எதற்குப் பொலிஸ் அதிகாரம்? எதைப் பாதுகாக்க? எதை மூடிமறைக்க? யாரை ஒடுக்க?
தமிழினவாதத்துக்குள், மதவாதத்துக்குள், பிரதேசவாதத்துக்குள், சாதியவாதத்துக்குள் … மூழ்கிக் கிடந்த தமிழ் சமூகம், ஜனாதிபதி தேர்தலின் பின்பாக சமூக அதிர்வுக்குள்ளாகியுள்ளது. இடதுசாரிய அரசியல் மீதான பொது நாட்டம் அதிகரித்துள்ளது. தமிழினத்தின் பெயரால் ஊழலும், சுயநலமும்… புளுத்துப் புரண்டு படுத்துக் கிடந்ததையும், மக்களை வறுமையிலும் அறியாமையிலும்.. தள்ளிவிட்டு அனுபவித்த அரசியலை, மக்கள் உணர்ந்து வருகின்றனர்.
இன, மத, சாதி, பிரதேசவாத.. மூலம் மக்களை கூறுபோட்டு, தமிழ்மக்களை முற்றாக போதைக்குள் மூழ்கடிக்கும் தமிழ் அரசியல், அம்மணமாக மேடையேறி இருக்கின்றது.
சாராயக் கடைகள் மூலம் தமிழனுக்கு விடிவைக் காட்டும் தமிழ் தேசியமும், தாங்கள் அப்படியல்ல என்று கும்பிடு போடும் குறுங்குழுவாதிகளும் சாராயக்கடை அரசியலில் தாங்கள் பங்கு கொண்டவர்கள் அல்ல என்பதன் மூலமும் தப்பிக்க முனைகின்றனர். இந்த வகையில்
1. சாராயக்கடை எனது பெயரிலில்லை என்று கூறும் சிறிதரன்
2. சாராயக்கடைக்கு எதிராக வழக்கு போட்டிருக்கின்றேன் என்று கூறும் சுமந்திரன்
3. நாங்கள் சாராயக்கடை நாங்கள் பெறவில்லை என்று கூறும் பிள்ளையான்
இப்படிக் கூறும் அரசியல் பித்தலாட்டங்கள் அரங்குக்கு வருகின்றன. ஜனாதிபதி தேர்தலின் பின் தமிழ் முஸ்லிம் மலையக மக்கள் இன, மத, பிரதேசவாதம் கடந்து ஐக்கியத்தை விரும்பும் ஒரு மாற்றத்தை தெரிவாகக் கொண்டிருக்க, மக்களின் ஜக்கியத்தை விரும்பாத அரசியல,; சாராயக்கடையை வைத்து மக்களைப் பிரித்து வாக்குப் பெற முனைகின்றது.
தங்கள் குறுகிய அரசியலை நிலைநாட்ட, தங்கள் எதிரிகளைத் தனிமைப்படுத்தவும்.. சாராயக்கடைகளைப் பெற்றவர்கள் பட்டியலைக் கோருகின்றனர்.
இவர்கள் இதுவரை காலமும் சாராயக்கடடைக்கு எதிராக என்ன செய்திருக்கின்றனர்?. மக்களை இதற்கெதிராக அணிதிரட்டி இருக்கின்றனரா? சொந்தக் கட்சியில் இருந்தவர்கள், அவர்களுடன் கூடிக் குலாவியவர்களின் சாராயக்கடைகளை மக்கள் முன்வைத்து போராடியிருக்கின்றனரா? இல்லை. சாராயக் கடை மூலமான ஊழலை அம்பலப்படுத்தி இருக்கின்றனரா? இல்லை.
மாறாக மக்களைத் தொடர்ந்து ஏமாற்றுவதற்கு, மக்கள் முன் அம்பலமான விடையத்தை முன்வைத்து அரசியல் பித்தலாட்டத்தைச் செய்கின்றனர். இன, மத, சாதி, பிரதேசவாதிகளின் பல்வேறு ஊழல் பற்றி இன்னமும் அம்பலமாகாததால், இன்னமும் கூட்டுக் களவாணிகளின் கள்ள மௌனத்துடன் இந்த அரசியல் நீடிக்கின்றது..
குறுகிய இன, மத, சாதி, பிரதேசவாதம் மூலம் வாக்கு அதிகாரம் பெற்றவர்கள் அனைவரும், வீதிக்கு வீதி சாராயக் கடைகள் அமைவதை தொடர்ந்து அனுமதித்தவர்கள். பெண்களை குறிப்பாக மனைவிகளையும், குழந்தைகளையும், பெற்றோரையும் .. போதை மூலம் வறுமைக்குள் வன்முறைக்குள் தள்ளிவிட்டவர்கள் இவர்களே. இளைஞர் சமூகத்தை போதையில் (போதை வஸ்து, சாராயம்) வழிநடத்துகின்றவர்களாக, இன, மத, சாதி, பிரதேசவாதிகள் இருந்துள்ளளர்;.
தமிழ் இளைஞர்களைப் போதைவஸ்துப் பாவனைக்கு உள்ளாக்கி அதைக் கடத்தி வருவதில் பாராளுமன்ற அதிகாரங்களே பொது அடித்தளமாக இருந்துள்ளது. இந்தப் போதைவஸ்துப் போதாது என்று மதுவையும் வீதிக்கு வீதி அறிமுகமாக்கியது. மதவாத, இனவாத, சாதியவாத, பிரதேசவாத .. போதையானது, போதைவஸ்து, சாராயம் போன்ற போதைக்கு நிகரானது. இரண்டும் ஒரு நாணயத்தின் இருபக்கங்கள்.
