தாராளமயத்தால் இந்தியா ஒளிர்வதாக ஆளும் வர்க்கங்களும் ஊடகங்களும் சித்தரித்துவரும் அதேவேளையில், அத்தாராளமயமாக்கம் இந்தியாவின் கிராமப்புறங்களில் அமைதியாக நரவேட்டையை நடத்திக் கொண்டிருக்கிறது. பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் கடன் சுமையால் தற்கொலை செய்து கொள்ளும் கொடுமை இன்னமும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இஸ்லாமிய பயங்கரவாதத்தால் கொல்லப்பட்ட "இந்தியர்'களின் எண்ணிக்கையை விட, சந்தை பயங்கரவாதத்தால் கொல்லப்பட்ட விவசாயிகளின் எண்ணிக்கை மிக அதிகம் என்பதைப் புள்ளிவிவரங்கள் நிரூபித்துக் காட்டுகின்றன.

 

 

ஆந்திராவிலும் மகாராஷ்டிராவிலும் நடந்துவரும் விவசாயிகள் தற்கொலை பற்றிய செய்திகள் அவ்வப்போது வெளிவந்துள்ளன. ஆனால் ஐந்து நதிகள் பாயும் வளமான பூமி, இந்தியாவின் கோதுமைக் களஞ்சியம், பசுமைப் புரட்சியால் பூத்துக் குலுங்கும் மாநிலம் என்றெல்லாம் சித்தரிக்கப்படும் பஞ்சாபிலும்கூட விவசாயிகளின் தற்கொலைகள் தொடர்கின்றன.

விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதைப் பற்றிக் கள ஆய்வு செய்த பஞ்சாப் வேளாண் பல்கலைக் கழகம், தனது ஆய்வறிக்கையை அண்மையில் பஞ்சாப் அரசிடம் சமர்ப்பித்துள்ளது. 2000 முதல் 2008 வரையிலான காலத்தில் பஞ்சாபின் பதிந்தா, சங்ரூர் மாவட்டங்களில் மட்டும் 2,990 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும், இவர்களில் கூலித் தொழிலாளர்கள் மட்டும் 1,133 பேர் என்றும் அந்த அறிக்கை அதிர்ச்சியூட்டும் உண்மைகளை வெளியிட்டுள்ளது.

கடந்த 2001ஆம் ஆண்டில் பதிந்தா மாவட்டத்திலுள்ள ஹர்கிஷன்புரா கிராமப் பஞ்சாயத்து, தங்கள் கிராமங்களை விற்பதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து மேலும் 5 கிராமப் பஞ்சாயத்துகள் தங்கள் கிராமங்களை விற்பதாக அறிவித்தன. இத்தகைய அறிவிப்புகள் வெளிவராத போதிலும், ஏறத்தாழ இத்தகைய நிலையில்தான் பெரும்பாலான கிராமங்கள் உள்ளன என்றும், கடந்த ஈராண்டாக சங்ரூர், பதிந்தா, பர்னாலா, மன்சா ஆகிய மாவட்டங்களில் கள ஆய்வு செய்ததில் விவசாய நெருக்கடியால் இலட்சக்கணக்கான விவசாயிகள் பரிதவிப்பதாகவும் அந்த அறிக்கை சுட்டிக் காட்டுகிறது.

கடந்த 2009 ஏப்ரல் 27 தேதியிட்ட இந்துஸ்தான் டைம்ஸ் நாளேடு வெளியிட்ட செய்தியின்படி, பதிந்தா மற்றும் சங்ரூர் மாவட்டங்களில் மட்டும் நாளொன்றுக்கு ஒரு விவசாயி வீதம் தற்கொலை செய்து கொண்டுள்ளார்கள். தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளில் விவசாய கூலித் தொழிலாளர்களின் எண்ணிக்கை ஏறத்தாழ 45 சதவீதமாக உள்ளது. அதாவது, தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகளில் ஏறத்தாழ பாதிப்பேர் கூலி விவசாயிகளாக உள்ளனர்.

சிறு துண்டு நிலம் வைத்துள்ள விவசாயிகள், விவசாய இடுபொருட்களின் செலவு அதிகரிப்பாலும், விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்காமலும் கடன்பட்டு, அக்கந்துவட்டிக் கடனை அடைக்க முடியாமல் தற்கொலை செய்து கொள்கிறார்கள். ஆனால், நிலமற்ற கூலி விவசாயிகளுக்கு அத்தகைய பிரச்சினைகள் இல்லாதபோது ஏன் தற்கொலை செய்து கொள்ள வேண்டும்? ஆந்திரா, மகாராஷ்டிராவை விட, பஞ்சா பில் மட்டும் விவசாயக் கூலித் தொழிலாளர்கள் அதிக அளவில் தற்கொலை செய்து  கொள்ளக் காரணம் என்ன?

