இதை ஈ.என்.டி.எல்.எப் கூறவில்லை. இந்தியக் கூலிக்குழுக்கள் கூறவில்லை. முன்னாள் புலிப்பினாமியான யதீந்திரா இதை, இடதுசாரிய வேஷமிட்டு வியாபாரம் செய்யும் காலச்சுவட்டில் கூறுகின்றார். அவர் தன் "கட்டுடைப்பாக" பீற்றி வைக்கும் தர்க்கம் வாதம் "இந்தியாவின் ஆதரவின்றி அல்லது அனுசரணையின்றி ஈழத் தமிழர்கள் எக்காலத்திலும் எந்தவொரு தீர்வையும் அடைய முடியாது என்பதே பின் – முள்ளிவாய்க்கால் யதார்த்தமாகும்." என்கின்றார். முள்ளிவாய்க்கால்களிள் பின் ஒரு பிழைப்புவாதியிடம் இதைத் தவிர வேறு எதையும் எதிர்பார்க்க முடியாது. இலங்கை அரசின் ஆதரவும் அனுசரணையுமின்றி தீர்வைப் பெறமுடியாது என்று சொல்கின்ற அரசு கைக்கூலிகளின் அதே தர்க்கமும் அதே வாதமும். இங்கு இரண்டும் ஒரே அரசியல் தளத்தில் இயங்குகின்றது.

அமெரிக்காவின் இஸ்ரவேலிய கைக்கூலிகள் போல், இந்தியாவின் கைக்கூலிகளாக தமிழர்கள் இருந்திருக்கவேண்டும் என்கின்றார் யதீந்திரா. அதைத்தான் இன்று வெளிப்படையாக தன்னளவில் செய்கின்றார். இதை செய்யத் தவறியதுதான் புலிகளின் அழிவுக்கு காரணம், வேறு எந்தக் காரணமுமல்ல என்கின்றார். இதைத்தான் ஆய்வு, கட்டுடைப்பு, விமர்சனம், சுயவிமர்சனம் என்று பலவாகவே, இவரைப்போன்ற கைக்கூலிகள் இதை வியந்தோம்புகின்றனர். இதுபோன்ற பிழைப்புவாதிகள் பிழைப்புக்கு ஏற்ப, கடை விரித்து அரசியலை வியாபாரமாக நடத்தும் காலச்சுவட்டில் தான் இதை யதீந்திரா அரங்கேற்றுகின்றார்.

இந்தியாவின் பிராந்திய நலனுக்கேற்பப் போராடுவதுதான், தென்னாசியப் பிராந்திய அரசியலாக இருக்க வேண்டும் என்கின்றார். இந்திய மக்களோ இந்திய அரசுக்கு எதிராகக் கூட போராடக் கூடாது என்பதை, மறைமுகமாக காலச்சுட்டின் மூலம் சொல்லுகின்றார். இதனடிப்படையில் காலச்சுவட்டில் இது வருவது மட்டுமல்ல, அதை அது பிரச்சாரமும் செய்கின்றது.

1985 இல் அநுராதபுர படுகொலையை (அநுராதபுரப் படுகொலை மே 14 1985 ) இந்திய வழிகாடடலில் இந்தியாவின் "புவிசார் அரசியல் நிர்ப்பந்தம்" துக்கு ஏற்ப எப்படி புலிகள் செய்தனரோ, அப்படி தொடர்ந்து இந்தியக் கைக்கூலிகளாக செயற்பட்டிருக்கவேண்டும் என்கின்றார். "இந்தியாவிற்கான, இஸ்ரவேலியர்களாக இருக்கவேண்டிய ஈழத் தமிழர்க"ள் அவ்வாறு இருத்தல் என்பது இதுதான். ஈ.பி.ஆர்.எல்.எவ், ரெலோ.. போன்று முழுமையாக புலிகள் மாறி இருக்கவேண்டும் என்கின்றார். இதை செய்யாதால் தான் புலிகள் அழிந்தனர் என்கின்றார், முன்னாள் புலிப் பினாமியும் பிழைப்புவாதியுமான யதீந்திரா. இதையே தான் ராஜதந்திரமற்ற புலி அரசியல் என்று கூறி, இதை சுயவிமர்சனம், விமர்சனம் என்கின்றார்.

