இலங்கை முழு மக்களையும் அடக்கியாள, அரசு தொடர்ந்தும் இனவாதத்தையே முன்தள்ளுகின்றது. சிறுபான்மை இனங்களை ஒடுக்குவதன் மூலம், பெரும்பான்மை மக்களை தங்களுடன் இணைந்து இனவாதியாக இருக்குமாறு கோருகின்றது. இலங்கை மக்களை அடக்கியாள, அரசு கையாளும் இனவாதக் கொள்கை இதுதான்.

மக்களுக்காக வேறு எந்த தேசிய சமூக பொருளாதாரக் கொள்கையும் அரசிடம் கிடையாது. இன்று இலங்கையில் அபிவிருத்தி என்ற பெயரில் நடந்தேறுவது, இலங்கையில் தங்கள் மூலதனத்தை பெருக்க வரும் வெளிநாட்டு மூலதனம் தான். அது உற்பத்தி மூலதனமாக, தரகுவர்த்தகமாக, கடன் சார்ந்த நிதிமூலதனமாக வருவதும், அது தன்னை பெருக்கிக் கொள்ள முனைவதைக் காட்டி, அதையே தான் நாட்டின் அபிவிருத்தி என்கின்றது அரசு. இதுவே அரசின் கொள்கையாகிவிட்டது. இதற்கு வெளியில் வேறு கொள்கை எதுவும் அரசுக்குக் கிடையாது. நாட்டையும், நாட்டு மக்களின் உழைப்பையும் அன்னிய மூலதனம் திருடிச் செல்வது தான் அபிவிருத்தி என்று அரசு காட்டுகின்றது. இதை மூடிமறைத்துப் பாதுகாக்க, இனவாதத்தை தூண்டிவிடுவதை அரசு தன் கொள்கையாகக் கொண்டு செயற்படுகின்றது.

இந்தவகையில் இனவாதம் என்பது வெறும் இனம் சார்ந்த குறுகிய செயற்பாடல்ல. மாறாக அன்னிய மூலதனம் தன்னை இலங்கையில் பெருக்கிக் கொள்ள முனையும் செயற்பாட்டின் விளைவு தான் இனவாதம். நாட்டு மக்கள் தங்கள் பொதுநலனை முன்னிறுத்துவதை தடுக்க, குறுகியநலன் சார்ந்த இனவாதம் தூண்டப்படுகின்றது.

இப்படி அரசு திட்டமிட்டு தூண்டும் இனவாதம் மூலம், மக்களை இனரீதியாக பிளந்து மோதவைக்கின்றனர். இது தான் அரசின் கொள்கை. யுத்தத்தை முடித்தவர்கள், இனவாதத்தை கைவிடத் தயாராகவில்லை. இனவாதம் தான் அன்னியநலன் பேணும் தங்கள் சொந்த அரசியல் இருப்புக்கான அரசியல் அடிப்படையாகவும் இருக்கின்றது. மக்களைப் பிளந்து, அவர்களை மோதவிட்டு ஆள்வதையே, தன் அரசியலாக தேர்ந்தெடுத்து இருக்கின்றது.

இலங்கையில் இனவாத யுத்தம் தொடர்ந்து நடந்தேறுவது இவ்வாறு தான். புலி வருகிறது, இதோ வந்துவிட்டது என்று சொல்லும் கதைகள் அனைத்தும், இந்தப் பொருளாதார அரசியல் பின்புலத்தில் தான் அரங்கேறுகின்றது. அரசு என்பது மூலதனம் தன்னை பெருக்கிக் கொள்வதை பாதுகாப்பது தானே ஒழிய, மக்களின் அடிப்படை வாழ்க்கையை பாதுகாப்பதல்ல. அதை பறித்தெடுப்பதற்காக உதவுவதுதான் அரசு. இன்று இலங்கையில் உள்ள மூலதனம், தேசிய மூலதனமல்ல. மாறாக அன்னிய மூலதனமாக இருப்பதும், அம் மூலதனம் தன்னை பல மடங்காக பெருக்குவதைத் தான்; அரசு பாதுகாக்கின்றது. இதைப் பாதுகாக்கும் அரசு, சிங்கள மக்களை தன் இனவாதம் மூலம் தன் பின்னால் அணிதிரட்டி வைத்திருக்க முனைகின்றது. இதனால் தமிழ் மக்களை வலிந்து ஒடுக்குகின்றது. தமிழ் மக்கள் பற்றி, சிங்கள மக்களுக்கு அச்சமூட்டும் வண்ணம் நிகழ்வுகளையும் செய்திகளையும் வீங்க வைக்கின்றது. தமிழ் மக்கள் மேல் கெடுபிடியை திணித்து, அதை முன்னெடுப்பது அவசியமானது என்று சிங்கள மக்கள் முன் காட்டுகின்றனர். இது போன்ற தொடர்ச்சியான கெடுபிடிகள் மூலம், உருவாக்கும் எதிர் இனவாத அரசியல் எதிர்வினையைக் காட்டி, சிங்கள மக்களிடம் தன்னை நியாயப்படுத்துகின்றது. இதன் மூலம் தன் இனவாத அரசியலை மேலும் பலமடங்காக்கி, தனக்கு எதிரான குறுந்தேசிய எதிர்வினையை உசுப்பேற்றுகின்றனர். இதுதான் அரசியல் கொள்கை மற்றும் அரசியல் தந்திரமாகும்.