பஞ்சாபில் 1970களில் திணிக்கப்பட்ட பசுமைப் புரட்சி பணக்கார விவசாயிகளுக்குத்தான் ஆதாயத்தைக் கொடுத்ததே தவிர, கூலி  ஏழை விவசாயிகளுக்கு அல்ல. பசுமைப் புரட்சியால் விவசாயத்தில் புகுத்தப்பட்ட நவீன எந்திரங்களின் விளைவாக, கூலி விவசாயிகளின் தேவை குறைந்தது. பஞ்சாபில் 1980களில் 25,000 ஆக இருந்த கதிரடிக்கும் எந்திரம், 1995இல் 3 இலட்சமாக அதிகரித்தது. இதனால் அறுவடைக் காலங்களில்கூட ஏறத்தாழ ஒரு வாரம் அல்லது 10 நாட்களுக்குத்தான் விவசாயத் தொழிலாளர்களுக்கு வேலை கிடைத்தது. வேலையின்மையால் கூலி விவசாயிகள் ஏழ்மைக்கும் பட்டினிக்கும் தள்ளப்பட்டனர். பசுமைப் புரட்சிக்குப் பின், நிலமற்ற கூலி விவசாயிகளின் வருவாய் கிராமப்புற பொருளாதாரத்தில் வெறும் 10 சதவீதமாகக் குறைந்தது. அதேசமயம், பணக்கார விவசாயிகளின் பங்கு 56 சதவீதமாக அதிகரித்தது. தற்போது தாராளமயமாக்கலின் விளைவாக, பெரும் பண்ணைகளாக விவசாய நிலங்கள் மாற்றப்பட்டு, நவீன எந்திரங்களைக் கொண்டு விவசாயம் செய்யப்படுவதால், விவசாயத் தொழிலாளர்களுக்கு வேலை கிடைப்பதென்பது குதிரைக் கொம்பாகி விட்டது.

பஞ்சாபில் ஏறத்தாழ 15 லட்சம் பேராக உள்ள பிற்பட்ட  தாழ்த்தப்பட்ட சாதியினரான நிலமற்ற கூலித் தொழிலாளர்கள், தமது வறுமையைப் போக்க சொந்தமாக கால்நடைகளையும் வளர்த்து வருகிறார்கள். விவசாய வேலை கிடைக்காத காலத்தில் ஆடு  மாடுகள் மூலம் கிடைக்கும் வருவாயைக் கொண்டுதான் அவர்கள் வாழ்க்கையை நடத்தி வருகின்றனர். ஆடுமாடுகளுக்கு மேய்ச்சலுக்கான வசதியும் வைக்கோலும் அவசியமானவை. ஆனால், இப்போது வைக்கோல் என்பதும் பெரும் வியாபாரப் பொருளாகிவிட்டது. அதன் விலையும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே போகிறது. இதனால் அறுவடை வேலைகளில் ஈடுபடும் கூலி விவசாயிகளுக்கு, பண்ணைகளை வைத்துள்ள பணக்கார விவசாயிகள் வைக்கோலை கூலியில் ஒரு பங்காகத் தருவதில்லை. இதனால் கூலி விவசாயிகள் வைக்கோலை வெளியில் அதிக விலைக்கு வாங்க வேண்டியிருப்பதால் கடனாளியாகின்றனர். கடன் சுமை அதிகரிப்பால் பல கூலி விவசாயிகள் இப்போது மாடுகளை விற்று விட்டனர்.

பஞ்சாபின் பாட்டியாலா பல்கலைக் கழக ஆய்வின்படி, ஏறத்தாழ 70 சதவீத கிராமப்புற கூலி விவசாயிகள் கடனாளிகளாக உள்ளனர். பண்ணையார்களும் கடைக்காரர்களும் அநியாய வட்டிக்குக் கடன் கொடுக்கின்றனர். வட்டியைக் கட்டுவதற்காக கூலி விவசாயிகள் தமது குடும்பத்தின் உணவு, மருத்துவம், துணிமணிகள் முதலானவற்றுக்கான செலவுகளைக் குறைத்துக் கொள்வது அதிகரித்து வருகிறது. சப்பாத்தியுடன் பருப்புக் குழம்பு சாப்பிடுவது நின்று போய், இப்போது வெறும் ஊறுகாய்தான் தொட்டுக் கொள்கிறோம் என்கிறார்கள், பல கூலி விவசாயிகள்.

