புலம் பெயர்ந்த முற்போக்கு அரசியலற்ற வக்கிரத்தில் புரண்டு எழுகின்ற போது துரோகத்தனமும் அதனுடன் கூடிக் கூலாவுவது வரலாறு ஆகின்றது. இதன் விளைவால் 24.9.1999 அன்று பிரஞ்சு வெளிநாட்டுப் பிரிவு உயர்  அரசியல் பொலிஸ் அதிகாரியால் உத்தியோகபூர்வ விசாரணைக்காக அழைக்கப்பட்டு, உத்தியோகபூர்வமற்ற இரண்டு மணிநேர விசாரணையை என் மீது நடத்தினர்.

இந்த விசாரனை பற்றிய அபிரயங்களை தொகுப்பதும் பகிரங்கமாக வைப்பதும் அவசியமாகின்றது. அவர்களின் விசாரணையின் நோக்கம் மற்றும் அதன் பிரதிபலிப்புகளை தெரிவித்தனர். உள்துறை அமைச்சால் இலங்கைத் தமிழர் மீதான விசாரணை ஒன்றை நடத்த கோரியதைத் தொடர்ந்து, இவ் விசாரணையைச் செய்வதாக கூறிய படியே விசாரணைகள் ஆரம்பமாகியது.

நண்பர்களுக்கு இடையில் பகிரங்கமாக "சமரை" விநியோகம் செய்ய நாம் முன்பு சட்டப்படி பதிவு செய்த அமைப்பு தொடர்பான கேள்விகளில் இருந்து அதன் செயல்பாட்டை  ஒட்டி எழுப்பப்பட்ட குறுக்கு விசாரணையின் பின் (இதற்க்காவே உத்தியோக பூர்வமாக அழைக்கப்பட்டேன்)  இலங்கை மற்றும் சர்வதேச அரசியல் விவகாரங்கள் மீது தமது நிலைப்பாட்டை சுட்டிக் காட்டியதன் மூலம், மறைமுகமான நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தினர்.

எனது அல்லது எமது எழுத்து பிரஞ்சு அரசு பற்றியோ, இலங்கை அரசு பற்றியோ, முதலாளி பற்றியோ இருக்கக் கூடாது என்பதை தெளிவாக்கினர். இந்த போக்கில் எனக்கு எதிராக, புலம் பெயர் சமூகத்துக்கோ சொந்த மக்களைப் பற்றியோ எந்த அரசியலற்ற, குறிக்கோள் அற்ற, அரசியல் செயல்த் தளப் பிரிவின் சதியும், துரோகமும் அரங்கேறியது. எனக்கு எதிராக அரசியல் ரீதியில் முகம் கொடுக்க முடியாதவர்கள் தனிநபராகவோ அன்றி ஒரு சிலரோ திட்டமிட்டு பிரஞ்சு அரசுக்கு சில காட்டிக் கொடுப்பை செய்துள்ளனர் என்பதை விசாரனையின் போக்கில் ஊக்கிக்கமுடிகின்றது. அரசியலற்ற ஜனநாயகவாதிகள் எப்போதும் தமது குறிக்கோளை துரோகத்திலும், உளவுகளிலும் முடித்துக் கொள்வதே ஒரே வரலாறாக உலகு எங்கும் உள்ளது.

இன்று இலங்கையின் மிக நெருக்கடியான அரசியலில் புலியினது ஜனநாயக மறுப்பினால் சிதறிப் போன ஜனநாயக வாதிகள் மார்க்சியம் மீதான கேவலமான தாக்குதல்கள் அவர்களை புலிக்கும், கம்யூனிஸ்டுக்ளுக்கும் எதிரான ஒரு அரசியல் மார்க்கத்தை தேர்ந்து எடுப்பதை தீவிரமாக்கியது. இது எப்போதும் மாற்றுப் பாதையின்றி, குறிக் கோள் இன்றி தொடங்கும் போது ஆளும் பிற்போக்கு வர்க்கத்துக்கு சேவை செய்ய தொடங்குகின்றது.