உண்மையில் இந்த அரசின் அரசியல் உத்திக்கு ஏற்பவே தமிழ் தரப்பு கூத்தாடுகின்றது. தனக்கு என்று இனவாதமல்லாத கொள்கையை சொந்தமாக கொண்டு அது செயற்படவில்லை. அரசின் அதே கொள்கையையே தனதாக்கிக்கொண்டு, தன்னைத்தானே வலிந்து இனவாதியாக முன்னிறுத்திக் கொண்டு, மேடை போட்டுக் கொண்டு ஆடுகின்றது. இதற்கு சலங்கை கட்டி ஆடும் கேலிக் கூத்துகள் அங்குமிங்குமாக ஊதிப் பெருக்குகின்றனர். இதையே அரசு 10 மடங்காக ஊதிப் பெருக்கி, அதை வெடிக்க வைக்கின்றது.

அரசு தன் இனவாதம் சார்ந்து கெடுபிடியை உலகெங்கும் நியாயப்படுத்த, எதிர் குறுந்தேசிய இனவாதத்தை சார்ந்துதான் செயற்படுகின்றது. ஊர்ப் பொறுக்கிகள் மாதிரி, அரசுக்கு எதிராக அரசுக்கு ஏற்ற இனவாத குரங்குச் சேட்டைகளை புரிகின்றனர். அரசு பாய்ந்து முழு மக்களையும் குதறுவதும், அதேநேரம் இனவாதக் குரங்குச் சேட்டையை காட்டி உலகெங்கும் தன்னை நியாயப்படுத்துகின்றது.

மக்களை அரசியல்மயப்படுத்தக் கூடிய சமூக செயற்பாடுகளையே இது தடுத்து நிறுத்துகின்றது. இது வடக்கு கிழக்கு மட்டுமல்ல, இலங்கை முழுக்க இதை தடுத்து நிறுத்தப் பயன்படுத்துகின்றது. தங்கள் சர்வாதிகார பாசிசத்தை நிறுவ நீதிமன்றத்தை தாங்களே சட்டவிரோதமாக முடக்கிய விவகாரத்தைக் கூட, (புலி) இனவாதம் சார்ந்த ஒன்றாக முத்திரை குத்துகின்றது. இந்தவகையில் தமிழ் இனவாதம் அரசுக்கு உதவும் ஒன்றாக இருக்க, அதை அரசு மேலும் தூண்டி விடுகின்றது. அரசின் பொம்மலாட்டம் தான், தமிழ் இனவாதம்.

குறுந்தேசிய தமிழ் இனவாதம், தனித்து தன் சுயத்துடன் செயற்படவில்லை. மாறாக அரசின் துணையுடன், அதன் அரசியல் தேவையுடன் இயங்குகின்றது. அரசுக்கு ஏற்ற ஒன்றாகவே இயங்குகின்றது.

குறுந்தேசிய தமிழ் இனவாதம் தன் அரசியல் நடத்தை மூலம் அரசுக்கு உதவுகின்றது. இதை முன்னிறுத்தி அடக்குமுறைகள் தொடங்கி சட்டவிரோதமான அனைத்துவிதமான பயங்கரவாதத்தையும் அரசு மக்கள் மேலாக ஏவிவிடுகின்றது. இப்படி இரண்டு தரப்பு இனவாதத் தீயும் இணைந்து நிற்க, அது இலங்கையின் ஒட்டுமொத்த மக்களையும் ஒடுக்க உதவுகின்றது.

அதேநேரம் இனவாதம் இரு தரப்பாலும், ஒருவரை ஒருவர் குற்றஞ்சாட்டியபடி வளர்த்தெடுக்கப்படுகின்றது. இனவாதமாக சிந்திப்பதும், செயல்படுவதும் இதற்கான அரசியல் அடிப்படையாக இருக்கின்றது. இங்கு இந்த இனவாதம் என்பது, எந்தத் தரப்பாலும் என்று பிரித்து பார்க்க முடியாத வண்ணம், அது மக்கள்விரோத தன்மையுடன் தன்னை வெளிப்படுத்தி நிற்கின்றது. மக்களை மேலும் மேலும் ஒடுக்கவே அது உதவுகின்றது. இனவாதிகள் தமக்குள் குலைக்கும் அரசியல் பின்புலத்தில், மூலதனமோ மக்களின் கோவணத்தைக் கூட சூறையாடி கொழுப்பது தான் இதன் பின்புலத்தில் நடந்தேறுகின்றது. மக்களிடம் எஞ்சி இருப்பதை பிடுங்க, இனவாதம் தொடர்ந்து அவசியம் என்பதே மூலதனத்தின் கொள்கையும் கூட. இது தான் அரசின் கொள்கையும் கூட. இதற்கு அமைவாக அனைத்து இனவாதமும் இயங்குகின்றது. இனவாதத்தை எதிர்த்துப் போராடுவது தான், இன்று அரசியலின் முதன்மைக் கூறாக உள்ளது.

 

பி.இரயாகரன்

01.01.2013