புலிக்கு பின் புலம் பெயர் சமூகத்தில் புதிதாக பரிணாமம் பெற்று இருப்பது வதந்தியும் கொசிப்பும் தான். அந்த வகையில் அண்மையில் பாரிசில் ஆபாசத்துடன் கொசித்துப் பரப்பிய இரு கதைகள், அதன் உச்சத்தை எட்டியுள்ளது. தாங்கள் என்ன பேசிக்கொள்கின்றோம் என்பது பற்றிய எந்த சுயவிசாரணையுமின்றி கொசிப்பதும், அதை தொடர்ந்து இட்டுக்கட்டி பரப்புவதும், காது கொடுத்தே கேட்ட முடியாத ஆபாசத்தாலானது. தொலைபேசிகள் இதற்காகவே மணிக்கணக்காக சிணுங்குகின்றன. ஒரு செய்தி பலவாக, பலவிதத்தில் அறிவுக்கு புறம்பாக, பல முனையிலிருந்து வந்து சேருகின்றது. ஆண்களும் பெண்களும் பேசிக்கொள்ளும் விடையங்கள் இந்தளவுக்கு மலிவாக, ஆபாசம் நிறைந்த ஒன்றாக, அவதூறு பொழிவனவாக, காது கொடுத்து கேட்க முடியாதளவுக்கு வக்கிரம் கொண்டு வெளிப்படுகின்றது. இங்கு ஒன்றுக்கு ஒன்று முரண்பாடாக வருவது கூட கவலையின்றி, அதை கூட்டி அள்ளி புதிதாக அதை மேலும் புனைந்து பரப்புகின்றனர். இப்படித்தான் மனித உறவுகள், கதையாடல்கள், அங்குமிங்குமாக கதைகட்டியபடி தொடருகின்றது.

பாரிசில் 12 வயது சிறுமி ஒருவர் "தற்கொலை" செய்த விடையமும், பாரிசில் கடை வைத்திருக்கின்ற ஒருவர் பற்றிய "அவதூறுகளும்" சொல்லிமாளாது. இதுவே அண்மைய பாரிஸ் தமிழனின் பொழுதுபோக்காக, கொசிப்பு சார்ந்த அன்றாட வம்பாக இருந்தது. இவர்கள் இப்படி பேசியவை உண்மை என்றால், அவை பிரான்சில் பல வருடங்கள் சிறையில் இருக்குமளவுக்கு குற்றத்தன்மை கொண்டவை.

12 வயது குழந்தையின் "தற்கொலையை" அடுத்து, பொலிஸ் விசாரணையும் தொடர்ந்து நடந்து கொண்டு இருக்கின்றது. தாய் உட்பட அனைவரையும் பொலிஸ் விசாரணைக்கு உள்ளாக்கியுள்ளது. இதுபற்றி எந்த தகவலையும் சாராது, குற்றம் சாட்டுவதும், குற்றவாளியாக்குவதும், குற்றத்தை சோடிப்பதும், ஏன் தீர்ப்புக் கூறுவதும் மிகக் கேவலமானது. இதைச் சுற்றிய கொசிப்பும் வதந்தியும் கொடி கட்டிப்பறந்தது. அந்தக் குழந்தையை "கொன்று தூக்கியது" பற்றியும், தாயின் "பாலியல் நடத்தை" பற்றியெல்லாம், எத்தனை விதமாக முடியுமோ அத்தனை விதமான வக்கிரத்துடன் விதவிதமான ஆபாசக் கதைகள் எல்லாம் பரப்பி கொசிப்பது கேடுகெட்ட பொறுக்கித்தனத்தின் வெளிப்பாடாகும். இதற்கு எல்லாம் என்ன ஆதாரம்? சம்பவத்தின் பின் பொலிஸ் விசாரணை தான் என்ன? எப்படி குழந்தை இறந்தது என்பது பற்றி சட்டம் என்ன கருதுகின்றது? பிரஞ்சு பத்திரிகைகள் என்ன கூறுகின்றன? இவை பற்றி எதுவும் ஆராயாது அடிமுட்டாள்தனமான காட்டுமிராண்டிகளாக இட்டுக்கட்டி கதை பரப்பினர். பெண்ணின் தனிப்பட்ட நடத்தை பற்றி எல்லாம், கேடுகெட்ட தனமாக பாலியல் ஆபாசத்துடன் இட்டுக்கட்டிப் புனைந்தனர்.

