பிரிந்து செல்லும் உரிமையை அடிப்படையாகக் கொண்ட சுயநிர்ணயம், பிரிவினைக்கும், பிரிவினைவாத மறுப்புக்கும் எதிரானது. இங்கு பிரிந்து செல்லும் உரிமையில்லாத சுயநிர்ணயம் என்பது, சுயநிர்ணயமேயல்ல. இங்கு பூர்சுவா வர்க்கம் முன்வைக்கும் பிரிவினையை, பிரிந்து செல்லும் உரிமையாக சுயநிர்ணயம் விளக்கவில்லை. அதேபோல் பிரிவினையை மறுக்கும் பூர்சுவா வர்க்கத்திற்கு எதிராக, பிரிந்து செல்லும் உரிமையை முன்வைக்கின்றது. இதைத் தாண்டி சுயநிர்ணயத்துக்கு வேறு அரசியல் விளக்கம் கொடுக்க முடியாது. சுயநிர்ணயம் பிரிவினையுமல்ல, பிரிவினையை மறுக்கும் கோட்பாடுமல்ல. இலங்கைமார்க்சியவாதிகளோ இதைப் புரிந்து கொள்வதில் தொடர்ந்து தவறிழைத்து வருகின்றனர். இதுதான் எம்மைச் சுற்றிய அவலங்களுக்கு காரணம்.

 

 

 

குறிப்பாக காலனிக்கு பிந்தைய பேரினவாத வரலாற்றுக் காலகட்டம் முழுக்க, இலங்கையின் இனமுரண்பாட்டை ஆணையில் வைத்து பிரி;த்தாளும் அரசியலை ஆளும் வர்க்கம் கையாண்டு வருகின்றது. இதை எதிர்கொண்டு போராடும் வர்க்க அரசியலை, இன்றுவரை சரியாக மார்க்சியவழியில் யாரும் முன்னிறுத்தவில்லை. தொடர்ச்சியான இந்த வரலாற்றுத் தவறு சுயநிர்ணயத்தை சரியாக புரிந்து முன்னிறுத்தத் தவறியதுடன், இதைத் தவறாகத் தொடர்ந்து வியாக்கியானம் செய்தனர். சுயநிர்ணயத்தை பிரிவினைவாதமாகவும், பிரிவினை மறுப்பு கோட்பாடாகவும் விளக்கியதன் மூலம், சுயநிர்ணயத்தை தங்கள் வர்க்க அரசியலில் இருந்து அரசியல் நீக்கம் செய்தனர். இதன் மூலம் ஆளும் வர்க்கம் முன்வைத்த பிரித்தாளும் இன முரண்பாட்டு அரசியலில் இருந்து, தம்மை அரசியல்ரீதியாக விலத்திக் கொண்டனர். சுயநிர்ணயத்தை பிரிவினைவாதமாகவும், பிரிவினை எதிர்ப்புவாதமாகவும் புரிந்து விளக்கியதன் விளைவு இது. பரந்துபட்ட மக்கள் இதற்குள் முடக்கப்பட்டனர். இப்படி இலங்கையில் தொடர்ச்சியான முழு அரசியல் நிகழ்ச்சிப் போக்கும், சுயநிர்ணயத்தை மறுக்கும் அரசியல் எல்லைக்குள் தான் தீர்மானிக்கப்பட்டது. இனமுரண்பாட்டை முன்தள்ளி பிரித்தாளும் ஆளும் வர்க்க கோட்பாட்டின் எல்லைக்குள், மார்க்சியவாதிகள் பிரிவினையை ஆதரிக்கும் போக்குடனும், பிரிவினையை மறுக்கும் போக்குடனுமாக தம்மைக் குறுக்கிக் கொண்டு அரசியல் ரீதியாக வளாதிருந்தனர். பிரிந்து செல்;லும் உரிமையுடன் கூடிய சுயநிர்ணயத்தை ஆணையில் வைக்கத் தவறுவதுதான், இலங்கையின் மார்க்சிய வரலாறு.