இப்படி இந்தியாவின் "புவிசார் அரசியல் நிர்ப்பந்தம்" தான், புலி அழியக் காரணம் என்கின்றார். ஆக இது விட்டில் பூச்சி நெருப்பில் வீழ்ந்தது போல் என்கின்றார். ஆக இந்தியா காரணமல்ல, புலிதான் காரணம் என்கின்றார். புலிகள் தங்கள் வெளியுறவுக் கொள்கையால் அழிந்தனர் என்கின்றார். இந்திய நலன் சார்ந்து கூலிப்படையாக புலிகள் மாறி இருந்தால், அதை வெளியுறவுக் கொள்கையாக கொண்டிருந்தால், புலிகள் அழிந்திருக்க முடியாது என்கின்றார். இதை மூடிமறைத்து சொல்லும் அறிவுசார் மேன்மை மூலமான, "கட்டுடைப்பாக" இதை முன்வைக்கின்றார். இந்தியாவுக்கு பல்லக்கு தூக்கும் கூட்டம், ஆகா எவ்வளவு பெரிய உண்மை என்று செம்பு கொடுத்து தூக்கி முன்னிறுத்துகின்றது.

இவர்களின் கண்ணோட்டத்தில் போராட்டம் என்பது

1.அரசு முதல் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து போராடுவதல்ல

2.மக்களை சார்ந்து நின்று போராடுவதல்ல

என்ற அரசியல் அடிப்படைக் கோட்பாட்டை முன்னிறுத்தி, கைக்கூலிகளாக இருத்தல்தான் போராட்டம் என்ற அரசியல் அளவுகோலை முன்னிறுத்தித்தான் யதீந்திரா இதை முன்வைக்கின்றார். இவர்கள் எல்லாம் புலிகளின் பின் இருந்ததும் அதை அழிக்க வழிகாட்டியதும்;, புலியைச் சார்ந்து பிழைத்ததையும் தாண்டி, இதற்கு வெளியில் வேறு எந்த சமூக நோக்கமும் கிடையாது.

இவர்களின் இன்றைய பிழைப்பு அரசியல் விளக்கத்தைத் தாண்டி, 1980களில் இந்தியா தன் கைக்கூலிகளை கொண்ட போராட்டத்தை உருவாக்கும் நோக்கில் வலிந்து தலையிட்டது. இதன் பின்னணியில் புலிகள் சர்வதேச முரண்பாட்டிற்கு ஏற்ப அமெரிக்கக் கைக்கூலிகளாக மாறாது, தொடர்ந்து இந்தியக் கைக்கூலியாக செயல்பட்டு இருந்தால், புலிகளை ஒருபோதும் இந்தியா அழித்திருக்காது என்று இன்று வெளிப்படையாக கூறுகின்றவர்கள், புலிக்கு பின்னால் இருந்து என்ன செய்திருப்பார்கள்? அவர்கள் இதையே இரகசியமான சதி அரசியலாக புலிக்குள் இருந்து செய்தார்கள் என்பதே இதன் மறுபக்க உண்மையாகும். இந்தியா நோர்வே ஊடாக மட்டும் இயங்கவில்லை, இன்று இந்திய "புவிசார் அரசியல் நிர்ப்பந்தம்" பற்றி பேசும், "இந்தியாவிற்கான, இஸ்ரவேலியர்களாக இருக்க வேண்டிய" கைக்கூலி அரசியல் பேசும் யதீந்திரா போன்றவர்கள் ஊடாகவும் கூட இயங்கித்தான் புலியை அழித்தனர். இது எங்கும் தழுவியவொரு உண்மை.

இப்படி தாங்கள் அழித்ததை நியாயப்படுத்த, அவர்களைக் களத்தில் இறக்கி இருக்கின்றது. இந்த நியாயப்படுத்தலையே சுயவிமர்சனம், விமர்சனம் என்கின்றனர். இந்தியாவின் "பிராந்திய நலனுக்கு, புவிசார் அரசியலுக்கு" இணங்க செயல்படாததுதான் புலிகளின் தவறாம். இதைத்தான் இந்தியா சொல்கிறது. இதைத்தான் யதீந்திராவும் கூறுகின்றார். இங்கு புலிகளை மையமாக வைத்து, அதன் தவறான சில போக்குகளை முன்னிறுத்தி முன்தள்ளும் இந்திய கைக்கூலிகளின் நுட்பமான தர்க்கத்தைக் கடந்து இதை முதலில் பார்ப்போம்.

