12_2005PK.jpg

அந்தப் பொடிசு முகம் சுளித்தது ""அய்யே, நல்லால்லே கருப்பி.''

""ஏய் வாண்டு, இந்தச் சாத்துக்குடி எவ்வளவு இனிப்பு தெரியுமா?'' ஒரு சுளையை எடுத்து நன்றாகச் சப்பிச் சாப்பிட்டுக் காட்டினாள் கார்மென். பொடிசு முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தது. கார்மெனை கருப்பி என்று தான் கூப்பிடுவான் அந்தப் பொடிசு வில்லியம்ஸ். கார்மென், ஆப்பிரிக்கப் பழங்குடிப் பெண். வேலைக்காரி. அவள் எசமானனும், எசமானியும் பிரெஞ்சுப் பணக்காரர்கள்.

 

""நல்ல கண்ணுல்லே... நான் கண்ண மூடித் தொறக்குறதுக்குள்ள லபக்குனு முழங்கிடுவியாம்...'' கார்மென் மறுபடி கெஞ்சினாள்.

 

வில்லியம்ஸ் அக்குடும்பத்தின் ஒரே ஒரு செல்லப் பையன். அவனுக்குத் தனி அறை. கார்மென் இந்த அறையில்தான் அவனுக்கு ஊட்டிக் கொண்டிருந்தாள். அவன் முகத்தைத் திருப்பிக் கொண்டான்.

 

சுவர்க் கடியாரம் இரவின் 7 மணியை இசைத்தது. வீட்டுக் கூடத்தில் எசமானி, எசமான், அவர்கள் நண்பர்களின் பெருங்கூட்டம். கொஞ்ச நேரம் இரைச்சல், கொஞ்சநேரம் மயான அமைதி. சீட்டுக் கச்சேரி ஓடிக் கொண்டிருந்தது.

 

கார்மென் கண்டிப்போடு சொன்னாள்: ""நீ சாப்பிடலேன்னா அம்மா கிட்டேதான் சொல்லப் போறேன்.'' சொல்லேன் என்பது போல முகம் காட்டிச் சிணுங்கினான் வில்லியம்ஸ். வலுவந்தமாக வில்லியம்ஸின் வாயைத் திறந்து ஒரு சுளையை உள்ளே தள்ளினாள். எது நடக்கக் கூடாதோ, அது நடந்தது. "ஓ' என்று ஒப்பாரி வைத்தான் வில்லியம்ஸ்.

 

வீட்டுக் கூடத்திலிருந்து எசமானி ஓடிவருவது தெளிவாகக் கேட்டது. ""ஏய் கார்மென், என்ன செஞ்ச எரும?'' சீட்டாட்டம் தடைப்பட்ட கோபம் அவளுக்கு.

 

""அம்மா, சாப்பிட மாட்டேங்கிறாம்மா.''

 

""பாவம் பச்சக் குழந்தயப் பலவந்தம் செஞ்சியா அறிவு கெட்டவளே. வில்லியம்ஸ், ஒனக்கு திராட்ச பிடிக்குமில்லே, சாப்பிடுறியா? ஏய் கார்மென், குழந்தயத் தொந்தரவு செய்யாம திராட்சயக் குடு.''

 

வில்லியம்ஸ் திராட்சையைச் சப்பிச் சப்பி உறிஞ்சிக் கடித்து வேகமாக விழுங்கினான். என்னைக்காவது ஒருநாள் ஒரு கொத்து திராட்சை சாப்பிட வேண்டும் என்று நினைத்தாள் கார்மென்.

 

மணி ஏழரைக்கு விரைந்தது. அடுத்தது, வில்லியம்ஸ{க்கு உடைமாற்ற வேண்டும்; அதற்கடுத்து, படுக்கை.

 

கார்மெனின் அவசரம் வில்லியம்ஸ{க்குப் புரியாது, புரியவில்லை. வேகவேகமாக நடையை எட்டிப் போட்டாலும் மெகெலெகெல்லேவில் இருக்கிற அவள் வீட்டுக்குப் போவதற்கு குறைந்தது ஒரு மணிநேரத்துக்கு மேல் பிடிக்கும். கார்மென் பதறினாள்.

