பாராளுமன்றவாதிகளை நம்புவதா? முஸ்லிம் அடிப்படைவாதத்தை நம்புவதா? தனிநபர் பயங்கரவாதத்தை நம்புவதா? இன்று இப்படி குறைந்தது இதில் ஒன்றையாவது நம்புகின்ற எல்லைக்குள் மூழ்குவதும், அதில் அதிருப்த்தியும் அவநம்பிக்கையும் கொண்டு வெளிப்படுவதுமாக முஸ்லிம் சமூகம் காணப்படுகின்றது. இதுவே மக்களில் இருந்து அன்னியமான, மக்கள் விரோதமான வன்முறைக் குழுக்களை தோற்றுவிக்கும் அரசியல் அடிப்படையாக இருக்கின்றது. இதற்கு அமைவாக சர்வதேசரீதியாக இஸ்லாமிய மத அடிப்படைவாதமும் காணப்படுகின்றது. இந்த அபாயத்தில் இந்து முஸ்லீம் மக்களை தம்மை தற்காத்துக் கொள்ள, அரசியல் விழிப்புணர்வு அவசியமானது. பௌத்த அடிப்படைவாதத்துக்கு எதிரான மக்கள்திரளினை அடிப்படையாகக் கொண்ட மாற்றுப்பாதை அவசியமானது. இல்லாது போனால் பௌத்த அடிப்படைவாதத்தை நிறுத்திவிட முடியாது. இது இஸ்லாமிய அடிப்படைவாதமாக மாறும். இதனால் பௌத்த அடிப்படைவாதம் மேலும் மேலும் தீவிரமாகும்.

முஸ்லீம் சமூகம் மதவழிபாட்டு உரிமையை மத அடிப்படைவாதமாகிவிடாது தடுத்து நிறுத்தி, பௌத்த அடிப்படைவாதத்தை வெற்றிகரமாக எதிர்கொள்வது எப்படி? இதுதான் இன்று முஸ்லிம் சமூகம் முன்னுள்ள கேள்வி. இதை பேரினவாதத்தை எதிர்கொண்டு தோற்ற அதன் அரசியல் எதிர்மறையில் இருந்து கற்றுக்கொள்ள முடியும்;. தமிழ் இளைஞர்கள் எதிர்கொண்ட தவறான முன்னுதாரணங்களில் இருந்து இதைத் தெரிந்து கொள்ள முனைவோம்.

பேரினவாதத்தை எதிர்த்து தமிழ் இளைஞர்கள் செய்த அதே அரசியல் தவறை, மத அடிப்படைவாதத்துக்கு எதிராக முஸ்லிம் இளைஞர்கள் செய்து விடாதீர்கள். தமிழ் இளைஞர்களின் போராட்டத்தால் தமிழ்மக்களுக்கு நன்மை கிடைக்கவில்லை. மாறாக தவறான இந்தப் போராட்டம், தமிழ் இனத்தை மேலும் சீரழியவே உதவியது. தன்னைத்தான் இனவாதியாக்கியது. சொந்த மக்களை இனத்தின் பெயரில் ஒடுக்கியது. முஸ்லிம் மக்கள் மேல் வன்முறையை ஏவி ஒடுக்கியது. சிங்கள மக்களை தனது எதிரியாக்கியது. வன்முறையை ஏவியது. இப்படி பற்பல. இதனால் எந்த விடுதலையும் தமிழ்மக்களுக்கு கிடைக்கவில்லை. இலங்கை மக்களுக்கும் கிடைக்கவில்லை. பேரினவாத ஒடுக்குமுறையும், இனவழிப்பும் கூர்மையாகி, அது இன்று தீவிரமாகி இருக்கின்றது. மத அடிப்படைவாத நோக்கில் மதச் சின்னங்களைக் கூட, தமிழ்மக்கள் மத்தியில் திணித்து வருகின்றது.

அதேநேரம் இன்று முஸ்லிம் மக்கள் மேலான மத அடிப்படைவாதம் கூர்மையாகி, அதுவே ஒடுக்குமுறையாக வன்முறையாக மாறி வருகின்றது. மக்களைப் பிரித்தாள, அரசு புதிய எதிரியை உருவாக்கி வருகின்றது. பௌத்த அடிப்படைவாதத்தைக் கொண்டு முஸ்லிம் மக்களை எதிரியாக்கி வருகின்றது. இன்று இதை எதிர்கொள்வது எப்படி? தமிழ் இளைஞர்கள் விட்ட அதே தவறான பாதைகளில் முஸ்லிம் இளைஞர்களும் செல்வதை நாம் இனம் காணமுடிகின்றது.

