பாசிட்டுக்கள் மீண்டும் மூடிமறைத்து களமிறங்குகின்றனர். 1980 களில் வர்க்கரீதியான சமூக விடுதலையைப் பேசியபடி தான், பாசிசத்தை புலிகள் நிறுவினர். பார்க்க "சோசலிசத் தமிழீழம் - விடுதலைப்புலிகள் இயக்கமும் தேசிய விடுதலைப் போராட்டமும்" என்ற புலிகள் முன்வைத்த அரசியல் அறிக்கையை.

ஒட்டுமொத்த மக்களையும் மோசடி செய்யாமல் பாசிசம் வெற்றி பெறுவதில்லை. இன்று புலிகள் பாசிச இயக்கமல்ல என்று கூறுவதும் இந்த அரசியல் அடிப்படையில் தான். மீண்டும் புலி அரசியலை நிறுவ, அரசியல் மோசடியில் இறங்குகின்றனர்.

கிட்லரின் பாசிசத்துக்கு வழிகாட்டிய பிரச்சார மந்திரி கோயரிங் பாசிசத்தை வழிகாட்டிய போது கூறினான் "தலைவர்கள் தாம் விரும்பியபடியெல்லாம் மக்களை ஆட்டுவிக்கமுடியும்... நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் இதுதான். நாம் தாக்கப்படுகிறோம் என்று சொல்லுங்கள். சமாதானம் பேசுபவர்களுக்கு நாட்டுப்பற்று இல்லையென்றும், நாட்டை ஆபத்துக்கு உள்ளாக்குகிறார்கள் என்றும் தூற்றுங்கள். இந்தச் சூத்திரம் எந்த நாட்டிலும் வேலை செய்யும்" என்றான்.

இதைத்தான் புலிகள் அனுதினம் செய்தார்கள். இதைத்தான் இன்று புலிகளை பாசிச இயக்கமல்ல, வெறும் ஜனநாயக மறுப்பு இயக்கம் என்று கூறுகின்றவர்களும் செய்ய முற்படுகின்றனர்.

முள்ளிவாய்க்காலின் பின் மீளவும் திடீர் மார்க்சியவாதிகளானவர்கள் முதல் திடீர் ஜனநாயக அரசியல் பேசும் புலியிஸ்டுக்கள் வரை, புலிகளை வெறும் ஜனநாயக மறுப்பு இயக்கமாக திடீர் திடீரென இன்று காட்ட முற்படுகின்றனர். இதன் மூலம் அவர்கள் ஜனநாயக மீறலைத் தவிர்ந்து, புலி அரசியலைச் சரி என்று காட்டிவிட முனைகின்றனர். ஆக இப்படி புலித்தேசியம் சரி என்று கூற முற்படுகின்றனர். இதன் அரசியற்சாரம் என்னவெனில் பாசிசத்தை இவர்கள் கோட்பாட்டளவில் தேசிய அரசியலாக மீண்டும் கொண்டிருப்பதுடன், அதை அரசியல்ரீதியாக பாதுகாக்க முனையும் அரசியல் வெளிப்பாடாகும்.

அண்மையில் கனடாவில் ஜயரின் நூல் (இந்த நூல் பற்றிய விமர்சனம் ஒருபுறம் இருக்க) வெளியீட்டில், புலிகளை வெறும் ஜனநாயக மறுப்பு இயக்கமாகக் காட்டி தமது வலது தேசிய பாசிசத்தை நியாயப்படுத்தினர், புலிகளின் அரசியல் வாரிசுகள்.

ஜனநாயகம் என்பது எங்கும் எப்போதும் ஒரு வர்க்கத்தின் ஜனநாயகமே. ஆக ஜனநாயகம் ஒரு வர்க்கத்தின் சர்வாதிகாரம் தான். ஆனால் இந்த ஜனநாயக சர்வாதிகாரம் எப்போது தன்னை பாசிசமாக்குகின்றது? அது தனது மூகப்ப+ச்சான ஜனநாயக கூறுகளைக் களையும்போது, அது பாசிசமாகின்றது. மற்றைய வர்க்கங்களினதும், சமூகப் பிரிவுகளினதும் ஜனநாயகத்தை இல்லாததாக்குகின்ற போது அது தன்னைத்தான் பாசிசமாக்குகின்றது. இது பொதுவான ஜனநாயக மறுப்பில் இருந்து வேறுபட்டது. ஜனநாயக மறுப்பு, ஒட்டுமொத்தமாக சமூகத்தில் ஜனநாயகத்தை இல்லாததாக்குவதில்லை. ஒட்டுமொத்தமாக ஜனநாயகத்தை இல்லாததாக்கும் போது அது பாசிசமாகின்றது.

