகின்றீர்கள்?
இன்று இப்படிப் பல ஒடுக்குமுறைகளிருக்க, அதிலொரு ஒடுக்குமுறையை மட்டும் காட்டிப் போராடும் கட்சி, அரசியல், குறைந்தபட்சம் அதற்காகவாவது உண்மையாக இருக்கவேண்டும். அதாவது குறித்த அந்தவொரு ஒடுக்குமுறைக்கு உள்ளாகும் மக்களையாவது, எல்லாவகையிலும் ஒடுக்காமல் இருக்கும் வண்ணம் அரசியலை முன்வைத்துப் போராட வேண்டும். அதாவது தன் மீதான ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடும் போது, அவர்களைத் தன்னளவிலாவது, தான் ஒடுக்காமல் இருக்கவேண்டும். இதை முன்வைத்து குறித்த ஒரு ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராட முற்படாத கட்சி, அரசியல், என்பது மக்கள் மேலான ஒடுக்குமுறைக்கு மறைமுகமான ஆதரவான கட்சியாகவே, அரசியலாகவே இருக்கும்.
இன்று தேர்தலில் வெற்றி பெற்ற, வெற்றிப் பெறப்போகும் தேசிய மக்கள் சக்தியான ஜே.வி.பி. ஒடுக்கப்பட்ட மக்களின் கட்சியா? வெற்றி பெறப் போகும் தேசிய மக்கள் சக்தியை எதிர்த்துப் போராட ஊழல் கட்சிகளால், மக்களின் வரிப்பணத்தில் சொகுசாக வாழ்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களால் முடியுமா? இனத்தால், மதத்தால், பிரதேசவாதத்தால் .. முன்வைத்து வாக்குகள் கேட்ட, கேட்கின்ற கட்சிகளால், அரசியலால் முடியுமா? ஒடுக்கப்பட்ட மக்களை முன்வைத்து, அனைத்து ஒடுக்குமறைகளையும் எதிர்த்து நிற்காத புதியவர்களால் முடியுமா?
இந்தக் கேள்விகளைக் கேட்டு, யாருக்கு வாக்கு என்பதைத் தீர்மானிக்க வேண்டும். கடந்த வரலாற்றில் யார் மக்களுடன் நின்றவர்கள் என்பதைக் கண்டறியவேண்டும். கடந்தகாலப் போராட்டங்களின் போது தலைமை தாங்கியவர்கள் யார்? அறகலயப் போராட்டத்தில் முன்னின்று வழிநடத்திய தலைவர்கள் யார்? அவர்கள் ஏன் தேசிய மக்கள் சக்தியுடன் இல்லாமல், மக்கள் போராட்ட முன்னணியில் இருந்து வாக்குக் கேட்கின்றனர்?
தொடரும்
12.10.2024
இது தொடர்பான கட்டுரைகள்
1.
ஜே.வி.பியின் வெற்றியும் சமூகத்தின் தோல்வியும்
2.
பாராளுமன்ற ஜனநாயகத்தில் ஜே.வி.பி. குறித்த கற்பனைகளும் நிஜங்களும்
3.
ஜே.வி.பி. மீதான அரசியல் அழுத்தங்கள் மூலம் மாற்றத்தைக் கொண்டு வாருங்கள்
4.
தமிழ் தேசியமும் - சாராயக் கடையும் - பொலிஸ் அதிகாரமும்
5. யாருக்கு வாக்களிக்க வேண்டும்!? ஏன்!? எதற்காக!?