மும்பைத் தாக்குதலுக்காக ஆங்கில ஊடகங்கள் சாமியாடுவது இதுவரை நிற்கவில்லை. வருமானவரி கட்டும் பணக்கார இந்தியர்களுக்கே பாதுகாப்பில்லை, என்ன அநீதி என்று கொதிக்கிறார் பணக்கார இந்தியர்களின் விருந்து வைபவங்களை பத்தியாக எழுதும் ஷோபா டே. உடைந்து கிடக்கும் கண்ணாடித் துண்டுகளின் மத்தியில் நின்றவாறு ஆவேசமாக ஆடுகிறார் என்.டி.டி.வியின் பர்கா தத்.

வருமானவரி கட்டும் முதலாளிகள் அந்த வரியை பாமர மக்களின் மேல் மறைமுக வரியாய் சுமத்துகிறார்கள் என்ற அடிப்படை அறிவு கூட இல்லாத அந்த அம்மணிக்கு எவ்வளவு ஆணவம்? ஏன், வருமான வரி கட்டாத இந்தியர்களின் உயிர் என்றால் அவ்வளவு இளப்பமா? அவர்களுக்குப் பரிச்சயமான மேட்டுக்குடி மும்பையில் விழுந்த சிறு கீறலைக்கூட அவர்கள் தாங்குவதற்குத் தயாராக இல்லை.

தாஜ், ஓபராய் விடுதிகளில் உயிரிழந்து, அடிபட்ட முதலாளிகளுக்கு ஆறுதல் சொல்லும் விதத்தில் சிவராஜ் பாட்டீல் உள்துறை பொறுப்பிலிருந்து மாற்றப்பட்டு ப. சிதம்பரம் பொறுப்பேற்றுக் கொண்டிருக்கிறார். இதில் நிதியமைச்சகத்தை பிரதமரே வைத்துக் கொண்டிருப்பது அந்நிய முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தியதோடு, மும்பைத் தாக்குதலால் சீர்குலைந்த பங்குச் சந்தை மீண்டும் எழுந்திருக்கிறதாம். அவர்களது பாதுகாப்புக்காகக் கவலைப்பட்டுச் செய்யப்படும் மாற்றங்கள் கூட அவர்களது பங்குச் சந்தை பாதிக்காதவாறு செய்ய வேண்டுமாம்.

மும்பை போன்ற நகரங்களில் இது போன்ற சிறிய தாக்குதல்கள் சகஜம் என்று கருத்துரைத்து ஊடகங்களிடம் வாங்கிக் கட்டிக் கொண்ட மராட்டியத்தின் துணை முதல்வர் ஆர். ஆர். பாட்டீல் வேறு வழியின்றி ராஜினாமா செய்திருக்கிறார். விலாஜிராவ் தேஷ்முக்கும் ராஜினாமா கடிதத்தை காங்கிரசு மேலிடத்திற்கு அனுப்பிவிட்டதாகவும் முடிவு அவர்கள் கையில் எனத் தெரிவித்திருக்கிறார். தற்போது இவரது விலகலையும் காங்கிரசு ஏற்றுக் கொண்டிருக்கிறது. இதுபோக காங்கிரசுக் காரிய கமிட்டியில் எல்லோரும் உணர்ச்சி வசப்பட்டு விவாதித்தார்களாம். அவர்களுக்கு புரவலராக இருக்கும் முதலாளிகளுக்கு ஒரு ஆபத்து என்றதும் காங்கிரசின் மனசாட்டி துடிக்கிறது. ஏ.கே.அந்தோணி, பிரணாப் முகர்ஜி, இறுதியில் மன்மோகன் சிங்கும் தார்மீகப் பொறுப்பேற்று பதவி விலகுவதாகக் கூறினார்களாம். இறுதியில் சிவராஜ் பாட்டீலை மட்டும் இப்போதைக்கு விடுவித்து ஊடகங்களின் வாயை அடைக்க முடிவு செய்திருக்கிறார்கள்.