இங்கு ஜனநாயகத்துக்குப் பதில், வன்முறை மூலம் சமூகத்தை ஒடுக்கத் தொடங்குகின்றது. சுரண்டலைப் பாதுகாப்பதே, பாசிசத்தின் மையமான அரசியல் சாராம்சமாகும். குறைந்தபட்ச ஜனநாயக வடிவங்கள் மூலம் இந்தச் சமூக அமைப்பைப் பாதுகாக்க முடியாத போது, அதை இல்லாதாக்கி வன்முறை மூலம் அதைச் செய்கின்றது. சமூகத்தில் அனைத்துவிதமான ஜனநாயகக் கூறுகளையும் அது ஒழித்துவிடுகின்றது. குறைந்தபட்ச ஜனநாயகத்தை கொண்ட சர்வாதிகார அமைப்பில் ஜனநாயக மறுப்பு காணப்படும். குறைந்தபட்ச ஜனநாயகத்தை மறுக்கும் சர்வாதிகார அமைப்பு பாசிசமாகின்றது. ஜனநாயக மறுப்பை அடிப்படையாகக் கொண்ட சர்வாதிகார சுரண்டல் அமைப்புக்கும்;, ஜனநாயகத்தையே துடைத்தழித்த சுரண்டல் வர்க்க சர்வாதிகார அமைப்புக்கும் இடையிலான வேறுபாட்டை பிரதிபலிப்பதுதான் பாசிசமயமாக்கலாகும்.

இதைச் செய்கின்ற நியாயப்படுத்துகின்ற சமூகப் பொருளாதார பண்பாட்டுக் கூறுகளில் பாசிசமயமாக்கல் படுபிற்போக்கான அரசியல் நிலை எடுக்கின்றது. புலிகள் அனைத்துவிதமான ஜனநாயக கூறுகளை அடக்கியொடுக்கி அதை சமூகத்தில் இல்லாதாக்கினர். அனைத்துவிதமான சமூக முரண்பாடுகள் மீதும் பிற்போக்கான ஜனநாயக விரோத பாத்திரத்தை ஆற்றினர். படுபிற்போக்கான பண்பாட்டு கலாச்சார சமூகக் கூறுகளையும் கொண்டு, தமிழ் சமூகத்தின் மூச்சையே நிறுத்தினர். இப்படி பாசிசமயமாக்கிய நிகழ்வை வெறும் ஜனநாயக மறுப்பு இயக்கமாகக் காட்டுகின்ற அடிப்படை கூட பாசிசமயமாதலின் உட்கூறுதான். இது தன்னை அனைத்து வர்க்கத்தின் நலன் சார்ந்த ஒன்றாக, அனைத்து சமூக முரண்பாட்டையும் தீர்க்கும் ஆற்றல் தனக்கு உண்டு என்று கூறித்தான், பாசிசத்தை தமிழ்மக்கள் மீது திணித்தது.

தனது இந்தப் பாசிச செயற்பாட்டை மூடிமறைத்து, ஒரு சில ஜனநாயக மறுப்பாக மீளவும் காட்ட முற்படுகின்றனர். இதைச் சரி செய்தால், புலிகள் சரியான இயக்கம் என்று கூற முற்படுகின்றனர். புலிகளின் வலதுசாரிய அரசியல் சரியானது, அதன் சில ஜனநாயக மறுப்பு தான் பிழையானது என்று காட்ட முற்படுகின்றனர்.

புலிகள் தமது அரசியலாகக் கொண்டிருந்த சுரண்டும் வர்க்க நலனை, சாதிய ஒடுக்குமுறையை, ஆணாதிக்கத்தை, பிரதேசவாதத்தை, இனவாதத்தை … பாதுகாக்க, அதை உறைநிலையில் தக்கவைத்து ஒட்டுமொத்த மக்கள் மேல் பாசிசத்தை ஏவினர். இதன் பின்னணியில் சட்டம், நீதி அனைத்தையும் மக்களுக்கு மறுத்தனர். இதை மீறியபோது கொன்றொழித்தனர். சமூகத்தின் உயிர் மூச்சுகள் கொண்ட எதையும், அவர்கள் விட்டு வைக்கவில்லை. அனைத்தையும் அழித்து, தங்கள் பாசிசத்தை நிறுவனப்படுத்தினர். இதன் பின்னணியில் தேசியத்தை மறுத்தனர்.

