சிறிலங்காவின் அரச படைகளினால் கைது செய்யப்பட்ட நூற்றுக்கணக்கான இளைஞர்கள், யுவதிகள் சிறைச்சாலைகளிலும், தடுப்பு முகாம்கலிலும் இன்னமும் சொல்லில் வடிக்கமுடியாத சித்திரவதைகளையும் வேதனைகளையும் அனுபவித்துக்கொண்டிருக்கிறார்கள்.

சிறிலங்காவின் அரச படைகளினால் கைது செய்யப்படுபவர்களுக்கு இழைக்கப்படும் சித்திரவதைகள் தொடர்பாக இலங்கையிலும் வெளிநாடுகளிலும் உள்ள மனிதஉரிமை, மனிதநேய அமைப்புக்கள் கண்டனங்களையும், ஆட்சேபனைகளையும் தெரிவித்த போதிலும் மாற்றம் எதுவும் நிகழவில்லை.

கைதுசெய்யப்படும் இளைஞர், யுவதிகள் சித்திரவதையின் கீழ் பொய்யான ஒப்புதல் வாக்குமூலம் பெறப்பட்டபின், பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்ப்ட்டு, குற்றப் பத்திரிகை தயாரிக்கப்பட்டு, தண்டனையும் வழங்கப்படுகிறது. இதனைவிட கைதுசெய்யப்பட்டு, சித்திரவதையின் கீழ் பொய் ஒப்புதல் வாக்குமூலம் பெறப்பட்டபின்பும், எந்தவித குற்றப்பத்திரிகையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படாது காலவரையறையின்றி சிறைச்சாலைகளில் தடுத்தும் வைக்கப்படுகின்றனர்.

இவ்வாறாறு மகசீன், கொழும்பு சீஆர்பி தடுப்புக்காவல, அனுராதபுரம், வெலிக்கடை, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியற் கைதிகளில் குறிப்பிட சிலருக்கு பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு உயர் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. ஆனால் இவர்களை பயங்கரவத தடைச் சட்டம் 15 ஆம் அ(1) ஆம் பிரிவின் கீழ், மீண்டும் பயங்கரவாத தடுப்பு பிரிவின் விசாரணைப் பிரிவில் அடைத்து வைக்கின்றனர்.

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த தியாகராஜா மோகனரூபனை, பயங்கரவாதத்தடுப்புப் பிரிவு பொலிசாரின் வேண்டுகோளையடுத்து பாதுகாப்புச் செயலாளரின் உத்தரவின் பிரகாரம் விளக்க மறியலிலிருந்து மேலதிக விசாரணைக்காக மீண்டும் பயங்கரவாதத் தடுப்பு பிரிவுக்கு பாரம் கொடுக்கும்படி அரச சட்டத்தரணி மேல் நீதிமன்றில் மனுவொன்றைத் தாக்கல் செய்திருந்தார்.

பயங்கரவாதத் தடை சட்டத்தின் திருத்தியமைக்கப்பட்ட 10 ஆம் இலக்க 1982 ஆம் ஆண்டுச் சட்டத்தின் 15 ஆம் அ(1) ஆம் பிரிவின் கீழ், பாதுகாப்புச் செயலாளரின் உத்தரவின் பிரதியையும் இணைத்து தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவில், "வழக்கு விளக்கத்திற்கு வரும் வேளையில் அரச பாதுகாப்பிற்கும் பொது அமைதிக்கும் பங்கம் விளையுமென பாதுகாப்புச் செயலாளர் கருதும் இடத்து சுதந்திரமான நியாயமான விளக்கம் நடைபெறுவதை உறுதிப்படுத்த" வழக்கின் எதிரியை விளக்க மறியலிலிருந்து மீண்டும் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவின் பிரதிப் பொலிஸ் மா அதிபரிடம் ஒப்படைக்கும்படி வேண்டப்பட்டிருந்தது.

