11262020வி
Last updateசெ, 24 நவ 2020 7pm

எல்லாளன்

ஒரு "தமிழீழப்" போராளியின் நினைவுக் குறிப்புக்கள் - முழுவதும் - எல்லாளன்

பிறப்பால் கிறிஸ்தவக் குடும்பத்தைச் சேர்ந்தவன் என்பதால் எனது வாழ்க்கை என் கோப்பாய்க் கிராமத்திலுள்ள தேவாலயத்தினைச் சுற்றித்தான் அமைந்தது. ஞாயிற்றுக்கிழமை காலை ஆலயத்திற்குச் செல்வதுடன் ஆரம்பித்துப் பின்னர் வாலிபர் சங்கம், ஆலய நிர்வாகம் போன்ற பல மட்டத்திலும் சமூகம் எதிர்பார்த்த மாதிரி வாழவும் தொடங்கினேன். 1970களின் கடைசிப் பகுதியில் எமது ஆலயத்தில் கடமையாற்றிய மதகுருவும் அதற்குக் காரணம். அவரின் தமிழ் அறிவும் தமிழ்ப் பற்றும் மற்றைய மதங்களையும் மக்களையும் மதித்து நடந்து கொள்ளும் பண்பும் என்னையும் அவற்றில் ஈடுபாடு உள்ளவனாக ஆக்கியது.

எனது பெற்றோர்கள் எனது குடும்பத்தில் எவருக்குமே கிறித்தவப் பெயர்களை வைத்ததில்லை. எல்லோருக்குமே தமிழ்ப் பெயரைத்தான் வைத்தார்கள். அதனால் எங்களை யாருமே கிறிஸ்தவர்களாக அடையாளம் காண முடியாது. ஆலய நிர்வாக கமிட்டியில் 16 வயதில் உறுபப்பினராகச் சேர்க்கப்பட்டேன். அதேநேரம் GUES என்ற ஈழ மாணவர் பொது மன்றம் நடத்திய பல அரசியல் வகுப்புக்களிலும் கலந்து கொண்டேன். அந்தக் கால கட்டத்தில் YFC என அழைக்கப்படும் YOUTH FOR CHRIST என்ற கிறிஸ்தவ வாலிபர் சங்கமும் என்னைக் கவர்ந்தது. அது பைபிள் கல்வி, பிரார்த்தனைக் கூட்டங்கள், Born Again Christian என்ற ஆழமாகக் கிறிஸ்தவன் என்றால் என்ன என்று விளக்கமளிக்க மேலும் அவற்றின் மீதும் கவரப்பட்டேன்.

ஒரு "தமிழீழப்" போராளியின் நினைவுக் குறிப்புக்கள் - பகுதி 9

பசியும் பசியைப் போக்க நாம் கையாண்ட தந்திரமும்

மீண்டும் எமது சாப்பாட்டு நிலைமைகள் (பிரிந்த பிறகு) நாம் அன்றாடம் செய்யும் வேலைகளுடனும் சம்பந்தப்பட்டிருந்தது. நாம் ஈ.பி.ஆர்.எல்.எஃவ் இன் பிரிவான ஈ.பி.ஐ.சி தகவல் நிலையத்திற்கு வாரத்திற்கு ஒரு தடவையாவது சென்று எமது தொடர்புகளை அவர்களுடன் வைத்திருந்தோம். ஈ.பி.ஐ.சிக்கு செல்லும்போது மத்தியான சாப்பாட்டு நேரம் பார்த்து செல்லத் தொடங்கினோம். அவர்கள் எம்மைக் கண்டவுடன் சாப்பிடச் சொல்லுவார்கள். அவர்களின் சாப்பாடு எமது நிலைமையை விட வசதியானது. மற்றும் அவர்களும் எமது நிலைமையை அறிந்து உதவி செய்தார்கள்.

