"கடாபி ஏகாதிபத்தியத்தின் கைக்கூலியா?" என்று கேட்டு, அதை மறுத்து இலக்கியா எழுதியுள்ளது, அரசியல்ரீதியான கல்வியின் அவசியத்தை பரந்தளவில் முன்னிறுத்தி இருக்கின்றது. வலதுசாரியமல்லாத பொது அரசியல் தளத்தில் இந்த அரசியலே உள்ளதும், கடாபியை தேசியவாதியாக, ஏகாதிபத்திய எதிர்ப்புவாதியாக, மக்கள் நலம் சார்ந்த ஏதோ ஒருவராக காட்டப்படும் விம்பங்கள் முதல் அதை ஒட்டிய அரசியல் கோட்பாடுகள் மீதான விவாதத்தை இது கோருகின்றது. நான் இதையொட்டி இரண்டு கட்டுரைகளை முன்பே எழுயிருந்தேன்.

 

1. லிபியா சர்வாதிகாரியும், ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பாளர்களும்

2. கடாபி என்றும் எப்போதும் ஏகாதிபத்திய கைக்கூலியே ஒழிய, ஏகாதிபத்திய எதிர்ப்பாளன் அல்ல.

 

 

 

அமெரிக்கத் தலைமையிலான மேற்கு ஏகாதிபத்தியம் தொடர்ச்சியாக லிபியாவின் மீது கையாண்ட கொள்கையையும், லிபியாவின் எதிர்வினையையும் அளவீடாகக்கொண்ட மதிப்பீடுகளை, "ஏகாதிபத்திய எதிர்ப்பாக" "தேசிய நலனாக" காட்டி வரையறுப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்தியத்துக்கு எதிரான லிபியாவின் போராட்டம், கடாபி தலைமையிலான லிபியாவின் ஏகாதிபத்திய எதிர்ப்பு போராட்டமல்ல. இப்படி இருக்க கடாபியை "தேசியவாதியாக", "ஏகாதிபத்திய எதிர்ப்புவாதியாக" "சமூகநலவாதியாக" முன்னிறுத்திக் காட்டிய இடதுசாரிய பொது அரசியல் தளம் மீதான விமர்சனத்தை (இப்படி நூற்றுக்கணக்கான கட்டுரைகள்), எனது இரண்டாவது கட்டுரை மூலம் அம்பலமாக்க முற்பட்டேன். பொதுவான இந்த இடதுசாரிய அரசியல் மாயை மீது நான் எதிர்வினையாற்றி எழுதியதே கட்டுரை. ஆனால் துரதிஸ்டவசமாக இலக்கியா தனக்கான எதிர்வினையாக அதைச் சுருக்கிக் கொண்டதுடன், அதை தனது கருத்துக்கும் பொருத்திக் கொண்டு எதிர்வினையாற்றிய போதுதான், இது விரிந்த விவாதம் ஊடான அரசியல் கல்வியின் அவசியத்தை உணர்த்துகின்றது. அடிப்படையான மார்க்சிய அரசியலை கைவிட்டு, ஒப்பீட்டு அரசியல் உள்ளடக்கத்தில் கடாபி பற்றிய விம்பங்கள், இடதுசாரிய கண்ணோட்டமாக பரந்த தளத்தில் முன்வைக்கப்பட்டு வருவது, மார்க்சியத்திற்கு எதிரான அரசியல் அடித்தளத்தைக் கொண்டுள்ளது.

இந்த நிலையில் இலக்கியாவின் கட்டுரை மீதான நேரடியான தர்க்கம் மூலம், அதை தவறு என்று நிறுவுவது இலகுவானது தான். இது இலக்கியாவின் பார்வை தொடர்பான பிரச்சனையல்ல. பொதுவாக வர்க்கக் கண்ணோட்டம் கடந்த இடதுசாரிய அரசியல் விமர்சனம் மீதான உலகப்பார்வையாக இது இருப்பதால், அதன் மீதான விமர்சனமும், கல்வியும் அவசியமானதாக உள்ளது. பொதுவான அரசியல் கல்வி மூலம், இதையொட்டிக் கற்றல் மூலமான விவாதம் ஒன்றுக்கான அவசியம் உள்ளது உணரப்படுகின்றது.

இதற்கு அமைவாக இதை ஒட்டிய கேள்விகள் இங்கு எழுப்பப்படுகின்றது. சுயமாக சிந்திக்க, அதையொட்டிய ஒரு சுயதேடுதலுக்கு இது உதவும். இலக்கியாவின் கட்டுரை இந்த விவாதத்தை கோரியதால் அதை படிக்காதவர்கள், அதை முழுமையாக பார்க்க பின் இணைப்பைப் பார்க்கவும்.

