முதலில் இவர்கள் மக்களைச் சார்ந்து நின்று எதையும் சொல்பவர்கள் அல்ல. இந்த வகையில் இவர்கள் முதல்தரமான மக்கள் விரோதிகள். மக்களுடன் நிற்காத, அவர்களின் கோரிக்கைகளுடன் ஒன்றிணையாத இவர்களின் சமூகம் பற்றிய கருத்துகள் முதல் அக்கறைகள் வரை போலியானது மட்டுமின்றி மோசடித்தனமானதுமாகும். மக்களை ஒடுக்குகின்ற பிரிவுடன் சேர்ந்து நின்று, தங்கள் கருத்துக்களை முன்வைப்பதன் மூலம், அக்கறையை வெளிப்படுத்துவதன் மூலம் தங்கள் பிழைப்பைத் தொடங்குகின்றனர். இவர்கள் எப்போதும் சந்தர்ப்பவாதிகளாக, பிழைப்புவாதிகளாக வாழ்பவர்கள். ஒரு விடையத்தை "முற்போக்காக" முன்னிறுத்திக் காட்டிக் கொண்டு, மற்றைய விடையங்களில் படுபிற்போக்காகவே தம்மை அடையாளப்படுத்துவர்கள். இதன் பின் வலது இடதுமற்ற சந்தர்ப்பவாதிகளாக, "முற்போக்கை"க் காட்டி முதுகுசொறிகின்ற பிழைப்புவாத அரசியல் மூலம் பிரமுகர் அரசியலையம், முகம் காட்டும் சடங்கு அரசியலையும் அரங்கேற்றுகின்றனர்.

"ஜனநாயகம்", "சுதந்திரம்", "போராட்டம்", "தலித்தியம்" "மனிதாபிமானம்" "பெண்ணியம்" "தேசியம்" …. முதல் "மார்க்சியம்" வரை, குறைந்தபட்சம் இதில் ஒன்றைத்தன்னும் பேசி தங்கள் எடுபிடித்தனமான பிழைப்பு அரசியலை நடத்துகின்றனர். இவர்களை எடுத்த எடுப்பில் அரசியல் ரீதியாக இனம் கண்டுகொள்வதாயின்,

1. இவர்கள் பேசுகின்ற அரசியலை எப்படி யார் மூலம் முன்னெடுக்கின்றனர் என்பதில் இருந்து, இதை இனம் கண்டுகொள்ள முடியும்.

2. இவர்கள் பேசுகின்ற விடையங்களுக்கு அப்பால் உள்ள மற்றையவற்றில் எந்த நிலையை எடுக்கின்றனர் என்பதில் இருந்து இனம் காண முடியும்.

3. மக்களை மையப்படுத்தாத அரசியல், முரணற்ற வகையில் அனைத்து விடையத்திலும் மக்களை ஒருங்கிணைக்காத அரசியல், தம்மை மையப்படுத்தி இருப்பதில் இருந்தும் இதை இனம் கண்டு கொள்முடியும்.

இவர்கள் மக்களைச் சார்ந்து நின்று, தாம் முன்வைக்கும் அரசியலை முன்னெடுப்பதில்லை. மக்களின் எதிரியுடன் சேர்ந்து நின்று, மக்களுக்கு எதிராகவே இதைப் பேசுகின்றனர். தம்மையும், தம் அரசியல் நடத்தையையும் மூடிமறைக்கவும், மக்களை மோசடி செய்யவும் தான், குறைந்தது ஒரு முரண்பாட்டை மையப்படுத்தி அரசியல் கோஷங்கள், வாதங்கள் உதவுகின்றது. "தேசியத்தை" மட்டும் மையப்படுத்திய புலிகள் போல், "ஜனநாயகத்தை" மட்டும் மையப்படுத்திய அரசும் புலியெதிர்ப்பும் அரசியலும் ஒரே அரசியல் விளைவையும் அரசியல் சாரத்தையும் கொண்டது. இதுபோல் தான் "தலித்தியத்தை" மட்டும் மையப்படுத்திய அரசியலும் கூட. இது போல் "பெண்ணியம்" முதல் "சுரண்டல்" வரை, இதில் குறைந்த பட்சம் ஒன்றை மட்டும் மையப்படுத்திய அரசியல் மக்களைச் சார்ந்து இருப்பதில்லை. சமூகத்தில் நிலவும் அனைத்து முரண்பாடுகள் மீதும், முரணற்ற வகையில் முன்னிறுத்தி அதற்காக போராடாத வரை, அப்போராட்டங்கள் முதல் கருத்துகள் வரை ஏதோ ஒரு ஒடுக்குமுறைக்கு உள்ளான மக்களை ஒடுக்க தொடர்ந்தும் உதவுகின்றது.

