தேசியத்தை இனரீதியானதாக பிரித்து சமூகரீதியாக முரண்படும் போது அது இனவாதமாகிவிடுகின்றது. இதில் ஒடுக்கும் இனம் , ஒடுக்கப்படும் இனம் என்ற வித்தியாசம் கிடையாது. ஆனால்  இனம் கடந்த தேசியம் சர்வதேசியமல்ல என்ற போதும், அது இனரீதியாக தன்னைப் பிரிக்காத வரை முதலாளித்துவ ஜனநாயகக் கூறைக்கொண்டு இயங்கும் வரை இதற்குள் முரண்பாடுகளை இனங்களுக்கு இடையில் உருவாக்காத    தன்மை  காணப்படும்.

இந்நிலையில்  அந்த  இனம் இனரீதியான தேசியமாக தன்னை வேறுபடுத்தும் போது தனக்குள் உள்ள முரணற்ற ஜனநாயகக் கூறை மறுதலித்து விடுகின்றது. ஒடுக்கும் இனம் அல்லது ஒடுக்கப்பட்ட இனத்தில் தேசியம், அது   எதுவாக இருந்தாலும், தன்னை இனம் சார்ந்து வெளிப்படுத்தும் போது அது சகோதர இனத்துடன் பகை பாராட்டாது சீவிக்கும்  முரணற்ற ஜனநாயகக் கூறுகளை மறுப்பதில் இருந்துதான் தன்னை அடையாளப்படுத்துகின்றது.

இந்தவகையில் நமது தேசத்தில் தமிழ்தேசியம் என்பது சாதியமாகவும், ஆணாதிக்கமாகவும், பிரதேசவாதமாகவும், சக சிறுபான்மை இனம் மீதான வெறுப்பாகவும், பெரும்பான்மை மக்களை எதிரியாகக்  காட்டியும்,  தன்னை அடையாளப்படுத்துவதுடன் தன்  இருப்பை நிலைநிறுத்த முயல்கிறது. இதன் அடிப்படையில்  தமிழ் தேசியதின்  அடையாளத்தை வரையறுப்பதும், அதன் இருப்பைத் தக்கவைக்க இயங்குவதும் அனைத்து மக்களுக்கும் எதிரான  சுரண்டும் வர்க்கமேயாகும். இதற்கு அப்பால்  தமிழ்தேசியம் கிடையாது. இதேவேளை இடதுசாரிய சந்தர்ப்பவாதிகள்,  இல்லை! நாங்கள் இந்தத்  தமிழ்தேசியத்தை மாற்றியமைத்து, அதன்  பிற்போக்கு பண்புகளை நிராகரித்து, மேம்படுத்தப் போகிறோம் என கூக்குரல் கொடுப்பதெல்லாம் அரசியற்  கண்கட்டு வித்தையாகும்.

தேசியத்தை இனம் சார்ந்ததாக குறுக்கிக் கொள்ளும் போது, தேசியத்தின்  முற்போக்கான முதலாளித்துவ முரணற்ற ஜனநாயகக் கூறுகளைக் கூட அது இழந்து விடுகின்றது. இடதுசாரியம் கதைப்பவர்கள், சர்வதேசியத்திற்கு பதில்  இனத்தேசியத்தை உயர்த்தும் போது அது இடதுசாரி வேடம்போட்ட, மூடிமறைத்த வலதுசாரி அரசியற் சந்தர்ப்பவாதமாகும். இதனால் தான் எப்போதும் இனத்தை மையமாகக்கொண்ட தமிழ்தேசியம் என்பது படுபிற்போக்கானது, என மக்கள் நலம் சார்ந்த இடதுசாரிகள் இடைவிடாது கூறுகிறோம். இவ்வகை தேசியவாதம் அது வலதாக இருந்தாலும் சரி, இடதாக இருந்தாலும் சரி அது ஒடுக்கப்பட்ட  அனைத்து  மக்களுக்கும்  எதிரானது.

மேற்கூறிய வகைத் தமிழ்தேசியமானது யாழ்-மேலாதிக்கம் சார்ந்து மற்றைய பிரதேசமக்களுக்கு எதிராக இயங்குகிறது. அதேபோல ஆணாதிக்கம் சார்ந்து பெண்களுக்கு எதிரானது, ஒடுக்கப்பட்ட சாதி மக்களுக்கு எதிரானது, ஆகவே  தமிழ்தேசியம் சுரண்டும் வர்க்க அடிப்படையைக் கொண்டது!

