இதுதான் தமிழ் மக்களின் இன்றைய நிலை. பறிகொடுத்த தங்கள் உறவுகளுக்காக போராடும் மக்கள், தங்கள் சொந்த சட்டபூர்வமான நிலங்களுக்காக போராடுகின்ற அவலம். தமிழ்மக்கள் தங்கள் பூர்வீக பிரதேசத்துக்காக போராடிய மக்கள், இன்று தங்கள் வாழ்விட உரிமைக்காக போராட நிற்பந்திக்கப்படுகின்றனர். இந்த ஒடுக்கு முறைக்கு எதிராக வடக்கில் வெளிப்படும் உணர்வுகள், கிழக்கில் வெளிப்படவில்லை. ஒடுக்குமுறையும், விழிப்புர்ணவும், சோரம் போதலும் பிரதேசத்துக்கு பிரதேசம் வேறுபடுகின்ற பின்னணியில், வடக்குகிழக்கில் இனவழிப்பு புதிய வடிவம் பெற்று இருக்கின்றது. யுத்தகாலத்தில் யுத்த வன்முறை மூலம் எதையெல்லம் செய்ய முடிந்ததோ, அதை யுத்ததின் பின்னலான கொள்கையாக நடைமுறையாகக் கொண்டு அரசு செயல்படுகின்றது.

ஒரு இராணுவ ஆட்சி மூலமான பேரினவாத ஆக்கிரமிப்புக்கு Nஐர்மனிய நாசிகளின் பிரித்தாளும் உத்திகளும், இஸ்ரேலிய அடாவடித்தனத்துடன் கூடிய குடியேற்ற நடைமுறைகளும் அரங்கேறுகின்றன. புத்த மதத்தினர் இல்லாத பூமியில் புத்த சிலைகள் நிறுவப்படுகின்றன. சிங்கள மக்கள் வாழத பிரதேசங்களில், நிலங்கள் அபகரிக்கப்படுகின்றன. அனுதினம் வடகிழக்கில் எங்கேனும் ஒரு இடத்தில், இதுதான் அன்றாட நிகழ்வாகின்றது. அரசு வடக்கில் "வசந்ததையும்", கிழக்கில் "விடியலையும்" இப்படித்தான் அரங்கேற்றுகின்றது.

சிங்கள மக்கள் குடியேற விரும்பாத இடத்தில், பௌத்த மதம் வழிபடாத பூமியில், இராணுவ குயேற்றங்கள் மூலமும், மூலதன சுரண்டல் மூலமும் பௌத்த-சிங்கள் ஆக்கிரமிப்பை நடத்த தொடங்கி இருக்கின்றது அரசு.

இதற்காக வடக்கு கிழக்கில் வாழ்கின்ற முஸ்லீம் மக்களை தமிழ் மக்களில் இருந்து  தனிமைப்படுத்தி, இந்த இன அழிப்பை துரிதப்படுத்த முனைகின்றது. இதற்கு ஒட்டுண்ணிகளாக வாழும் முஸ்லீம் அரசியல்வாதிகளுக்கு பதவிகளும், பட்டங்களும், சுகங்களும் கொடுக்கப்படுகின்றன. இது போன்று தமிழ் மக்கள் மத்தியில் இருந்து தனிமைப்பட்டு போன கூலிக் குழு லும்பன்களின் துணையுடன், சலுகை கொண்ட மிரட்டல் அரசியலை நடத்துகின்றது. அரசு இன்று நடத்துகின்ற இனவழிப்பு இராணுவ குடும்ப ஆட்சி மூலம்  நாட்டையும் மக்களையும் சின்னாபின்னப்படுத்தி வருகின்றது.

வடகிழக்குக்கு வெளியில் இதன் தாக்கத்துக்கு உந்தபட்ட வெளிபாடுகள், அங்கொன்று இங்கொன்றாக தொடர்ந்து வெளிப்பட்டு வருகின்றது. இவை அனைத்தும் கோத்தபாயவின் நேரடி  கண்கணிப்பின் கீழ் திட்டமிட்டு அரங்கேற்றப்படுகின்றன. கிறிஸ் மனிதன் முதல் பல்கலைக்கழக மாணவர்களுக்கான இராணுவ பயிற்சி ஆகட்டும், மூலை முடுக்கெல்லாம் இராணுவ ஆட்சிக்குரிய அனைத்து தயாரிப்புக்களும் முடுக்கிவிடப்பட்டு கொண்டு இருக்கின்றன.

தமிழ் மக்களை சிங்கள மக்கள் முன் எதிரியாக காட்டும் வண்ணம், தமிழ் மக்கள் தம் எதிர்ப்பை தெரிவிக்கும் வண்ணம் நிகழ்வுகளை திட்டமிட்டு அரசு திணிக்கின்றது.

மொத்தத்தில் கிரிமினல் மயமாகிவிட்ட அரசியல் பின்புலத்தில், அரசே கிரிமினல் கும்பலாக இயங்குகின்றது. கடத்தல் மற்றும் காணமல் போதல் அன்றாட நிகழ்வுகளாகிவிட்டன. மாபியாத்தனமாகி விட்ட அரசியல், வன்முறை மூலம் இயங்குகின்றது.

