மக்களை அணிதிரட்ட முனையாத பிரமுகர்த்தன அரசியல் மற்றும் இலக்கிய முகமூடிகளின் பின்னணியிலான, புலி மீதான திடீர் விமர்சனங்கள் மோசடித்தனமானது. இது தன் இருப்பை மையப்படுத்தி மக்களை மோசடி செய்யும், அறிவு சார்ந்த குறுகிய அற்ப உணர்வாகும். அறிவு சார்ந்த தன்னை மையப்படுத்தி முதன்மைப்படுத்தும் பிரமுகர்த்தனம், கருத்துச் சுதந்திரத்தின் பின்னால் ஒன்றையொன்று சார்ந்து நின்று முதுகுசொறிவதன் மூலம் கூடிக் கும்மியடிக்கின்றது. இது மக்களை சார்ந்து நின்று, மக்களை அணிதிரட்ட முன்வருவதில்லை.

இப்படி முள்ளிவாய்க்கால்களுக்கு பின்னான திடீர் அரசியலின் மற்றொரு அரசியல் முகம் தான், புலியிலிருந்தோர் புலியை விமர்சித்தலாகும். இதன் பின்னாலுள்ள அரசியல் நோக்கம் என்ன என்பதுதான், இதன் பின்னான பலவிதமான அரசியல் மோசடியை அம்பலப்படுத்துகின்றது.

புலியைச் சார்ந்து நின்று அறிவுசார்ந்த பிழைத்த பிரமுகர் கூட்டம், புலிக்கு பின், அதை விமர்சித்தல் மூலம் பிழைத்தல் தான் அதன் அரசியல் தெரிவாகும். புலியை விமர்சித்து மக்களை அரசுக்கு எதிராக அணிதிரட்டாத அனைத்து அரசியலும், இலக்கியமும் மோசடித்தனமானது, குருட்டுத்தனமானது. கடந்தகாலத்தில் புலிக்கும் அரசுக்கும் எதிரான இடைவிடாத போராட்டத்தை இருட்டடிப்பு செய்து, முன்தள்ளும் பிரமுகர்த்தன அரசியல் மோசடிகளை இன்று நாம் பரவலாக இனம் காண முடிகின்றது.

இந்த வகையில்

1. புலிக்கு பிந்தைய சமூகத்தில் தம்மை அரசியல் இலக்கிய பிரமுகராக தொடர்ந்து தக்கவைக்கும் முயற்சியில் புலியை விமர்சித்தல்

2. அரசை ஆதரிக்கும் அரசியல் பின் புலத்தில் நின்று புலியை விமர்சித்தல்

3. இந்தியப் பிராந்திய நலனுக்கு ஆதரவாக நின்று புலியை விமர்சித்தல்

இப்படி பல. இதில் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்டவற்றை சார்ந்து நின்று புலியை விமர்சிக்கும், அறிவு சார்ந்த புலமையுடன், அரசியல் - இலக்கிய பிரமுகர்கள் அங்குமிங்குமாக இன்று களமிறங்குகின்றனர்.

வக்கற்றுப்போன புலியல்லாத முன்னாள் பிரமுகர்களுடன் சேர்ந்து, இதைக் கூட்டாக அரங்கேற்றுகின்றனர். மக்களை அணிதிரட்டாத தங்கள் தனிமனித அற்பத்தனத்துடன், மீண்டும் மக்களை ஏய்க்கும் அறிவுசார் மோசடியை அரங்கேற்றும் வண்ணம், வடக்கில் இருந்து புலம் வரை ஒரே புள்ளியில் ஓரே நோக்கில் ஒருங்கிணைகின்றனர். இந்திய அரசியல் இலக்கிய பிரமுகர்களும், இந்த வழியில் இதற்கு பரஸ்பரம் ஒத்தூதுகின்றனர்.

