12_2005PK.jpgஒரு அரை நூற்றாண்டுகாலக் "குடியரசு ஆட்சி' மிகப் பெரும் தோல்வியை அவமானத்தை அடைந்து விட்டது, கடந்த நவம்பர் மாதம் தமிழகத்தைத் தாக்கிய பெருமழை பெருவெள்ளம். வெற்றி கொள்ளும் படை பகைவெறி அடங்காத ஆவேசத்துடன் ஆக்கிரமிப்பு நாட்டில் அனைத்தும் தழுவிய பேரழிவு விளைவிப்பது போலச் செய்துவிட்டது. பத்து மாதங்களுக்கு முன்பு தமிழகக் கடற்கரையைத் தாக்கிய ஆழிப்பேரலை (சுனாமி) ஆயிரக்கணக்கான உயிர்களையும், நூற்றுக்கணக்கான கடலோரக் கிராமங்களையும் காவு கொண்ட துயரத்தை நினைவுபடுத்துகிறது.

 

எல்லையில் பெரும்படை முற்றுகையிட்டு, மிரட்டிக் கொண்டிருக்கும்போதே விழித்துக் கொண்டு தகுந்த தயாரிப்புடனும் எச்சரிக்கையுடனும் எதிர்கொள்ளத் தவறிய ஆட்சியாளர்கள் வெட்கக்கேடான முறையில் எதிரியிடம் மண்டியிடுவதைப் போல சரணடைந்து விட்டார்கள். ""என்ன செய்வது? நவம்பர் மாதம் தமிழகத்தைத் தாக்கிய பெருமழை பெருவெள்ளம் யாரும் எதிர்பாராத இயற்கைச் சீற்றம் பேரழிவு'' என்று ஆள்வோரும் செய்தி ஊடகமும் சித்தரிக்கின்றன. தமிழகத்தை அடுத்துள்ள வங்கக் கடலில், உருவாகி நகர்ந்து வந்த புயல் சின்னங்கள் இத்தகைய மழை வெள்ளத்தைக் கொண்டு வரும் என்பது யாரும் எதிர்பாராததில்லை. நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கொட்டும் மழையால் ஏற்கெனவே கழுத்துவரை நிரம்பித் ததும்பும் அணைக்கட்டுகளும், ஏரிகளும் நேரம் குறித்து வைத்த வெடிகுண்டுகளைப் போன்று எப்போது வேண்டுமானாலும் வெடித்து உயிர்களையும் ஊர்களையும் காவு கொள்ளும் பேராபத்து விளைவிக்கக் கூடியவை என்பதும் யாரும் எதிர்பாராததில்லை.

 

காடுகரை, நீர்நிலைகள், சாலைகள் அனைத்தும் நாசமாகிப் போய்விட்டன. விளைநிலங்கள் மண்மேடுகளாகி விட்டன. கிராமங்கள் எலலாம் குட்டிச் சுவர்களாகக் காட்சியளிக்கின்றன. சுனாமியைப் போலவே இந்த மழை வெள்ளம் எவ்வளவு பேரை உயிர்ப் பலி கொண்டது, எவ்வளவு பேர் காணாமல் போனார்கள் என்று தெரியவில்லை. மாண்டவர்களைவிட உயிரோடு மீண்டிருப்பவர்களின் அன்றாட வாழ்வோ துயர வெள்ளத்தில் தத்தளிப்பதாக உள்ளது. உண்ண உணவில்லா விட்டாலும் அந்த வெள்ளக் காட்டில் பல நாட்களாகக் குடிப்பதற்கு நீரில்லை கழிவுநீரும் குடிநீரும் கலந்தே ஓடுகிறது. மானத்தைக் காத்துக் கொள்ள மாற்றுத் துணியின்றித் தவிக்கிறார்கள் தாய்மார்கள். தொழிலுக்கும் வாழ்வுக்கும் ஆதாரமான எல்லாவற்றையும் இழந்துவிட்டு, அரசாங்கம் போடும் சோற்றுப் பொட்டலங்களுக்காக சொந்த நாட்டிலேயே அகதிகளாகக் காத்துக் கிடக்கிறார்கள், இலட்சக்கணக்கான மக்கள்.

