Language Selection

பி.இரயாகரன் -2024
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

ஜே.வி.பியின் தேசிய மக்கள் சக்தியானது மக்கள் விரும்பும் சமூகப் பொருளாதார மாற்றத்தைத் தருமா!? இந்தக் கேள்வி மிகமிக அடிப்படையானது. மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர். அதுவென்ன? 

ஜே.வி.பியின் தேசிய மக்கள் சக்தி செய்ய விரும்புவது என்னவெனில், நெருக்கடியற்ற வகையில் அந்நிய நிதிமூலதனங்களின் கடன்களையும் வட்டிகளையும் தடையின்றிக் கொடுப்பதுதான். அதற்கான தடைகளை, சமூகத்திலிருந்து அகற்றுவது தான். இதுவா மக்கள் விரும்பும் மாற்றம்!? 

தடையற்ற வகையில் மக்களின் வரிப்பணத்தை அந்நிய நிதிமூலதனம் எடுத்துச் செல்ல தடையாக இருக்கும், ஊழல் மற்றும் அதிகார முறைகேடுகளை ஒடுக்கி, ஏற்றுமதிக்கான உற்பத்திகளை அதிகரித்துக் கொள்வதுதான் ஜே.வி.பியின் தேசிய மக்கள் சக்தி முன்வைக்கும் மாற்றம். இதன் மூலம், முதலாளித்துவ அமைப்புமுறையை மாற்றமின்றி பாதுகாப்பதே ஜே.வி.பியின் தேசிய மக்கள் சக்தியின் அடிப்படைக் கொள்கையாகும்.       

ஜே.வி.பியின் இந்த முதலாளித்துவக் கொள்கையை எதிர்த்து 2012 களில் ஜே.வி.பி யிலிருந்து பிரிந்த முன்னிலை சோசலிசக் கட்சி, மக்களை முன்னிறுத்தி வர்க்க அரசியலை முன்வைத்தது. முன்னிலை சோசலிசக் கட்சி மக்கள் போராட்ட முன்னணி என்ற அமைப்பை உருவாக்கியுள்ளது. முதலாளித்துவ முறைமைக்கு எதிராக, உழைக்கும் மக்கள் அதிகாரத்தை முன்வைத்து, உணமையான மாற்றத்தை முன்மொழிந்தது. 

மாற்றம் குறித்து இரண்டு அரசியல் முன்வைக்கப்படுகின்றது. 

1.முதலாளித்துவ சீர்திருத்தம் மூலம் மக்களைச் சுரண்டும் முதலாளித்துவத்தை பாதுகாக்கும் மாற்றம்.

2.முதலாளித்துவத்துக்கு எதிராக மக்களை அதிகாரத்துக்கு கொண்டு வந்து, மக்களைச் சுரண்டும் முதலாளித்துவத்தை ஒழித்துக் கட்டும் மாற்றம் 

இந்த அடிப்படையில் எந்த மாற்றத்தை எதிர்பார்க்கின்றீர்கள் என்பது குறித்து, வாக்களிக்கும் ஒவ்வொருவரும் பதிலளித்தாக வேண்டும்;. இவர்களுக்கிடையில் அரசியல்ரீதியான வேறுபாடு என்ன என்பதை விளங்கிக்கொண்டு வாக்களியுங்கள். ஜே.வி.பியின் தேசிய மக்கள் சக்தி உங்களை ஏமாற்றுவதை உணர்வதற்கு, அறிவுரீதியான தேர்வு உங்களுக்கு அரசியலைக் கற்றுத் தரும். 

ஒரு அலையுடன் அடித்துச் செல்லப்படும் நீங்கள், அருகில் மிதவை இருப்பதைக் காணத் தவறாதீர்கள்.     

பாரம்பரிய இனவாத, மதவாத, பிரதேசவாத.. தேர்தல் கட்சிகளைத் தோற்கடிக்கும் மக்கள், அனுர தலைமையிலான தேசிய மக்கள் சக்தியை மாற்றாக உணர்வதும், அதற்கு ஆதரவான பொது அலையில் நீந்துவதன் மூலம், மக்கள் எதிர்பார்க்கும் மாற்றத்தைக் கொண்டு வருமாவெனின், இல்லை. 

ஜே.வி.பி. சந்தர்ப்பவாத முதலாளித்துவக் கட்சி. மூடிமறைத்த அரசியல் மூலம், வாக்குகளைக் கவரும்  அரசியலை முன்வைக்கின்றது. மாற்றம் குறித்து பித்தலாட்டத்தை முன்னிறுத்துகின்றது.     