 

பஞ்சாபின் 200910 பட்ஜெட்டின்படி, கிராமப்புற கடன் 35,000 கோடி ரூபாசூ என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அதாவது, கிராமத்தில் வாழும் ஒவ்வொரு விவசாயிக்கும் ஏறத்தாழ ரூ.20,000 கடன் உள்ளது. கடன்சுமை, வட்டிச் சுமை தாளாமல் கூலி விவசாயி தற்கொலை செய்து கொண்ட அவலத்துக்குப் பின்னர், அக்கடனை அடைக்க வழிதெரியாமல் அவரது விதவை மனைவியும் குழந்தைகளும் படாதபாடு படுகின்றனர். அக்குழந்தைகள் பள்ளிக்குச் செல்ல முடியாமல் பெரும் பண்ணைகளில் கொத்தடிமைகளாக்கப்படுகின்றனர். பாட்டியாலா பல்கலைக் கழகம் நடத்திய ஆய்வில் விவசாயத் தொழிலாளர்களில் 4 சதவீதம் பேர் குழந்தைகள் என்றும், 14 முதல் 20 வயது வரையிலான சிறுவர்களும் இளைஞர்களும் மொத்த விவசாயத் தொழிலாளர்களில் 37 சதவீதமாக உள்ளனர் என்றும் தெரிய வந்துள்ளது. கடந்த 2000 முதல் 2008 வரையிலான காலத்தில் சங்ரூர், பதிந்தா மாவட்டங்களில் மட்டும் 50க்கும் மேற்பட்ட கூலி விவசாய விதவைத் தாய்மார்கள் வாழ வழியின்றித் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

மறுபுறம், தீவிர எந்திர வகைப்பட்ட உற்பத்தியாலும், வரைமுறையின்றித் தண்ணீரை உறிஞ்சி, உரம் பூச்சிக் கொல்லி மருந்துகளைக் கொட்டி நிலத்தை அதீதமாகப் பயன்படுத்தியதாலும், பசுமைப் புரட்சியால் வளம் கொழிப்பதாகச் சித்தரிக்கப்பட்ட பஞ்சா பின் விளைநிலங்கள் இன்று மலடாகிவிட்டன. ஆழ்துளை கிணறுக்கான மோட்டார் மற்றும் உரம் - பூச்சி மருந்துகளின் விலை உயர்வு முதலானவற்றாலும் நிலம் மலடாகிவிட்டதாலும் விவசாயம் கட்டுபடியாகாமல் கடன்சுமை அதிகரித்து பஞ்சாபில் இன்று சிறு நடுத்தர விவசாயிகள் தங்களது டிராக்டர்களை விற்று வருகின்றனர். கார்ப்பரேட் விவசாயத்தை அரசே ஊக்குவித்து ஆதரிப்பதால், சிறு  நடுத்தர விவசாயிகள் தமது துண்டு நிலங்களைத் தக்கவைத்துக் கொள்ள முடியாமல் தத்தளிக்கின்றனர்.பெரும் பண்ணையாளர்களாக உள்ள நில மாபியாக்களும் மணல் மாபியாக்களும்தான் அரசியல் தலைவர்களாக உள்ளனர்.

