என்மண்குழந்தை லக்சினியை தின்றவரே

பேய்களே
பிணந்தின்னிக் கூட்டமே
வன்னிவரை தின்றடங்கா கூட்டே
யார் ஆட்சியானாலும் கால்கழுவி
வாலாட்டி எலும்பெறிய கவ்விப்போ இரணியரே
யார் கேட்டு எம்மண்ணை சூழ்ந்து கொண்டாய்

 

தரவையில் மேயும் பசுக்களும்
அன்னைகடலினில் கிடக்கும் செல்வமும்
வெறும் கல்லினைப்பிளந்த கழனிகளும்
கற்பகதருவும் தென்னைகளும்
முல்லையும் மிசிட்டையும் குறிஞ்சாவும்
கல்வியில் சிறக்கும் சந்ததியும்
உழைப்பும் உறுதியும்  அழியாச்சொத்து

எம்புழுதி எமக்குச் சுகம்
கடல்அலை எமக்குத் தாலாட்டு
கல்வேலி என்ஊர் கலைநுட்பம்
குண்டும் குழியுமாய் தெருக்கள் இருக்கட்டும்
வற்றியகடல் பெருக்கெடுக்க பயணிப்போம்
எப்பொழுது விலகுவீர்
கடல்நீரை வருடிவருகின்ற காற்றை
கதவு யன்னல் திறந்துவிட்டு மூச்சுவிட
எப்பொழுது விடுவீர்

---- நெடுந்தீவகன்------

05/03/2012