வில்லியம்ஸ் அவள் கழுத்தைக் கட்டிக் கொண்டான். "கருப்பி, ஒரே ஒரு பாட்டு கருப்பி' அன்றைக்குப் பார்த்து ஒன்று, இரண்டு, மூன்று பாட்டுகளுக்குப் பிறகே வில்லியம்ஸ் கண் அசந்தான். முடுக்கிய ரேடியோப் பெட்டி போல கார்மென் பாடிக் கொண்டிருந்தாளே தவிர, அவள் நினைப்பு எங்கோ இருந்தது.

 

வில்லியம்ஸ் கொழுகொழுவென்று வளர்ந்தான். இவள் மகன் டேவிட் பாவம் எத்தனையோ முறை சாவை எட்டிப் பார்த்துவிட்டுக் காத்திருக்கிறான். பெரிய ஆளுங்கபோல இப்போதே வில்லியம்ஸ் வேலைக்காரர்களிடம் வேலை வாங்குகிறான். அந்தச் சட்டை வேண்டாம், இந்த டவுசர்தான் வேணும், இந்த நீலத்தொப்பிதான் வேணும், பிஸ்கட் வேண்டாம் கேக்தான் வேணும். உடனே பார்க் போகணும் எல்லாம் கேட்பான். பாவம் டேவிட், வாயைத் திறந்து எதுவும் கேட்க மாட்டான். வெளிஆட்கள் வீட்டில் இருந்துவிட்டால் ரொம்பக் கூச்சப்படுவான்.

 

டேவிட்டையும் பாசம் கொட்டி வளர்க்க வேண்டும் என்றுதான் கார்மென் ஆசைப்பட்டாள். ஆனால் அது வெறும் ஆசைதான். உலகம் இருக்கிற இருப்பில் அது கனவுதான். கார்மென் டேவிட்டை எண்ணி வருந்தினாள்.

 

அன்று காலை வேலைக்குப் போகவேண்டுமா என்றுதான் கார்மென் யோசித்தாள். முந்தின நாள் ராத்திரிபூரா டேவிட் அழுதுகொண்டேயிருந்தான். அடிக்கடி வயிற்றைப் பிடித்துக் கொண்டான் "வலிம்மா வலிம்மா' என்று முனகினான். வாந்தி. பேதி. மூன்று முறை வாந்தி எடுத்தான். முதல் முறை வாந்தி எடுத்ததும் "இப்ப பரவாயில்லம்மா' என்று சொன்னான். ஆனால் வாந்தி அடங்க வில்லை. மூன்றாவது முறை அவனது சின்னஞ்சிறு வயிறு உள்ளுக்குள் இழுத்து ஓங்கரிக்க, பச்சையாக தண்ணியாக வாந்தி எடுத்தான். மூச்சு துரத்தி வாங்கியது, நெற்றியில் வியர்வை துளிர்த்தது. அவனைச் சமாதானப் படுத்துவதற்குப் பதிலாக கார்மென் இடிந்து போனாள். ஏற்கெனவே பறிகொடுத்த இரண்டு குழந்தைகள் நினைப்பு நெஞ்சுக்குள் திரண்டு இறுக்கியது.

 

வளாகத்தின் இன்னொரு கோடியிலிருந்த அம்மாவைக் கூப்பிட்டு அனுப்பலாமா? அனுப்பலாம்தான். பீதியில் கார்மென் திகைத்தாள். ஏதோ ஒருவழியாகத் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டாள். அம்மாவைக் கூப்பிட்டால் அவள் உடனே குடும்ப மாந்திரீகக் கிழவனிடம் டேவிட்டைத் தூக்கிக் கொண்டு போய்விடுவாள். கார்மெனுக்கு விருப்பமில்லை.