இவ்வாறு ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான தமிழ் தேசியத்திற்கு  இடதுசாரிய வர்க்க அரசியல் முலாம் பூசுவதன் மூலம், தேசியத்தின் முதலாளித்துவ பண்பையோ இனம் சார்ந்த குறுகிய யாழ்-மேலாதிக்க இனவாதப்பண்பையோ அரசியல் ரீதியாக இழந்து விடாது. முதலாளித்துவ அரசியல் அடிப்படையைக் கொண்ட தேசியம், நிலப்புரத்துவ சமூகக்கூறுகளுடன் இயைந்து சமரசம் செய்யும் அதன் இன்றைய சர்வதேச தரகுவர்க்க அரசியல் குணாம்சமும் மாறிவிடாது. முற்றுமுழுதான முதலாளித்துவ  ஜனநாயகத்தை முன்னிறுத்தும் தேசியத்திலும் பார்க்க, இனம் சார்ந்த தமிழ்தேசியம் படுபிற்போக்கானது.
 
மேற்கண்ட இனம்சாரா  தேசியத்தின் முரணற்ற ஜனநாயகக் கூறுகள் கூட சுயாதீனமான பாட்டாளி வர்க்கக்கட்சி உள்ள போது தான் முற்போக்காக இயங்கமுடியும். இல்லாத போது அதுவும் பிற்போக்கானது தான். ஆகவே பாட்டாளி வர்க்கம், தேசியக் கோரிக்கைகளின் அடிப்படையில் தன்னை அணிதிரட்ட முடியாது.

மாறாக சர்வதேசிய அடிப்படையில் தான் ஒடுக்கப்பட்டோரை அணிதிரட்ட முடியும். இந்த நிலையில் நின்று முரணற்ற முதலாளித்துவ தேசிய ஜனநாயகக் கோரிக்கைளை ஆதரிக்க முடியும் அல்லது அதைக் கோரிப் போராட முடியும். இதன் அடிப்படையில், மேற்கூறியது போல சதித்தனமாக போலி இடதுசாரிகள் தமிழ்தேசியத்தை சார்ந்து முன்னிறுத்தும் "இன-இடதுசாரியம்" படுபிற்போக்கானது. அது யாழ் மேலாதிக்கம் சார்ந்தது.

இந்த வகையில், இங்கு இனரீதியாக ஒடுக்கும் அரசுக்கு எதிராக, இனரீதியாக தன்னை வெளிப்படுத்துவதால், இனரீதியான இந்த யாழ் -தமிழ்தேசியம் முற்போக்காகிவிடாது. அரசு இனரீதியாக மட்டும் அது ஒடுக்கவில்லை, பல்வேறு சமூக வடிவங்களிலும் ஏன் வர்க்கரீதியாகவும் கூடத்தான் ஒடுக்குகின்றது. இதை எதிர்க்காத தமிழ்தேசியம் படுபிற்போக்கானது, அடிப்படையில் ஒடுக்குமுறைக்கு துணை போவது. இதனால்  தமிழ்தேசியத்தின் அடிப்படையில் இடதுசாரியம் போராட முடியாது. இதை இன்று பிரச்சாரம் செய்யும் "இடதுசாரிய "தமிழ்தேசியம் என்பது மூடிமறைத்த வலது தமிழ்தேசியம் தான். இவ்வகையில் "இடதுசாரியம்" இனத்தை முன்னிறுத்தி, தன்னை வர்க்கரீதியாக அணிதிரட்டுவது என்பது அது உழைக்கும் மக்களின் வர்க்க விடுதலைக்கானது அல்ல, மாறாக  படுபிற்போக்கான தமிழ் தேசியத்தின் இருப்பை நிலை நிறுத்துவதற்காகவே. ஆகவே, தேசியத்தை முன்னிறுத்தி உழைக்கும் வர்க்க விடுதலையை முன்னெடுக்கப்  போவதாக கூறுவது உண்மையில் இடதுசாரியம் அல்ல.

இந்த வகையில் இங்கு "முற்போக்கான தேசியம்" என்பது, பிற்போக்கான அரசியல் அடிப்படையைக் கொண்டது. தேசியம் என்ற அரசியல் வரையறையும், இனம் என்ற குறுகிய அடையாளமும், பிற்போக்கான வர்க்க அரசியல் அடிப்படையைக் கொண்டது. இங்கு முற்போக்கு தேசியம், பிற்போக்கு தேசியம் என்று பிரிக்கும் வர்க்கரீதியான கோடு கிடையாது.

கடந்தகாலத்தில் "முற்போக்கு தேசியம்" என்ற வரையறையை நாம் பயன்படுத்தியபோது, சர்வதேசிய உள்ளடக்கத்தை வெளிப்படுத்தும் விதமாக முரணற்ற ஜனநாயகக்கூறை வேறுபடுத்திக் காட்ட அதை எளிமைப்படுத்தி பயன்படுத்தினோம். முதலாளித்துவ ஜனநாயக தேசியவாதத்தைக் கூட மறுத்து தேசியம், பாசிசமாக தன்னை வெளிப்படுத்திய காலத்தில் அதை வேறுபடுத்தி அம்பலப்படுத்த பயன்படுத்தியதே முற்போக்குதேசியம் என்ற சொல்லாடல்.

