வெள்ளை வானில் கடத்தப்படுவர்கள் குற்றவாளிகள் தான் என்கின்றார் கோத்தபாய. தங்கள் சட்டவிரோதமாக சிறையில் அடைத்து வைத்து சித்திரவதை செய்தவர்களை, அடித்துக் கொன்ற பின் பிணத்தைக் கூட கொடுக்கமுடியாது என்கின்றது அரசு. பிணம் நாட்டின் அமைதிக்கும், இன ஐக்கியத்துக்கும் பங்கம் விளைவிக்கும் என்று கூறி நீதிமன்றம் மூலம் தங்கள் பாசிசப் பயங்கரவாதத்துக்கு கவசமிடக் கோருகின்றனர்.

இது மட்டுமா அண்மைய சம்பவங்கள். இல்லை. வடக்கில் போராட்டத்தை நடத்துபவர்களின் வீடுகள் மீது தாக்குதல் நடத்துகின்றனர். போராட்டத்துக்கு தடை விதிக்குமாறு நீதிமன்றத்தைக் கோருகின்றனர். நீதிமன்றம் இதற்கு மறுக்க, போராட்டத்தில் புலிக்கொடியுடன் புகுந்து ஆட்டம் போட்டும் அரச பாசிசப் பயங்கரவாதம், அதைக்காட்டி ஐயோ புலி என்கின்றது. இதுவும் அம்பலமாக, நீதிமன்றம் மூலம் தடைவிதிக்க மறுத்த நீதிபதி வீடும் தாக்கப்படுகின்றது. யுத்த குற்றக் கும்பலால் ஆளப்படும் நாட்டில், பாசிப் பயங்கரவாதம் தலைகால் தெரியாது இன்று ஆட்டம் போடுகின்றது.

மன்னார் மீனவர் விவகாரத்தை முஸ்லீம்-தமிழ் இன மோதலாக்கிவிட அரசு துடியாத் துடிக்கின்றது. நீதிபதியை மிரட்டிய அமைச்சர், நீதிமன்றம் மீது பயங்கரவாதத் தாக்குதலை நடத்தி இருக்கின்றார். மன்னாரில் இன ஐக்கியத்தை மீண்டும் சிதைக்க, அரச பாடதபாடுபடுகின்றது.

கிழக்கில் தேர்தலிலும் இதே பாசிசப் பயங்கரவாத பல்லவிதான். தமிழரை தனிமைப்படுத்தி அழிக்க, மூஸ்லிம் மக்களை எதிராக முன்னிறுத்த முனைந்தது. இந்தவகையில் அரசு பலவழிகளில் குறுக்க நெடுக்க செயல்படுகின்றது. மறுதளத்தில் கூட்டமைப்பு வேட்பளர்களை மிரட்டி தேர்தலில் இருந்து விலக வைக்கின்றது. வேறு எந்த பிரதேசத்திலும் இல்லாத வண்ணம், கிழக்கில் சில பத்து சுயற்சைக் குழுக்களை தேர்தலில் அரசு நிறுத்தி இருக்கின்றது. அரசின் இந்த செயல்பாடு இனவழிப்பு மூலமான பாசிசமாக்களை, இலங்கை  சமூகம் மீது திணித்து வருகின்றது.

இணையங்கள் முடக்கப்படுகின்றது. பத்திரிகையாளர்கள் கண்கணிக்கப்படுகின்றனர். அவர்களை வெள்ளை வானில் கடத்த தொடர்ந்து முயற்சிக்கப்படுகின்றனர். இணையங்களை பதியக் கோருவதும், இணையத்தை நடத்த முடியாத அளவுக்கு கட்டணங்களை திணிக்கின்றனர். மறுதளத்தில் இத்துறையில் இலவசமாக மடிக் கனணி, வட்டியில்லாத கடன் அல்லது குறைந்த வட்டியில் கடன் இப்படிப் பாசிப் பயங்கரவாத தன்னை தான் பல வண்ண முகத்தில் வெளிப்படுத்தி வருகின்றது.

இதே போல் தமிழ் மக்களை மேலான பாசிசப் பயங்கரவாதத்தை எவி, நாட்டை விட்டு தமிழரை தப்பியோடுமாறு அரசே முன்னின்று செயல்படுகின்றது. அப்படி நாட்டைவிட்டு செல்லும் எற்பாட்டை செய்து, அதற்கு பதிலாக காணி உறுதிகளை வாங்குவதும் (புலிகள் பாணியில்), பின் அவர்கள் நாட்டைவிட்டு வெளியேறும் போது கைது செய்வதையும் ஒருங்கே இந்த அரசு அரங்கேறுகின்றது.