பிரிந்து செல்லும் சுயநிர்ணய உரிமையை மறுக்கும் பின்னணியில், இரண்டு அரசியல் விலகல்களைக் கொண்டு பொதுவாக இன்று வரை திசை திருப்பப்படுகின்றது.

1. சுயநிர்ணயம் என்பது பிரிந்து செல்லும் உரிமையைக் கொண்டதல்ல என்ற வாதங்களும், நடைமுறைகளும்.

2. சுயநிர்ணயம் என்பதை பிரிந்து செல்லும் உரிமையல்ல, அது பிரிவினைதான் என்று காட்டும் வாதங்களுள், நடைமுறைகளும்

இவ்விரண்டும் பேரினவாதத்துக்கும், குறுந்தேசியவாதத்துக்கும் உதவுகின்றது. இது மார்க்சியத்தின் பெயரில் வரும் போது, பூர்சுவா வர்க்கத்துக்கு அரசியல் ரீதியாக உதவும் கோட்பாடாக மாறி, செயலற்றதனத்துக்குள் பாட்டாளி வர்க்கத்தை தள்ளி விடுகின்றோம். இது தான் எம்மைச் சுற்றிய கடந்தகால வரலாறு.

மார்க்சியம் பூர்சுவா வர்க்கத்தின் பிரிவினைக்கு எதிராக, பிரிந்து செல்லும் உரிமையை உள்ளடக்கிய சுயநிர்ணயத்தை முன்வைக்கின்றது. இரண்டும் ஒன்றல்ல. ஒன்றுக்கு ஒன்று எதிரானது. இதைப் புரிந்து உள்வாங்காத வரை, சுயநிர்ணயத்தை விளங்கி விளக்க முடியாது. பிரிவினையோ பூர்சுவா வர்க்கத்தின் அரசியலாக இருக்க, இதற்கு நேர் எதிராக பிரிந்து செல்லும் உரிமையுடன் கூடிய சுயநிர்ணயம் பாட்டாளி வர்க்கத்தின் அரசியலாக இருக்கின்றது. இதை மறுத்து இரண்டையும் ஒன்றாகக் காட்டுவது அரசியல் திரிபு. இதை மறுத்து இதுவல்ல என்று காட்டுவது மற்றொரு திரிபுமாகும்.

இந்த அடிப்படையில்

1. சுயநிர்ணயம் என்றால் பிரிவினை தான் என்ற இனவொடுக்குமுறைக்கு எதிரான பூர்சுவா வர்க்கத்தின் வாதத்தை மார்க்சியத்தின் பெயரில் முன்வைப்பதும்

2. பிரிவினைக்கு எதிரான சுயநிர்ணயத்தை பிரிந்து செல்லும் உரிமையல்ல என்ற ஒடுக்கும் பூர்சுவா வர்க்கத்தின் வாதத்தை முன்வைப்பது, மார்க்சியத்தின் பெயரிலான மற்றொரு அரசியலாக இருக்கின்றது.

இது சுயநிர்ணயத்தின் உள்ளார்ந்த அரசியல் அடிப்படையை அரித்து விடுகின்றது. இது இனங்களைப் பிரித்தாளும் ஆளும் வர்க்கக் கோட்பாட்டை தாண்டி எதையும் வழிகாட்டமுடியாது போய்விடுகின்றது. இலங்கையில் மார்க்சியத்தின் பெயரில் இயங்கிய அனைத்துப்பிரிவினரும் இதற்குள் தான் பலியானார்கள். பூர்சுவா வர்க்கம் முன்வைக்கும் பிரிவினை மற்றும் பிரிவினைக்கு எதிரான, பிரிந்து செல்லும் உரிமையுடன் கூடிய சுயநிர்ணயத்தைத்தான் மார்க்சியம் முன்வைக்கின்றது. வர்க்க சக்திகள் இதை புரிந்து ஏற்றுக் கொள்வதில் இருந்துதான், மார்க்சியத்தை சரியாக இனப்பிரச்சனையில் நடைமுறைப்படுத்த முடியும்.

தொடரும் ....

07.09.2011