போபால் விஷவாயு கொலை வழக்கில் தொடர்புடைய கே{ப் மஹிந்திரா உள்ளிட்ட எட்டு இந்தியக் குற்றவாளிகளின் மீது சுமத்தப்பட்டிருந்த, பத்து ஆண்டுகள் வரை தண்டனை விதிக்கக்கூடிய கொலைக் குற்றமாகாத மரணம் விளைவிக்கும் குற்றவழக்கை, வெறும் இரண்டு ஆண்டுகள் மட்டுமே தண்டிக்கக்கூடிய குற்றமுறு கவனக்குறைவான வழக்காக மாற்றி, உச்ச நீதிமன்றம் 1996இல் தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பை எந்தவிதத்திலும் மீறாமல் போபால் விஷவாயு கொலை வழக்கை விசாரித்துவந்த போபால் பெருநகர நீதிமன்றம், கே{ப் மஹிந்திரா உள்ளிட்ட ஏழு இந்தியக் குற்றவாளிகளுக்கு (விசாரணையின் பொழுது ஒரு குற்றவாளி இறந்துபோனார்) இரண்டு ஆண்டுகள் தண்டனை அளித்த கையோடு, அவர்களுக்குப் பிணையும் வழங்கி கடந்த ஆண்டு தீர்ப்பளித்தது.

 

 

கொலைக் குற்றவாளிகளுக்குச் சாதகமான இத்தீர்ப்புக்கு எதிராக நாடெங்கும் கண்டனங்கள் எழுந்ததையடுத்து, உச்ச நீதிமன்றம் 1996இல் இந்தியக் குற்றவாளிகளின் மீதான வழக்கை நீர்த்துப்போகச் செய்து அளித்த தீர்ப்பை மாற்றக் கோரி, மையப் புலனாய்வுத்துறை மறுசீராய்வு மனுவொன்றை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. இம்மனுவை விசாரித்த ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு மன்றம், "இம் மனு தவறானது; பிழையான வாதம் கொண்டது' எனக் கூறி, இம்மனுவை தள்ளுபடி செய்து கடந்த மே மாதம் தீர்ப்பளித்திருக்கிறது.

"சி.பி.ஐ., 14 ஆண்டுகள் கழித்து இச்சீராய்வு மனுவைத் தாக்கல் செய்வதற்குப் போதிய விளக்கம் அளிக்கவில்லை; 1996இல் உச்ச நீதிமன்றத்தில் அளிக்கப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையிலேயே, குற்றச்சாட்டை மாற்றித் தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது; 1996 இல் அளிக்கப்பட்ட தீர்ப்பு, விஷவாயு படுகொலை வழக்கை விசாரித்துவந்த போபால் பெருநகர நீதிமன்றத்தை எவ்விதத்திலும் கட்டுப்படுத்தாது; அந்நீதிபதி, அந்நீதிமன்றத்திற்குரிய உரிமையைப் பயன் படுத்தி, உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை மரணம் விளைவிக்கும் குற்றவழக்காக மாற்றியமைத்து விசாரிக்கத் தவறிவிட்டார்' எனத் தீர்ப்பில் கூறித் தன்னை யோக்கியவானாகக் காட்டிக் கொண்டுள்ளது, உச்ச நீதி மன்றம்.

குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை அளிக்கக் கூடிய வகையில் வழக்கைப் புனையும் அளவிற்குத்தன் முன் ஆதாரங்களும் சாட்சியங்களும் அளிக்கப்படவில்லை என உச்ச நீதிமன்றம் கூறுவது பச்சைப் பொய். போபாலில் அமைக்கப்பட்ட யூனியன் கார்பைடு ஆலை தொழில்நுட்பரீதியாகக் காலாவதியாகிப் போன ஆலை என்பதும், பாதுகாப்பு குறைபாடுகளால் அவ்வாலையில் பல விபத்துகள் நடந்திருப்பதும் ஏற்கெனவே அம்பலமாகியிருந்த போதிலும், உச்ச நீதிமன்றம் இவ்வுண்மைகளை வேண்டுமென்றே சாட்சியங்களாக எடுத்துக் கொள்ள மறுத்துவிட்டது. மேலும் சி.பி.ஐ., போபாலில் அமைந்துள்ள யூனியன் கார்பைடு ஆலையிலுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளையும், அமெரிக்காவில் அமைந்துள்ள யூனியன் கார்பைடு ஆலைகளிலுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளையும் ஒப்பிட்டு வழக்கை நடத்த முன்வரவில்லை. உச்ச நீதிமன்றம் இந்த ஓட்டைகளையெல்லாம் பயன்படுத்திக் கொண்டுதான் இந்தியக் குற்றவாளிகளுக்குச் சாதகமாக வழக்கை மாற்றியமைத்துத் தீர்ப்பளித்தது.

