கிழக்கு பிரிவினைவாதமானது, தமிழ் தேசிய பிரிவினைவாதத்துக்கு நிகரான வெள்ளாளியமே. மக்களை ஒடுக்கும் தரப்புடன் ஒன்றிணைந்த மேலாதிக்கம். யாழ் மேலாதிக்கத்துக்குப் பதில் கிழக்கு மேலாதிக்கமானது, மூடிமறைக்கப்பட்ட வெள்ளாளியத்தின் இரு முகங்கள்.

தமிழ் பேசும் மக்களை ஒடுக்குகின்ற பேரினவாத ஒடுக்குமுறையாளர்கள் தொடங்கி தமிழ் மக்களைப் பிளக்கின்ற பிரிவினைவாதிகள் வரை, யாழ் மேலாதிக்கம் குறித்து பேசுவது ஒடுக்கும் தேர்தல் அரசியலில் நடந்தேறுகின்றது. தமிழ்தேசியம் மட்டுமல்ல அதற்கு எதிரான கிழக்கு பிரிவினைவாத அரசியல் கூட, மக்களை பிளக்கின்ற - பிரிக்கின்ற அரசியல் தான். தங்கள் கிழக்கு ஒடுக்குமுறைக்காக யாழ் மேலாதிக்கத்தை கையில் எடுக்கின்றனர். இது எந்த வகையில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு சார்பானது?

யாழ் மேலாதிக்கத்தை முன்னிறுத்தி கிழக்குப் பிரிவினையை முன்னிறுத்தும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் கொள்கை வகுப்பாளரான ஞானம் என்று அழைக்கப்படும் ஸ்ராலின், ஒடுக்கப்பட்ட மக்களை மேலும் பிளந்துவிடும் அரசியலில் முனைப்பாக ஈடுபடுகின்றார். இதன் மூலம் ஒடுக்கப்பட்ட மக்களை யாழ் மேலாதிக்கத்துக்கு எதிராக அணிதிரட்டவில்லை, மாறாக மக்களை பிளந்துவிடுகின்ற – பிரித்துவிடுகின்ற அரசியலை, ஒடுக்கும் தரப்பாக முன்னின்று செய்கின்றார். ஒடுக்கப்பட்ட கிழக்கு மக்களுக்கு எதிராக ஒடுக்கும் கிழக்கு தலைமையை முன்னிறுத்துகின்ற தேர்தல் அரசியல் பின்னணியில் - யாழ் மேலாதிக்கம் குறித்து பேசுகின்ற அரசியலே கிழக்கு வெள்ளாளியமாகும்.

இலங்கையின் ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களை பிளக்க பேரினவாதம் குறித்து தமிழ்த் தேசியம் எப்படி பேசப்பட்டதோ, அதேபோன்று ஒடுக்கப்பட்ட கிழக்கு மக்களைப் பிளக்க யாழ் மேலாதிக்கம் குறித்து கிழக்குப் பிரிவினைவாதம் பேசப்படுகின்றது. இதுதான் இன்றைய தேர்தல் அரசியலின்; பின் நடந்ததும் – நடக்கின்றதுமான உண்மை.

