மீசை வைச்ச ஜனாதிபதி ஜயா அவங்களே
வணக்கமுங்க
எங்கட வீட்டச் சுத்திக் குலைச்சுக் கொண்டிருந்த
நாயைக் காணலேங்கோ கண்டியளோ

அடுப்பங்கரையில வெக்கை தணியாத 
சாம்பலுக்குள்ள சோம்பிக்கிடந்த
பூனை, நாய்க்குப் பின்னாலே தான் போனதுங்கோ
காணலேங்கோ கண்டியளோ

நாங்க கூட்டுக்க அடைச்சு வளத்த ஆடுமாடு
கோழியளையும் காணலேங்கோ கண்டியளோ

பெத்த பிள்ளைய சண்டைக்கில்லைங்கோ ஆனா
சந்தைக்கு அனுப்பினனானுங்கோ காணலேங்கோ கண்டியளோ

நான் பெத்த பிள்ளை காணாம போனதால
தேடிப்போன என்ர அயல்வீட்டுப் பிள்ளையையும்
காணலேங்கோ கண்டியளோ

இருட்டுக்க நாங்க இன்னும் கிடக்கிறம்
வெளிச்சம் போடுறம் எண்டு
நெருப்பை கொட்டுறான்கள் 
வீணாப் போனவங்கள்.

சிங்களவன் தமிழன் எண்டு
சிண்டு முடிஞ்சவன்கள்
இப்ப உங்கட வேட்டிக்குள்ள
வீடு கட்டியிட்டாங்களாம்.

தெருத்தெருவா ஊர்வலமா எல்லாரையும்
எல்லாத்தையும் தேடி வருகிறம் நாங்க
உங்களத்தான கேட்கிறம்
நாங்களும் காணாமப் போவமே

அப்ப நீங்களும் ஒருநாள் 
காணாமல் போவியளோ
நீங்க காணாமப் போனா
யாரிட்ட போய் கண்டியளோயெண்டு கேட்க