 

எசமான் வீட்டில் செய்வதுபோல "இங்கிலீஷ் வைத்தியமே' நல்லது என்று நினைத்தாள். முந்திய இரண்டு குழந்தைகளையுமே அந்த மாந்திரீகச் சூனியக் கிழவன்தான் விழுங்கிவிட்டான். சடங்குகள் அவள் செல்வங்களைக் காப்பாற்றவில்லை. ஒவ்வொரு சாவும் ஒரு மாதச் சம்பளம் அளவுக்கு கடனைக் கூட்டியதுதான் மிச்சம். எங்கேயாவது வழியில் பார்த்தால், ""நீ உன்னோட அம்மா சொன்ன பயல கல்யாணம் கட்டிகிடலே, அதான் குத்தம். உனக்குச் சொன்னாப் புரியாது. பட்டுத்தான் கத்துக்குவே.'' என்பான் கிழவன்.

 

அவர்கள் சிபாரிசு செய்த பயல் கிட்டோங்கா. அரசாங்கத்தில் கார் டிரைவர் வேலை. அங்கே அவனுக்கு எசமான் அவனே. வேலைக்குப் போய் வீடு வந்தால் சொந்தமாக வாங்கிப் போட்டிருந்த ஒரு மளிகைக் கடை, ஒரு சாராயக் கடை இரண்டையும் ஓர் எட்டிப் பார்த்து வரவும் கவனிக்கவுமே நேரம் சரியாக இருக்கும். கார்மென் வேலைக்கெல்லாம் போக வேண்டாம் வீட்டோடு ராணி போல இருக்கலாம். அவர்கள் இப்படிச் சொன்னார்களே தவிர அதற்குப் பின்னால் சங்கதி வேறு மாதிரி. அவனுக்கு ஏற்கெனவே இரண்டு பெண்டாட்டிகள், ஒருத்தி மளிகைக் கடைக்கு, இன்னொருத்தி சாராயக் கடைக்கு. கார்மென் வந்தால் வீட்டோடு மூன்றாவது பெண்டாட்டியாக இருக்கலாம்.

 

இப்போது கார்மென் இருக்கிற கதியே வேறு. அவள் மலைபோல் நம்பிக் காதலித்தவன் டேவிட்டையும் சேர்த்து மூன்று கொடுத்துவிட்டு, மூன்றாம் சுமை கொடுத்த பிறகு ஏமாற்றி சென்று விட்டான். அந்த வட்டாரத்தை விட்டே ஓடிவிட்டான். திரும்பி வருவான் என்று கொஞ்ச நாள் நம்பிக்கையோடு காத்திருந்தாள். அப்புறம் வேறு திருமணத்தையே வெறுத்து டேவிட்டைக் காப்பாற்றினால் போதுமென்று எல்லா ஆசைகளையும் அடக்கிக் கொண்டுவிட்டாள் கார்மென்.

 

டேவிட் ஏதோ கூப்பிட்டான். அவள் மடியில் தலை வைத்துத் தூங்க வேண்டுமாம். "தனியா இருக்க பயமா இருக்கும்மா' என்று கெஞ்சினான். விடியும்வரை தாங்குவானா, தெரியவில்லை அவளுக்கு. எசமானி போல இருந்தால், ஃபோனிலேயே டாக்டரைக் கூப்பிடலாம், அவசரம் என்றால் டாக்டரின் வீட்டுக்கே கூட கார் போட்டுக் கொண்டு ஓடலாம். ஏழைகள் என்ன செய்ய முடியும்?

 

மருந்துக் கடைகளை இந்நேரம் அடைத்திருப்பார்கள். அரசு ஆஸ்பத்திரிக்குப் போகலாம், போனால், "நேரம் காலம் கெடயாதா உங்களுக்கெல்லாம்' என்று அந்த ஆண் நர்ஸ் வள்ளென்று எரிந்து விழுவான். தனியார் வெள்ளைத்தோல் டாக்டர்கள் ராத்திரி நேரத்தில் ஏழைக் கருப்பர்களை பங்களா கேட்டுக்குள்ளேயே விடமாட்டார்கள். கார்மெனின் கற்பனை சட்டென்று நின்றது அந்த டாக்டர்களுக்குக் கொடுக்க காசு ஏது?

 

மிரண்டு போனாள் கார்மென். டேவிட்டை இழுத்து அணைத்து எடுத்து மடியில் கிடத்திக் கொண்டாள். டேவிட்டைப் பார்ப்பதும், அவனோடு கொஞ்சி விளையாடிய நாட்களை நினைவில் வருடுவதும், தூக்கமும் விழிப்பும் கலந்த ஒரு பயணமாக அவள் எங்கெங்கோ போனாள்.

