PJ_2007 _12.jpg

நாங்கள் பேருந்துகளில் அரசியல் பிரச்சாரத்துடன் பு.ஜ. இதழை விற்பனை செய்து கொண்டிருந்தபோது, ஒரு வாசகர் இதழை வாங்கிக் கொண்டு ரூ.5/ கொடுத்தார். விலை உயர்ந்துள்ளதை அவரிடம் நாங்கள் தெரிவித்த போது, பு.ஜ.வுக்கு என்ன விலை கொடுத்தாலும் தகும் என்று கூறி ரூ.7/ செலுத்தி இதழை ஆர்வத்தோடு படிக்கத் தொடங்கினார். விலையேற்றத்தால் இதழ் விற்பனை பாதிக்கப்படக்கூடும் என்று நாங்கள் கருதினோம். ஆனால், எந்தச் சிரமமுமின்றி விறுவிறுப்பாக இதழ் விற்பனையாகியுள்ளது. இது, பு.ஜ. இதழின் அரசியல் செல்வாக்கை மீண்டும் நிரூபித்துள்ளது.
பு.ஜ.செய்தியாளர், பென்னாகரம்.

· குஜராத் இனப்படுகொலைகளைப் பற்றி இந்துவெறி பயங்கரவாதிகளிடமிருந்தே வாக்குமூலம் பெற்று ஆதாரத்துடன் வெளியிட்ட தெகல்கா வார இதழின் துணிவு பாராட்டத்தக்கது. முஸ்லிம் என்றாலே தீவிரவாதி, பயங்கரவாதி என்று இந்து வெறியர்களாலும் செய்தி ஊடகங்களாலும் முத்திரை குத்தப்பட்டுள்ள இன்றைய சூழலில், இந்து வெறியர்கள்தாம் மிகக் கொடிய பயங்கரவாதிகள் என்பதையும், வீதியில் இறங்கிப் போராடாமல் இப்பயங்கரவாதிகளை முறியடிக்க முடியாது என்பதையும் தொகுத்து விளக்கிய நவம்பர் இதழ் சிறப்பு.

 

ரேஷன் பொருட்களைக் கூட முறையாக விநியோகிக்க வக்கற்று கிடக்கும் சி.பி.எம்.ஆட்சியாளர்கள், இப்போது போராடும் மக்களையே ஒடுக்கும் பாசிஸ்டுகளாகச் சீரழிந்து விட்டார்கள். இவர்கள் இன்னமும் கையில் ஏந்தியுள்ள செங்கொடியை உழைக்கும் மக்கள் பறித்தெடுக்கும் காலம் வெகுதொலைவில் இல்லை.
வாசகர் வட்டம், திருச்சி.

 

· பு.ஜ. தலையங்கக் கட்டுரையும் குண்டு வைப்புகளில் ஆர்.எஸ்.எஸ். பா.ஜ.க பயங்கரவாதிகள் எனும் தொடர்கட்டுரையும் இந்து பயங்கரவாத பேரபாயத்தை ஆதாரங்களுடன் உணர்த்தி, இப்பாசிச பயங்கரவாத கும்பலைத் தாக்கி அழிக்க அறைகூவுவதாக அமைந்துள்ளது. நீதிமன்றமும் நீதிபதிகளும் புனிதமானவர்கள் என்ற மாயையைத் தகர்த்து, நீதிபதிகளின் தேசவிரோதமக்கள் விரோதத் தீர்ப்புகளை அம்பலப்படுத்திக் காட்டியது சிறப்பு. சென்னை மாநகர விரிவாக்கத் திட்டம் என்ற பெயரில் ஏழை மக்களை நகரை விட்டு வெளியேற்றும் சதியைத் தோலுரித்துக்காட்டி, இம்மறுகாலனியத் தாக்குதலுக்கு எதிராக உழைக்கும் மக்கள் ஒன்றிணைந்து போராட வேண்டும் என்று உணர்த்திய கட்டுரை எடுப்பாக அமைந்துள்ளது.
வாசகர் வட்டம், ஓசூர்.

 

· நவம்பர் இதழின் முன் அட்டை இந்துவெறி பயங்கரவாதத்தின் கோரத்தைப் படம் பிடித்துக் காட்டியது என்றால், பின் அட்டை சாதி வெறி பயங்கரவாதத்தின் கொடூரத்தைப் படம் பிடித்துக் காட்டியுள்ளது. இத்தீண்டாமைக் கொடுமைகளை ஓட்டுக் கட்சிகளின் சமூக நீதிக் கொள்கையால் ஒழித்துவிட முடியாது என்பதற்கு இரட்டைக் குவளை முறையும், சமயநல்லூர் சுரேஷ்குமார் மீதான தாக்குதலுமே சாட்சி.
செல்லப்பாண்டி, தேனி.