இன்று மேற்கில் இருந்து எம் தேசம் வரையிலான அரசுகளை விமர்சிப்பதையும், அதை எதிர்த்து போராடக் கோருவதையும் காட்டிக் கொடுக்கும் போக்கில் தான் என் மீதான விசாரணை நடந்துள்ளது. இது முடிவல்ல தொடரும் என்பதையும், இந்தக் காட்டிக் கொடுப்பு நீடிக்கும் என்பதும் வர்க்கப் போராட்ட நெருக்கடி உணர்த்துகின்றது.

போஸ்னி, கோசாவோ, தீமோர், பாலஸ்தீனம், தென் ஆபிரிக்கா என்று பல நீண்ட  போராட்டங்கள் இன்று முடிவுக்கு வந்து ஜனநாயகம் விளங்குவதாகவும், ஏன் இலங்கையில் 200 வருட ஆங்கிலேய காலனியம் முடிவுக்கு வந்துள்ளதால் அமைதியான ஜனநாயகம் சாத்தியம் என்பதை அரசியல் பொலிஸ், ஏகாதிபத்திய உலகமயமாதல் வழியில் எனக்கு சுட்டிக் காட்டினர்.

இந்த நிலையில் வர்க்கப் போராட்டத்தை எதிர்க்கும் ஜனநாயக பிரிவு இதன் மேல் தான் தனது அரசியல் காட்டிக் கொடுப்பை செய்துள்ளது. ஏன் இதை புலிகள் காட்டிக் கொடுத்திருக்கலாம் என்ற வினாவை நீங்கள் சிலவேளை முன்தள்ள முயலலாம். நான் அதைத் திட்டவட்டமாக மறுக்கின்றேன். புலிகள் என் மீதான ஒரு நடவடிக்கையை எடுப்பின், அது ஒரு துப்பாக்கி குண்டு, நஞ்சு அல்லது விபத்து நாடகம் இது போன்றவை மட்டுமே என்பது வெள்ளிடைமலை.

பிரஞ்சு அரசியல் பொலிஸ் உயர் அதிகாரிகள் புலிகள் பற்றிய எமது நிலைப்பாட்டை கோரியதுடன், புலிகளால் ஏதாவது நேரடி அச்சுறுத்தல் இருந்தா என்ற கேள்வியை முன்வைத்தனர். நாம் இது வரை அப்படி நேரடி அச்சுறுத்தல் எதையும் பிரான்சில் சந்திக்கவில்லை என்பதை தெளிவுபடுத்தினோம். அதே நேரம் பிரான்சில் வாழும் தமிழ் சமூகம் ஏன் மற்றைய வெளிநாட்டு சமூகத்தை விட பிரஞ்சு சமூகத்துடன் ஒன்று இணையவில்லை? என்று கேட்டனர். இதற்கு புலிகள் காரணமா என்றனர். அதே நேரம் ஏன் புலிகள் அல்லாத சமூக அமைப்புகள் (கலாச்சார பண்பாட்டு சுயாதீனமான அமைப்புகள்) ஏன் தோன்றவில்லை என்றனர்.  இது போன்ற பல கேள்விகளை என்னை நோக்கி எழுப்பினர்.

இந்த இடத்தில் எனது நிலைப்பாட்டை தெளிவாக பகிரங்கமாக வைப்பது அவசியமாகின்றது. எமது சொந்த நாட்டு அரசியலில் புலிகள் மறுக்கும் ஜனநாயகம் பற்றிய எனது விமர்சனம் எப்போதும் பகிரங்கமாகவே உள்ளது. அதே நேரம் சொந்த தமிழ் மக்களின் தேசியக் கோரிக்கையை சுயநிர்ணயத்தின் வழிகளில் மட்டுமே தீர்க்க முடியும். தமிழ் மக்களின் கோரிக்கையை மறுக்கும் சிங்கள இனவெறி அரசின் அனைத்து எடுபிடிகளையும் நான் எதிர்க்கின்றேன். அதாவது புலிகளை மக்கள் அல்லாத எந்த அரசும், கூலிப்பட்டாளமும், ஏகாதிபத்திய மற்றும் அன்னிய இராணுவங்களும் அழிக்கும் ஆயின், அதை எதிர்த்து போராடுவதில் எப்போதும் முன் நிற்பது கடமையாக காண்கின்றோம்.