1. பாராளுமன்ற பிழைப்புவாதிகளையும் சந்தர்ப்பவாதிகளையும் தமிழினம் நம்பியது போல், முஸ்லிம் மக்கள் தொடர்ந்து நம்புகின்றனர்.

2. தமிழ் இனவாதத்தை நம்பி மற்றைய இன மக்களை எதிரியாக்கியது போல், மத அடிப்படைவாதத்தை நம்பி மற்றைய மத மக்களை எதிரியாக்குவது தொடங்கி உள்ளது.

3. இந்தியா முதல் அமெரிக்கா வரையான அன்னிய சக்தியால் விடுதலையும் தீர்வும் கிடைக்கும் என்று நம்பி ஆயுதம் முதல் பணம் வரை பெற்று கூலிக்குழுவானது போல், முஸ்லிம் நாடுகளையும் இஸ்லாமிய அடிப்படைவாதிகளையும் நம்புவது அதிகரித்து வருகின்றது.

4. குண்டுகளையும் துப்பாக்கிகளையும் நம்பி மக்களுக்காக சிலர் தவறாக செயற்பட்டது போல், அந்த மக்கள்விரோத பாதையை நம்புவது அதகரிக்கின்றது.

இப்படி தமிழ் இளைஞர்கள் விட்ட அதே தவறான பாதையில் முஸ்லிம் இளைஞர்கள் செல்லும் போக்கு அதிகரிக்கின்றது. மாறாக அதைக் கற்றுக்கொண்டு சரியான பாதையை தேர்ந்தெடுக்க வேண்டும்;. பேரினவாத ஒடுக்குமுறைகளுக்கு எதிராக தம்மைத்தாம் தியாகம் செய்து போராடிய இளைஞர்கள் கூட, தவறாகப் போராடியதால் தான் தோற்கடிக்கப்பட்டனர். அது இலங்கை வாழ் தமிழ் மக்கள் உள்ளிட்ட அனைத்து மக்களுக்கும் எதிரானதாக மாறித் தோற்றது.

முஸ்லிம் இளைஞர்கள் முன் உள்ள பாதை மிகத் தெளிவானது. மதம் தனிப்பட்ட மனிதனின் வழிபாட்டு உரிமை. இதற்கு அப்பால் மத அடிப்படைவாதத்தைக் கொண்டு, பௌத்த அடிப்படைவாதத்தை எதிர்த்து தோற்கடித்து விட முடியாது. மாறாக மற்றைய மத மக்கள் உங்கள் எதிரிகள் அல்ல. இதைப் புரிந்துகொள்ள வேண்டும். அவர்களும் உங்களைப் போல் மத வழிபாட்டு உரிமையைக் கொண்டவர்கள். உங்களைப் போல் சாதாரணமாக உழைத்து வாழும் சாதாரண பௌத்த மக்கள். அவர்கள் முஸ்லிம் மக்களின் வழிபாட்டு உரிமையை மறுக்கவில்லை. உங்கள் மதத்தை வைத்து, மக்கள் அரசியல் நடத்தவில்லை. உங்கள் எதிரி பெரும்பான்மை மதத்தை பின்பற்றும் மக்கள் அல்ல. இதை தூண்டுகின்ற பௌத்த அடிப்படைவாதிகளும், அரசியல்வாதிகளும் தான். இதை பௌத்த மக்களில் இருந்து வேறுபடுத்திப் பாருங்கள்.

பௌத்த அடிப்படைவாதிகளை எதிர்த்துப் போராட வேண்டும்;. பெரும்பான்மை பௌத்த மக்களைச் சார்ந்தும், அனைத்து மத மக்களைச் சார்ந்தும் நின்று போராட வேண்டும். இந்த போராட்டத்தை முன்னெடுக்கும் போது முஸ்லிம் அடிப்படைவாதத்தை எதிர்த்து, அதாவது அனைத்து மக்கள் விரோத அடிப்படைவாதங்களையும் எதிர்த்துப் போராட வேண்டும். மதம் தனிபட்ட மனிதனின் தெரிவும், உரிமையும் என்றதைத்தாண்டி மதத்தை மற்ற இன மக்களுக்கு எதிராக்குவதற்கு எதிராக ஒன்றிணைந்து போராட வேண்டும். பௌத்த அடிப்படைவாதத்தை பௌத்த மக்கள் எதிர்த்து போராடும் வண்ணம், முஸ்லிம் சமூகம் அரசியல் விழிப்புணர்வு பெற்றுப் போராடவேண்டும்.

பி.இரயாகரன்

11.02.2013