இன, மத, நிற, பால், சாதியம் கடந்த உணர்வுடன் உலகத் தொழிலாளி என்ற வர்க்க உணர்வுடன் அணிதிரண்டு போராடும் நாளே மே நாள்!

தொழிலாளி வர்க்க உணர்வை மழுங்கடிக்கும் மேதின கூத்துக்களுக்கும் கும்மாளங்களுக்கும் என்றும் குறைவில்லை. தொழிலாளர்களின் வர்க்க உணர்வை மழுங்கடிக்கும் களியாட்டங்களுக்கும், அறிக்கைகளுக்கும், வாழ்த்துக்களுக்கும் பஞ்சமில்லை.

 

தொழிலாளியைச் சுரண்டிக் கொழுக்கும் கூட்டம் தொடங்கி, உழைத்து வாழ விரும்பாது சமூகநல உதவியில் மார்க்சிய அரசியல் பேசும் பிரமுகர்கள் வரை, மேதின வர்க்க உணர்வை நலமடித்து அதையும் வியாபாரமாக்குகின்றனர். இன, மத, நிற, பால், சாதியம் என்று பலவாறாய் மக்களைப் பிளக்கின்ற சுரண்டும் வர்க்கம் தொடங்கி, வர்க்க உணர்வு பெறாது இதை எதிர்க்கின்ற கூட்டம் வரை, மேதின வர்க்க உணர்வை மழுங்கடிக்க வைத்து அதைக் கொச்சைப்படுத்தி கேவலப்படுத்துகின்றனர்.

 

உழைத்து வாழும் தொழிலாளி, தன் உழைப்புச் சார்ந்து போராடும் வர்க்க உணர்வுகள் தான் மேதின உணர்வாகும். இந்த வகையில் தொழிலாளர் வர்க்கம் தன் வர்க்க உணர்வுகளை வெளிப்படுத்தும் வண்ணம், தங்களை அணிதிரட்டிப் போராடும் நாள் தான் மே தினம்.

இதுவல்லாத அனைத்தும் மேதினத்தை திரித்துக் கொச்சைப்படுத்திக் காட்டுவதும்,  கொண்டாடுவதும், வர்க்க உணர்வை இல்லாது ஆக்குவதற்கு தான். வர்க்க எதிரிகள் முதல் இடதுசாரிய "மார்க்சியம்" பேசும் பிரமுகர்கள் வரை, வர்க்க உணர்வு பெற்ற தொழிலாளிக்கு எதிராக, இந்நாளை வெறும் கொண்டாட்டமாக, வாழ்த்தாக மேதினத்தை இழிவுபடுத்திக் கொச்சைப்படுத்துகின்றனர். வர்க்க எதிரிகள் இதைக் களியாட்ட நிகழ்வாக்குவது தொடங்கி பிரமுகர்கள் முகநூலில் வாழ்த்துக்கள் கூறுகின்ற வரை, இதன் பின் தொழிலாளர் வர்க்க உணர்வுகள் நலமடிக்கப்படுகின்றது.

இந்த எதிர்ப்புரட்சி அரசியலுக்கு எதிராக, வர்க்க உணர்வு பெற்ற தொழிலாளரின் வர்க்க உணர்வை நேர்மறையில் மேதினம் கோருகின்றது. தொழிலாளர் மீதான வர்க்க விரோத செயல்பாடுகளை எதிர்ப்பது தான், வர்க்க உணர்வு பெற்ற தொழிலாளியின் மேதினச் செய்தியாகும்.

இலங்கையில் ஆளும் வர்க்க வலதுசாரிய பேரினவாதிகள் முதல் குறுந்தேசியவாதிகள் வரை, மேதினக் கொண்டாட்டம் நடத்துகின்ற கேலிக்கூத்தைக் காண்கின்றோம். அனைத்து அரசு சார்ந்த உற்பத்திகளையும், சேவை மையங்களையும், தனியார்மயமாக்கக் கோரும் உலகமயமாக்கல் நிபந்தனைகளை முன்னெடுக்கும் அரசுகள் மேதினத்தை கொண்டாடுகின்றன.

தொழிலாளர் உரிமைகளை ஒழித்துக் கட்டுகின்ற, அவர்களின் உழைப்பில் விளைந்த மக்களின் சமூக நிதியாதரங்களை தனியார்மயமாக்கி கொள்ளையிட உதவும் அரசுகளும், இந்த அரசியலை கொள்கையாகக் கொண்டவர்களும் கூட  மேதினத்தைக் கொண்டாடுகின்றனர்.

வர்க்க உணர்வூட்டி அணிதிரட்ட முனையாத மார்க்சியம் பேசும் பிரமுகர்களின் பத்திரிகை அறிக்கைகள் முதல், முகநூலில் கோசங்கள் போட்டு முதுகு சொறியும் வாழ்த்துக்கள் வரை இன்று மேதின கூத்தாக அரங்கேறுகின்றது.

இப்படி வர்க்க உணர்வுக்கு வெளியில் மேதினம் கேவலப்படுத்தப்படுகின்றது. இதை எதிர்த்து  மேதினத்தை வர்க்க உணர்வுடன் அணுகுவதும், வர்க்க உணர்வூட்டி அணிதிரட்டுவதும் தொழிலாளி வர்க்கத்தின் மேதினச் செய்தியாகும்.

வர்க்க உணர்வுடன், மக்களை உணர்வூட்டி அணிதிரட்டுவோம்!

வர்க்க உணர்வு பெறாத இன, மத, நிற, பால், சாதிய…. அரசியலை நிராகரிப்போம்!

வர்க்க உணர்வூட்டி அணிதிரட்டாத பிரமுகர்த்தன இடதுசாரியத்தை நிராகரிப்போம்!

உழைத்து வாழாத கூட்டத்தின் மேதினச் செய்தியை நிராகரிப்போம்!

உலக தொழிலாளர் வர்க்க உணர்வுடன், மேதினத்தைக் கொண்டாடுவோம்!


புதிய ஜனநாயக மக்கள் முன்னணி

01/05/2012