"முற்போக்குதேசியம்" கூட பிற்போக்கான அரசியல் கூறை அடிப்படையாக கொண்டது தான். இங்கு பாசிசத்தை வேறுபடுத்திக் காட்ட, ஜனநாயகத்தை அடிப்படையாகக் கொண்ட தேசியத்தையும் வேறுபடுத்திய அரசியல் அடிப்படைக்கு வெளியில், இந்த தேசியம் முற்போக்கான அரசியல் வரையறையைக் கொண்டதல்ல. அது பிற்போக்கானது தான். இதனால் தேசியவிடுதலை போராட்டம் அன்னிய நாடுகள் சார்ந்து பிற்போக்கானதாக இருந்ததை அம்பலப்படுத்தவும், மக்களை சார்ந்து நிற்பதை முற்போக்காக நாம் வேறுபடுத்தி காட்டி அம்பலப்படுத்தவும், நாம் முற்போக்கு பிற்போக்கு என்று அதை வேறுபடுத்தினோம். ஆகவே, தேசியம் முற்போக்கு என்ற அரசியல் அடிப்படையில் இருந்தல்ல.

தேசியத்தின் முரணற்ற ஜனநாயகக் கோரிக்கைகளை முன்னிறுத்துவது, பாட்டாளி வர்க்க கோரிக்கையாக அல்ல. மாறாக முதலாளித்துவ ஜனநாயகக் கோரிக்கையாக மட்டும் தான். முதலாளித்துவ ஜனநாயகத்துக்கான போராட்டத்தில் அரசியல் உள்ளடக்கத்தில், முரணற்ற தேசியக் கோரிக்கைகள் கூட அடங்கும்.

ஒடுக்கும் அரசுக்கு எதிராக "முற்போக்குத்" தமிழ்தேசியம் இருக்க முடியுமா எனின், இல்லை. மாறாக சர்வதேசியம் தான் இருக்க முடியும். இங்கு இன ஒடுக்கு முறையையையும், தனது உள்ளக   சமூக ஒடுக்குமுறைகளையும் மட்டும் எதிர்க்கும் தேசியம் என்பது சர்வதேசியத்துக்கு முரணானது. எப்போது நாம் அனைத்துவகை  ஒடுக்குமுறையையும் எதிர்க்கின்றோமோ, அப்போது தான் நாம் உண்மையான சர்வதேசியம் சார்ந்த "தமிழ்தேசியவாதியாக" இருக்கமுடியும். இதை மறுப்பவர்கள் இன்று வெறும் இடதுசாரிக் கவசம் போட்ட யாழ் மேலாதிக்கவாதிகள் இருக்கின்றனர்.

முற்போக்கு தமிழ்தேசியம் என்று தன்னை இனத்தின் மூலம் அடையாளப்படுத்தும் போது, மற்றொரு இனத்துக்கு எதிராகத் தன்னை அடையாளப்படுத்த முடியும். சர்வதேசியவாதியாக தன்னை அடையாளப்படுத்த முடியாது. ஒரு கம்யூனிஸ்ட் தன்னை இனத்தின் பெயரால் தன்னை முற்போக்காக காட்டமுடியாது. அப்படி யாராவது தன்னைக் காட்ட முயன்றால் அவர்கள் வேறு யாருமல்ல, மூடிமறைத்த இடதுசாரிய வேடம் போட்ட  வலதுசந்தர்ப்பவாதிகள் தான்.

இந்தவகையில் "இடதுசாரிய" தமிழ்தேசியம் என்பது தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரானது. பெண்களுக்கு எதிரானது. சக பிரதேச மக்களுக்கு எதிரானது. சக சிறுபான்மை இனங்களுக்கு எதிரானது. பெரும்பான்மை மக்களுக்கு எதிரானது. சுரண்டும் வர்க்கம் சார்ந்தது. இந்த வகையில் தமிழ்தேசியம் என்பது யாழ்-மேலாதிக்கம் சார்ந்தது. அது மொத்த மக்களுக்கும் எதிரானது. இது தன்னை மூடிமறைக்க இடதுசாரிய சொற்களைக்கொண்டு தன்னை தீவிர இடதுசாரியாக காட்டிக்கொள்ள முனைகின்றது. இதன் மூலம் பிற்போக்கான இனவாதம் சார்ந்து இன தமிழ் தேசியத்தை உயர்த்திப் பிடிக்கின்றது.