ஸ்பெக்ட்ரம் ஊழல் கொள்ளை வெளியானதிலிருந்து கார்ப்பரேட் முதலாளிகளின் பகற்கொள்ளைக்கு எதிராக கடந்த ஜனவரியிலிருந்து பிரச்சார இயக்கத்தை நடத்தி வந்த ம.க.இ.க் வி.வி.மு, பு.மா.இ.மு, பு.ஜ.தொ.மு. ஆகிய புரட்சிகர அமைப்புகள், "இது கார்ப்பரேட் முதலாளிகளின் பகற்கொள்ளைக்கான ஜனநாயகம்! கார்ப்பரேட் கொள்ளைக்கு எதிராகக் கிளர்ந்தெழுவோம்! இக் கொள்ளையர்களின் சொத்துக்களைப் பறித்தெடுப்பதற்கான போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வோம்! ஓட்டுப் போடாதே! புரட்சி செய்!' என்ற முழக்கத்துடன் தேர்தல் புறக்கணிப்புப் பிரச்சாரத்தைத் தமிழகமெங்கும் வீச்சாக நடத்தின. இதையொட்டிப் பொதுக்கூட்டங்கள் நடத்தத் தமிழகமெங்கும் அனுமதி மறுத்து போலீசு அடாவடித்தனம் செய்த நிலையில், துண்டுப்பிரசுரம்  தெருமுனைக் கூட்டங்கள் மூலம் வீச்சானபிரச்சாரத்தை இவ்வமைப்புகள் நடத்தின.

 

 

"எங்கள் வேட்பாளர் பைரவன் கூப்பிட்ட குரலுக்கு ஓடிவருபவர், சொத்து சேர்க்கத் தெரியாதவர், ஆடம்பர சுகபோகங்களை நாடாதவர், அந்நியரை எதிர்த்துக் குரல் கொடுப்பவர்,

எட்டி உதைத்தாலும் காலை நக்கும் நன்றி விசுவாசமிக்கவர், நிற்க நேரமில்லாமல் ஊரெங்கும் சுற்றி வருபவர், கல்லடிக்கும் சொல்லடிக்கும் ஆளானவர்'  என்ற அறிவிப்போடு, இப்படிப்பட்ட உயர்ந்த வேட்பாளரான திருவாளர் நாய்க்கு வாக்கு சேகரிக்கும் தேர்தல் புறக்கணிப்புப் பிரச்சார இயக்கத்தை திருச்சி துவாக்குடி பகுதியில் 11.04.2011 அன்று இப்புரட்சிகர அமைப்பினர் மேற்கொண்டனர். பட்டாசுகள் அதிர, தாரைதப்பட்டைகள் முழங்க, பொன்னாடை போர்த்திய நாய் ஊர்வலமாக வர, ஆரவாரமாக நடந்த இந்த நூதனப் பிரச்சாரம் மக்களிடம் பெருத்த வரவேற்பைப் பெற்றது. ஓட்டுப் போடாதே என்று பிரச்சாரம் செய்ய அனுமதி மறுத்த போலீசு, நாய் வேட்பாளருக்கு ஓட்டுப் போடுங்கள் என்று பிரச்சாரம் செய்ததையும் தடுத்து, பெண்கள்  குழந்தைகள் உள்ளிட்டு 40க்கும் மேற்பட்டோரைக் கைது செய்து "ஜனநாயக'க் கடமையாற்றியது.

07.04.2011 அன்று திருவாரூரிலும் 10.04.2011 அன்று மணப்பாறையில் காலை முதல் மாலை வரை தொடர்ந்து ஆட்டோ மூலம் பிரச்சாரம் செய்து 15 இடங்களில் துண்டுப் பிரசுரங்களுடன் தெருமுனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டன.