இந்தியாவில் மக்களை அணிதிரட்டாத, மக்களை முன்னின்று வழிநடத்தாத அரசியல் இலக்கிய பிரமுகர்களின் அறிவுசார்ந்த புலமை மூலமும், இலங்கை பிரமுகர்கள் தங்கள் மோசடியை சமூகத்தினுள் புகுத்துகின்றனர். ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராக பிழைப்புவாத பிரமுகர்களை முன்னிறுத்தி இந்தியா நலனை பேணும் காலச்சுவட்டின் அரசியல் பின்புலத்தில், இந்தப் மோசடி புதுப்பொலிவு பெறுகின்றது. மக்களைச் சார்ந்து நின்று அரசுக்கு எதிராக புலியை விமர்சிக்காத புதுப் பிரமுகர்கள், சமூகத்தின் முன் நயவஞ்சகமாக நுழைகின்றனர்.

இந்தியாவின் பிராந்திய நலனைச் சார்ந்தும், அதை முன்னிறுத்தியும் புலியை விமர்சிக்கும் அரசியலை, அண்மைக்காலங்களில் புலி மீதான விமர்சனமாகக் காட்ட முற்படுகின்றனர். இதுதான் புலியின் அரசியல் தவறு என்று காட்டும், நயவஞ்கமான அரசியல் மோசடியை அரங்கேற்ற முனைகின்றனர்.

இந்த வகையில் காலச்சுவடு மூலம் புலியைச் சேர்ந்த யதீந்திரா மக்கள் விரோத அரசியலைத் தொடர்ந்து, நிலாந்தன் பற்றி அங்குமிங்குமாக (நாலுபக்கம் என்ற தளம் முதல் .. முகப்பு புத்தகம் வரை) பிரமுகர்கள் அறிமுகக் குறிப்புகளை வெளியிடுகின்றனர்.

அதில் "தென்னாசியப் பிராந்தியத்தில் தமிழீழம் அமையவேண்டுமானால் முற்றிலும் வேறானதோர் தீர்க்கதரிசனமிக்க அரசியல் அணுகுமுறையும் கடினமான உழைப்பும் தேவை. ஏனெனில் தென்னாசிய விடுதலைப் போராட்டங்களுக்கான பிராந்திய – சர்வதேச யதார்த்தமானது இலகுவானதாக அமையவில்லை. இந்தப் பிராந்தியத்தின் போராட்டங்களெல்லாம் குரூரமான முறையில் ஒடுக்கப்பட்டதே யதார்த்தமாக இருக்கிறது என்பதை நாம் கவனிக்க வேண்டும்" என்றும், "நிலாந்தனுடைய இந்தக் கருத்தை அப்போது புலிகளின் மையப்பகுதியினர் ஏற்றுக் கொள்ளவும் இல்லை. விரும்பவும் இல்லை. ஆனால், தன்னுடைய இந்தக் கருத்துக்கான ஆதாரங்களை நிலாந்தன் அந்த நிகழ்ச்சியில் தெளிவாக்கியிருந்தார். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு நிலாந்தன் நிலவரம் நிகழ்ச்சியில் பங்கேற்பது தவிர்க்கப்பட்டது. பின்னர் ஈழநாதம் பத்திரிகையில் அவர் எழுதி வந்த அரசியற்பத்தியும் இடைநிறுத்தப்பட்டது." என்கின்றனர். இப்படி அறிமுகப்படுத்தப்படும் அரசியல், நிலாந்தன் பின்னால் உள்ள அரசியல் பின்னணியும், அதன் நோக்கம் தான் என்ன?

இந்தியப் பிராந்திய நலன்பேணும் அரசியல் பின்னணியில் இருந்து, இந்த அரசியல் முன்னெடுப்புகள் முன்தள்ளப்படுகின்றது. இந்த பின்னணியில் பிரமுகர்கள் மற்றொரு பிரமுகரை அறிமுகப்படுத்தி பரஸ்பர முதுகுசொறிவதைத் தாண்டி, இதற்கு பின்னால் மக்கள் சார்ந்த அரசியல் செய்யும் நோக்கம் எதுவும் கிடையாது. நிலாந்தன் கூற்றாக கூறி, முன்வைக்கும் கூற்றின் பின்னுள்ள அரசியல் தான் என்ன?