இதற்கு யாழ் மேலாதிக்கம் குறித்த ஸ்ராலினின் கட்டுரைத் தரவுகள் முழுமையான உண்மைகளைக் கொண்டதல்ல. மாறாக அவை வெள்ளாளிய யாழ் மேலாதிக்க தமிழ் தேசிய புனைவுகள் போல், தங்கள் கிழக்கு வெள்ளாளிய அரசியல் நிகழ்ச்சிக்கு ஏற்ப புனையப்பட்டு இருக்கின்றது. உதாரணமாக தரப்படுத்தலானது இனவாத ஒடுக்குமுறை நோக்கில் கொண்டுவரப்பட்டு - இன்று வரை தொடரப்படுகின்றது. தமிழ் மக்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட தரப்படுத்தலை மூடிமறைக்க ஏற்படுத்திய தொடர் மாற்றங்களின் பின் - கிழக்கு மாணவர்களுக்கு சிறியளவில் உதவியது. இதை தமிழ்த் தேசியம் கருத்தில் எடுக்கவில்லை என்பது, காலம் வரலாற்று பின்னணியில் பார்த்தால் ஒரு பக்க உண்மையே. தமிழ்மக்களை பொதுமைப்படுத்தி கொண்டு வரப்பட்ட ஆரம்பத் தரப்படுத்தல், கிழக்கு தமிழ் மாணவர்களுக்கும் எதிரானது. உண்மைகள் இப்படி இருக்க அதை ஒடுக்குமுறையாளனுக்கு சார்பாக திரிப்பது, மறுப்பது, வரலாறுகள் குறித்த இருட்டடிப்புகளே. இப்படி யாழ் மேலாதிக்கம் குறித்த தரவுகள், ஒடுக்கப்பட்ட மக்களின் நோக்கு சார்ந்ததல்ல.

வெள்ளாளிய யாழ் மேலாதிக்க ஒடுக்குமுறைக்கு எதிராக ஒடுக்கப்பட்ட மக்களை அணிதிரட்ட, யாழ் மேலாதிக்கம் குறித்து யாரும் பேச முற்படவில்லை. இங்கு பேரினவாத ஒடுக்குமுறை குறித்து எதுவும் பேசுவதில்லை. மாறாக தங்கள் பிரிவினைவாத – பிளவுவாத ஒடுக்குமுறைக் கருத்துகளை நியாயப்படுத்த யாழ் மேலாதிக்கம் பேசப்படுகின்றது. ஒடுக்குமுறைக்கு எதிரான ஒடுக்கப்பட்ட கிழக்கு மக்களின் அரசியல் போராட்டத்தில், யாழ் மேலாதிக்கம் குறித்து பேசப்படவில்லை.

கிழக்கு மக்களை யாழ் மக்களுக்கு எதிராக தேர்தல் அரசியலில் அணிதிரட்டிய அரசியல் பின்னணியில் இருந்தே யாழ் மேலாதிக்கம் பேசப்பட்டது. கிழக்கில் வாழும் ஒடுக்கப்பட்ட மக்களைச் சார்ந்தல்ல, இலங்கையில் அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களையும் ஒன்றிணைக்கும் அரசியல் வழியில், யாழ் மேலாதிக்கம் குறித்து பேசவில்லை. மாறாக கிழக்குப் பிரிவினை பேசும் யாழ் மேலாதிக்க வெள்ளாளியமே, கிழக்கு மேலாதிக்கமாகப் பேசப்படுகின்றது.

ஒடுக்கும் கிழக்கு மேலாதிக்கத்தை நியாயப்படுத்த, யாழ் மேலாதிக்கம் குறித்த கருத்தியல் தேவைப்படுகின்றது. இங்கு யாழ் மையவாதத்துக்கு எதிரான கிழக்கு மையவாதமானது, ஒடுக்கும் அரசுடன் ஒன்றுபட்ட ஒரே அரசியல் கண்ணோட்டத்தில் இருந்து முன்வைக்கப்படுகின்றது.

இதை வெறும் கருத்தியலாக புனைவதன் மூலம் - யாழ் மக்களுக்கு எதிரானதல்ல என்று நிறுவ முனைவது நடந்தேறுகின்றது. சிங்கள மேலாதிக்கம் தொடங்கி யாழ் மேலாதிக்கம் வரை வெறும் கருத்தியல் கிடையாது. அது வாழ்வியல் முறை மட்டுமின்றி, ஒடுக்குமுறை வடிவமும் கூட. இதைப் பின்பற்றி வாழ்வதே, கிழக்கு மக்களின் வாழ்வியல் வடிவமும் கூட.