 

''நீதியும் நியாயமுமான விளக்கம் நடைபெற வேண்டுமாயின் எதிரி சட்ட ரீதியான விளக்க மறியலில் இருந்து விசாரணைத் திகதியன்று நீதிமன்றத்திற்கு கொண்டு வரப்பட வேண்டும். விசாரணை நடாத்திய பொலிசாரின் கட்டுப்பாட்டிலிருந்து எதிரியை விளக்கத்திற்காக நீதிமன்றத்திற்கு கொண்டு வரும் வேளையில் அது நீதியும் நியாயமும் சுதந்திரமுமான விசாரணைக்கு பாதகமாகலாம்" என எதிரி தரப்பு சட்டத்தரணி கே.வி.தவராசா குறிப்பிட்டு பாதுகாப்பு செயலாளரின் கூற்றை நிராகரித்து பயங்கரவாத தடுப்பு பிரிவினரின்  இந்த உள்ளெடுப்பை தடுத்து நிறுத்தியிருந்தார்.

இச் சட்டத்தைப் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்தி சிறைச்சாலைகளில் தடுப்புக்காவலில் இருந்த 20க்கும் மேற்பட்டோரை பயங்கரவாத தடுப்பு பிரிவினர் தமது விசாரணைப் பிரிவில் தடுத்து வைத்துள்ளனர். அனுராதபுர சிறைச்சாலையில் இருந்து விடுதலை செய்வதற்காக கடந்த வெள்ளிக்கிழமை (01.06.12) கொழும்பு நீதிமன்றத்துக்கு கொண்டுவரப்பட்ட அறுவரையும், பயங்கரவாத தடுப்பு பிரிவினர் பயங்கரவாத தடைச் சட்டம் 15 ஆம் அ(1) ஆம் பிரிவின் கீழ் திரும்பவும் தடுத்து வைத்துள்ளனர்.

மீள தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் பூசா தடுப்பு முகாமில் தனித்தனி அறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.  இக்கைதிகளைப் பார்வையிடச் செல்லும் சட்டத்தரணிகள் இவர்களுடன் கதைக்கும் போது அருகில் பயங்கரவாத பிரிவினரும் இருப்பதால் அவர்களுடன் சுதந்திரமாக உரையாட முடியாத நிலைமையுள்ளதாக சட்டத்தரணிகள் தெரிவிக்கின்றனர். கைதிகள் இருக்கும் அறை, மற்றும் சட்டத்தரணிகள் சந்திக்கும் இடங்களில் ஒட்டுக்கேட்கும் கவிகளையும் பொருத்தியுள்ளனர். இக்கைதிகளை நீதிமன்ற விசாரணைக்காகன நாட்களில், காலி பூசா முகாமிலிருந்து விசேட அதிரடிப்படையினரரே கொழும்பு நீதிமன்றத்துக்கு கொண்டு வருகின்றார்கள். வரும் வழியில் எதுவும் நடக்கலாம். ஏனெனில் "கைதி தப்ப முயற்சி செய்தார், நாங்கள் அவரைப் பிடிப்பதற்காக சுட வேண்டி ஏற்பட்டது, அதில் அவர் இறந்தார்". என்ற மிக இலகுவான ஒரு பதிலைச் சொல்லி எல்லாவற்றையும் மூடிவிடலாம். இது ஒன்றும் சிறிலங்கா அரசுக்குப் புதிதுமல்ல.

