பேரினவாத இன-வெறியர்களுக்கு "வெற்றிநாள்" ஆகலாம்?...

தமிழ் மக்களுக்கும், இனவாதத்தை வெறுப்போர்க்கும் துக்கநாள்!

இன்று முதல் ஒருமாத காலத்தை "முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின்" வெற்றி விழாவாக கொள்ளலாம். அதற்கான கொடியேற்றத் திருவிழா இன்று முதல் ஆரம்பமாகி, முப்பதாவது நாளில் மகிந்தா-கோத்தபாயவின் (வைரவர்) மடை- வேள்வியுடன் முடிவடையும்.

இவ்வொரு மாதகாலம் மகிந்தாவிற்கும் அதன் பாசிஸ - இனவெறி கொண்ட ஆட்சிக்கும் வெற்றி விழாவாக இருக்கலாம். தமிழ்மக்களுக்கு மாத்திரமல்ல, எம் நாட்டின் தேச-பக்த ஜனநாயக-முற்போக்கு மாத்திரமல்ல, இனவாதத்தை வெறுப்போர்க்கும், சகல இனவாதங்களுக்கும் எதிராக போராடும் போராட்ட சக்திகளுக்கும், மக்களுக்கும் பெரும் துக்கமும் சோகமும் கொண்ட கரிநாட்கள் ஆகும்.

"நாடு தீப்பற்றி எரிகையில் நீரோ மன்னன் பிடில் வாசித்தானாம்" என்ற நிலையில் இருந்தே மகிந்த மன்னரும் "இனவெறிப்பிடிலை"வாசிக்கின்றார். இற்றைக்கு மூன்று ஆண்டுகளுக்கு (மே-19-ல்) முன்பாக, ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நாட்டு மக்களுக்குக்கோர் பிரகடனப் பிரசங்கம் செய்தார்.

 

இன்றுடன் எம்நாட்டில் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டு விட்டது. அடுத்தது தமிழ் மக்களுக்கு எல்லோரும் ஏற்றுக்கொள்ளும்படியான தீர்வை வழங்குவேன் என்றார். ஆனால் கடந்த நான்காண்டுகளாக எம்நாட்டில் நடைபெற்று வருவது தொடர் பேரினவாத -- இனவெறியின் தொடர் நிகழ்சி நிரல் தான்.

தமிழ் மக்கள் முள்ளிவாய்க்கால் படுகொலைகளுடன் தோற்க்கடிக்கப்பட்ட இனமாக காட்டப்படுவதுடன், அவர்களும், அவர்கள் தாயகமும் ராணுவ ஆட்சியுடன் கூடிய இனச் சுத்திகரிப்பு வலயமாகவும் மாற்றப்படுகின்றது.

மகிந்தரும் - அவரின் எடுபிடிகளும், எம்நாடு பல்லின மக்கள் வாழும் நாடல்ல என்பதை சொல்ல முற்படுகின்றனர். அத்துடன் இப்போ எம்நாட்டில் உள்ளோர் "நாட்டை நேசிக்கும் இனம், நாட்டை வெறுக்கும் இனம்" என்ற வகைப்பாடு கொண்டும், "சிறுபான்மை என்ற ஒன்றில்லை, எல்லாம் பெரும்பாண்மையே என்ற மகிந்த சிந்தனைக் கோட்பாடு கொண்ட அரசியல் தளத்திற்கு ஊடாக குடும்ப ஆட்சி தொடர்கிறது.

மகிந்த-கோத்தபா(பே)யர்கள், நடைபெறப்போகும் இனவெறிக் கொண்டாட்டங்களில் தமிழ்மக்களை மாத்திரமல்ல, சகல இனவாதங்களையும் வெறுக்கும் -- எதிர்க்கும் சகல சக்திகளையும் "நாட்டை வெறுக்கும் இனம்" எனும் தொனிப்பொருள் கொண்டு, சிங்கள மக்களுக்கு இக்களியாட்டங்கள் மூலம் காட்ட முற்படலாம். இதற்கு இசைவாக ஏகப்பெரும்பாண்மையற்ற "பாமர இனவெறிக் கூட்டம்" கொண்ட ஒன்றையும் கூட்டி வெற்றி விழாவாகக் கூடக் கொண்டாடிக் கூத்தாடலாம்.

உண்மையில் எம்நாட்டின் இனவாதத்தின் உண்மைத் தன்மையென்ன?

எம் நாட்டில் ஏகப்பெரும்பான்மையான மக்கள் இனவாதிகளும் அல்லர். இனவெறியர்களும் அல்லர்.

ஏகப்பெரும்பான்மை அற்றவர்களே, அரச-பாசிச இனவெறியின் துணை கொண்டவர்களே, இனவெறியர்களாகவும், அதன் தொங்கு தசைகளாகவும் செயற்படுகின்றனர்.

எனவே இக்கொண்டாட்டங்கள் இனவாதத்தை எதிர்க்கும் - வெறுக்கும் ஏகப்பெரும்பான்மையான மக்களின் துக்கநாள்! கரிநாள்!

இனவெறியர்களின் கொண்டாட்டங்களை… துக்கமாக அனுஸ்டிக்கும் மக்களின் இனவெறுப்பு நாளாக மாற்றுவோம்!