 

முன்னெப்போதுமில்லாத அளவுக்கு தார்மீகப் பொறுப்பு இப்போது மட்டும் நினைவுக்கு வரவேண்டிய அவசியமென்ன? காங்கிரசு கூட்டணி அரசு பதவிக்கு வந்த 2004 ஆம் ஆண்டு முதல் இன்று வரை நடந்த 25,000ம் குண்டுவெடிப்புக்களில் 7000 பேர் கொல்லப்பட்டிருக்கின்றனர். இவர்களுக்கு முந்தைய பா.ஜ.க கூட்டணி அரசு ஆட்சியிலிருந்த போது நடந்த 36,259 குண்டு வெடிப்புச் சம்பவங்களில் 11,714 பேர் கொல்லப்பட்டனர். அப்போது எங்கே போனது இந்த தார்மீகப் பொறுப்பு?

2001 குஜராத் இனப்படுகொலையில் 2000த்திற்கும் மேற்பட்ட இசுலாமிய மக்கள் கொடூரமாக சங்க பரிவார குண்டர்களால் கொல்லப்பட்டனரே அப்போது மோடியோ, அத்வானியோ, வாஜ்பாயியோ ஏன் ராஜினாமா செய்யவில்லை? மோடியின் தலைமையில் இந்துமதவெறிக் கும்பல் நடத்திய இந்த இனப்படுகொலையை கொலைகாரர்களின் வாக்குமூலத்திலிருந்தே தெகல்கா ஏடு அம்பலப்படுத்திய போதும் இவர்களை யாரும் ஒன்றும் புடுங்க முடியவில்லையே?

முதலாளிகளின் உயிருக்குள்ள மதிப்பு இசுலாமிய மக்களுக்கில்லையா? அவர்கள் என்ன ஆடுமாடுகளா? இன்றைய இந்தியாவின் குண்டுவெடிப்புகளுக்கு அச்சாரம் போட்ட 93 மும்பைக் கலவரத்தை எடுத்துக் கொள்வோம். ஆயிரத்திற்கும் மேற்பட்ட இசுலாமிய மக்களைக் கொன்று குவித்த இந்த கலவரத்தை தனது 300 ஆண்டு வரலாற்றில் மும்பை கண்டதில்லை. பிரிவினைக்குப் பிறகு இவ்வளவு பெரிய கலவரத்தை நாடும் சந்தித்ததில்லை. உண்மையில் மும்பையில் நடந்த பயங்கரவாதம் இதுதான். இன்றைய பயங்கரவாதங்களுக்கு அடிப்படைக் காரணமாக இருப்பதும் இதுதான்.

92 டிசம்பர் ஆறாம் தேதியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட பிறகு மும்பையில் அதைக் கொண்டாடும் முகமாக சிவசேனா மகா ஆரத்தி என்ற புதிய பண்டிகையை அறிமுகப்படுத்தியது. தெருவில் கும்பலாக நின்று கொண்டு முசுலீம் துவேச முழக்கங்களை முழங்கிக் கொண்டு ஆரத்தி எடுத்தவாறு இந்து மதவெறி மும்பை முழுவதும் தீயாய் பரப்பப்பட்டது. இதை அறுவடை செய்ய இந்துமதவெறியர்கள் ஏதாவது ஒரு காரணத்திற்காகத் தயாரிப்புடன் காத்திருந்தனர். மும்பைப் புறநகர் ஒன்றில் தொழிற்சங்க மோதலுக்காக இரு சுமை தூக்கும் தொழிலாளர்கள் கொலை செய்யப்பட்டவுடன் சிவசேனா அதற்கு மதச்சாயம் பூசி கலவரத்தை துவக்கியது.