இப்படி அரசின் ஒவ்வொரு நடவடிக்கையும் பாசிசப் பயங்கரவாதத்துடன் தொடர்புடைய ஒன்றாகவே இருக்கின்றது. பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள் இராணுவப் பயற்சி என்ற விதவிதமாக வகையில், பாசிசப் பயங்கரவாதம் எங்கும் எதிலும் புகுத்தப்படுகின்றது.

புலிப் பயங்கரவாதம் சிங்கள அப்பாவி மக்களை குறிவைத்து கொன்ற போது, மக்களின் இயல்பான சுயமான கண்கணிப்பு அரசு பயங்கரவாதத்தை பலப்படுத்தியது. புலி அழிவின் பின் இதை அரசு பெற முடியாத சூழல், அரசே முழு மக்களையும் கண்காணிக்கும் இராணுவ மயமாக்களை எங்கும் எதிலும் திணிக்கின்றது.

ஜனநாயகம், சட்டத்தின் ஆட்சி என்பது இன்று வெறும் சடங்காக, தங்கள் சட்டவிரோத பாசிசத்தை பூசிமொழுகும் பூச்சாக அதைப் பயன்படுத்துகின்றது. இதற்கு அடிபணியாத தேர்தல் அதிகாரிகள் முதல் நீதிபதிகள் வரை மிரட்டி அவர்களை அடிபணிய வைக்கும், எல்லாவிதமான பாசிசப் பயங்கரவாதத்தையும் அவர்கள் மேலும் எவுகின்றது.

அரச பயங்கரவாதம் இன்று பாசிசப் பயங்கரவாதமாக பண்பு மாற்றம் பெற்று ஆட்டம் போடுகின்றது. எதிர்ப்பின்றி அடங்கி போகும் வண்ணம், தங்களாகவே இதற்கு இணங்கி அடங்கி போகுமாறு அதிகார வர்க்கத்தையே மிரட்டி வருகின்றது. சாதாரண பொது மக்கள் மூச்சு கூட விட முடியாத வண்ணம், கண்காணிக்கப்படுகின்றனர்.

இந்த பாசிச பயங்கரவாத நிழலில் இயங்கும் கூட்டம் தான், புலிகொடியை அசைப்பதில்   தொடங்கி இலக்கியம் செய்வது வரையான சுதந்திரமான பாசிச செயல்பாடுகளில் ஈடுபடுகின்றனர். இன்று வரை புலியெதிர்ப்பு பேசிய இன்னுமொரு சந்தர்ப்பவாத கூட்டம், இந்த பாசிசத்தின் பின் முழுமையாக நிற்பதில் இருந்து நழுவி மீண்டும் நடுநிலை வேசம் போட முனைகின்றனர். வேறு சிலர் இதில் எனக்கு உடன்பாடு இல்லை என்று கூறி, சுய புரட்டுத்தனத்தை செய்வதன் மூலம் தங்கள் மூகமுடிகளை தொடர்ந்து காப்பற்ற முனைகின்றனர்.

இந்த மூகமுடித்தனங்கள், வேசங்களைக் கடந்து அரச பாசிசப் பயங்கரவாதத்தை எதிர் கொண்ட படி தான் மக்கள் வாழமுடியாது, அனுதினம் செத்துப் பிழைக்கின்றனர். புலி பாசித்தின் கீழ் வாழ்ந்த மக்கள், புலிப் பாசிசத்தை தமிழ் மக்கள் போராட்டமாக கருதி அது சார்ந்து அதை அனுசரித்து வாழமுடிந்தது. அரச பாசிசத்தின் கீழ் இனவழிப்பை அனுசாரித்தால் தான் வாழ்வு என்ற அவலம். அது தன்னைத்தான் அழிக்கக் கோருகின்றது. அந்தளவுக்கு அது கொடூராமானது, பயங்கரமானது. அரச பயங்கரவாதம், பாசிச பயங்கரவாதமாக உருவெடுத்து, இதைத்தான் தமிழ் மக்களிடம் கோருகின்றது. நீ உன்னை சுயமாக அழித்துக் கொள் என்று கோருகின்றது, நிர்பந்திக்கின்றது. இதுதான் இன்றைய எதார்த்தம். இதற்கு வெளியில் நாம் எம்மை எமாற்ற முடியாது. எம்மை மற்றவர்கள் எமாற்றுவதை அனுமதிக்கவும் முடியாது.

பி.இரயாகரன்

20.07.2012