சில நிறுவனங்களை தேசிய மயமாக்கும் மகிந்த அரசின் அறிவித்தல், தேசிய நலன் சார்ந்ததல்ல. தேசிய நலன் சார்ந்த எந்தத் திட்டமும், மக்கள் நலன் சார்ந்ததாக இருக்கவேண்டும். அதாவது தேசிய வர்க்கங்களின் நலன்களை முன்னிறுத்திய தேசிய கொள்கைகளை கொண்டிராத எவையும், தேசிய நலன் சார்ந்ததல்ல. இவை தேசத்துக்கும், மக்களுக்கும் எதிரான, ஆளும் போர்க்குற்ற கும்பலின் சொந்த நலனை அடிப்படையாகக் கொண்டது. இந்த வகையில் தான் மேற்கு எதிர்ப்பும், தேசிய மயமயமாக்கலும் இன்று அரங்கேறுகின்றது. அரசைச் சார்ந்து திடீர் பணக்காரராகிவிட்ட போர்க்குற்றக் கும்பல் தான், இதன் பின்னணியில் திட்டமிட்டு இயங்குகின்றது. நாட்டை எப்படி எந்த வழியில் சூறையாடுவது என்பதை, திட்டம் போட்டே செய்கின்றது. இதற்காகப் புதிய சட்டத்தைப் போடுகின்றது, அதைத் திருத்துகின்றது.

 

நட்டத்தில் இயங்குவதாகக் கூறி விற்றவர்கள், இன்று தேசியமயமாக்குவது அதை தமதாக்கத்தான். அதாவது புதுப்பணக்காரக் கும்பல், அதை தமதாக்க, நட்டத்தில் இயங்குவதாக கூறி தேசியமயமாக்குகின்றது. இப்படி நட்டத்தில் இயங்குவதாகக் கூறி தேசியமயமாக்கும் பின்னணியில், போர்க்குற்றக் கும்பல் இயங்குகின்றது. யுத்தத்தின் பின் உருவான திடீர் பணக்காரக் கும்பலின் கும்பல் ஆட்சிதான், மகிந்தாவின் தலைமையிலான ஆட்சியாகிவிட்டது.

இந்தத் திடீர் பணக்காரக் கும்பலின் பின் குவிந்துள்ள கள்ளப் பணம் பெருமளவில் புலிகளுடையது. குறிப்பாகப் புலம்பெயர்ந்த மக்களிடம் புலிகள் அறவிட்டது முதல் கொண்டு புலம்பெயர்ந்த உற்றார் உறவினர்கள் ஊடாக புலிகளின் மக்கள்விரோத கொள்கையால் புலிகள் சூறையாடிக் குவித்த பணம்.

இந்த வகையில்

1. யுத்தத்தின் மூலம் புலிகளிடமிருந்து பெற்ற கோடிக்கணக்காக பணமும், தங்கமும் யுத்தக்குற்றக் கும்பலிடம் குவிந்து கிடக்கின்றது. யுத்தத்தின் பின் அவை எதையும், போர்க்குற்றக் கும்பல் கணக்கில் இதுவரை கொண்டுவரவில்லை. நடந்தது. என்ன? புலிகள் பிரபாகரன் உள்ளிட்ட முக்கிய தலைமை தாம் மட்டும் தப்பிச் செல்லும்; ஒரு சர்வதேச சதித்திட்டத்தின் கீழ், சரணடந்தது. இதன்போது தம்முடன் எடுத்துச் செல்ல இருந்த பொருட்களில் பெருந்தொகையான பணமும், தங்கமும் அடங்கும். இப்படி அவர்கள் எடுத்துச் சென்ற பொருட்களில் பணம் அடங்கிய பார்சல்கள் அடங்கும். யுத்தத்தின் இறுதி நாள் காட்சிகள் வெளியாகிய போது, இதுவும் அதில் காட்சியாக வெளியாகியது. அந்த காட்சிகளை பின் அரசு அவசரமாக நீக்கியது. அதுபற்றி புலிகள் உள்ளிட யாரும் பேசவில்லை. அன்று வெளியாகிய ஒரு சில காட்சிகள் தான் இது. இதைவிட வேறு பல வெளியாகியது. (இதில் உள்ள வீடியோவில் ரமேஸ் மற்றும் இசைப்பிரியா பற்றியும் கூறப்படுகின்றது.)

 

 

 

இவை எதையும் அரசு இதுவரை தேசிய சொத்தாக்கவில்லை. இதை தமது சொத்தாக்கிய போர்க்குற்றக் கும்பல்தான், தேசியமயமாக்கல் பற்றி பேசுகின்றது.

புலிகளிடம் இப்படி அபகரித்த சொத்து பல ஆயிரம் கோடி பெறுமதியானது. யுத்தம் ஊடாக உழைப்பை இழந்த மக்கள், ஒரு நேரக் கஞ்சிக்காக தங்களிடம் எஞ்சிய நகைகளையும் புலிகளிடமே விற்றுத் தீர்த்தனர். முள்ளிவாய்க்காலின் இறுதிக்கணம் வரை மக்களின் தங்கத்தை புலிகள் மிக மலிவாக வாங்கிக் குவித்தனர். யுத்தத்தின் இறுதி நாளுக்கு முதல் நாள் கூட, ஒரு பவுனை 250 ரூபாவுக்கு புலிகள் வாங்கினர். இப்படி வாங்கிக் குவித்தவைதான், இன்று நாட்டை ஆளும் புதுப்பணக்கார போர்க்குற்றக் கும்பலை உருவாக்கியது. மறுதளத்தில் புலிகளிடம் புலம்பெயர்ந்த மக்களின் பணம் உட்பட பல வழிகளில் திரட்டிய பணம் குவிந்து இலங்கை நாணயம் உட்பட அன்னிய நாணயத்திலும் குவிந்து கிடந்தது. இப்படி இவை அனைத்தையும் போர்க்குற்றக் கும்பல் தனதாக்கியது.

