"கருத்து என்பது மனித மனத்தில் பிரதிபலித்துச் சிந்தனையின் வடிவங்களாக உருவம் பெறும் பொருளாயத உலகமே தவிர வேறு எதுவுமில்லை" என்றார் மார்க்ஸ். இந்த வகையில் மார்க்சியம் முன்வைக்கும் பொருள் முதல்வாதம், ஒருமைப் பொருள் முதல்வாதமாகும்.

ஒருமைப் பொருள் முதல்வாதம் கருத்தியல் ரீதியிலான அம்சத்திற்கும் பொருளாய ரீதியிலான அம்சத்துக்கும் இடையிலான உட்தொடர்பை விஞ்ஞானபூர்வமாக அணுகுகின்றது. இது இயற்கை அல்லது வாழ்க்கை தொடர்பான ஓரே கோட்பாட்டில் இருந்து எழுகின்றது. இது பொருள் மற்றும் கருத்தியல் வடிவத்தைக் கொண்டு இருக்கின்றது. கருத்தியல் மற்றும் பொருளாயதம் என்ற இரு நிகழ்ச்சி போக்குகள், இயற்கை அல்லது சமுதாயத்தின் இருவேறு வடிவங்களே ஒழிய வேறல்ல என்பதே ஒருமைப் பொருள் முதல்வாதத்தின் உள்ளடக்கமாகும். இங்கு கருத்தியல் மற்றும் பொருளாயதம் இரண்டில் ஒன்று இன்றி மற்றொன்றை நினைத்துப் பார்க்க முடியாது. இரண்டும் சேர்ந்தே நிலவுகின்றது, சேர்ந்தே வளருகின்றது. ஒன்றை ஒன்று பிரிக்க முடியாத இயற்கையாகவும், அதே நேரம் கருத்தியல் மற்றும் பொருளாதாய என்ற இரு வேறுபட்ட வடிவங்களில் இது தன்னை வெளிப்படுகின்றது. சமூக வாழ்க்கையில் கூட பிரிக்க முடியாத, அதே நேரம் இரண்டு வேறுபட்ட வடிவங்களில் வெளிப்படுகின்றது. அதாவது பிரிக்க முடியாத நாணயத்தின், இரு வேறுபட்ட பக்கங்கள் இருப்பது போன்றது.

முரணற்ற இந்த உண்மையைப் புரிந்து கொள்ளாத அறிவுக்கு இடையிலான முரண்பாடு, வேறுபட்ட இரு உலக கண்ணோட்டங்களாக இன்று வெளிப்படுகின்றது.

இந்தவகையில் இயற்கைக்கும், சமுதாய வாழ்க்கைக்கும் முன்னரே அனைத்தும் தழுவிய கருத்து எங்கும் இருந்து வந்ததாகவும், இதுவே சமுதாய வளர்ச்சிக்கு அடிப்படையாக இருந்ததாக கூறுவது தான் கருத்துமுதல்வாதம். இந்த கருத்து முதல்வாதம் பின் பலவாக பல கூறுகளாக பிரிந்தது.

இப்படி பிரிந்து, கலந்தவை தான் எம்மைச் சுற்றிய பல்வேறு கண்ணோட்டமாக வெளிப்படுகின்றது. பொருள் இல்லாத கருத்துக்களையும், கருத்தை முதன்மையாகக் கொண்டு பொருளைப் பார்ப்பது என்று, இப்படி பல முரணுள்ள கருத்தாக வெளிப்படுகின்றது.

1.ஒருமைப் பொருள் முதல்வாதத்துக்கு மாறாக கருத்தையும் பொருளையும் ஒன்றாக அல்லது அக்கம்பக்கமாக தோன்றுவதாக கருதுவது இணைவுநிலைவாதமாக மார்க்சியம் இதை விளக்குகின்றது.

2.ஒருமைப் பொருள் முதல்வாதத்துக்கு மாறாக பொருளையும் கருத்தையும் சமமுக்கியத்துவம் கொடுத்து, அது எதிர் எதிரானதாகவும் ஒன்றையொன்று மறுப்பதாகவும் காட்டுவது இருமைவாதமாக மார்க்சியம் இதை விளக்குகின்றது.