இந்தியா 1980 களில் இனமுரண்பாட்டுக்குள் தலையிட்டதே, போராட்டத்தை அழிப்பதை அடிப்படையாகக் கொண்டுதான்.

1.ஒடுக்கப்பட்ட மக்களைச் சார்ந்த ஒரு போராட்டமாக வளர்வதை கருவிலேயே அழித்துவிடுவதை அடிப்படையாகக் கொண்டு அது தலையிட்டது. இப்படி அன்றே போராட்டத்தை அது அழித்துவிட்டது.

2.இலங்கையை தனது பிராந்திய மேலாதிக்கத்துக்கு ஏற்ற நாடாக்க, அதற்கு கூலிப்படை தேவைப்பட்டது. மக்கள் போராட்டத்துக்கு பதில் கூலிப்படைகளின் வன்முறையை போராட்டமாக மாற்றியது. புலிகள் இந்த அச்சில் இருந்து விலகி, அமெரிக்காவின் கூலிப்படையாக மாறியதன் மூலமும் இந்தியாவுடன் முரண்பட்டது. பின்னால் இந்தியா அமெரிக்கா நலன் பேணும் தென்னாசியப் பிராந்திய முகவரான பின், புலிகளை அமெரிக்கா கைவிட்டது. புலிகள் இந்தியா முரண்பாடு தொடர்ச்சியாக நீடித்தது. இங்கு போராட்டத்தை எப்போதோ இந்தியா அழித்துவிட்டது. கூலிக் கும்பலான மாபியா புலியின் இருப்பு என்பது, பிராந்திய நலனுடன் இயல்பில் முரண்பட்டது. அதனால் அதை முற்றாக இந்தியா அழித்தது.

இதற்கு மாறான மக்களைச் சார்ந்து நிற்கும் எந்த போராட்டத்தையும் இப்படி அழித்திருக்க முடியாது. இதுதான் இதில் உள்ள உண்மை. இங்கு கைக்கூலிகளாக, மாபியாவாக இருத்தல் போராட்டமல்ல. அதன் இருப்புப் பற்றி கவலைகள், வாதங்கள், தர்க்கங்கள் மூலம், அதையே போராட்டமாக திரித்துக் காட்டுகின்ற மற்றொரு அரசியல் மோசடி இங்கு அரங்கேறுகின்றது. இந்தியா அழிக்கவில்லை "புவிசார் அரசியலுக்கு" புலிகள் இணங்க மறுத்து அவர்கள் தாமாக அழிந்தனர் என்பது மற்றொரு மோசடி. இதன் மூலம் 1980 களில் மக்கள் போராட்டத்தை அழித்ததை மறுத்துவிடுகின்ற மற்றொரு அரசியல் மோசடியையும், மூடிமறைத்து அரங்கேற்றுகின்றனர் இந்தியக் கைக்கூலிகள்.

இதைத்தான் இவர்கள் கட்டுடைப்பு என்கின்றனர். "இந்த இடத்தில் ஒரு கட்டுடைப்பு விமர்சனம் நமக்குத் தேவைப்படுகிறது. இலங்கை விடயங்களைப் பொறுத்த வரையில், இந்தியா என்பது ஒரு (கலாநிதி ஜயந்த தனபால) புவிசார் அரசியல் நிர்ப்பந்தம்" என்று, அனைத்தும் இதுவென்கின்ற தர்க்கம், இந்தியாவை நியாயப்படுத்துகின்றது. இங்கு இந்திய அரச பிரநிதியாகவே, "புவிசார் அரசியல் நிர்ப்பந்தம்" சார்ந்த ஒடுக்குமுறையின் அவசியத்தை யதீந்திரா முன்வைக்கின்றார். இதைத்தான் அவர் கட்டுடைப்பு என்கின்றார்.