1984க்குப் பிறகு அமைந்த ஒவ்வொரு அரசும், அதில் பங்கேற்ற அனைத்து ஓட்டுக்கட்சிகளும் போபால் விஷவாயு வழக்கை நீர்த்துப் போகச் செய்வதற்கும், குற்றவாளிகளைத் தப்பவிடுவதற்கும், ஆதாரங்களை அழிப்பதற்கும் எடுத்த நடவடிக்கைகளை ஊரே அறியும். ஆனால், உச்ச நீதிமன்ற நீதிபதிகளோ நாட்டு நடப்பே தெரியாதவர்கள் போல, 14 ஆண்டுகள்

கழித்துச் சீராய்வு மனுவைத் தாக்கல் செய்ததற்கு சி.பி.ஐ.யிடம் விளக்கம் கேட்கிறார்கள்; அதேசமயம், விஷவாயுக் கசிவால் பாதிக்கப்பட்டவர்கள் எவ்விதக் காலதாமதமும் இன்றி 1996இல் வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கை, விசாரணைக்குக்கூட எடுத்துக் கொள்ளாமல் தள்ளுபடி செய்த அயோக்கியத்தனம் குறித்து விளக்கம் அளிக்க உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தயாராக இல்லை.

1996இல் இந்தியக் குற்றவாளிகளுக்குக் குறைவான தண்டனை அளிக்கக்கூடிய விதத்தில் வழக்கை மாற்றியமைத்து அளித்த தீர்ப்பை, மற்ற வழக்குகளின் தீர்ப்புகளைப் போல சாதாரணமாக அறிவிக்காமல்,  அத்தீர்ப்பை அரசியல் சாசனச் சட்டம் 142  ஆவது பிரிவின் கீழ் அறிவித்தது, உச்ச நீதிமன்றம். இப்பிரிவின் கீழ் அறிவிக்கப்படும் தீர்ப்பை நாடு முழுவதும் அமுல்படுத்தக்கோரும் உரிமை உச்ச நீதிமன்றத்திற்கு அளிக்கப்பட்டுள்ளது. மேலும், தனது தீர்ப்பை எதிர்த்து வௌ;வேறு நீதிமன்றங்களில் வழக்குத் தொடருவதையும், இந்தியக் குற்றவாளிகளுக்குச் சாதகமாக அளிக்கப்பட்ட தீர்ப்பை வேறெந்த நீதிமன்றமும் மாற்றிவிடுவதைத் தடுக்கும் பொருட்டும் தான் உச்ச நீதிமன்றம் அரசியல் சாசனச் சட்டம் 142 ஆவது பிரிவின் கீழ் இத்தீர்ப்பை அளித்தது.

விஷவாயுக் கசிவால் பாதிக்கப்பட்டவர்கள், "உச்ச நீதிமன்றம் இந்தியக் குற்றவாளிகள் மீதான வழக்கை நீர்த்துப் போகச் செய்துவிட்டாலும், போபால் பெருநகர நீதிபதி தனக்குள்ள சட்டபூர்வ அதிகாரத்தைப் பயன்படுத்தி இந்தியக் குற்றவாளிகள் மீதான வழக்கைக் கொலைக் குற்றமாகாத மரணம் விளைவிக்கும் வழக்காக நடத்த வேண்டும்' எனக் கோரி மனு தாக்கல் செய்தனர். போபால் பெருநகர நீதிபதி உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு அரசியல் சாசனச் சட்டம் 142  ஆவது பிரிவின் கீழ் அறிவிக்கப்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டி, இம்மனுவைத் தள்ளுபடி செய்துவிட்டதோடு, விஷவாயு வழக்கு விசாரணையை உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு ஏற்றவாறே நடத்தி முடித்தார்.

அப்பொழுதே, தனது தீர்ப்பு கீழமை நீதிமன்றங்களின் விசாரணையைக் கட்டுப்படுத்தாது எனத்தெளிவுபடுத்த முன்வராத உச்ச நீதிமன்றம், தற்பொழுது இவ்வாதத்தை முன்வைப்பது அதனின் இரட்டை வேடத்தைத்தான் அம்பலப்படுத்திக் காட்டுகிறது. இந்தியக் குற்றவாளிகளுக்குக் குறைவான தண்டனை கிடைக்கக்கூடிய வகையில் வழக்கை மாற்றியமைத்து அளித்த தீர்ப்பைக் கைவிடவோ, மறுஆய்வுக்கு உட்படுத்தவோ மறுத்துவிட்ட உச்ச நீதி மன்றம், இந்த வாதத்தைத் தனது பொறுப்பைத் தட்டிக்கழிக்கும் உள்நோக்கத்தோடுதான் முன்வைத்திருக்கிறது.

உச்ச நீதிமன்றம், யூனியன் கார்பைடு மற்றும் அதனின் இந்தியக் கூட்டாளிகள் ஆகியோரின் கைக்கூலியாகத்தான் செயல்பட்டு வருகிறது என்பதற்கு, போபால் விஷவாயு படுகொலை வழக்கு தொடர்பாக அந்நீதிமன்றம் ஏற்கெனவே அளித்துள்ள பல தீர்ப்புகளே ஆதாரங்களாக உள்ளன. சி.பி.ஐ. காலதாமதமாக மறுசீராய்வு மனு தாக்கல் செய்ததைக் காரணமாகக் காட்டி, 1996இல் அளிக்கப்பட்ட அநீதியான தீர்ப்பை மறுஆய்வுக்கு உட்படுத்த மறுத்துள்ள உச்ச நீதிமன்றம், இதன் மூலம் விஷவாயுக் கசிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மீண்டும் அநீதி இழைத்திருக்கிறது என்பதே உண்மை.

• குப்பன்