பிரஞ்சு அரசு புலிகளின் மக்கள் விரோத போக்குகளை தனக்கு சாதகமாக பயன்படுத்தி போராட்டத்தை நசுக்கும் எல்லாப் போக்கின் மீதும் நாம் எதிர்த்துப் போராடுவோம். புலிகளின் பல மக்கள் விரோதப் போக்கைப் பயன்படுத்தி இலங்கையில் அமைதியின் பெயரால் நடத்தும் எல்லா ஆக்கிரமிப்பு தலையீட்டையும் எதிர்த்து போராடுவோம்.

புலிகள் போராட்டத்தை ஜனநாயகப்படுத்தாத எல்லா நிலையிலும் புலிகளுக்கு எதிரான தலையீடுகளை அவர்களே கம்பளம் விரித்து வரவேற்பதாகவே இருக்கும். இது தமிழ் பேசும் மக்களின் நியாயமான விடுதலைப் போராட்டத்தை சிதைப்பதற்கு வழிவகுக்கும். ஏனெனின் சர்வதேச ஐக்கிய நாட்டுப்படை சரி அல்லது அன்னியப் படை சரி அரசைச் சார்ந்து நின்று தான் சிறுபான்மையினத்தை அணுகுவது தவிர்க்க முடியாத சுரண்டல் நலன்கள் எல்லைப்படுத்தும். போராட்டத்தை சொந்த மக்களை சார்ந்து ஜனநாயகப்படுத்துவதும், புலம் பெயர் நாடுகளில் அந் நாட்டுச் சட்டத்தை மதிப்பதும் அவசியமானதாகும். இதை புலிகள் கடைப் பிடிக்காத வரை இந்த அரசுகளை அவைகளைப் பயன்படுத்தி புலிகளையும், எமது தேசவிடுதலைப் போராட்டத்தையும் நசுக்கவும், நேரடி தலையீட்டையும் நடத்தி, தேசத்தின் தேசிய கோரிக்கைகளை அழிக்கும். இன்று ஏகாதிபத்தியங்கள் தேசங்களையும், தேசிய சொத்தையும் அழித்து அதை தனதாக்கும் கனவுக்கு அத்து மீறல்களை பயன்படுத்துவது எங்கும் காணமுடிகின்றது. தேசம், தேசிய சொத்துகளை உலகளவில் பொதுவில் ஏகாதிபத்தியம் அழித்து அதன் இடத்தில் தேசம் கடந்த தமது பன்நாட்டு நிறுவனங்களை உருவாக்குவது என்பது பொதுவான பண்பாக விதிவிலக்கின்றி உள்ள போது தமிழ் தேசியத்தை, உயிர் வாழ்வதை எந்த ஏகாதிபத்தியமும் அனுமதிக்காது என்பது வெள்ளிடைமலை.