மூன்று இலட்சம் பிரதிகள் விற்கும் சிவசேனாவின் சாம்னா நாளிதழில் பால் தாக்கரே இசுலாமியர்களைக் கொல்லுமாறும் இனிவரும நாட்கள் நம்முடையவை எனவும் பகிரங்கமாகக் கலவரத்தைத் துவக்குமாறு ஆணையிட்டார். ஜனவரி 7 முதல் 20 வரை இரண்டு வார காலம் மும்பை சிவசேனா பிணந்தின்னிகளின் நகரமாகியது. உ.பியிலிருந்து ரொட்டித் தயாரிப்புத் தொழிலுக்காக வந்த முசுலீம் தொழிலாளிகள், மரவியாபாரம் செய்து வந்த கேரளாவின் மாப்ளா முசுலீம்கள், உ.பி, பீகாரின் சுமைதூக்கும் முசுலீம் தொழிலாளிகள் யாரும் தப்பவில்லை. அன்றைய மும்பையின் மக்கள் தொகை ஒருகோடியே 26 இலட்சமென்றால் அதில் முசுலீம்களின் தொகை 14 இலட்சம். இதில் நான்கு லட்சம் முசுலீம் மக்கள் மும்பையை விட்டு வெளியேறினர். 40,000 பேர் அகதிகள் முகாமில் தஞ்சமடைந்தனர்.

ஹிட்லரின் நாசிக் கட்சியின் பாணியில் முசுலீம் வீடுகளுக்கு பெயிண்டால் அடையாளமிட்டு ஆள் அடையாளம் தெரியக்கூடாது என்பதற்காக ஏரியா மாறி சிவசேனா குண்டர்கள் இராணுவம் போல தாக்கினர். தாடிவைத்தவர்கள், சுன்னத் செய்திருக்கிறார்களா என்று திறந்து பார்த்து அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டவர்கள், மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற முசுலீம்கள் எல்லோரும் ஒரே நேரத்தில் தாக்கப்பட்டனர். அனாதை இல்லங்களில் உள்ள குழந்தைகளைக் கூட முசுலீம் குழந்தைகளா என்று பெயர் கேட்டு அடித்திருக்கின்றனர். சிவசேனாவை எதிர்த்து எழுதிய ஒருசில மும்பைப் பத்திரிகைகளும் பால்தாக்கரேவின் குண்டர்களால் தாக்கப்பட்டன. தாராவியிலிருந்த முசுலீம்களோடு தமிழ் மக்களும் கூட இந்தக்கலவரத்திற்காக நகரை விட்டு வெளியேறி தமிழகம் வந்தனர்.

மும்பைப் போலீசு சிவசேனாவின் பாதுகாப்புப் படையாக பணிபுரிந்தது. இன்றைக்கு தீவிரவாதிகளுடன் சமர்புரிந்தவர்கள் அன்று இந்து போலீசாக மட்டும் செயல்பட்டனர். அன்று முதலமைச்சராக இருந்த நாயக்கோ, பிரதமராக இருந்த நரசிம்ம ராவோ யாரும் ராஜினாமா செய்யவில்லை என்பதோடு சிவசேனாவின் அட்டூழியங்களுக்கு ஒத்தூதிக் கொண்டிருந்தனர். அரசுக் கணக்குப்படி 500 முசுலீம்களும், பத்திரிகைகளின் கணக்குப்படி ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்தக் கலவரத்தில் கொல்லப்பட்டனர். எல்லோருக்கும் வாழ்வளித்து மாநகரக் கலாச்சாரத்திற்கு முன்னோடியாக இருந்த மும்பை இந்துமதவெறியால் அப்போதுதான் பிளவுண்டது. முதன்முறையாக பணக்கார முசுலீம்களும் கலவரத்தில் தாக்கப்பட்டனர். இப்போது தாஜ் ஓட்டலுக்காக கண்ணீரைத் தாரைவார்க்கும் மேட்டுக்குடி குலக்கொழுந்துகள் எதுவம் அன்று இரத்தக் கறைபடிந்த மும்பை தனது அழகை இழந்துவிட்டதென வருத்தப்படவில்லை. வருத்தப்பட்டுப் பாரமும் சுமக்கவில்லை. அப்படிடச் சுமந்திருந்தால் அவர்களது புண்ணியத் தலமான தாஜ் ஓட்டலுக்கு நேர்நத களங்கத்தை தவிர்த்திருக்கலாமே?

மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகளின் வற்புறுத்தலால் பின்னாளில் காங்கிரசு அரசு 93 மும்பைக் கலவரம் குறித்து விசாரிக்க ஸ்ரீகிருஷ்ணா கமிழஷனை நியமித்தது. சிவசேனாவின் மிரட்டலான சூழ்நிலையையும் மீறி நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா குற்றமிழைத்த தாக்கரேக் கட்சியனரையும், போலீசு அதிகாரிகளையும் அடையாளம் காட்டினார். ஆனாலும் இந்தக்கமிஷனின் அறிக்கை இன்றுவரை குப்பைக் கூடையில் தூங்குவதுதான் கண்ட பலன். கலவரத்தைத்தான் தடுக்கவில்லை, கலவரத்தின் குற்றவாளியைக்கூட கைது செய்து நடவடிக்கை எடுக்கவில்லை என்பதற்கு யார் தார்மீகப் பொறுப்பேற்பது?

நாரிமன் இல்லத்தில் இசுரேலியர்களைத் தீவிரவாதிகள் தாக்குகிறார்கள் என்றதுமே இசுரேலிய அரசின் வற்புறுத்தலுக்கேற்ப அமெரிக்க அரசு கமாண்டோ படை அனுப்பட்டுமா என்று இந்திய அரசைக் கேட்டது. உடனே பிரனாப் முகர்ஜி இந்த நாட்டை 61 ஆண்டுகளாக ஆண்டு வருகிறோம், எங்கள் பிரச்சினைகளை நாங்களே தீர்த்துக்கொள்ளும் வல்லமையை பெற்றிருக்கிறோம், அமெரிக்க உதவி தேவையில்லை என்று ரோஷத்துடன் பேட்டியளித்தார். இந்த மானம் குஜராத், மும்பைக் கலவரங்கள் நடக்கும் போது எங்கே போயிற்று? பத்தாண்டு காலத்தில் இந்தியா முழுவதும் 5 இலட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொண்ட போது காங், பா.ஜ.க அரசின் வேளாண் துறை அமைச்சர்கள் எவரும் ராஜினாமா செய்வது இருக்கட்டும், ஒரு சொட்டு கண்ணீர் கூட விடவில்லையே? இவ்வளவுபேர் இறந்து போனதால் வராத ரோஷம் தாஜ் ஓட்டலின் பாரைக் காலி செய்த உடன் பொத்துக் கொண்டு வருகிறதே?

இன்றைக்கு ஒன்றுக்கு மூன்று தாக்கரேக்கள் மராட்டியத்தில் வலம் வருகிறார்கள். மருமகன் ராஜ் தாக்கரே தனி சமஸ்தானத்தை உருவாக்குவதற்கு அப்பாவி பீகாரி தொழிலாளிகளையும், மாணவர்களையும் தனது வானரப்படையால் தாக்கி வருகிறார். அப்போது கூட அவர் மீது நடவடிக்கை எடுக்க எவ்வளவு பயம்? 2008 இல் இதுதான் நிலைமை என்றால் 93 இல் எப்படி இருந்திருக்கும் என்பதைத் தெளிவாகப் புரிந்து கொள்ளலாம். இருப்பினும் அன்றைக்கு அப்பாவி முசுலீம்களை வேட்டையாடிய தாக்கரேக்கள் இப்போது துப்பாக்கியுடன் வந்தவர்களைப் பார்த்து வெலவெலத்துப் போயிருக்கிறார்கள் என்பதும் உண்மைதான். மும்பைத் தாக்குதல் குறித்து பெரிய தாக்கரே தனது சாம்னா பத்திரிக்கையில் ஒன்றும் சீறக் காணோம். இதை பார்க்கும் போது இந்து மதவெறியர்களால் உற்றார் உறவினரைப் பறிகொடுத்த ஒரு முசுலீம் இளைஞன் தீவிரவாதம்தான் தீர்வு என்று யோசிக்கமாட்டானா என்ன?

இந்து மதவெறியர்களின் கலவரங்கள்தான் தீவிரவாதத்தின் தோற்றுவாய். இந்தத் தோற்றுவாயை வேரறுக்காமல் புதிய சட்டம் - புலனாய்வுப் பிரிவு - போலீசுப் படை தீவிரவாதத்தின் அபாயத்திலிருந்து இந்தியாவைக் காப்பாற்றிவிடுமா?

 

http://vinavu.wordpress.com/

தொடரும்