 

விடியற்காலை. திடுமென விழித்துப் பார்த்தாள் டேவிட், பாவம் குழுந்தை, சுருட்டிப் போட்ட துணிபோல வாடிக் கிடந்து தூங்கிக் கொண்டிருந்தான். அவளுக்கு வேறு வழி இல்லை அவனை அப்படியே விட்டுவிட்டு என்றும்போல காலையில் நேரமே எழுந்து வேலைக்கு ஓடவேண்டியதுதான். எசமானிக்கு டாணென்று காலை ஏழரைக்கு அவள் கூப்பிடும் குரலுக்கு கை அருகே கார்மென் வேண்டும்.

 

இரவு சரியாக உறங்காததால் கார்மெனுக்கு அசதி. ஆனால் படுக்கையிலேயே கிடக்க முடியாது. வேலைக்கும் போக விருப்பமில்லை. அரசாங்க ஆஸ்பத்திரிக்குப் போய் டேவிட்டுக்கு என்ன பிரச்சினை என்று தெரிந்து கொண்டு விட்டால் நல்லதென்று அவள் மனசு துடித்தது. எப்போது டேவிட்டுக்கு உடம்பு சுகமில்லாமல் போனாலும் அவனைத் தனியே விட்டு விட்டுப் போக அவள் விரும்ப மாட்டாள். ஆனால் விரும்பியபடி நடந்ததே யில்லை. அப்போதெல்லாம் துடித்துத் துடித்துக் களைத்துப் போய்விடுவாள்.

 

ஒருமுறை அவனை பங்களாவுக்குத் தன்னோடு அழைத்துப் போக விரும்பினாள் கார்மென். ""என் மகன் வில்லியம்ஸைப் பாக்கறதுதான் உன் வேலை. உன் பையனப் பாக்குறதுக்கு நான் சம்பளம் போடலே'' என்று எச்சரித்து மூஞ்சியைத் திருப்பிக் கொண்டாள் எசமானி.

 

டேவிட்டை அப்படியே விட்டுவிட்டுப் போனாலும், அம்மாவோ, உறவுக்காரப் பெண்களோ வைத்தியம் பார்க்காமல் அப்படியே விட்டுவிட மாட்டார்கள் என்று கார்மெனுக்குத் தெரியும். பழங்குடிகளின் மனசில் குடும்பம் என்றால் எல்லோரும்தான், அது மிக மிகப் பெரியது. எது எப்படி நடந்தாலும் எந்த ஒரு குழந்தையையும் எப்போதும் தனியாக விட்டுவிட மாட்டார்கள். ஆனாலும் கார்மென் மனதில் கொஞ்சம் சந்தேகம்தான். தாய் வளர்ப்புபோல மற்றது இருக்காது, அதிலும் நாம் பெற்றெடுத்த குழந்தைகள் உடம்பு சுகமில்லாத போது அதிகம் நம்மைத் தேடும் என்பாள் கார்மென்.

 

இந்த மாசத்தில் மட்டும் இரண்டு முறை வேலைக்குப் போகவில்லை. ஒருமுறை, சேர்ந்தாற்போல இரண்டு நாள் ஜூரம் பாயில் கிடந்தவன் எழவே இல்லை. ரெண்டாவது முறை, ஒரு சாவுக்குப் போய் விட்டாள். எசமானி சீறுசீறென்று பாய்ந்து விட்டாள்.

 

அவளுக்கு என்ன சொல்லி எப்படி விளக்குவது? என்னவெல்லாமோ சொல்லிப் பார்த்துவிட்டாள். இந்த வெள்ளப் பன்னிகளுக்கு நெனப்பே நாங்க சோம்பேறிங்கறதும், அதனாலதான் வேலைக்கு வரமாட்டேங்குறோம்ங்கறதும்தான்.

