தனக்காக மட்டும் வாழாது, பிறருக்காக வாழ்தலே உழைக்கும் வர்க்க உணர்வு பெற்ற மனிதர்களின் உயரிய பண்பு. தங்கள் வாழ்கையில் இருந்தும், தம்மைச் சுற்றிய மனிதர்களின் வாழ்க்கை சார்ந்தும், சமூக உணர்வு பெற்றவர்கள், சோசலிச சமுதாயத்தை படைக்கப் போராடுவதன் மூலம் மகிழ்சியான சோசலிச வாழ்க்கையை உருவாக்க முனைகின்றனர்.

 

சுரண்டலும், சாதியமும், இனவாதமும், ஆணாதிக்கமும்... கொண்ட இன்றைய வாழ்க்கை முறை ஏற்படுத்தும் மனித அவலங்களையும் துயரங்களையும் இல்லாதொழிக்க, உழைக்கும் வர்க்க உணர்வு பெற்ற போராட்டமே மிகச் சிறந்த மனிதர்களை மட்டுமல்ல முன்னுதாரணம் மிக்க வாழ்கையையும் உருவாக்கின்றது.

 

 

1960களில் சாதிய ஒடுக்குமுறைக்கு எதிராக போராடி உழைக்கும் வர்க்க உணர்வு பெற்ற உன்னதமான மனிதர்கள், தங்கள் மரணம் வரை அதற்காகவே வாழ்கின்றனர். தமிழ் தேசிய - பாசிச அலையை எதிர் நீச்சல் போட்டுப் போராடியவர்கள் இன்றும் நமது சமூகத்தில் இருக்கின்றனர். அவர்கள் இன்று அனைத்து ஒடுக்குமுறைகளுக்கும் எதிரான வர்க்க அரசியலுடன் தம்மை இணைத்துக் கொள்வதில் முன்னோடிகளாக முன்னுதாரமிக்கவர்களாக இருக்கின்றனர்.

 

தோழர் தவராஜாஅவர்கள் , 1960களில் சண்முகதாசனின் தலைமையிலான புரட்சிகரமான அரசியல் பாரம்பரியத்தில் புடம் போடப்பட்டவர்களில் ஒருவர். அதனாலேயே தங்கள் வாழ்வியற் சூழலே பாசிசமாகிய போதும், விட்டுக்கொடுக்காத மனிதராக அதற்கு எதிராகப் போராட - நடைமுறையில் வர்க்க விடுதலைப் போராளியாகச் செயற்பட அவரால் முடிந்திருகிக்ன்றது .

 

இந்த வகையில் தான் தோழர் தவராஜா, அரச பாசிசத்தின் பல்வேறு கெடுபிடிகளுக்கு மத்தியிலும், அவருக்குக் கிடைக்கப் பெற்ற "போராட்டம்" பத்திரிகைகளை  தான் சீவித்த பிரதேசத்தின் அயல் கிராமங்களுக்கு எடுத்துச் சென்று விநியோகித்து, ஒடுக்கப்பட்ட மக்களுக்கான அரசியல் பிரச்சாரத்தை விரிவாக்குவதில் முன்னோடியாகத் திகழ்ந்தார். அவர் உழைக்கும் வர்க்க உணர்வுடன் "போராட்டம்" பத்திரிகையையும், அதன் அரசியலையும் உழைக்கும் மக்கள் மத்தியில் கொண்டு சென்றார். தனது 70-வது வயதிலும் கடலுக்குச் சென்று உழைத்து வாழ்ந்த பெருமையையும் சுமந்தபடி, சமூதாய மாற்றமே அனைத்துக்குமான தீர்வாக கருதிச் செயற்பட்டவர் தோழர் தவராஜா.

 

வர்க்க உணர்வு பெற்ற தமிழ்-சிங்கள உழைக்கும் மக்களின் ஐக்கியத்தை, 1960 களில் போராட்ட அரசியல் பாரம்பரியதுடன் நினைவு கூர்ந்து, அவ்வரசியலைத் தொடர்வதற்காக, இன்று நடக்கும் உழைக்கும் மக்களின் போராட்டத்தில் தன்னை பங்களியாக்கிக் கொண்டார். இந்த வகையில் தமது முதுமையிலும் தனது வர்க்க உணர்வுடன் தன்னை வெளிப்படுத்திய முன்னோடி நமது தோழர் தவராஜாஅவர்கள் .

 

தோழர் தவராஜா அவர்களைப் போல வர்க்க விடுதலையை முன்னிறுத்தி சமூக விடுதலைகாகப் போராடியவர்கள், பின்னாளில் பாசிச ஒடுக்கு முறைகளுக்கு அடங்கிப்போக மறுத்தவர்கள் எனப் பல தோழர்கள் இன்றும் உழைக்கம் மக்களின் விடுதலைக்கான அரசியலை உறுதியாத் தாம் கரம் பற்றியபடி போராடுகின்றனர். இவர்களின் போராட்ட வரலாறும், தியாகமும் சிறுகச் சிறுக வளர்ந்து வரும் இன்றைய மக்கள் போராட்டச் சக்திகளுக்கு முன்னுதாரணமாகவும், ஊக்கமூட்டுவதாகவும் இருந்து வருகிறது.

 

இதனடிப்படையிலேயே மறக்கப்பட்ட, மறைக்கப்பட்ட மரணித்த தோழர்களின் வரலாற்றையும் மீட்டெடுத்தது அவர்களையும் நினைவு கூர வேண்டியவர்களாக, அவர்களின் பாரம்பரியத்தைத் தொடர வேண்டியவர்களாக நாம் இருக்கின்றோம் என்பதையும் இந்த வேளையில் கூறிக் கொள்ள விரும்புகிறோம்.

 

இனவாதம் மூலம் இனமுரண்பாட்டை தீர்க்க முடியாது. மாறாக தமிழ்-சிங்கள ஒடுக்கப்பட்ட மக்களின் ஐக்கியப்பட்ட போராட்டத்தின் மூலம் மட்டுமே, இனவொடுக்கு முறையை முறியடிக்க முடியும் என்ற அடிப்படையில், உழைக்கும் வர்க்க அரசியலை உயர்த்திப் பிடித்தவர் நமது தோழர் தவராஜா அவர்கள். தமிழ் குறுந்தேசிய இனவாதத்தை எதிர்த்து, ஒடுக்கப்பட்ட அனைத்து மக்களின் ஐக்கியத்தையும் முன்னிறுத்தி, எம்முடன் இணைந்த புரட்சிகர பயணத்தின் போதான அவரின் மரணம், மக்கள் போராடத்தை மறுசீரமைத்து முன்னெடுக்கும் இலங்கைப் பாட்டாளி வர்க்கத்துக்குப் பாரிய இழப்பாகும்.

 

தோழர் தவராஜா அவர்கள் போன்று பாசிசத்தின் கெடுபிடிகளுக்குள் இலைமறை காயாக வாழ்ந்து, வர்க்க அரசியலை உயர்த்தி மரணித்த அனைத்து தோழர்களின் நினைவுகளும் அவர்களின் வாழ்க்கையும் போற்றுதலுக்குரியது. அவர்களின் வர்க்கப் போராட்டப் பாரம்பரியத்தை மீட்டெப்பது மட்டுமல்ல, அவர்களின் வர்க்க கனவுகளை நிறைவு செய்வதே அவர்களுக்கு நாம் செய்யும் அஞ்சலியாகும்.

 

புதிய ஜனநயாக மக்கள் முன்னணி

24/04/2014