மதவாத, இனவாத, சாதியவாத, பிரதேசவாதம் மூலம் மக்களைப் பிளக்கின்ற பின்னணியில், மதுபோதை மனிதன் சுயமாக சிந்திப்பதை செயல்படுவதை தடுத்து விடுகின்றது. மக்களை போதையில் வைத்து, வாக்குகளை கறப்பதே இவர்களின் அரசியல்.
மலையக, முஸ்லிம் மக்கள் மத்தியில் கூட இதே நிலைதான். சிங்கள மக்களை இனவாதம், மதவாதம் மூலம் 1948 முதல் எப்படி பேரினவாதிகள் வாக்களிக்க வைத்தனரோ, அதையே இனம் பிரதேசவாதம் மூலம் இன்னமும் தொடர முனைகின்றனர்.
சாராயக் கடையை முன்வைத்து நடத்தும் இன பிரதேசவாத அரசியல், கடந்தகாலத்தில் மதுக்களை சந்தைப்படுத்துகின்றவர்களாக, சாராயத் தரகர்களாக, அதை அனுமதித்தவர்களாக.. இருந்தவர்கள். தங்கள் பெயரில், தங்கள் குடும்பத்தின் பெயரில், பினாமிப் பெயரில்.. இவை அனைத்தும் அரங்கேறியதை கண்டும் காணாமல், அனைவரும் கூட்டக் களவாணியாக இருந்தவர்கள்.
சாராயக்கடை பொது ஏலத்தில் விற்கப்படுவதில்லை. ஊழல் மூலம் வீதிவீதியாக திடீரென சாராயக் கடைகள் முளைக்கின்றன. இந்த ஊழலுக்கு எதிராக இன, பிரதேசவாதிகள் என்ன செய்தனர்?
ஊழலுக்கு எதிரான ஜே.வி.பியின் வெற்றியானது, ஊழல் என்பது பேரினவாத அரசியல் கட்சிகளுடன், அரசுடன் மட்டும் தொடர்புபட்டதல்ல என்பதையும், பிற இனமத பிரதேசவாதிகளுடன் தொடர்புபட்டது என்பதையும், இதைக் கேள்வி கேட்காத கூட்டுக் களவாணிகள் இவர்கள் என்பதையும் அம்மணமாக்கியிருக்கின்றது.
1949 முதல் இனவாதத்தை முன்வைத்த தமிழ்தேசியமானது, ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களை முன்னிறுத்தியதல்ல. ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களை ஒடுக்கிய தமிழனை முன்னிறுத்திய தமிழ்தேசியம், எப்போதும் எங்கும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராகவே செயற்பட்டது. முஸ்லிம், மலையக, பிரதேசவாத.. என எங்கும், இந்த உண்மை பொருந்தும்.
தனிப்பட்ட ஊழலோடு, ஒடுக்கப்பட்ட மக்களை என்றும் முன்னிறுத்தாத இவர்களது ஊழல் அரசியலானது நடந்த ஆயுதப் போராட்டத்திற்கு விதிவிலக்கானதல்ல. ஆயுதப்போராட்டம் ஒடுக்கும் தமிழனை முன்னிறுத்தி, ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களை வேட்டையாடியது. ஏழை எளிய ஒடுக்கப்பட்ட மக்கள் முதல் சாதி ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்களை ஒடுக்குகின்ற, ஒடுக்கும் தமிழனின் அரசியலுமே கொடி கட்டிப் பறந்தது.
ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களை ஒடுக்கிய தமிழனின் அரசியல், ஆயுதப் போராட்டத்தைக் காட்டிக் கொடுத்ததன் மூலம் கொழுத்தது. தியாகங்களையும் கூட தனது தனிப்பட்ட நலனுக்காக விற்று தின்னுகின்றது.
ஒடுக்கும் தமிழன் ஒடுக்கப்பட்ட தமிழன் மீதான வன்முறை மூலம் முன்னிறுத்திய போராட்டம் அழிந்தது மட்டுமின்றி, அது உருவாக்கிய தேர்தல் அரசியல் ஊழல் பெருச்சாளிகளை முன்னிறுத்திக் கொண்ட கூட்டாக மக்களை ஏமாற்றிக் கொழுத்தது. இன்று சாராயக் கடைகள் மூலம் அம்மணமாகும் இந்தக் கூட்டத்தின், பல ஊழல்கள் அம்பலமாகின்ற காலம் வெகுதூரத்தில் இல்லை.
காலாகாலமாக இவர்களை இனங்கண்டு கொள்ளாத அளவுக்கு, கேள்வி கேட்க முடியாத அளவுக்கு இனவாதத்தில் தமிழ்மக்களை மூழ்கடித்த தமிழ் தேசியம், இனவாத போதையுடன் சாராயக் போதையையும் ஊற்றிக் கொடுத்தது. இன்று மக்கள் முன் அம்மணமாகி நிற்கின்றது. இவர்கள் கோரும் பொலிஸ் அதிகாரம், எப்படிப்பட்டதாக இருக்கும் என்பதை, இவர்களின் நடத்தைகள் எடுத்துக் காட்டுகின்றது.
02.10.2024
தமிழ் தேசியமும் - சாராயக் கடையும் - பொலிஸ் அதிகாரமும்
Typography
- Smaller Small Medium Big Bigger
- Default Helvetica Segoe Georgia Times
- Reading Mode