"தென்னாசியப் பிராந்தியத்தி"யத்தில் இந்தியக் கைக்கூலியாக இருத்தல் பற்றி அதாவது "பிராந்திய – சர்வதேச யதார்த்த"ம் பற்றி நிலாந்தன் தனது கைக் கூலித்தன அரசியலைத்தான் இங்கு முன்வைத்தார். இதைப் புலிகள் மேலான விமர்சனமாக காட்டி இதை முன்தள்ளுகின்ற அரசியல் பின்னணியில், பிரமுகர்த்தன பிழைப்புத்தனத்துடன் கூடிய மக்களின் முகத்தில் காறி உமிழும் வக்கிரம் தான் இங்கு கொப்பளிக்கின்றது. நிலாந்தன் போன்றவர்களுக்கு இந்திய நலனை முன்னிறுத்திய அரசியல் எல்லைக்குள் தான், புலி மீதான விமர்சனம் அமைகின்றது. இந்த விமர்சனங்கள் நிராகரிக்கப்பட வேண்டியவை. இது விமர்சனமேயல்ல, இது இந்தியக் கைக்கூலித்தனமாகும்;

இலங்கை மற்றும் புலத்தில் மக்களை அணிதிரட்டாத அறிவுசார்ந்த மக்கள்விரோத அரசியலை முன்தள்ளும் பிரமுகர்த்தன முன்நகர்வுகளின் பின்னணியில், முன்னாள் புலிப் பிரமுகர்கள் இந்தியப் பிராந்திய நலன் மூலம் அறிமுகம் செய்யப்படுகின்றனர்.

இலங்கை இந்திய அரசின் துணையுடன் தான் இவை அரங்கேறுகின்றது. புலிகள் வலுக்கட்டாயமாகப் பிடித்துச் சென்றவர்களைக் கூட விட்டுவைக்காத பேரினவாதம், அவர்களை கைது செய்து பல மாதங்கள் எந்த வெளித்தொடர்புமின்றி அடைத்துவைத்து சித்திரவதைகள் முதல் மூளைச்சலைவை செய்யப்பட்டு விடுவிக்கப்பட்ட பின்னும் தொடர்ந்து கண்காணிக்கப்படுகின்றனர். இந்த நிலையில் புலிப் பாசிசத்தை அறிவு சார்ந்து பிரச்சாரம் செய்த, இந்த புலி முன்னணிப் பிரமுகர்கள் சுதந்திரமாக இலங்கையிலும் இந்தியாவிலும் செயல்படும் அரசியல் பின்னணியை நாம் இன்று இனம் காணவேண்டும். மக்களை அணிதிரட்டுவதை அரசியல் நோக்கமாகக் கொள்ளாத அரசியல் இலக்கிய புலம்பெயர் பிரமுகர்கள் வரை, இவர்களுடன் கூடிக் கூத்தாட முனையும் அரசியல் பின்புலத்தையும் நாம் இன்று அவசரமாக அரசியல்ரீதியாக இனம் காணவேண்டும்.

இந்தியப் பிராந்திய நலன் சார்ந்த புலியை விமர்சிக்கும் அரசியலும், புலியை விமர்சிக்காத புலி அரசியலும், தமிழ் மக்கள் நலனை முன்தள்ளி முன்வைக்கும் தமிழ் தேசிய அரசியலும், புலியெதிர்ப்பு அரசியலும், பிரமுகர்தன அரசியலும், இந்தியப் பிராந்திய நலன் சார்ந்த ஒரு புள்ளியில் இன்று ஒருங்கிணைகின்றது. மக்களைச் சார்ந்து மக்களின் எதிரிக்கு எதிராக அவர்களை அணிதிரட்டாத மக்கள்விரோத அரசியல், அங்குமிங்குமாக ஒருங்கிணைந்து தம்மை வெளிப்படுத்தும் இந்த அரசியலை, அரசியல் ரீதியாக புரிந்து எதிர்த்து எதிர் வினையாற்றுவது அவசரமான அவசியமான உடனடி அரசியல் பணியில் ஒன்றாக எம்முன் வந்துள்ளது.

பி.இரயாகரன்

01.03.2012