3.ஒருமைப் பொருள் முதல்வாதத்துக்கு மாறாக கருத்தியல் ரீதியான அம்சத்தின் முக்கியத்துவதையும், பொருளாதார ரீதியான அம்சத்தின் மீதான கருத்தியல் தாக்கத்தை மறுப்பதை கொச்சைப் பொருள் முதல்வாதமாக மார்க்சியம் இதை விளக்குகின்றது.

இப்படி முரணுள்ள, விஞ்ஞான பூர்வமற்ற பல எதிர்நிலைக் கோட்பாடுகளை மார்க்சியம் விளக்கி அம்பலப்படுத்துகின்றது. அதே நேரம் எம்மை அறியாது இது சார்ந்த சிந்தனை தளத்தில், நாமும் எம் அறிவும் குனிக் கூறுகிக் காணப்படுகின்றது. எம் அறிவையும், அதன் முரணற்ற தன்மையையும் நாம் கேள்விக்குள்ளாக்க வேண்டும். நாம் இன்று எதனூடாக, எப்படி இந்த உலகைப் பார்க்கின்றோம்? நாம் பார்க்கும் பார்வை சரியானதா?

"ஒரு மனிதனைப் பற்றிய நமது கருத்து அவன் தன்னைப் பற்றித் தானே கொண்டிருக்கும் நினைப்புகளை அடிப்படையாகக் கொண்டிருப்பதில்லை. அதே மாதிரி மாறுதலடைகிற இத்தகைய ஒரு காலப்பகுதியைப் பற்றியும் அக்காலப் பகுதிக்குரிய உணர்வைக் கொண்டு தீர்ப்பு சொல்ல முடியாது. அதற்கு மாறாக, சரியான முறையில் விளக்குவதற்கு, பொருளாயத வாழ்விலுள்ள முரண்பாடுகளைக் கொண்டுதான், சமுதாய உற்பத்திச் சக்திகளுக்கும் உற்பத்தி உறவுகளுக்கும் இடையே இருந்து வருகின்ற மோதலைக் கொண்டுதான் அவ்வுணர்வை விளக்கவேண்டும்" என்றார் லெனின்.

ஆம், இதுதான் எங்கும் தளுவிய, முரணற்ற முழுமையான உண்மையும் கூட. ஒன்றுபட்ட மனித சிந்தனையை, அடிப்படையிலான சமூக ஒற்றுமையை, எங்கள் வாழ்நிலை சார்ந்து விளக்கவோ, அதை நடைமுறையில் நாம் காணவும் முடியாது.

எங்கெல்ஸ் கூறினார் "உலகின் ஒற்றுமை என்பது அதன் வாழ்நிலையில் அடங்கியிருக்கவில்லை... உலகின் உண்மையான ஒற்றுமை அதன் பொருளாயதத் தன்மையில் அடங்கியிருக்கின்றது." என்றார். எங்கள் சிந்தனை செயல் அனைத்தும் சமுதாயத்தின் வாழ்நிலையை மாற்றி அமைக்கும் பொருளாயத கூறாக வளர்ச்சி பெற வேண்டும். இதைத்தான் மார்க்சியம் சமுதாய அம்சமாக, முழு உலகம் தழுவிய ஒன்றாக காண்கின்றது. இங்கு எமது கருத்து பற்றிய எமது அறிவு என்ன? இதை அடுத்து ஆராய்வோம்.

பி.இரயாகரன்

08.08.2012

தொடரும்

1.மார்க்சியம் என்பது என்ன? - மார்க்சியத்தை புரிதல், கற்றல், நிறுவுதல் பகுதி - 01

2.மனித சிந்தனைகள் எங்கிருந்து எப்படித் தோன்றுகின்றன? - மார்க்சியத்தை புரிதல்;, கற்றல், நிறுவுதல் பகுதி - 02