கேள்விகள்

1. ஏகாதிபத்திய சகாப்தத்தில், ஏகாதிபத்தியத்துக்கு வெளியில் சுதந்திரமாக நாடுகள் இருக்க முடியுமா?

2. ஏகாதிபத்தியத்துக்கு வெளியில் சுதந்திரமாக இருக்க முடியும் என்றால், எந்த நிபந்தனையின் கீழ் அது சாத்தியம்?

3. 1917ம் ஆண்டு சோவியத் புரட்சியின் பின் ஜனநாயகப் புரட்சி, தேசிய முதலாளித்துவத்தின் தலைமையின் கீழ் நடக்க முடியாது என்ற மார்க்சியத்தின் அடிப்படையான கோட்பாடு தவறாகி விட்டதா? கடாபி அதற்கு விதிவிலக்கா!?

4. பாட்டாளிவர்க்க தலைமையில் தான் ஜனநாயகப் புரட்சி கூட, புதிய ஜனநாயகப் புரட்சியாக நடக்க முடியும் என்ற மார்க்சிய வரையறை தவறானதா? மூன்றாம் உலக நாடுகளின் ஏகாதிபத்திய எதிர்ப்பு போராட்டம், புதிய ஜனநாயகப் புரட்சிக்கு வெளியில் நடக்க முடியுமா? வலதுசாரிய "தேசியவாதி"கள் ஏகாதிபத்திய எதிர்ப்பு போராட்டத்தை நடத்த முடியுமா? வலதுசாரிகளின் "தேசியம்" தேசியமா?

6. தேசியப் பொருளாதாரம் என்றால் என்ன? அது எந்த வடிவில், எந்த நிபந்தனையின் கீழ், எந்த வர்க்கம் சார்ந்து இருக்க முடியும்? போராட முடியும்?

7. அரச பொருளாதாரம், தேசியப் பொருளாதாரமா?

8. தேசியமயமாக்கல் என்பது தேசியப் பொருளாதாரம் சார்ந்ததா?

9. அரசு முன்னெடுக்கும் சமூக நலத்திட்டங்கள், மக்கள் நலத்திட்டங்களா?

10. ஆளும் வர்க்கங்களும் ஆட்சியாளர்களும் மக்களுக்கு போடும் எலும்பின் எண்ணிக்கையை ஒப்பிட்டும், அதிக எலும்பைப் போடுவதைக் காட்டியும் அதை மக்கள் சாhந்த ஒன்றாக காட்ட முடியுமா? எலும்பு மக்கள் நலன் சார்ந்துதான் போடப்படுகின்றதா?

11. ஏகாதிபத்திய முரண்பாடு கொண்ட உலக அமைப்பில், ஒன்று அல்லது ஒரு முகாமுக்கு எதிரான செயல்பாட்டை ஏகாதிபத்திய எதிர்ப்பு அரசியலாகக் காட்ட முடியுமா?

12. முதலாளித்தும் என்றால் இதுதான், இதைத்தான் செய்யும் என்று கூறி அதை விமர்சிக்காது நாம் நியாயப்பபடுத்தி பாதுகாக்க முடியுமா? அதை எதிர்ப்பதுதான் பாட்டாளிவர்க்க அரசியல், இல்லையா?

13.ஏகாதிபத்திய சகாப்தத்தில் ஏகாதிபத்தியதுடனான "சந்தர்ப்பவாத" கூட்டு ஏகாதிபத்திய நிகழ்ச்சி நிரலுக்கு அப்பாற்பட்டதா?

14. நாடுகளுக்கு இடையிலான உறவுகள், ஏகாதிபத்தியம் கடந்த வர்க்கம் கடந்த, ஒன்றா?

15. பாராளுமன்ற வடிவங்கள் மூலம் ஆட்சியைக் கைப்பற்றிய, ஏகாதிபத்திய எதிர்ப்பு மக்கள் அரசுகளை நிறுவமுடியுமா?

16. சர்வாதிகாரிகள், தனிமனிதர்கள், ஏகாதிபத்தியத்தை எதிர்த்து சதிகள் மூலம் 'தேசிய' புரட்சியை "ஏகாதிபத்திய எதிர்ப்பு" புரட்சியை நடத்த முடியுமா?

17. அன்னிய உதவிகள், அன்னிய தலையீடுகள் மக்கள் நலன் சார்ந்ததா?

18. ஏகாதிபத்திய சகாப்தத்தில், ஏகாதிபத்தியத்தை எதிர்த்த தேசிய முதலாளித்துவ புரட்சியையா கடாபி நடத்தினார்? எதை அவர் பிரதிபலித்தார்? எப்படிப் பிரதிபலித்தார்? அவர் சர்வதேச ஒழுங்கில் யார்? எந்த வர்க்கத்தை சார்ந்து நின்றார்?