அரசியல்ரீதியாக எந்த, எத்தகைய மாற்றத்தை ஜே.வி.பியால் கொண்டுவர முடியுமெனின், முதலாளித்துவ அமைப்புக்குட்பட்டவை மட்டுமே. முதலாளித்துவ சமூகப் பொருளாதார அமைப்பில், எந்த மாற்றத்தையும் கொண்டு வரமுடியாது. முதலாளித்துவ அமைப்பின் ஓட்டைகளை அடைக்கவும், சீர்திருத்தங்களைக் கொண்டு வரவும், முதலாளித்துவ சட்டத்தைப் பாதுகாக்கவுமே முடியும். இது தான் உண்மை.  

மக்களின் உழைப்பைச் சுரண்டும், அதற்காக ஒடுக்கும் அரசமைப்பைப் பாதுகாக்கவும், அதற்காக  முதலாளித்துவச் சட்ட அமைப்பைப் பாதுகாத்துப் பலப்படுத்தவும் விரும்புகின்றது. இதற்காகவே  ஊழலையே ஒழிக்க, ஜே.வி.பியின் தேசிய மக்கள் சக்தி விரும்புகின்றது. முதலாளித்துவச் சட்ட அமைப்பில் ஏற்பட்டுள்ள கீறல்களைப் பூசி மெழுகி, அதை அழகு பார்க்க விரும்புகின்ற இடத்தில் ஜே.வி.பியின் தேசிய மக்கள் சக்தி தன்னை முன்னிறுத்தியிருக்கின்றது. இதையே மாற்றம் என்கின்றது. இதைத் தாண்டி எந்த மாற்றத்தையும் கொண்டு வர முடியாது. இது தான் எதார்த்தமும், உண்மையுமாகும்.  

கடந்தகால அரசியல்வாதிகள், அதிகாரிகள்.. சட்டத்துக்குப் புறம்பாக, அரச அமைப்பில் நடத்திய  முறைகேடுகளை முன்னிறுத்தியுள்ள  தேசிய மக்கள் சக்தியின் அரசியல், மக்களைச் சுரண்டும் முதலாளித்துவ அமைப்பை ஊழலற்றதாக முன்னிறுத்துகின்றது. முதலாளித்துவத்தைப் புனிதமான சட்ட அமைப்பாக, அதை மக்கள் முன் வழிபாட்டுக்குரிய பொருளாகக் காட்டி, அதை பாதுகாப்பதையே  அரசியலாக்கிப் போற்றுகின்றது.   

தேசமும், தேசவளங்களும், மக்களும் .. தனியாரின் உடைமையாக, சுரண்டற்காரர்களின் வேட்டைக்குரியவனவாக, அந்நிய நிதிமூலதனத்திற்கு ஏற்ப அனைத்தையும் தாரை வார்க்கும் பொருளாதாரக் கொள்கைக்கு, அடிபணிய வைக்கும் கொள்கையைத் தான் ஜே.வி.பியின் தேசிய மக்கள் சக்தி மாற்றாக முன்வைக்கின்றது. இதில் ஊழலுக்கு இடமில்லை என்கின்றது. 

மக்களின் நலன் இந்த அரசியலில் இருப்பதில்லை. அபிவிருத்தி தொடங்கி கல்வி வரை, அந்நிய நிதிமூலதனத்தின் தேவையைப் பூர்த்தி செய்கின்ற இடத்தில் ஜே.வி.பியின் தேசிய மக்கள் சக்தி தங்களை முன்னிறுத்தியுள்ளனர். அந்நிய நிதிமூலதனம் நெருக்கடிகளின்றி மக்களின் உழைப்பை வரியாக அறிவிட்டுச் செல்லுவதற்கு ஏற்ற அதிகாரத்தை, தம்மிடம் தருமாறு ஜே.வி.பியின் தேசிய மக்கள் சக்தி முன்னிறுத்தி நிற்கின்றது. இதையே மாற்றம் என்கின்றது.  

08.10.2024

இது தொடர்பான கட்டுரைகள் 


1.    

ஜே.வி.பியின் வெற்றியும் சமூகத்தின் தோல்வியும்

2.   

பாராளுமன்ற ஜனநாயகத்தில் ஜே.வி.பி. குறித்த கற்பனைகளும் நிஜங்களும்

3.    

ஜே.வி.பி. மீதான அரசியல் அழுத்தங்கள் மூலம் மாற்றத்தைக் கொண்டு வாருங்கள்

4.

தமிழ் தேசியமும் - சாராயக் கடையும் - பொலிஸ் அதிகாரமும்