கொடிகட்டிப் பறந்த பிரதேசவாதமும், பேரினவாதத்தை எதிர்த்த குறுந்தேசியவாதமும், தேர்தல் முடிவுகளும் பற்றி

யாழ்ப்பாணத்தானுக்கு எதிரான பிரதேசவாதமும், தமிழ் மற்றும் முஸ்லிம்களுக்கு எதிரான பேரினவாதத்துடன் கூடிக் கூத்தாடிய "ஜனநாயகத்" தேர்தல். இந்த அரசியல் அடித்தளத்தை கொண்டு, அரச இயந்திரத்தின் முழுப் பலத்துடன், பாரிய நிதியாதாரங்களுடன், வன்முறையைத் தூண்டி, மக்களை மிரட்டியதன் மூலம், ஒரு முறைகேடான சட்டவிரோத தேர்தலை நடத்தினர். மறுதளத்தில் தமிழ், முஸ்லிம் என்ற குறுகிய குறுந்தேசிய வாதத்தை முன்னிறுத்தி, இந்தத் தேர்தலை எதிர்த்தரப்பாக எதிர்கொண்டனர்.

மக்களை மேலும் பிளக்கின்ற, ஒடுக்குகின்ற, அடிமைப்படுத்துகின்ற ஒரு தேர்தல். இதைத்தான் "ஜனநாயகம்" என்கின்றனர். இதைத்தான் மனிதனின் தெரிவு "சுதந்திரம்" என்கின்றனர். மக்களை தமக்குள் எதிரியாகக் காட்டி, மோதவிட்டு வாக்குப் பெறுகின்ற அனைத்துவிதமான மோசடிகளையும், வன்முறைகளையும், பித்தலாட்டங்களையும் செய்ததன் மூலம், தேர்தல் என்ற பயங்கரவாதத்தை மக்கள் மேல் ஏவிவிட்டனர்.

அரசு கிழக்கு தேர்தல் மூலம், தமிழ்மக்களின் இனப் பிரச்சனையை இல்லாததாக்கிக் காட்டவே முனைந்தனர். உலகை ஏமாற்ற, தேர்தல் மூலமும் அதன் முடிவுகள் மூலமும் படாத பாடுபட்டனர். இதற்காக பாரியளவில் பணத்தையும், பிரதேசவாத உணர்வையும், வன்முறையையும், அரச இயந்திரம் மூலம் தூண்டிவிட்டனர்.

இவற்றைக் கடந்து தான், அரசின் இனவாத முகத்தை பொத்தி அடித்து இருக்கின்றது தேர்தல் முடிவுகள். தமிழ் மற்றும் முஸ்லீம் மக்கள், இனவாதத்துக்கு எதிராக வாக்களித்து இருக்கின்றனர். இனவாதப் பிளவுக்கு எதிராக மட்டுமின்றி, பலாத்காரமாக தம்மை பிரித்து இணைக்கின்ற அரசின் திட்டமிட்ட சதிக்கு எதிராக வாக்களித்திருக்கின்றனர். இது தவிர்க்க முடியாமல், குறுந்தேசியத்தின் கீழான வாக்குப் பதிவாகி இருக்கின்றது.

இதைத்தான் தேர்தல் முடிவுகள் காட்டுகின்றது. அரசின் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 200,044 வாக்குகளையும், தமிழ் தேசிய கூட்டமைப்பு 193,827 வாக்குகளையும், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 132,917 வாக்குகளையும், யூ.என்.பி 74,901 வாக்குகளையும், தேசிய சுதந்திர முன்னணி 9,522 வாக்குகளையும் பெற்றன. தேர்தல் முடிவுகள் இனரீதியான வாக்களிப்பாக, இரு சிறுபான்மை இனமும் பெரும்பான்மை இனத்தை பிரதிநிதித்துப்படுத்தும் அரசுக்கு எதிராக வாக்களித்து இருக்கின்றது.

இந்த வகையில தமிழ் முஸ்லீம் இனவாதக் கட்சிகளுக்கு 326 834 வாக்குகள் கிடைத்து இருக்கின்றது. அரசின் இன மற்றும் பிரதேசவாதத்துக்கு எதிராக, கட்டாயப்படுத்திய ஐக்கியத்துக்கு எதிராக மக்கள் வாக்களித்திருக்கின்றனர்.

இலங்கையில் இனமுரண்பாடு தீர்க்கப்படாதவரை, இலங்கையில் இனம் சார்ந்த பிளவு தொடரும் என்பதையே, இந்தத் தேர்தல் முடிவுகள் மீண்டும் எடுத்துக்காட்டுகின்றது.

மேலிருந்து திணிக்கப்படும் இனரீதியான பிளவும், அதை ஜனநாயகமாக கொண்ட தேர்தலையும், கீழ் இருந்து கட்டும் வர்க்க ஜக்கியம் மூலம் தான் முறியடிக்க முடியும் என்பதை தேர்தல் வழிமுறை எடுத்துக்காட்டுகின்றது. மக்களைப் பிளக்கும் தேர்தல் ஜனநாயகம் வேறு, மக்களை ஜக்கியப்படுத்தும் வர்க்க ஜனநாயகம் வேறு என்பதை தேர்தல் எடுத்துக் காட்டுகின்றது.

மக்கள் தங்களைத் தாங்கள் எதிரியாக பார்ப்பதில்லை. எதிரியாக மாற்றும் சுரண்டும் வர்க்க அரசியலும், தேர்தல் ஜனநாயகமும் தான் மக்களை எதிரியாக அணிதிரட்டுகின்றது. இதை முறியடிக்கும் வர்க்க அரசியல் தான் மக்களின் தெரிவாக இருந்த போதும், அது அரசியல் விழிப்பற்றே காணப்படுகின்றது. இதை முன்னோக்கி நகர்த்துவதே எம் முன்னோக்கு அரசியல் பணியாகவுள்ளது.

பி.இரயாகரன்

09.09.2012