மறுதளத்தில் நாட்டின் பொருளாதாரம் திவாலாகிவிட்ட நிலையில், அன்னிய கடனில் நாட்டை இராணுவ மயப்படுத்தப்படுகின்றனர். இலங்கையின் பொருளாதாரத்தை இராணுவம் விழுங்கி ஏப்பமிடுகின்றது. வாங்கிய கடனைக் கட்டவே, புதிய கடன்கள் என்ற நிலையில் இலங்கையின் பொருளாதாரம் உள்ளது. இந்த பின்னணியில் மகிந்த குடும்பத்தின் ஆட்சி நடக்கின்றது. நாட்டை சிங்கள-பௌத்த கட்டமைப்பு மூலம் பாசிசமாக்கி, இராணுவ ஆட்சியை இதன் மேல் நிறுவி வருகின்றது இந்த மகிந்த கும்பல்.

இந்த வகையில் சிங்கள-பௌத்த பாசிசத்தை சிங்கள மக்களின்  அரசியல் தெரிவாக்க வடக்குகிழக்கில் நிலத்தை ஆக்கிரமிக்கின்றது. புத்த சிலைகளை நிறுவுகின்றது. சிங்கள மீனவர்களை கொண்டு வந்து வடக்குகிழக்கில் மீன்பிடிக்க விடும் அரசு, தமிழ் மீனவர்களுக்கு பாஸ் நடைமுறையை திணிக்கின்றது. இப்படி நாட்டில் இன ரீதியான, மத ரீதியான வேறுபட்ட நடைமுறைகளும், பொது சிவில் சட்ட நடைமுறைகளும் காணப்படுகின்றன. இவை அனைத்தும் இராணுவமயமாகிய பின்புலத்தில் அரங்கேறுகின்றன.

யுத்தத்தின் முன்னும் - பின்னும்  தமிழ் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் அனத்தும் புரட்டுத்தனமானவை என்பது அம்பலமாகி விட்டது. அரசின் தொடர்ச்சியான புதிய வாக்குறுதிகள் முதல், (தமிழ்-முஸ்லீம்) ஒட்டுணிகளின் பித்தலாட்ட அரசியல் வரை, மக்களையும் உலகையும் ஏமாற்றுகின்ற ஒரு புள்ளியில் முகிழ்கின்ற இராணுவ பௌத்த சிங்கள பாசிசம்தான்.

உலக்கு வழங்கிய வாக்குறுதிகள் கூட, இந்த வகையில் தான் அம்பலமாகி நிற்கின்றன.  அந்த அளவிற்கு உலக முரண்பாட்டுக்குள் தன்னை புகுத்தி, தன்னை இராணுவமயமாகின்றது. இதன் மூலம் நாட்டை, சர்வதேச முரண்பாட்டுக்குள்ளான படுகுழிக்குள் தள்ளி வருகின்றது.

குடும்ப ஆட்சியை, ஜனநாயக விரோத ஆட்சியை, தமிழினவழிப்பு ஆட்சியை, பௌத்த-சிங்கள பாசிச ஆட்சியை, இராணுவ ஆட்சி அடிப்படையாகக் கொண்டு மூலதனத்தின் ஆட்சியை இலங்கை மக்கள் மேல் திணித்து நிற்கின்றது. இதை மூடிமறைக்க தமிழ் மக்களை மையப்படுத்தி குறிப்பாக ஒடுக்குவதன் மூலமான தமிழ் மக்களின் எதிர்வினையைக் காட்டி, இலங்கை முழுவதையும் அடக்கியொடுக்கி நிற்கின்றது இலங்கை அரசு.

இப்படி சிங்கள மக்களை தமிழ் மக்களிடம் இருந்து பிரித்துவிடும் வண்ணம், சிங்கள-பௌத்த அரசாக தன்னை சிங்கள மக்கள் முன் காட்டிக்கொள்ள முனைகின்றது. இதற்கு எதிராக சிங்கள - பௌத்த மக்கள் மத்தியில் உள்ள இடதுசாரிகள் தொடங்கி பௌத்த பிக்குகள் வரை தொடர்ச்சியாக வெளியிடும் அறிக்கைகள், சிங்கள மக்களை அணிதிரட்டி நடத்தும் போராட்டமாக மாற வேண்டும்.

மறுதளத்தில் தமிழ் மக்களில் இருந்து சிங்கள மக்களை பிளக்கும் அரசின் தொடர்ச்சியான அரசியல் இனவாத சூழ்ச்சிக்கு, தமிழ் மக்கள் பழியாகத வண்ணம் குறுகிய இனவாதத்தைக் கடந்து சிங்கள மக்களுடன் இணைந்து இதற்காக போராடவேண்டும். இது மட்டும் தான், இந்த ஒடுக்குமுறைக்கு எதிராக, தமிழ் மக்கள் போராடுவதற்குரிய சரியான பாதையாக உள்ளது. அரச யாரை தன் பின்னால் அணிதிரட்டி தமிழ் மக்களை ஒடுக்க முனைகின்றதோ, அதை தடுக்கும் வண்ணம் நாம் போராட வேண்டும். இதுதான் எம் யுத்த தந்திரமாக இருக்க முடியும். கடந்த காலத்தில் எமது தோல்விகள் அனைத்தும் அரசை பலப்படுத்த எமது குறுகிய இனவாதமே முக்கிய காரணமாக இருந்து இருக்கின்றது.

இன்று இனவழிப்பு புதிய பரிணாமம் பெற்று வரும் இன்றைய சூழலில், நாம் எமது இனவாதத்தை கடந்து போராடுவதன் அவசியத்தினை முன்னொருபோதும் இல்லாத அளவில் வரலாறு எம்மிடம் கோரி நிற்கின்றது.

பி.இரயாகரன்

03.07.2012