இதுபோல் தான் மற்றைய சம்பவமும். தமிழ் மக்களின் வீடுகளில் தொடரும் கொள்ளையும், அங்கு கொள்ளையடித்த நகைகளை எல்லாம் ஒரு தமிழ் கடை முதலாளியிடம்; இருந்து பொலிசார் பிடித்ததாகவும், அவர் கைது செய்யப்பட்டதாகவும், கடை சீல் வைக்கப்பட்டதாகவும் வதந்தியைப் பரப்பினர். இப்படி பிடிபட்ட நகை பற்றி, சில கிலோவில் இருந்து பல நூறு கிலோ வரை பலவாக இட்டுக்கட்டி பலவிதமாக வதந்திகள் பரப்பப்பட்டது. இது பிரான்ஸ் பத்திரிகைகளில் வெளிவந்ததாக வேறு கதை. இந்தளவுக்கும் அந்த முதலாளி வழமை போல் தன் கடையை அன்றாடம் திறக்கின்றார். இந்த வதந்தியை அடுத்து, இந்த அவதூறுக்கு எதிராக விளம்பரம் கூட செய்கின்றார். வர்த்தக ரீதியாக போட்டி போட முடியாதவர்கள் இட்டுக்கட்டிய செய்திதான், இறுதியில் இப்படி பலவிதமாக மாறியதை குறிப்பிடுகின்றார்.

இங்கு இரண்டு வதந்தி சார்ந்த கதைகளும் உண்மையாக இருந்தால், பொலிசார் அவர்களை வெளியில் நடமாட அனுமதிக்க மாட்டார்கள். இரு விடையத்தில் பகுத்தறிவுடன் ஒரு மனிதனாக அணுக முடியாத எல்லைக்குள், இந்த மாதிரியான பலவிதமான கதைகள் ஏன் வருகின்றன என்று சுயவிசாரணை கூட செய்யாது கதை காவிச் செல்வதும், அதைக் கொசிப்பதும் பின்தங்கிய ஒரு சமூகத்தின் இழிவான பாத்திரத்தை எடுத்துக் காட்டுகின்றது.

இப்படி ஆதாரமற்ற கொசிப்புகளும், அவதூறுகளும், இட்டுக்கட்டல்களும் நாளை எந்தவொரு நபருக்கும், அவர்களை சுற்றிய ஒரு நிகழ்வின் போதும் இதுதான் அவர்கள் கதி என்பதை உணர்வதில்லை. உண்மைக்குப் புறம்பான, ஆதாரமற்ற, எந்த அடிப்படையுமற்ற ஆபாசங்கள் நிறைந்த கதைகளும், அதை காவிச் செல்லும் உங்களுக்கு நாளை ஒன்றென்றால், இந்த நிலையில் இருந்து நீங்களும் தப்பிவிட முடியாது.

சமூகத்தில் பேசிக்கொள்ள கூடிய விடையங்கள், புலிகள் இருந்த வரை பிரச்சனையாக இருக்கவில்லை. புலிகள் தம்மை புகழ்ந்து, வீங்கி வெம்பவைத்து பேசுவதை செய்ததுடன், அதை ஊக்குவித்தனர். தாம் அல்லாத அனைவரையும் தூற்றியும், தூற்ற வைத்தும் ரசித்தனர். இப்படி தம்மைப் பற்றி பெருமை பேசியபடி, கதைகட்டி, புலியின் ஒட்டூண்ணியாக பெருமை பேசி வாழ்ந்த சமூகம் புலியின் அழிவுடன், பேசிக்கொள்ள விடையங்கள் இன்றி மனக் புளுக்கத்துக்குள் தனிமையானார்கள்.

இதன் தொடர்ச்சியில் புதிய பரிணாமம் பெற்று வருவது இது போன்ற கொசிப்புகள் தான். (இதன் மற்றொரு புதிய பரிணாமமாக வருகின்ற ஊரின் பெயரில் சாதிக் கோயில் அதுவும் பிரான்சில் தான் - இதை நாம் தனியாக எழுத உள்ளோம்) தாங்கள் வாழும் நாட்டில் பத்திரிகைகள் முதல் சட்டம் நீதி போன்ற பல துறைகள் இருக்க, இதற்கு வெளியில் இட்டுக்கட்டி அள்ளியெறிந்த அவதூறல்கள் மூலம் தீர்ப்புகள் கூறுகின்ற பகுத்தறிவற்ற காட்டுமிராண்டிச் சமூகமாக தன்னை வெளிப்படுத்தி நிற்கின்றது.

உண்மையற்ற, நேர்மையற்ற, ஆதாரமற்ற, தீர விசாரிக்காத, ஏன் எதற்கு எப்படி எங்கே என்று மனிதனுக்கேயுரிய பகுத்தறிவுடன் அணுகாத, பகுத்தறிய முடியாத மிருகங்களாக மாறித்தான் இவை இட்டுக்கட்டப்பட்டபடி காவிச் செல்லப்படுகின்றது.

சுயசிந்தனை கொண்ட மனிதனாக, பகுத்தறிவுடன் ஆராய்ந்து பார்த்து, பகுத்தறிவுக்கு புறம்பானவற்றை எதிர்த்து போராடுவதன் மூலம் நான் முதலில் ஒரு மனிதனாகவும், மற்றவனை பகுத்தறிவுள்ள மனிதனாக இருக்கும்படியும் கோருவது தவிர்க்க முடியாது.

பி.இரயாகரன்

17.11.2011