இந்திய பிராந்திய மேலாதிக்கத்தை ஏற்று கைக்கூலிகளாக புலிகள் நடக்கத் தவறியதுதான் புலிகளின் தவறு என்கின்றார். "தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல் போக்கில் இடம்பெற்று வந்த அனைத்துத் தவறுகளும் இந்தியாவின் தவிர்க்க முடியாத இடத்தை விளங்கிக்கொள்ளாமையின் விளைவுகள்தாம்." என்கின்றார். "இந்தியாவிற்கான, இஸ்ரவேலியர்களாக இருக்க வேண்டிய" புலிகள், இந்தியா நலனை பேணத் தவறியதுதான் போராட்டத் தவறு என்கின்றார். அதை சுயவிமர்சனம் என்று கூறுகின்ற, ஒரு கைக்கூலியையும் நாம் இங்கு இனம் காண்கின்றோம். இதைத் தவிர இதற்கு விளக்கம் கிடையாது. இப்படி "அனைத்துத் தவறுகளும்" இந்திய கைக் கூலியாக புலிகள் இருக்கத் தவறியது தான் என்கின்றார்.

இப்படி வக்கிரமாக கூறும் இவர் "இந்திய – இலங்கை ஒப்பந்தத்தைச் செயலிழக்க ரணசிங்க பிரேமதாசவைத் தெரிவுசெய்திருந்த பிரபாகரன், நோர்வேயின் முயற்சியைச் செயலிழக்கச் செய்வதற்காக மகிந்த ராஜபக்ஷவைத் தெரிவுசெய்தார். எல்லாக் காலத்திலும் ஒரே உபாயம் கைகொடுக்கும் என்னும் பிரபாகரன் கணக்கு இம்முறை தவறாகப்போனது. அவரது தந்திரோபாயம் இறுதியில் அவரையும் பலியெடுத்தது. இதுதான் தமிழீழ விடுதலைப்புலிகள் விழுந்த கதை. ஆனால் இதை ஏற்றுக்கொள்வதில் தான் நம் மத்தியில் சங்கடங்கள் தொடருகின்றன." இப்படி "பிரபாகரன் கணக்கு இம்முறை தவறாகப்போனது." என்று கூறி, மற்றவை எல்லாம் சரியானவை என்று கூறுகின்ற பின்னணியில், உண்மைகள் என்ன? பிரபாகரன் கொன்று குவித்த பிணங்கள் மேல் ஏறி நின்று, மக்கள் போராட்டத்தை டுக்கி ஏறிய பிரபாகரன் இருந்த சிம்மாசனத்தை தான் பிசகாத கணக்காக காட்டுகின்றனர்.

புலிகளை இந்தியாவோ, இலங்கையோ அழிக்கவில்லை. அதன் வெளியுறவுக் கொள்கை அழிக்கவில்லை. புலிகளை அழித்தது மக்கள் தான். மக்களில் இருந்து அன்னியமான, மக்கள்விரோத அரசியலால் தான் புலிகள் அழிந்தனர். முதலில் போராட்டத்தை புலிகள் அழித்தனர். இதன்பின் தான் அரசும், இந்தியாவும் அதை வெற்றிகொண்டனர். புலி என்ற மாபியாக் கும்பலின் வீழ்ச்சி இப்படித்தான் அரங்கேறியது. 1980 களில் இந்தியத் தலையீட்டை கடந்த, இந்திய கூலிக் குழுக்கள் உருவாகாது எந்த சூழலிலும், மக்கள் போராட்டம் ஒன்று உருவாகி இருந்தால் அதை இலங்கை இந்திய அரசுகளால் வென்றிருக்கவே முடியாது.

1980 களில் இந்தியக் கைக்கூலிகளாக மாற இயக்கங்கள் முன்வைத்து நியாயப்படுத்திய அதே தர்க்கத்தை, முள்ளிவாய்க்காலின் பின் யதீந்திரா புதிதாக மீள முன்வைக்கின்றார். "இதை ஏற்றுக்கொள்வதில் தான் நம் மத்தியில் சங்கடங்கள் தொடருகின்றன." என்று, ஒரு பிழைப்புவாதியாகவே அரசியல் வியாபாரிகளான காலச்சுவட்டுன் கூட்டு அமைத்துக்கொண்டு முன்வைக்கின்றார்.

 

பி.இரயாகரன்

21.01.2012