ஒரு கட்டத்தில்  அவர்களும் கஸ்ரத்தில் கஞ்சி குடிக்கின்ற நிலையில் இருந்தனர். அதற்குப் பின் அவர்களை நாம் கஸ்ரப்படுத்தவில்லை. எமக்கு உதவி செய்த அரசியலுக்குச் சம்பந்தமில்லாத இந்தியாவில் படித்துக்கொண்டிருந்த மாணவர்களைப் பற்றியும் சொல்ல வேண்டும். நகுலன் என்னுடன் ஏ.ஏல் படித்தவர். நிரஞ்சன் எனது ஊரைச் சேர்ந்த மாணவர். ரகு கல்லூரி அனுமதிக்காக காத்திருந்தவர். அவர்கள் எமது நிலைமையினை அறிந்து எமக்கு சாப்பாடு தந்தார்கள். தற்காலிகமாக தங்குமிட வசதிகளையும் செய்து தந்தார்கள். உதாரணமாக, சிலவேளைகளில் இலங்கை மாணவர்கள் தங்கி இருந்த இடங்களில் ஒன்றான நங்கநல்லூர், பழவந்தாங்கல் பிரதேசங்களுக்கு நாம் போகும்போது என்னுடன் படித்தவர்களோ ஊரவரோ என்னைக் கண்டால் தமது இருப்பிடத்திற்கு என்னைக் கூட்டிச் சென்று சாப்பிடச் சொல்வார்கள். ஆரம்பத்தில் இது தற்செயலான சம்பவமாக நடந்தது. என்றாலும் ஒரு கட்டத்தில் நானே அவ்வாறு சாப்பாட்டிற்காக அவர்களை சந்திக்கக் கூடிய சந்தர்ப்பங்களை ஏற்படுத்திக் கொண்டேன்.

ஒரு "தமிழீழப்" போராளியின் நினைவுக் குறிப்புக்கள் - பகுதி 10 இறுதி

தம்பாப்பிள்ளை மகேஸ்வரனின் இழுத்தடிக்கும் தந்திரம்

அவ்வாறான ஒரு காலகட்டத்தில் கியூ பொலிஸ் அதிகாரியின் அலுவலகத்தில் தம்பாப்பிள்ளை மகேஸ்வரனைச் சந்திக்க முடிந்தது. எம்மை மகேஸ்வரனிடம் அறிமுகப்படுத்தி எமது கஸ்டமான நிலைமைகளைச் சொல்லி ஏதாவது பணவசதி செய்ய முடியுமா என்று கேட்டோம். அவரோ தன்னிடம் இருந்த பணத்தினை இந்திய அதிகாரிகள் பறித்து விட்டனர் என்றும் ஒரு நாளைக்கு இவ்வளவு என்று தான் திருப்பித் தருகிறார்கள் என்றும் தாம் யோசித்து முடிவு சொல்வதாகவும் கூறினார்.

தம்பாப்பிள்ளை மகேஸ்வரனிடம் காத்தான்குடி வங்கிப்பணம் நிறைய இருந்தபோது அதில் ஒரு பகுதியினை ரெலோ 1984 இல் கொள்ளை அடித்திருந்தது. அந்தக் கொள்ளைக்கு ரெலோ கூறிய காரணம், அந்தப் பணம் சிறிலங்கா அரசினால் திரும்பவும் மீட்கப்படப் போவதாகவும் மகேஸ்வரனின் இயக்கத்தால் அந்தப் பணத்தினைப் பாதுகாக்க முடியாது என்பதுமாகும். அதனால் அவர்கள் ரெலோ மீது ஆத்திரத்துடன் இருந்தனர். அதைவிட அது மனோ மாஸ்ரரின் ஒப்புதலின் அடிப்படையில் நடந்ததாகவும் நாம் மனோ மாஸ்ரர் சார்ந்த குழுவினர் என்பதால் உதவி செய்ய முடியாது எனவும் கூறினார். பின்னர் எம்முடன் பெண்கள் இருப்பதால் தாம் மீண்டும் யோசித்து முடிவு சொல்வதாகக் கூறினார். எனவே அடிக்கடி தம்பாப்பிள்ளையைச் சந்திப்பதும் அவர்களின் முடிவுக்காகக் காத்திருப்பதும் எமது வேலையாகி விட்டது.