இதில் ஒன்று எப்படியெல்லாம் மக்களை அடக்கியொடுக்கியதோ அதுபோல்தான் மக்களை சார்ந்து நின்று அரசியல் செய்யாத அனைத்தும், இது சார்ந்த அரசியல் வேஷங்களும். இதில் மூடிமறைத்த மக்கள் விரோதப் போக்கு, சமூகத்தின் ஒரு ஒடுக்குமுறையை தூக்கி நிறுத்தி மற்றைய ஒடுக்குமுறைகளைக் கண்டுகொள்ளாமை தான். "தேசிய" ஒடுக்குமுறையை "முற்போக்காக" முன்னிறுத்தி மற்றைய ஒடுக்குமுறையான சாதியம், ஆணாதிக்கம், முஸ்லீம் சிறுபான்மை இனங்கள் மேலான இனவாதம் மதவாதம், சுரண்டல், பிரதேசவாதம்.. என்று அனைத்திலும் பிற்போக்காக செயல்பட்டு ஒடுக்குமுறையை ஏவினர். இப்படித்தான் இன்று "தலித்திய", "முஸ்லீம் மக்கள்" என்ற கோசங்கள் கூட. இந்த அரசியல் பின்னணியின் உள்ளடகத்தை இனம் காண்பதன் மூலம், இவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை நாம் இனம் காணமுடியும்.

1. குறித்த முரண்பாட்டின் அதன் அடிப்படையிலான ஒடுக்குமுறையை எதிர்த்துப் போராடும் அரசியல் நடைமுறை என்பது, குறித்த மக்களையும் ஒட்டுமொத்த மக்களையும் சார்ந்து நின்று முரணற்ற வகையில் போராடுவதை அடிப்படையாக கொண்டதாக அமைய வேண்டும்;.

2. குறித்த முரண்பாட்டையும் அதன் அடிப்படையிலான ஒடுக்குமுறையையும் முதன்மைப்படுத்தும் போது, மற்றைய முரண்பாட்டையும் அதன் அடிப்படையிலான ஒடுக்குமுறைகளையும் எதிர்த்துப் போராடுவதையும் அடிப்படையாகக் கொண்டதாக அமைய வேண்டும்.

3. பிரதான முரண்பாட்டையும் அதன் அடிப்படையிலான ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தில், குறித்த ஒரு முரண்பாட்டுக்கான தீர்வை உள்ளடக்கி அதை முன்னிலைப்படுத்தி போராடுவதை அடிப்படையாக கொண்டதாக அமைய வேண்டும்.

இவை ஒருங்கே முரணற்ற வகையில் அமையாத, மக்களை சாராத அரசியல் என்பது மக்களை ஏய்த்துப் பிழைக்கும் அரசியல் மோசடியாகும். இதில் மக்களின் எதிரிகளுடன் இணைந்து நின்று போடும் கோசங்கள், நடத்தைகள், மக்களைப் பிளக்கும் வண்ணம் பிரிவினையையும் பிளவையும் விதைக்கும் குறுகிய அரசியல் திட்டமிட்டு மூடிமறைக்கப்பட்ட ஒடுக்குமுறையாகும். "தேசிய"த்தின் பெயரில் சிங்கள மக்களை எதிரியாக காட்டி புலிகள் செய்ததைத் தான். "தலித்திய"த்தின் பெயரில், "பிரதேசவாத"த்தின் பெயரில் … செய்கின்றனர். அனைத்து அரசியல் விளைவும் ஒன்றுதான்.

தனது ஒடுக்குமுறைக்கு எதிராக போராடும் போது, தனக்குள் ஒடுக்குமுறையை வைத்திருக்க முடியாது. அதுபோல் தன்னைச் சுற்றிய மற்றைய ஒடுக்குமுறையை எதிர்க்காது, தனது ஒடுக்குமுறைக்கு போராடுவது என்பது போலியானது பொய்யானது, புரட்டுத்தனமானது. இன்று இதை நாம் பல தளத்தில் இனம் காணமுடியும். இவர்கள் தான் மக்களை ஏய்க்கும் முதல் தரமான மக்கள் விரோதிகள் மட்டுமல்ல, பொறுக்கிகளும் கூட.

பி.இரயாகரன்

29.01.2012