அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநிலத்திலுள்ள சான்ஃபிரான்ஸிஸ்கோ நகருக்கு அருகே இயங்கி வந்த ட்ரைவேலி பல்கலைக்கழகம், அமெரிக்காவின் குடியுரிமைச் சட்டங்களை மீறியிருப்பதைக் கண்டுபிடித்த அமெரிக்க அரசு, அத்தனியார் பல்கலைக்கழகத்தை இழுத்து மூடிவிட்டது.  அப்பல் கலைக்கழகத்தில் படித்துவந்த 1,000க்கும் மேற்பட்ட இந்தியாவைச் சேர்ந்த மாணவர்கள் மீது அமெரிக்காவில் சட்டவிரோதமாகக் குடியேறியிருப்பதாகக் குற்றஞ்சுமத்தி, அமெரிக்கக் குடியேற்ற அதிகாரிகள் அவர்களை விசாரித்து வருகின்றனர்.

 

அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் சேர்ந்து படிக்கும் செலவை ஈடுகட்ட, படிக்கும் காலத்திலேயே மாணவர்கள் ஏதாவதொரு வேலை தேடிக்கொள்ளவேண்டும்.  அமெரிக்கக் குடியேற்றச் சட்டப்படி, அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் சேரும் வெளிநாட்டு மாணவர்களுக்கு உடனடியாக இந்த அனுமதி கிடைக்காது, வெளிநாட்டு மாணவர்கள், ஒரு வருடகாலப் படிப்பை முடித்த பிறகுதான் பல்கலைக்கழகங்கள் இந்த அனுமதியை மாணவர்களுக்கு வழங்க முடியும்.  இந்த விதியில்தான் ட்ரைவேலி பல்கலைக்கழகம் புகுந்து விளையாடிவிட்டது.  ""தமது பல்கலைக்கழகத்தில் சேரும் மாணவர்களுக்கு உடனடியாகவே வேலைக்கான அனுமதி வழங்கப்படும்; அதற்கேற்ப மாணவர்கள் தமது பல்கலைக்கழகத்தின் இணைய தள வகுப்புகளில்கூடச் சேர்ந்து கொள்ளலாம்' என அறிவித்தது, ட்ரைவேலி பல்கலைக்கழகம்.  இந்தச் சலுகையின் காரணமாகத்தான் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் இந்தப் பல்கலைக்கழகத்தில் மேல்படிப்புக்காகச் சேர்ந்தனர்.  பல மாணவர்கள், ஏற்கெனவே தாம் படித்துவந்த பல்கலைக்கழகத்திலிருந்து விலகி, இப்பல்கலைக்கழகத்திற்கு மாறிக்கொண்டனர்.

 

நியாயமாகப் பார்த்தால், இலட்சக்கணக்கான ரூபாய்களைக் கொட்டி இப்பல்கலைக்கழக்தில் சேர்ந்த மாணவர்களின் விசாவை ரத்து செய்யாமல், அம்மாணவர்கள் வேறு பல்கலைக்கழகங்களில் சேர அமெரிக்கா அனுமதி அளித்திருக்க வேண்டும். ஆனால், அமெரிக்க அரசோ,  இம்மாணவர்கள் அமெரிக்காவிலிருந்து தாமே வெளியேறிவிட வேண்டும்; அல்லது வெளியேற்றப்படுவார்கள் எனக் கூறி வருகிறது.  இதுவொருபுறமிருக்க, இம்மாணவர்களுள் நூற்றுக்கும் மேற்பட்டோரைச் சந்தேகத்துக்குரியவர்கள் என்ற பட்டியலில் வைத்து, அம்மாணவர்களின் நடமாட்டத்தைக் கண்காணிக்க, "ரேடியோ டாக்' என்ற மின்னணுக் கண்காணிப்புக் கருவியை, விலங்கு போல அம்மாணவர்களின் கணுக்காலில் மாட்டிவிட்டிருக்கிறது, அமெரிக்க அரசு.

