இனவாதம் மூலம், யுத்தம் மூலம் கொழுத்த தரகு முதலாளிகளுக்கும், மற்றவர்களுக்கும் இடையிலான பிளவு தான், இந்த ஏகமனதான இந்த ரத்து செய்யக் கோரும் முன்மொழிவைத் திணித்திருக்கின்றது. இலங்கையில் மற்றைய ஏகாதிபத்தியங்களின் செல்வாக்கை தடுத்து நிறுத்த, அமெரிக்காவும் - இந்தியாவும் கூட்டாக மறைமுகமான ஒரு யுத்தத்தில் ஈடுபட்டு இருக்கின்றது. இது இலங்கை அரசுக்குள்ளும், ஆளும் வர்க்கத்துக்குள்ளும் பிளவைக் கொண்டு வருகின்றது. அமெரிக்க- இந்தியாவின் நிர்ப்பந்தத்துக்கு அரசு அடிபணியும் போது, இன்று ஆதிக்கம் வகிக்கும் அமெரிக்கா - இந்தியா அல்லாத தரகுமுதலாளித்துவ பிரிவுகளின் நலன்கள் பறிபோகும். இந்த தரகுமுதலாளித்துவ வர்க்கம் இனவழிப்பைக் கூர்மையாக்கி வைத்திருப்பதன் மூலமாக, தரகு முதலாளித்துவ நலன்கள் பறிபோவதை தடுக்கும் ஒரு முயற்சிதான், 13வது திருத்தச் சட்டத்தை ரத்து செய்யக் கோரும் தீர்மானமாகும்.

இலங்கையின் தொழில்சார் நிபுணர்களின் சங்கங்களின் கூட்டமைப்பு "13 வது திருத்தச் சட்டம் இலங்கை நாடாளுமன்றத்திற்கோ அல்லது இலங்கை மக்களுக்கோ தெரியாமல் இந்தியாவினால் வடிவமைக்கப்பட்டுள்ளது" என்பதாக கூறுகின்றது. உண்மைதான். இதனால் இதை ரத்து செய்யவேண்டும் என்கின்றது. நல்லது. இதை ரத்துச் செய்ய வேண்டுமென்றால், இது போன்ற அனைத்தையும் ரத்து செய்யவேண்டும். ஒப்பந்தத்தில் என்ன இருக்கின்றது என்று தெரியாது கையெழுத்திட்ட "காட்" உலகமயமாக்கல் ஒப்பந்தத்தை, முதலில் ரத்து செய்யவேண்டும். இந்தியா திணித்த 13வது திருத்தச் சட்டத்தில் என்ன இருக்கின்றது, என்றாவது தெரிந்தா கையெழுத்திட்டனர். "காட்" ப்பந்தத்தில் என்ன இருக்கின்றது என்று தெரிந்தா கையெழுத்திட்டனர். இலங்கை முதலாளிமார் இந்த ப்பந்தத்துக்கு ஏற்பவே, தேசிய முதலாளித்துவத்தை ஒடுக்கும் தரகு முதலாளிகளாக இருப்பதுடன், தேசியத்துக்கு எதிராகவும் இயங்குகின்றனர். உலக சந்தையில் இருந்து இறக்குமதி செய்து, தேசிய முதலாளித்துவ உற்பத்தியை "காட்" ஒப்பந்த சரத்துப்படி அழிக்கின்றனர்.

இலங்கை தேசியத்தை மறுதலிக்கும் தரகு முதலாளிகளாக அன்னிய மூலதனத்தில் எடுபிடிகளாக இருந்தபடி, 13வது திருத்தச் சட்டத்தை எதிர்ப்பதன் பின் உள்ள மர்மம் பேரினவாதத்தை பலப்படுத்துவதுதான். இதன் மூலம் தங்கள் தரகுமுதலாளித்துவ நலன்களை தக்க வைப்பதுதான்.

தங்கள் சுரண்டல் நலன் செழிக்கும் வண்ணமாக தமிழ் மக்களின் இன அடையாளத்தை சிதைக்கும் தங்கள் பாசிச செயல்பாட்டுக்கு, 13வது திருத்தச் சட்டத்தை முன்னிறுத்தி அமெரிக்கா-இந்தியா தலையீடு தடையாக இருப்பதால் இதை எதிர்க்கின்றனர். இந்த வகையில் இலங்கையில் பேரினவாதம் ஆளும் வர்க்கத்தின் துணையுடன் கூச்சல் போடுவதன் மூலம், இனவழிப்பை இலங்கையில் விரைவுபடுத்தக் கோருகின்றனர். இதன் மூலம் இன முரண்பாடு மூலமான, தங்கள் தரகு சந்தை பெருகும் என்று கணக்குப் போடுகின்றனர்.