மைய அரசு, மலடாகிவிட்ட நிலத்தை மீண்டும் வளப்படுத்த பெரும் பண்ணையாளர்களுக்கு கோடிக்கணக்கில் மானியமாகக் கொட்டி வருகிறது. இது தவிர, பெரும் பண்ணை விவசாயம், குளிர்பதனக் கிடங்கு, உணவுப் பொருட்களைப் பதப்படுத்தல் முதலானவற்றுக்கும் வரிச்சலுகைகளும் மானியங்களும் அளித்து வருகிறது. இவற்றால் கொழுத்த ஆதாயமடைந்து வரும் பெரும் பண்ணையாளர்கள், இப்போது பஞ்சாபின் நன்செய் நிலங்கள் மலடாகிவிட்டதால், கென்யா, எத்தியோப்பியா முதலான ஆப்பிரிக்க நாடுகளில் குத்தகைக்கு நிலங்களைக் கைப்பற்றி ஏற்றுமதி அடிப்படையிலான கார்ப்பரேட் விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அறுவடைக் காலங்களில் விழாக் கோலம் பூண்டிருக்கும் பஞ்சாப், இப்போது களையிழந்து நிற்கிறது. கடன் சுமை காரணமாக விவசாயத் தொழிலாளர்கள் இப்போது தனியாக திருமண விழாக்களை நடத்த முடிவதில்லை. சில அரசியல்வாதிகளும், அறக்கட்டளை அமைப்புகளும், வட்டிக்கடைக்காரர் சங்கங்களும் நடத்தும் 100 ஜோடிகளுக்கான திருமணம் போன்ற நிகழ்ச்சிகளில்தான் விவசாயக் கூலித் தொழிலாளர்கள் திருமணம் செய்ய முடிகிறது. முந்தைய தலைமுறையினர் கடன் சுமையில் சிக்கி வறுமையில் உழலும் அதேசமயம், புதிய தலைமுறையைச் சேர்ந்த இளைஞர்களான தாழ்த்தப்பட்ட விவசாயத் தொழிலாளர்கள் அருகிலுள்ள சிறு நகரங்களிலுள்ள சிற்றுண்டி விடுதிகளில் பணியாற்றுகின்றனர். சில இளைஞர்களும் பெண்களும் நாட்டுப்புற பாடகர்களாக உள்ளனர். சில இளம் பெண்கள் மேடையில் நடனமாடுபவர்களாக உள்ளனர். சிலர் மதுபான விடுதிகளில் சாராயம் ஊற்றித் தருபவராக வேலை செய்கின்றனர். பஞ்சாபில் தாராளமயமாக்கம் தோற்றுவித்த பயங்கரம் விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பிடுங்கி எறிந்து, அவர்களை நாடோடிகளாகவும் உதிரித் தொழிலாளிகளாகவும் வேலையற்றவர்களாகவும் தேவையற்றவர்களாகவும் மாற்றி வருகிறது.

இத்தகைய அவலங்களுக்கு நடுவிலும் பஞ்சாப் விவசாயிகள் உள்ளூரளவில் அவ்வப்போது போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இத்தகைய போராட்டங்கள் அண்மைக் காலமாக அதிகரித்து வருவதால், "பொது மற்றும் தனியார் சொத்துக்களுக்குப் பாதிப்பு ஏற்படுவதைத் தடுக்கும் சட்டம்2010' என்ற கருப்புச் சட்டத்தை இவ்வாண்டு ஜனவரியில் பஞ்சாப் அரசு இயற்றியுள்ளது. இதன்படி, மாவட்ட நீதித்துறை, போலீசு ஆணையரிடம் அனுமதி பெறாத ஆர்ப்பாட்டங்கள், பேரணிகள் முதலானவை தடை செய்யப்படும்; பேரணிகள்  ஆர்ப்பாட்டங்களில் பொதுச் சொத்தையோ தனியார் சொத்தையோ சேதப்படுத்தியதாக நிரூபணமானால் ஐந்தாண்டு சிறைத் தண்டனையும் ரூ.20,000 அபராதமும் விதிக்கப்படும் என்கிறது, பெரும் பண்ணையாளர்களின்  புதியவகை கார்ப்பரேட் பண்ணையாளர்களின் நலன்களைக் காப்பதற்கான இச்சட்டம்.

கிராமப்புறங்களில் நூறு நாள் வேலைத் திட்டத்தில் ஜேசிபி எந்திரத்தைப் பயன்படுத்தக் கூடாது என்று போராட்டம் நடத்திய கிராந்திகாரி பெண்டூ மஸ்தூர் சங்கம் எனும் தாழ்த்தப்பட்ட கூலி விவசாயிகள் சங்கத்தின் தலைவரான சஞ்சீவ் மிண்ட்டூ, மாவோயிஸ்டு தீவிரவாதி என்று குற்றம் சாட்டப்பட்டு இக்கொடிய சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டார். விவசாய சங்க முன்னணியாளர்களும் புரட்சிகர  ஜனநாயக இயக்கங்களைச் சேர்ந்தோரும் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

தாராளமயமாக்கலின் கீழ் இந்தியாவின் பாரம்பரிய விவசாயம் நாசமாக்கப்பட்டு தரகுப் பெருமுதலாளிகள், பன்னாட்டு விவசாயப் பெருந்தொழில் நிறுவனங்கள், பணக்கார விவசாயிகளின் நலன்களுக்கு ஏற்ப விவசாயம் மாற்றியமைக்கப்பட்டு வருவதையும், நாட்டின் வளர்ச்சி என்று சித்தரிக்கப்படும் இந்த மாற்றங்கள் விவசாயிகளை நரபலி கேட்பதோடு, அரசை சட்டிஸ்கர் பாணியில் பாசிச பயங்கரவாத அடக்குமுறைக் கருவியாக மாற்றியிருப்பதையும் பஞ்சாப் நிரூபித்துக் காட்டுகிறது.

மோகன்