 

இப்பேரழிவுகளுக்கு மத்தியிலும் சில உண்மைகள் தூக்கலாகத் தெரிகின்றன. கடந்த அரை நூற்றாண்டு கால ஆட்சி, அதன் வளர்ச்சித் திட்டங்கள் எல்லாம் நகர்ப்புற நலன்களுக்காகவே செய்யப்பட்டிருக்கின்றன. கிராமப்புறங்களில் பெருநிலப் பிரபுகளுக்காகவும், நகர்ப்புறங்களில் பெரு முதலாளிகளுக்கும் அவர்களின் பங்காளிகளுக்காகவும்தான் செய்யப்பட்டிருக்கின்றன. கிராமப்புறங்களில் கூலிஏழை விவசாயிகள், நகர்ப்புறங்களில் உடல் உழைப்புத் தொழிலாளர்களின் தொழில் மற்றும் வாழ்வு முற்றிலும் புறக்கணிக்கப்பட்டிருக்கின்றன. கிராமப்புறங்களில் மழைவெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டவைகளில் பெரும்பாலானவை ஏழை எளிய மக்கள் வாழும் சேரிகள் குடிசைகள்தாம். நகரங்களில் மழைவெள்ளம் சூழ்ந்து நாசப்படுத்தியவையெல்லாம் ஏரிகள், ஆற்றங்கரைகளில் உள்ள குடிசைப்பகுதிகள் தாம். வெள்ளம் சூழ்ந்த ""பங்களா''க்கள், அடுக்குமாடி வீடுகளில் இருந்து நடுத்தர, மேட்டுக்குடி மக்கள், பாதுகாப்பான ""இரப்பர்'' படகுகளில் கூட வெளியேற மறுக்கிறார்கள். தாம் சேர்த்து வைத்த சொத்துசெல்வம் களவு போய்விடும் என்று அஞ்சுகிறார்கள். நகர்ப்புறக் குடிசை மக்களும்தான் வெளியேற மறுக்கிறார்கள். தாம் குடிசை போட்டிருக்கும் இடங்களில் இருந்து நிரந்தரமாகத் துரத்திவிட்டு, அந்த நிலத்தையும் பறித்துக் கொள்வார்கள் என்று இவர்கள் அஞ்சுகிறார்கள்.

 

இவ்வளவு துயரத்துக்கு மத்தியிலும், நமது மக்கள் நம்பிக்கை இழந்து விடாமல் பற்றிக் கொள்வதற்குச் சில ஆதார சக்திகள் இருக்கத்தான் செய்கின்றன. பல கிராமங்களில் நகரங்களில் தன்னெழுச்சியாக இளைஞர்கள் போற்றத்தக்க மீட்புப் பணிகளில் ஈடுபடுகின்றனர். ஏரிகள் உடைந்து, சென்னை புறநகரை வெள்ளம் சூழ்ந்தபோது, கோவளம் மீனவர் குடியிருப்பைச் சேர்ந்த மீனவர்கள் தமது படகுகளோடு வந்து ஆயிரக்கணக்கானோரை இரவு பகல் பாராது போராடி மீட்டுள்ளனர். சுனாமியின் போது மற்ற பிரிவினர் தமக்குச் செய்த உதவியை நினைவு கூறி பணமோ, உணவோ பெற்றுக் கொள்ள அவர்கள் மறுத்தனர். மக்களின் துயரத்தைக் காட்டி ஆதாயங்களைச் சுருட்டிக் கொள்ளுவதையே நோக்கமாக கொண்டு ஆட்சியாளர்கள் அலையும் இந்த நேரத்தில் உழைக்கும் மக்கள் காட்டும் இத்தகைய பாசமும் பணியும் போற்றி வளர்க்கத்தக்கவை.