எனவே சொந்த நாட்டில் போராட்டத்தை ஜனநாயப்படுத்துவதும்,  புலம் பெயர் நாட்டில் அந் நாட்டு சட்ட எல்லைக்குள் போராட்டத்தை நகர்த்துவது அவசியமும் அவசரமான கடமையாக இன்று எம்முன் உள்ளது. இந்த நிலையில் புலிகள் ஜனநாயகத்தை ஏற்க மறுத்து, இந்த நாட்டுச் சட்டத்தை மீறும் கட்டத்தில் அதை ஜனநாயக வாதிகள் எப்படி எதிர் கொள்வது என்பதை ஆராய்வது அவசியமாக உள்ளது. தனிப்பட்ட ஒரு மனிதன் அதுவும் அரசியலில் ஈடுபடுபவன் புலிகளினால் ஏற்படும் ஒரு நேரடிப் பாதிப்பை இந்த நாட்டுச் சட்ட எல்லைக்குள் பகிரங்கமாக நீதி கோரவேண்டும். அல்லாது இரகசியமான வழிகளில் இதை கொண்டு செல்வது என்பது சொந்த பாதிப்புக்கான நீதியை கோருவதற்குப் பதில் (இங்கு நீதி கிடைப்பதில்லை) இலங்கை அரசியலில் அன்னியனை நுழைப்பதில் துணை போகும். இது கண்டிப்பாக அரசியலில் ஈடுபடுவோரின் கட்டாயமான அரசியல் மார்க்கமாகும். சொந்த பாதிப்பு இல்லாத பொதுவான ஜனநாயக மீறல்களை எக் காரணம் கொண்டும் அரசியலில் ஈடுபடுவோர் ஏகாதிபத்திய அரசின் இரகசிய பிரிவுகளுக்கும், பகிரங்க பிரிவுகளுக்கும் கொண்டு செல்வது மக்களுக்கு எதிராக ஏகாதிபத்திய தலையீட்டை ஊக்குவிப்பதாகும். பொதுவான புலிகளின் ஜனநாயக மீறல்களை சொந்த மக்களுக்குள்ளும், உலகப் புரட்சிகர மக்களுக்குள்ளும் எடுத்துச் செல்வதே மாற்று அரசியல் பாதையாகும்.

இதை மறுத்து இன்று ஜனநாயகத்தின் பின் தனிப்படவோ அல்லது வேறு வழியிலோ செயல்படும் அரசியலற்றோர், குறிக்கோள் அற்றோர் முன் இருப்பது மாற்று அரசியல் பாதை தேர்ந்து எடுப்பது தான். இது பகிரங்கமாக மக்களைச் சார்ந்து இருப்பதே. அன்னிய சக்திகள், எமது எதிரிகளுடன் இரகசிய மற்றும் பகிரங்கமான அனைத்து செயலும் மக்களை மேலும் ஆழ துன்பச் சேற்றுக்குள் இட்டுச் செல்வதாகவே இருக்கும். எனது கருத்தை கருத்தால் எதிர் கொள்ள முயலுங்கள். மாறாக சதியால், மோசடியால் எதிர் கொள்வது மக்கள் விரோத ஜனநாயக விரோத அரசியலாகும். எதை ஜனநாயகத்தின் பின் புலிகளிடம் இருந்து கோரினீர்களோ அதையே மற்றவனுக்கு மறுக்கும் மக்கள் விரோத அரசியலை கைவிட்டு வெளிவாருங்கள். அதே நேரம் அரசியலற்ற, முற்போக்கின் பின் அரங்கேறும் அனைத்து மக்கள் விரோதப் போக்கை அம்பலப்படுத்துங்கள். இல்லாத வரை இந்த மாதிரியான மக்கள் விரோதத்துக்கு சாமரை வீசுவதே எஞ்சி அதற்குள் ஒட்டு மொத்தமாக சீரழிவதே எஞ்சும்.

புலிகளுக்கு எதிராக சரி, கம்யூனிஸ்டுகளுக்கு எதிராக சரி சதிப்பணியிலான எந்த நடவடிக்கையையும் இனம் காணவேண்டியது  அவசியமாகும். மக்களிடம் பேசாத, மக்களைச் சார்ந்திருக்காத இரகசிய மற்றும் பகிரங்கச் செயல்பாடுகள் மக்கள் விரோதமானவை. இவற்றை இனம் கண்டு அம்பலப்படுத்துவது ஒவ்வொரு ஜனநாயகவாதியின் ஜனநாயகக் கடமையாகும். இதை மறுத்த ஜனநாயகம் என்பது போலித்தனமானதும் கேவலமானதுமாகும்.

பி.இரயாகரன்

28.9.1999