இலங்கை முதலாளிமார் கூறுகின்றனர் "13 வது திருத்தச் சட்டம் இலங்கை மீது திணிக்கப்பட்ட ஒன்று என்றும் அது இலங்கையில் பல பிரச்சினைகளை உருவாக்கியுள்ளது என்றும் பெருமளவு பண விரையத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், நாட்டில் ஒரு அரசியல் ஸ்திரமின்மையை ஏற்படுத்தியுள்ளது" என்கின்றனர். இலங்கையில் "பல பிரச்சினைகளை" உருவாக்க காரணம் 13வது திருத்தச் சட்டமல்ல. இலங்கை அரசின் பேரினவாதமும், அது சார்ந்த தரகுமுதலாளித்துவ இறக்குமதிக் கொள்கையும் தான். இன ஒடுக்குமுறையை ஏவியதன் மூலம், நாட்டில் பல பிரச்சனைகள் உருவாகியது. இந்த இனவொடுக்குமுறை பின்னணியில் தான் 13வது திருத்தச்சட்டமும் திணிக்கப்பட்டது. இதற்கு வெளியில் அல்ல. இன்றும் பல பிரச்சனையை உருவாக்குவதும், இனவொடுக்குமுறை தொடர்வதும், இன பிரச்சனைக்கு தீர்வு வழங்க மறுப்பதாகும். இது தான் கடந்த காலத்தில் யுத்தமாக மாறி "பெருமளவு பண விரையத்தை" ஏற்படுத்தியது. நாளை இதுதான் பண விரையத்தை ஏற்படுத்தவுள்ளது. தொடர்ந்து உங்கள் இனவாதக் கொள்கைதான் இன்னுமொரு திணிப்புக்கும், மற்றொரு யுத்தத்துக்கும் கூட வழிகாட்டுகின்றது.

உண்மையில் இராணுவக் கட்டமைப்பு சார்ந்த தரகுமுதலாளிகளின் இறக்குமதி நலன் தான், இன்று 13வது திருத்தச்சட்ட எதிர்ப்பாக, இனப் பிரச்சனை தீர்வை எதிர்க்கும் கொள்கையாக வெளிப்படுகின்றது. தீர்வு மூலம் அமெரிக்கா - இந்தியா சார்பு தரகு முதலாளிகள் மேலெழுவதைத் தடுக்கவே, இந்த அவசரத் தீர்மானம்.

இந்த நிலையில் தான் அவர்கள் கூறுகின்றனர் "இலங்கையில் 13 வது திருத்தத்தின் மூலம் வழங்கப்பட்ட அதிகாரப்பகிர்வானது இன ரீதியிலான அதிகாரப் பகிர்வு என்றும், ஒன்றுபட்ட இலங்கைக்கு அது பாதகமானது" என்று. யுத்தம் மூலம் சுரண்டி உருவான ஆளும் வர்க்கத்தின் இனவாதக் கண்ணோட்டமும், இந்த ஆளும் வர்க்கத்தின் பிரதிநிதிகளான அரசின் கொள்கைக்கும் இடையில் எந்த வேறுபாடுமில்லை என்று கூறுவதன் மூலம், இனவழிப்பை துரிதப்படுத்துமாறு முதலாளிமார் கோருகின்றனர்.

யுத்தத்தின் பின் விழிப்புறும் சிங்கள ஒடுக்கப்பட்ட மக்களை தடுத்து நிறுத்த, இனவழிப்பு அரசியல் அவசியமென்கின்றனர். மேற்கு ஏகாதிபத்திய மற்றும் இந்தியத் தலையீடு, இந்த இனவாதத்தை மந்தப்படுத்திவிடும் என்று அஞ்சுகின்றனர். மேற்கு அல்லாத தங்கள் தரகுமுதலாளி நலன் இதனால் பறி போய்விடும் என்று அஞ்சுகின்றனர். இதற்கு பதிலாக உருவாகும் அமெரிக்கா - இந்தியா சார்பு தரகு முதலாளிகளின் ஆதிக்கம், தங்கள் இனவழிப்பு சார்ந்த சுரண்டல் உரிமையை பறித்துவிடும் என்ற கவலை இவர்களுக்கு. தங்கள் சுரண்டலை எதிர்த்து சிங்கள - தமிழ் ஒடுக்கப்பட்ட மக்களின் எழுச்சியை தடுக்கவும், தங்களுக்கு போட்டியான அமெரிக்கா - இந்தியா சார்பு தரகு முதலாளிகளை கட்டுப்படுத்தவும், இனவாதமும் இனவழிப்பும் அவசியம் என்பதை முன்னிறுத்தியுள்ளனர். அதையே தங்கள் தீர்மானமாக முன்வைத்திருக்கின்றனர். இந்த இனவாத அரசியலை புரிந்து கொண்டு செயல் ஆற்றுவது அவசியமானது.

 

பி.இரயாகரன்

14.05.2012