சென்னை  செங்குன்றத்தில் "ஓட்டுப் போடாதே! புரட்சி செய்! கார்ப்பரேட் கொள்ளைக்கான தேர்தலைப் புறக்கணிப்போம்!' என்ற முழக்கத்துடன் இவ்வமைப்புகளின் சார்பில் 6.4.2011 அன்று பொதுக்கூட்டம் நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்ட பு.ஜ.தொ.மு. செயலர் தோழர் சுதேஷ் குமார் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் சிறப்புரையாற்றிய ம.க.இ.க. மாநில இணைச் செயலர் தோழர் காளியப்பன், இது கார்ப்பரேட் கொள்ளைக்கான ஜனநாயகம் என்பதையும், தமிழக மக்களைக் குடிகாரர்களாக்கி இலவசங்களை வாரியிறைக்கும் ஓட்டுக்கட்சிகளின் அயோக்கியத்தனத்தை அம்பலப்படுத்தியும், கார்ப்பரேட் முதலாளிகளின் பகற்கொள்ளையைச் சட்டமன்ற  நாடாளுமன்றத்தால் தடுத்து நிறுத்த முடியாது, புரட்சி ஒன்றே தீர்வு என்பதை விளக்கியும் உரையாற்றினார். கார்ப்பரேட் கொள்ளையை முறியடிக்க ஓட்டுப்பாதையைப் புறக்கணித்து புரட்சிப் பாதையில் அணிதிரள அறைகூவிய ம.க.இ.க. மையக் கலைக்குழுவின் புரட்சிகர கலைநிகழ்ச்சி பகுதிவாழ் மக்களிடம் பெருத்த வரவேற்பைப் பெற்றது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியில் தொடர்ந்து தேர்தல் புறக்கணிப்புப் பொதுக்கூட்டங்கள்  தெருமுனைக் கூட்டங்களுக்கு அனுமதி மறுத்து போலீசு அடாவடித்தனமாக நடந்து கொண்டதால், திட்டமிடப்பட்ட பொதுக்கூட்டங்களுக்குப் பதிலாக பெரிய அளவிலான தட்டிகளுடன் பறையடித்து கிராமங்கள் தோறும் வீதிவீதியாகப் பிரச்சாரத்தை வி.வி.மு.வினர் மேற்கொண்டனர். பு.ஜ. இதழில் வெளியான மன்மோகன் சிங்கை அமெரிக்க விசுவாச நாயாகச் சித்தரித்த அட்டைப் படத்தை பெரிதாக விளம்பரப்படுத்தி எடுத்துச் சென்றது, மக்களிடம் பெருத்த வரவேற்பைப் பெற்றது. ஏப்ரல் 5ஆம் தேதி முதல் தொடர்ந்து நான்கு நாட்கள் கிராமங்கள் தோறும் பிரச்சாரத்தை மேற்கொண்ட இவ்வமைப்பினர், அதன் தொடர்ச்சியாக, 9.4.2011 அன்று மாலை உசிலம்பட்டி பேருந்து நிலையம் அருகே பிரச்சாரம் செய்த போது, தடையை மீறி பிரச்சாரம் செய்வதாகக் குற்றம் சாட்டி அனைவரையும் போலீசு கைது செய்து, பின்னர் விடுவித்தது.

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் வட்டாரத்தில் 30க்கும் மேற்பட்ட வி.வி.மு. தோழர்கள் செஞ்சட்டையுடன் அணிஅணியாகக் கிராமங்கள் தோறும் சூறாவளி தெருமுனைப் பிரச்சாரத்தை மேற்கொண்டனர். இத்தெருமுனைப் பிரச்சாரங்களோடு, அதிகாலை நேரத்தில் கோடங்கி போல ஒருவர் வேடமிட்டுக் கொண்டு "கெட்டகாலம் பொறக்குது - இலவசங்களைக் கொடுத்து மக்களை ஏய்க்கிறான்; இவன் கொடுக்கும் இலவசம் நமது வரிப்பணம்; நமது வீட்டு ஆண்கள் டாஸ்மாக் கடையில் கொடுக்கும் பணம்; ஓட்டுப் போடாதே! கார்ப்பரேட் கொள்ளைக்கு எதிராகப் புரட்சி செய்!' என்று குடுகுடுப்பைக்காரன் சொல்வது போலப் பிரச்சாரம் செய்தனர். நவீன கோடங்கியை அதிசயமாகப் பார்த்த உழைக்கும் மக்கள், இந்த நூதனப் பிரச்சாரத்தை உற்சாகத்துடன் வரவேற்று ஆதரித்தனர்.