டேவிட்டுக்கு உடம்பு சரியில்லாமல் இருந்தும் இன்று கார்மென் வேலைக்குப் போனாள். உச்சி வெயில் நேரத்தில் அவள் தங்கை செய்தி கொண்டு வந்தாள். டேவிட்டுக்கு மருந்து வாங்கிக் கொடுத்துவிட்டார்கள், பயமில்லை. கார்மெனுக்குத் துணுக்கென்றது. இந்தப் பணத்துக்கு எப்படிச் சரிக்கட்டுவது? என்னவோ செய்யலாம், என்ன செய்தாகிலும் டேவிட் குணமாகிவிடணும்.

 

எஜமானியின் சீட்டாட்டம் இன்னமும் முடியவில்லை. அவள் எப்ப வருவது, எப்ப பணம் கேட்பது, எப்ப வீடு போய்ச் சேருவது? வில்லியம்ஸ் ஆழ்ந்து தூங்கி விட்டான். கார்மென் சமையலறைப் பக்கம் போய் கிழட்டுக் காவலாளி பெர்டினான்டிடம் பேசிக் கொண்டிருந்தாள். அவரிடம் மனசைக் கொட்டினால் பாரம் குறைந்து விடும்.

 

ஒருவழியாக எசமானி அங்கு வந்தாள். ""என்ன கார்மென், இன்னமுமா வீட்டுக்குக் கிளம்பலே?''

 

பணம் வேண்டுமென்று எப்படிச் சொல்வது கார்மென் திக்கினாள், தடுமாறினாள். ""இல்லம்மா... வந்து... கொஞ்சம் பணம் வேணும்....''

 

""என்ன, மறுபடி கடனா? பத்து நாளைக்கு முன்னதானே வாங்கினே...''

 

""பையனுக்கு உடம்பு சுகமில்ல, மருந்து வாங்கணும்மா....''

 

""நல்லா இருக்குது உங்க கத... நா ஒன்னும் இங்க பொதுச்சேவ செய்யலே, புருசன் இல்லாம அவ அவ குழந்தையப் பெத்துக்குவீங்க, அத வச்சுக் காப்பாத்த மட்டும் முடியாது... ஏங்கிட்ட பணத்துக்கு ஓடி வந்துடுவீங்க...''

 

""அம்மா அது தொரைமார் பேசற பேச்சும்மா...'' கார்மென் துணிந்து பதில் சொல்லிவிட்டாள். ஆனால் அதை வளர்க்க விரும்பவில்லை. இப்போதைக்கு காசு வேணுமே?

 

""அப்படிச் சொல்லு. உம் பையனுக்குச் சுகமில்லேங்கிறே. என்னைக்கு நீ எம்பேச்ச கேட்டிருக்கே? அவனுக்கு ஒழுங்கா சோத்தப் போடுன்னு எத்தன முறை தலைப்பாடா அடிச்சிக்கிட்டிருப்பேன்... முதல்ல அதச் செஞ்சியா?''

 

""இல்லம்மா... வந்து...''

 

""என்ன இல்லயும் நொள்ளயும். வெறுமனே கிழங்கு மாவக் காச்சி அவன் வயித்துல திணிப்பே... ஒங்களுக்கு வேற என்ன தெரியும்?''

 

""நீங்க வில்லியம்ஸ{க்கு விதவிதமா ஊட்டுறீங்களே, அப்படியா நாங்க செய்ய முடியும்?'' இப்படி கார்மென் பதில் சொல்லவில்லை, மனதில் நினைத்துக் கொண்டாள்.

 

""இப்ப எங்கிட்ட காசு இல்லே. உங்களப்போல ஆளுங்களுக்கு என்னைக்குத்தான் ஒறைக்கும்? பணம் மரத்துலயா காய்க்குது? கொஞ்சமாவது பணத்தச் சேத்து வெக்கணும்னு உங்களுக்கு எட்டாதா?''

 

எசமானி கத்திக் கொண்டிருந்தாள். இவர்கள் வேகமாக பிரெஞ்சு மொழி பேசும் போதெல்லாம் கார்மெனுக்கு ஒன்றும் புரியாது. முழிப்பாள். வெறுமனே தலையைத் தலையை ஆட்டுவாள். இப்போதும் அப்படித்தான் செய்தாள். அதுவே எசமானியை இளக்கி விடுமோ? தெரியவில்லை. அவள் அறைக்குப் போய் கொஞ்சம் ஆஸ்பிரின் மாத்திரை கொண்டு வந்து கொடுத்தாள். அடுத்த நாள் கொஞ்சம் பணம் தருவதாக வாக்கு கொடுத்தாள்.

