சேலத்தில் காந்தி விளையாட்டரங்கம் அருகிலுள்ள நீச்சல்குளத்தில், பயிற்சிக்கு வரும் பள்ளி மாணவிகளிடம் நீச்சல் பயிற்சியாளர் ஞானசேகரன் தகாத முறையில் நடந்து கொண்டதாகவும், இதனால் இரண்டு மாணவிகள் கர்ப்பமடைந்துவிட்டதாகவும் கோவை மேற்கு மண்டல மேலாளர் மோகன்,சேலம் மாவட்ட விளையாட்டுத் துறை அதிகாரி பிரதாப் உள்ளிட்ட அதிகாரிகள் பயிற்சியாளர் ஞானசேகரன் மீதான தனிப்பட்ட விரோதத்தால் அவதூறு பரப்பி, பெண் குழந்தைகளை அவமானப்படுத்தியுள்ளனர்.

 

 

நீச்சல் பயிற்சிக்கு வரும் பள்ளி மாணவிகளையும் பெற்றோர்களையும் அவமா னத்துக்கும் மன உளைச்சலுக்கும் ஆளாக்கிய இந்த பொறுக்கித்தனத்தை எதிர்த்து, நீச்சல்பயிற்சி பெற்ற மாணவிகள் கர்ப்பம் என்று அவதூறு பரப்பிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்து தண்டிக்கக் கோரியும், பெண்கள் மீதான பாலியல் வன்முறைகளுக்கு எதிராகவும் பிரச்சார இயக்கத்தை மேற்கொண்ட பெண்கள் விடுதலை முன்னணியினர், அதன் தொடர்ச்சியாக 27.6.2011 அன்று மாலை சேலம் போஸ் மைதானத்தில் ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். விண்ணதிரும் முழக்கங்களுடன் நடந்த இந்த ஆர்ப்பாட்டம் உழைக்கும் மக்களிடம் சிறப்பானதொரு வரவேற்பைப் பெற்றது.

ஏறத்தாழ ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு நடிகை ரஞ்சிதாவுடன் படுக்கையறையில் சல்லாபிக்கும் காட்சிகளுடன் வெளிவந்த சி.டி.யால் பிரபலமடைந்த கார்ப்பரேட் சாமியார் நித்தியானந்தா, தமிழகத்தில் ஆட்சி மாற்றத்துக்குப் பின்னர் இப்போது வெளிப்படையாகத் திரிவதோடு, கடந்த ஜூலையில் சென்னையில் பத்திரிகையாளர் சந்திப்பையும் நடத்தி தன்னை யோக்கிய சிகாமணியாகக் காட்டிக் கொண்டு மீண்டும் தனது தொழிலை நடத்தக் கிளம்பியுள்ளான்.

ஆன்மிகப் போர்வையில் ஆபாசக் கூத்தடிக்கும் இந்த கும்பலை எதிர்த்து,  சேலம் பெரியார்  சிலை அருகே 21.7.2011 அன்று சிவப்புச் சேலையுடன் திடீரெனத்  திரண்ட பெண்கள் விடுதலை முன்னணியின் தோழர்கள், நித்தி ரஞ்சி படத்தை செருப்பாலும் விளக்குமாறாலும் அடித்து, "நித்தியானந்தா கும்பலைக் கைது செய்! அவனது சொத்துக்களைப் பறிமுதல் செய்!'' என்ற முழக்கத்தோடு ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.

சேலம் மாவட்டச் செயலர் தோழர் காந்தம்மாள் தலைமையில் நடந்த இந்த அதிரடி போராட்டம், நகரெங்கும் பெரும் பரபரப்பாகி, மக்களிடம் பெருத்த வரவேற்பைப் பெற்றது.

பு.ஜ.செய்தியாளர், சேலம்.