தேசிய விடுதலை என்பதன் அரசியல் சாரமே, ஜனநாயகத்தைக் கோரும் ஜனநாயகப் புரட்சியை அடிப்படையாக கொண்டது. தேசிய முதலாளித்துவத்தின் முரணற்ற ஜனநாயகக் கூறுகளை அடிப்படையாகக் கொண்டது தான் தேசியம். ஒரு தேசிய விடுதலை இயக்கம் இதை மறுக்கும் போது, அது இயல்பில் பாசிசமயமாகி விடுகின்றது.

ஜனநாயகப் புரட்சி நடைபெறாத நாடுகளில் பாசிசம் என்பது, மேலும் கூர்மை பெறுகின்றது. இங்கு பாசிசம் என்பது ஒரு சமூகப் பண்பியல் கூறாக, அதன் பொருளாதார சமூகக் கட்டமைப்பு மீது இணைந்தே காணப்படுகின்றது. இதனால் பாசிசம் என்பது அதன் சமூக பண்பாட்டு கலாச்சாரக் கூறில் இனங்காண முடியாத சமூகக் கூறாக உள்ளது. இது இங்கு உயிருள்ளதாக எப்போதும் உள்ளது. இந்த அரசியல் பின்னணியில், மக்களைச் சாராத அனைத்து சமூகக் கூறுகளும், பாசிசக் கூறை அடிப்படையாகக் கொள்கின்றது. இங்கு உருவாகும் அமைப்புகள், இயக்கங்கள் மக்களை விட்டு விலகி, பாசிசத்தை தனது அரசியல் வழியாக நடைமுறையாகக் கொள்கின்றது.

இது தன்னை மூடிமறைக்க தேசியவாத வெறியை, மற்றைய இனங்கள் மேல் கட்டமைக்கின்றது. மற்றைய இன மற்றும் இனவாத கட்சிகளின் அரசியல் கோட்பாடுகளின் மேல், வர்க்கக் கோட்பாடுகள் மேல் எதிர்வினையாற்றுவதில்லை.

மக்களுக்கு எதிரான சுரண்டலை அடிப்படையாகக் கொண்டு, சுரண்டும் ஜனநாயக விரோத போக்குகளை எதிர்த்து, பாசிசம் தன்னை கட்டமைப்பதில்லை. மாறாக அதை மூடிமறைத்தபடி, அதை மேலும் ஆழமாக செய்வதை அடிப்படையாகக் கொண்டே, மக்கள் கூட்டத்தை எப்போதும் எதிரியாக காண்கின்றது. ஆரம்பம் முதலே உழைக்கும் மக்களின் நலன்களை பிரதிபலிக்கும் சித்தாந்தங்களையும், அது சார்ந்த அமைப்புகளையும் வேட்டையாடுகின்றது. மக்கள் சுயமாக சிந்திக்க முடியாத நிலையை தகவமைத்து, அந்த நிலத்தில் தான் பாசிசம் செழித்து வளருகின்றது. இப்படித் தான் புலிப் பாசிசம் தன்னை வெளிப்படுத்தியது.

இலங்கை அரச பாசிசம் தன்னை ஜனநாயக உறுப்பாகக் காட்ட வழங்கிய ஜனநாயகத்தைக் கூட, புலிகளின் பாசிசம் தமிழ் மக்களுக்கு வழங்கியது கிடையாது. இன்று அதன் வாரிசுகள் மீண்டும் புலிப் பாசிசத்தை நிறுவும் தேசிய பாசிசக் கனவுடன், ஜனநாயக விரோத இயக்கம் என்பதாக மட்டும் புலியை சோடித்துக் காட்ட முற்படுகின்றனர். பாசிசத்தின் இயல்பே இதுதான்.

பி.இரயாகரன்

28.02.2012

மேலும் பாசிசம்  தொடர்பாக தெளிவுக்கு

  1. பாசிசம் குறித்து அடிப்படையான தரவுகள் (வதை முகாமில் நான் : பாகம் - 09)
  2. புலிகள் பாசிட்டுகளே ஒழிய ஒரு மக்கள் இயக்கமல்ல (வதை முகாமில் நான் : பாகம் - 10)
  3. புலிப் பாசிசத்தின் தோற்றமும் என்பது வரலாற்று நீட்சி (வதை முகாமில் நான் : பாகம் - 11)
  4. புலிப் பாசிசத்தின் தோற்றுவாய் (வதை முகாமில் நான் : பாகம் - 12)