யாழ் மேலாதிக்கம் என்பது அரசியல்ரீதியாக வெள்ளாளியமே. இந்த வெள்ளாளிய வாழ்வியல் முறை ஒடுக்கப்பட்ட மக்கள் மத்தியிலும் காணப்படுகின்றது. கிழக்கு மக்களை எடுத்தால், அவர்கள் வெள்ளாளிய வாழ்வியல் முறையில் வாழ்வதுடன் - அதே அடிப்படையில் கிழக்கு பிரிவினை வாதத்திற்கு வாக்களித்திருக்கின்றனர்.

தமிழ்தேசிய தலைவர்களின் கடந்தகால - நிகழ்கால வெள்ளாளிய அரசியல் மட்டும் யாழ் மேலாதிக்கமல்ல. மாறாக யாழ் மேலாதிக்கம் என்பது, இலங்கை தமிழ் சமூகத்தில் எங்கும் இருக்கும் வாழ்வியல் முறையாக புரையோடி இருக்கின்றது. இதுதான் வெள்ளாளியம். தேர்தல் அரசியலுக்குள்ளும, வாக்கு வங்கிக்குள்ளும் குறுக்குவது என்பது, மூடிமறைக்கப்பட வெள்ளாளியத்தின் மற்றொரு அரசியல் முகம்.

இந்த வெள்ளாளிய தமிழ் தேசியம் முஸ்லிம் மக்களை ஒடுக்கிய போது, பிழைப்புவாத இஸ்லாமிய தேர்தல் கட்சிகள் முஸ்லிம் பெயரில் எப்படி உருவானதோ - அப்படிப்பட்ட தேர்தல் பிழைப்புவாதமே கிழக்கை மையப்படுத்தி கிழக்கு வெள்ளாளியமாக உருவாகியுள்ளது. இது தன்னை மூடிமறைக்க யாழ் மையவாதம் குறித்த கருத்தியலை உருவாக்க முனைகின்றது.

இங்கு ஒடுக்குமுறைகளை வெறும் கருத்தியலாக வரையறுப்பது என்பது, அந்த ஒடுக்குமுறையை மறைமுகமாக ஆதரிப்பது தான். அந்த ஒடுக்குமுறைக்கும் மக்களின் வாழ்வியலுக்கும் தொடர்பில்லை என்று கூறுவதன் மூலம், இன்னொரு மக்களுக்கு எதிராக வாக்கு வங்கியை குறிவைப்பது தான்.

ஒரு சிந்தனைமுறை என்பது, வாழ்வியலுடன் தொடர்புபட்டது. உதாரணத்துக்கு முதலாளித்துவத்தை முதலாளி வடிவிலும், அரசு வடிவிலும் காண்பது என்பது, முதலாளித்துவத்தை பாதுகாப்பது தான். முதலாளித்துவம் என்பது முதலாளித்துவ சமூகத்தில் வாழும் எல்லா மனித வாழ்வியல் கூறுகளிலும் ஒன்றுபட்டு நிற்கின்றது. முதலாளித்துவத்துக்கு எதிரான போராட்டம் என்பது, எம்மைச் சுற்றிய எமது வாழ்வியலுக்கு எதிரான போராட்டத்தில் இருந்து தொடங்குவதே.

யாழ் மேலாதிக்கம் என்பது கிழக்கு மக்களுக்கு வெளியில் இயங்கும் கற்பனைப் பொருளல்ல. இங்கு மூடிமறைக்கப்பட்ட யாழ்மேலாதிக்கம் என்பது வெள்ளாளியமாகும். இந்த வெள்ளாளியம் என்பது கிழக்கு மக்களின் வாழ்வியல் கூறாக இயங்குகின்றது. இந்த வெள்ளாளிய வாழ்வியல் கூறுதான் தேர்தலில் கிழக்கு பிரிவினைவாதத்துக்கும் – கிழக்கு மேலாதிக்கத்துக்கும் வாக்களிக்க வைக்கின்றது. இந்த உண்மையை மூடிமறைக்க யாழ் மேலாதிக்கத்தை கருத்தியல் வடிவமாக காட்டுவது, வெள்ளாளியத்தில் இருந்து யாழ் மேலாதிக்கத்தை அரசியல் நீக்கம் செய்வதென நடந்தேறுகின்றது.