2. மறுதளத்தில் யுத்தம் சார்ந்த கொள்ளையான வர்த்தகம் மூலமும், ஆயுதப் பேரங்கள் மூலமான மோசடிகள் மூலமும் கிடைத்த பணம், திடீர் பணக்காரக் கும்பலை உருவாக்கியது.

3. யுத்தத்தின் பின் யுத்தப் பிரதேசத்தை அங்குலம் அங்குலமாக சூறையாடிய கும்பலும், மீள் கட்டமைப்பு ஊடாக சூiறாடிய கும்பலும், திடீர் பணக்காரரானது.

4. கே.பி கைதும் அதைச் சுற்றிய நடவடிக்கைகள் மூலமும், புலிகளின் வெளிநாட்டுக் பணத்தின் ஒருபகுதி போர்க்குற்றக் கும்பலிடம் சென்றது.

5. அன்று சரணடைந்த முக்கிய புலி, புலி குடும்பத்தினர் மற்றும் புலி சார்ந்து வாழ்ந்த வர்த்தக புள்ளிகள் முதல் பிரமுகர்கள் கையில் இருந்த பெருந்தொகை தங்கமும், பணமும் யுத்த குற்றக் கும்பலால் சுருட்டப்பட்டது. இப்படி இதன் பின்னணியில் பலர் காணாமல் போய்விட்டார்கள்.

இப்படி புலிகளின் அழிவு, திடீர் பணக்காரக் கும்பலை உருவாக்கியது. யுத்தம் மற்றும் நாட்டின் சமூகப் பொருளாதாரத்தை சூறையாடிவரும் கும்பல், பணத்தைக் குவித்து வைத்துக் கொண்டு மேலும் பணம் சம்பாதிக்க திட்டம் போடுகின்றது. நாட்டின் சட்டபூர்வ சொத்துடமையை தனதாக்க, சதிகளில் இறங்குகின்றது. இதன் ஒரு அம்சம் தான், வடக்குகிழக்கு காணி உரிமையை உறுதிப்படுத்தக் கோருகின்றது. அங்கு யுத்தத்தின் விளைவால் உரிமை கோராத சொத்தை இனம் கண்டு, அபகரிக்க திட்டமிடுகின்றது. அதேநேரம் புலம்பெயர்ந்ததன் மூலம் அந்த நாட்டின் பிரஜாவுரிமை பெற்றவர்கள் சொத்துகளை, நாளை நாட்டுடமையாக்கி அதை அபகரிக்கும் திட்டம் உள்ளடங்க பல சதிகளை கொண்டது தான் இந்த தேசியமயமாக்கல் திட்டம்.

மாபியா மயமாகிவிட்ட அரச கட்டமைப்பு, சொத்துடமைகளை தமதாக்கும் சட்டங்களைக் கொண்டு வருகின்றது. குடும்ப ஆட்சி மூலம் மகிந்தாவினால் கட்டுப்படுத்தப்படும் ஆட்சி அமைப்பு, தன்னைத்தான் இராணுவமயமாக்கி வருகின்றது. தன் ஆட்சி அமைப்பை தேர்தல் ஜனநாயக வடிவில் தக்கவைக்கவும், தேர்தலை எப்படி வெல்வது என்பதில் கூட கிரிமினல்தனத்தை புகுத்தி வருகின்றது.

என்றுமில்லாத வண்ணம் இலங்கை மக்களை தேசிய வாதங்கள் மூலமும், தேசிய மயமாக்கல் மூலமும் ஏமாற்றி, தங்கள் மாபியாத்தனம் மூலம் கொழுக்கும் இராணுவ ஆட்சியை மெதுவாக நுட்பமாக புகுத்தி வருகின்றனர். லிபியாவில் கடாபி செய்தது போல், நாளை மக்களுக்கு கூடுதலாக சில எலும்புகளை வீசி மக்களை முட்டாளாக்கவும் தயங்காத, கிரிமினல் மயமான போர்க்குற்றக் கும்பல் தான் நாட்டை ஆளுகின்றது.

இந்த தேசியமயமாக்கலையும், மேற்கு எதிர்ப்பையும், "தேசிய பொருளாதாரம்", "ஏகாதிபத்திய எதிர்ப்பு" என்று கூறும் நிலையில், புலியெதிர்ப்பு "இடதுசாரிய" பொறுக்கிகள் தங்கள் அரசியலை பொங்கி வருகின்றனர். இந்த அரசு வெறும் வன்முறை மூலம் மட்டும் தன்னை தக்கவைக்க முனையவில்லை, இது போன்ற கருத்தியல்; மூலம் கூட தன்னை தூக்கி முன்னிறுத்தி நிற்கின்றது.

 

பி.இரயாகரன்

06.11.2011