பயங்கரவாத் தடுப்பு பிரிவினர் இந்த சட்டத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி, தமிழ் அரசியற் கைதிகளை தொடர்ந்தும் தடுத்து வைக்கும் முற்சியில் ஈடுபடுகின்றனர். இது ஒரு பக்கம் இருப்பினும், கைதி ஒருவரை தன்னுடைய கருத்தை, அல்லது தனக்கு என்ன நடந்தது என்பது பற்றி நீதிமன்றத்தில் சுதந்திரமாக சொல்ல முடியாத பயங்கரமான சூழ்நிலைக்குள் தள்ளி, சித்திரவதையின் மூலம் பெறப்பட்ட பொய் ஒப்புதல் வாக்குமூலத்தை சட்டத்தின்முன் அரங்கேற்றம் செய்யது அதன் மூலம் அவருக்கு தண்டனை பெற்றுக்கொடுக்க பயங்கரவாத தடுப்பு பிரிவினர் முயற்சி செய்கின்றனர். வெளியிலிருந்து இவர்களுகாக உதவ முன்வரும் உறவினர்களையும் புலிச்சாயம் பூசி, அவர்களுக்கும் நெருக்கடிகளைக் கொடுக்கவும் அரச பயங்கரவாதிகள் தவறவில்லை.

இந்த அடாவடித்தனத்தை தமிழர்கள் மீதான சட்டபூர்வமற்ற தண்டனையாகவும், சித்திரவதையாகவும், சிங்கள அரசின் பழிதீர்க்கும் நடவடிக்கையாகவும்தான் பார்க்க முடியும்.

இவ்வாறான நிலமைகள் ஒரு புறமிருக்க, சிறைச்சாலைகளில் கைதிகளை மனதளவில் பலவீனப்படுத்தும் செயற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன. நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டிருக்கும் கைதிகளுக்கான அடிப்படை வசதிகள் எதுவுமே தமிழ் கைதிகளுக்கு சிறிலங்கா சிறைகளில் இல்லை. ஒப்பீட்டளவில் பார்க்கும் போது சிங்களக் கைதிகளுக்கு வழங்கப்படும் சலுகைகள், தமிழ் அரசியல் கைதிகளுக்கு மறுக்கப்படுகின்றன.

பன்னிரெண்டு வருடமாக மகசீன் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சிவபாலகிருஷ்ணன் என்பவருக்கு கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் ஐந்து வருட சிறைத்த்தண்டனையை நீதிமன்றம் விதித்துள்லது.  இவருக்கு கடுமையான வேலைகளை சிறைச்சாலை நிருவாகம் திணித்ததால், தனது உடல் நலம் தொடர்பாக சிறைச்சாலை சுப்பிரண்டனுடன் கதைத்துள்ளார். அவ்வாறு கதைத்தது நிருவாகத்துக்கு இடைஞ்சல் என கருதி 'பாதுகாப்பு காரணம் கருதி இடமாற்றம்' செய்வதாக கூறி இவரை 02.06.12 காலி சிறைச்சாலைக்கு மாற்றியுள்ளனர்.

சிறையில் இருந்து கைதிகளை நீதி மன்றத்துக்கு சிறைக் காவலர்களே அழைத்துச் சென்று வருகின்றார்கள். ஆனால் நீதி மன்றத்துக்கு சென்று வரும் கைதிகளை சோதனை என்ற பெயரில்  உடுப்புக்கள் அனைத்தும் அவிழ்க்கப்பட்டு பிறந்தமேனியாக வைத்தே சோதனை செய்கிறார்கள். மல வாசலில் கூட கைவிட்டுப் பார்க்கிறார்கள்.

நீதிமன்றத்துக்கு சென்றுவரும் கைதிகள் சட்டவிரோதமான பொருட்களை சிறைச்சாலைக்குள் கொண்டு வரலாம் என்ற சந்தேகத்தில் சிறைச்சாலை நிருவாகம் இராணுவ பொலீசாரை வைத்து இவ்வாறானதொரு சோதனையை செய்வார்களாக இருந்தால்,   முதலில் சிறைச்சாலை நிர்வாகம் தங்களுக்கு நம்பிக்கையீனமாக இருக்கும் அதிகாரிகளையல்லவா மாற்றம் செய்ய வேண்டும். அல்லது தண்டிக்கவேண்டும். அதை விடுத்து கைதிகளை துன்புறுத்துவது எந்தவிதத்தில் நியாயம் என்று தெரியவில்லை.