 

குற்றம் நிரூபிக்கப்படாதவரைக் குற்றம் சுமத்தப்பட்டவர்களை நிரபராதிகளாகக் கருத வேண்டும் என்பதுதான் நாகரிக சமுதாயத்தின் நீதி பரிபாலன முறை. ஆனால், அமெரிக்க ஏகாதிபத்தியமோ இம்மாணவர்களைக் கொடிய குற்றவாளிகளைப் போலக் கண்காணிப்புக்கு உட்படுத்தி அவமானத்திற்கும் மன உளைச்சலுக்கும் ஆளாக்கியிருப்பதோடு, இந்த மனித உரிமை மீறலைப் பல விதங்களில் நியாயப்படுத்தியும் வருகிறது. "அம்மாணவர்கள் சிறைக்குச் செல்லுவதைவிட, கணுக்காலில் இந்தக் கண்காணிப்புக் கருவியைக் கட்டிக் கொள்வது சாதாரணமானது' என ஒருபுறம் திமிராகவும், இன்னொருபுறம், "அமெரிக்காவில் இதெல்லாம் நாகரிகமானதப்பா' என நையாண்டியாகவும் பதில் அளித்துள்ளனர், அமெரிக்க வெளியுறவுத் துறை அதிகாரிகள்.

 

ரேமண்ட் டேவிஸ் என்ற அமெரிக்கன், பாகிஸ்தானின் லாகூர் நகரில் பட்டப்பகலில் இரண்டு பாகிஸ்தானியர்களைச் சுட்டுக் கொன்றான். பாகிஸ்தான் நீதி

 

மன்றம் டேவிஸை விசாரிக்கக் கூடாது எனக் கூறிவரும் அமெரிக்கா, டேவிஸைத் தண்டனையில் இருந்து காப்பாற்றுவதற்காக தூதரக விதிகளையே வளைத்து வருகிறது.  ஏழை நாடுகளின் சட்டங்களைச் சிறிதளவுகூட மதிக்காத அமெரிக்கா, தனது நாட்டு சட்டங்களைச் சிறிதளவு மீறும் ஏழை நாட்டு மாணவர்களை மிருகங்களைப் போல நடத்துகிறது; சிறைக்கு அனுப்பத் துடிக்கிறது.

 

தீவிரவாதிகள் தனது நாட்டிற்குள் நுழைவதைத் தடுப்பது என்ற போர்வையில், தனது குடியேற்றச் சட்டங்களைக் கடுமையாக்கி, இத்தகைய அநாகரிகமான ஒடுக்குமுறைகள் அனைத்தையும் சட்டபூர்வமாக்கி வருகிறது, அமெரிக்கா.  இந்தியா உள்ளிட்டு ஆசிய கண்டத்தைச் சேர்ந்த பல ஏழை நாடுகளைச் சந்தேகப்பட்டியலில் வைத்துக் கண்காணித்து வரும் அமெரிக்கா, இந்நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவில் இறங்கியவுடனேயே சோதனை என்ற பெயரில் அவர்களை நிர்வாணமாக்கி அவமானப்படுத்தி வருகிறது.

 

இந்தியாவின் முன்னாள் அரசுத் தலைவர் அப்துல்கலாம், முன்னாள் இராணுவ அமைச்சர் ஜார்ஜ் பெர்ணாண்டஸ், இந்தியத் தூதரகத்தைச் சேர்ந்த பெண் அதிகாரி உள்ளிட்ட பல பிரபலமான இந்தியர்கள் அமெரிக்காவின் விமான நிலையங்களில் நிர்வாணப்படுத்தப்பட்டு அவமானப்படுத்தபட்டனர்.  ஆனாலும், இந்திய அரசு இந்த அவமதிப்பைப் பெருந்தன்மையோடு ஏற்றுக்கொள்ளவே செய்தது.

 

இந்திய மாணவர்கள் கிரிமினல்களைப் போலக் கண்காணிக்கப்படும் இப்பிரிச்சினையில்கூட, ஆரம்பத்தில் வீறாப்புப் பேசிய இந்திய அரசு, பின்னர் அடங்கிப் போனது. "அமெரிக்காவின் சட்டம் இத்தகைய கண்காணிப்பை அனுமதிக்கும்பொழுது, இந்திய அரசால் வேறெதுவும் செய்ய முடியாது' என இந்தக் காட்டுமிராண்டித்தனத்தை நியாயப்படுத்த முயன்றார், வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா.  அமெரிக்காவின் மனம் கோணாதபடி நடந்துகொண்டு, அதன் தயவில் வல்லரசாகிவிடவேண்டும் என்ற இலட்சியத்தைக் கொண்ட இந்திய அரசிடமிருந்து இந்த ஜால்ரா சத்தத்தைத் தவிர வேறெதையும் எதிர்பார்க்க முடியாது.

 

பட்டால்தான் புத்தி வரும் என்பார்கள்.  அமெரிக்க மோகத்திலும், இந்திய தேசியப் பெருமிதத்திலும் மூழ்கிக் கிடக்கும் இந்திய நடுத்தர வர்க்கம் இதன் பின்னராவது தெளிவடையுமா?

• திப்பு