இராஜபாளையம் பகுதியைச் சேர்ந்த மூத்த நக்சல்பாரித் தோழர் கணபதி, கடந்தஜூலை 22ஆம் தேதியன்று தனது 75வது வயதில் மரணமடைந்துவிட்டார்.

 

 

கம்யூனிச இலட்சியத்துடன் செயல் பட்டுவந்த தோழர் கணபதி, 1970களின் பிற்பகுதியில் புரட்டல்வாத வலது கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து வெளியேறி நக்சல்பாரி புரட்சிகர இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். அன்றைய லிபரேஷன் குழுவிலும், அதன் பின்னர் மக்கள் யுத்தக் குழுவிலும் செயல்பட்டுவந்த அவர், அவற்றின் சந்தர்ப்பவாதப் போக்குகளை நிராகரித்து 1990களில் விவசாயிகள் விடுதலை முன்னணியில் தன்னை இணைத்துக் கொண்டு ஊக்கமுடன் செயல்பட்டு வந்தார்.

குறிப்பாக, 1980களில் லிபரேஷன் குழுவின் நக்சல்பாரிப் புரட்சியாளரான தோழர் மச்சக்காளையை இராஜபாளையம் அருகிலுள்ள சேத்தூர் போலீசு நிலையத்தின் போலீசார் சித்திரவதை செய்து கொன்றுவிட்டு, அவரது உடலை மேற்குத் தொடர்ச்சி மலையடிவா ரத்தில் போட்டு எரித்துவிட்டனர். இப்படுகொலையை  எதிர்த்து, குடியுரிமைக்கான மக்கள் கழக (பி.யு.சி.எல்.)த்தின் மூலம் மதுரை நீதிமன்றத்தில் சேத்தூர் போலீசு நிலைய அதிகாரி அழகுவேல் மீது கொலைவழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில், தோழர் மச்சக்காளையை சேத்தூர் பேருந்து நிலையத்தில் போலீசார் கைது செய்ததையும், பின்னர் பிணத்தை மலையடிவாரத்தை நோக்கி போலீசு எடுத்துச் சென்றதையும் நேரில் கண்டதாக சாட்சியமளித்து, போலீசின் அச்சுறுத்தலுக்கும் அடக்குமுறைக்கும் அடிபணியாமல் நக்சல்பாரிகளுக்கே உரித்தான துணிவையும் உறுதியையும் நிரூபித்துக் காட்டியவர்தான், தோழர் கணபதி.

தான் பொறுப்பேற்றுக் கொண்ட இயக்கப் பணிகளை விடாப்பிடியாக நிறைவேற்றுவதில் அவர் எப்போதுமே முன்னுதாரணமிக்கவர். புரட்சிகர இயக்கத்தில் இணையும் புதிய தலைமுறையினரிடம் தனது அனுபவங்களைத் தொகுத்துக் கூறி, விளக்குவதில் அவர் ஓர் நல்லாசிரியர். முதுமையில் தொழுநோயாலும் இரத்த அழுத்த நோயினாலும் பாதிக்கப்பட்ட போதிலும், நக்சல்பாரி புரட்சிகர அரசியை உணர்வுபூர்வமாக நேசித்துச் செயல்படுவதில் அவர் ஓர் இளைஞன். குறிப்பாக, இராஜபாளையம் வட்டாரத்தில் நக்சல்பாரி புரட்சிகர அமைப்பான விவசாயிகள் விடுதலை முன்னணியைக் கட்டிவளர்ப்பதில் அவர் ஆற்றியுள்ள பங்கு மகத்தானது.

தோழர் கணபதியின் உயரிய கம்யூனிசப் பண்புகளை வழுவாமல் பின்பற்றி, அவர் கனவு கண்ட புதிய ஜனநாயகப் புரட்சியைச் சாதிக்க உறுதியேற்று எமது சிவப்பஞ்சலியைச் செலுத்துகிறோம்.

விவசாயிகள் விடுதலை முன்னணி,

இராஜபாளையம்.