 

நாளைக்குக் கொடுத்து என்ன பயன்? நாளைக்குக் கொடுப்பாளென்பதும் என்ன நிச்சயம்?

 

ஒருவழியாக கார்மென் வீட்டுக்குக் கிளம்பினாள். கருப்பர்கள் குடியிருக்கிற மெகெலெகெல்லேவுக்கு அவள் போக ஒரு மணிநேரம் போல ஆகிவிடும். வழியேற குழம்பிக் குழம்பிப் பல சிந்தனை. எங்கிருந்தோ டேவிட் கூப்பிடுவது போலிருந்தது. நடையை எட்டிப் போட்டாள்.

 

""பாவம் டேவிட்! பெரியவனானால் என்னைக் காப்பாற்றுவான். பெரியவன் ஆனால் அவனுக்கு என்மீது பாசம் இருக்குமா? இப்படி விட்டுவிட்டுப் போய்விடுகிறாளே பாவி என்று இப்போது சபித்துக் கொண்டிருக்கிறானோ? எனக்கு இங்கிலீஷ் வைத்தியத்தில்தான் நம்பிக்கை இருக்கிறது. அப்படி ஒருவேளை அம்மா இன்னக்கி ராத்திரி மாந்திரீகனைப் பார்க்க நிர்ப்பந்தம் செஞ்சா, போகவேண்டியதுதான்'' கார்மென் அலைபாய்ந்தாள்.

 

எசமானிக்கென்ன? சேமிப்பு, மருந்து என்று எதைவேண்டுமானாலும் சொல்லுவாள். அவள் கிடக்கிறாள். மாசம் 100 ரூபாய் சேக்கணும்னா நடக்கிற காரியமா? கைக் கடியாரம் வாங்கினதுக்காக இதே எசமானியம்மா மாசாமாசம் கெடுபிடியா பணம் பிடிக்கிறா. இது இல்லாம ஊருக்குள்ளே சீட்டுப் பணம் கட்டணும். மீத மிச்சம் என்ன இருக்கு? மாசம் பூரா நான் செலவு செய்யிற பணம் எசமானி அம்மாவுக்கு ஒருநாள் சாப்பாட்டுச் செலவுக்குக் காணாது.

 

தெருக்களில் அனேக தெரு விளக்குகள் எரியவில்லை. இருட்டு வழிந்தோடியது. எதிரே வந்த கார்கள் முழு வெளிச்சமும் வாரி இறைத்துக் கண்களைக் குருடாக்கின. பின்னால் வந்த வாகனங்களோ மோதுவதுபோல அருகே தாண்டிப் போயின. யாரும் ஏற்றிக் கொள்ளவில்லை இத்தனைக்கும் கார்மெனைப் போல கருப்பர்கள்தான் டிரைவர்கள். இன்றைய உலகத்துல அவனவன் பாடு அவனுக்கு.

 

நாளைக்கு எசமானி பணம் கொடுக்கணும் கொடுப்பாளா? கார்மென் மறுபடி மறுபடி யோசித்தாள்.

 

வீடு சமீபமாக வந்தபோது பெண்களின் ஒப்பாரி வேகமாக வந்து தாக்கியது. ஐயோ டேவிட். மருந்து, மாந்திரீகன் எட்டாத இடத்துக்கு டேவிட் போய்விட்டானா, ஐயோ.

கார்மெனுக்கு கண்கள் இருண்டன.

 

ஹென்றி லோபஸ்

 

(""கோடை நாட்களின் இரண்டு இரவுகள்'' ஆப்பிரிக்கச் சிறுகதைகளின் தொகுப்பு, 2003. என்.பி.டி. தேசியப் புத்தக நிறுவனம், புதுடெல்லி வெளியீடு. ஆங்கிலம் வழி தமிழில்: புதூர் இராசவேல்)