இவ்வாறான துன்புறுத்தல்களுக்கு வெலிக்கடை பெண்கள் சிறையில் இருக்கும் பெண்கைதிகளும் விதிவிலக்கல்ல. நீதி மன்றத்துக்கு சென்றுவரும் பெண்களின் மார்பகங்கள் தடவப்பட்டு, மாதவிடாய்க்கு வைக்கப்பட்டும் துணிகள் கூட எடுக்கப்ப்பட்டு, பெண்ணுறுப்புக்குள் கைவிட்டுப் பார்க்கிறார்கள். சோதனை என்றபேரில் இவ்வாறான உளவியல் சித்திரவதைகளுக்கு சிறிலங்கா சிறைச்சாலைகளில் குறைவில்லை.

சரியான வைத்திய வசதியில்லாமல் தமிழ் கைதிகள் மிகவும் துன்பப்பட்டு இறந்திருக்கிறார்கள்.

ஆனால் சரத்பொன்சேகாவுக்கு நவலோகா வைத்திய சாலையில் மருந்து செய்வதற்கு நீதிமன்றம் உத்தரவு கொடுத்தது. சரத்பொன்சேகா இருந்த சிறைச்சாலையும் இலங்கை நீதித்துறையின் கீழ்தான் இயங்குகிறது. இதே அரசியற் கைதிகள் இருக்கும் சிறைச்சாலையும் இலங்கை நீதித் துறையின் கீழ்தான் இயங்குகிறது. சரத்பொன்சேகாவினுடையது உயிர் என்றால், தமிழ் அரசியல் கைதிகளினுடையது மயிரோ?

தமிழ் பிரதேசங்களில் நடந்ததாக் கூறப்படும் சம்பவங்களுக்கான சந்தேகநபர்கள் மேற்தொடரப்படும் வழக்குகள் சிங்களப் பகுதிகளில் நடாத்தப்படுவதுடன் அவர்களை தென்பகுதி சிறைகளிலும், அனுராதபுர சிறையிலும் தடுத்தும் வைக்கின்றனர். வடக்கிலும் கிழக்கிலும் இதே நீதி மன்றங்களும், சிறைச்சாலைகளும் இல்லாமலில்லை. அரச பயங்கரவாதிகள் தங்களின் உள்நோக்கங்களை நிறைவேற்றுவதற்காக பாதுகாப்பு என்ற போர்வையில் இவ்வாறான வேலைகளைத் தொடர்ந்தும் செய்து கொண்டிருக்கின்றனர்.

சிறிலங்கா அரசு சட்டம் என்ற போர்வைக்குள் நின்றுகொண்டு தமிழ் அரசியற் கைதிளையும், அவர்கள் சார்ந்தவர்களையும் சித்திரவதைப்படுத்துவதைத் தடுக்க,  சட்டத்தின்பேரால் நடக்கும் இந்த மனித உரிமை மீறல்களை வெளிக்கொணர்வதன் மூலமே ஒரு துரும்பையேனும் அசைக்க முடியும்.

பிற்குறிப்பு: தற்போது வரைக்கும் தடுப்பு காவலிலி இருந்து பயங்கரவாத் தடுப்பு பிரிவுக்கு மற்றப் பட்டவர்கள். கனகரெத்தினம் ஆதித்தன், செல்லையா கிருபாகரன், தங்கவேலு நிமலன், முஹமட் அலி அன்சார், லக்‌ஷ்மன் குரே, இராசேந்திரன் கருணகரன், சுப்பிரமணியம் சிவகுமார், தனபால்சிங்கம் லிங்கதாஸ், கனகரெத்தினம் கபிலன், இலங்கேஸ்வரன், நிக்‌ஷன், மயூரன், விஜயகாந், டக்ளஸ் ஜோயல், செல்வம், வாசு, ................., ......................

கனகமணி

03.06.2012