19. மற்றைய வலதுசாரிய அரபு உலக சர்வாதிகார தலைவர்களில் இருந்து கடாபி வேறுபட்டவர் என்பதால், அரசியல் மாறிவிடுமா? நல்லவர்கள், வல்லவர்கள், திறமைசாலிகள்.. உலக ஒழுங்கு கடந்த அரசியல் மூலம் மதிப்பிட வேண்டுமா?

20. "வலது தேசியவாதி' உலக ஒழுங்கில் ஏகாதிபத்தியத்தைச் சாராது இருக்கவும், இயங்கவும் முடியுமா?

21. வர்க்க சமுதாயத்தில் வர்க்கத்தைக் கடந்து ஒன்றை விளக்க முடியுமா?

22."அரசியலில் இருந்து தான் நாம் அவரை வரையறை செய்ய முடியும்" என்றால் கடாபியின் அரசியல் என்ன? அவரின் நோக்கம்; என்ன?

23. "ஒரு முதலாளித்துவ அரசியல்வாதி, ஒரு சமூக ஏகாதிபத்தியத்தின் உதவியை நாடுவது எந்தக் கோட்பாட்டு ரீதியாகவும் தவறென்று நிறுவ முடியாது." என்று கூறுவது சரியா? எதற்காக? அப்படியாயின் இது தவறேயல்ல அல்லவா? சரி அப்படியாயின் உலகில் எதுதான் தவறு? இதன் அடிப்படையில் இதை விமர்சிக்க முடியாது அல்வா?

24. கடாபியின் சர்வாதிகார ஆட்சியை, யாரைச் சார்ந்து நிறுவினார்? உலக ஒழுங்கில் எதன் பின்னணியில் இது சாத்தியமானது?

25. ருசிய ஏகாதிபத்தியத்தின் தேவையுடன் தான் கடாபியின் வரலாறு உருவானது என்பது வரலாற்றுப் புரட்டா?

26. முதலாளித்துவ அரசியல்வாதியின் எந்தச் செயலையும் தவறாக நிறுவ முடியாது என்றால், புலிகள் முதல் மற்றைய இயக்கங்கள் வரை இந்திய கூலிப்படையாக பயிற்சி பெற்றது தவறல்ல அல்லவா? புலிகள் முதல் கூட்டணி வரை இன்று அமெரிக்க ஏகாதிபத்தியத்தை நாடுவது கோட்பாட்டு ரீதியாக தவறேயல்ல அல்லவா? மகிந்த சீனாவை, இந்தியாவை நாடுவது தவறானது அல்ல அவ்வவா? இதை அமெரிக்கா இந்தியா கைக்கூலியாக கூறுவது வரலாற்றுப் புரட்டா? புலி இந்தியா மற்றும் அமெரிக்கவுடனான கூட்டு "சந்தர்ப்பவாதக்" கூட்டா?

27."கடாபி சோவியத் யூனியனின் தேவையை பூர்த்தி செய்யும் ஒரு சந்தர்ப்பவாத கூட்டு" என்பது ஏகாதிபத்தியத்தைக் கடந்ததா? லிபிய சர்வாதிகார கொடுங்கோன்மையைக் கடந்ததா?

28."சந்தர்ப்பவாதம்" என்பது அரசியலற்றதா? எடுபிடி அரசியலுக்கு அப்பாற்றபட்ட ஒன்றா?

29. ஏகாதிபத்தியத்துடன் தொடர்பை, ஏகாதிபத்திய கைக்கூலியாக வரையறுக்க முடியுமா? ஏகாதிபத்திய சார்பு நாடுகளை ஏகாதிபத்திய கைக்கூலியாக வரையறுக்க முடியுமா? முடியாது என்றால், அந்த நாடுகள் இந்த ஏகாதிபத்திய சமூக அமைப்பில் என்னவாக இருக்கின்றது? முடியும் என்றால் இதை புரிந்து கொள்வது எப்படி?

30. "சோவியத் யூனியன் ஒரு சமூக ஏகாதிபத்தியமாக மாறியதன் பின்னர், சர்வதேச அளவில் தேசிய விடுதலைக்காக போராடிய பல நாடுகளுக்கு உதவி உள்ளது." இந்த வரையறை சரியானதா? "சமுக ஏகாதிபத்தியத்தின் உதவியோடு விடுதலை அடைந்துள்ளன." என்பதும், "விடுதலை அடைந்ததும்" என்பதும் சரியானதா? ஏன் உதவியது? இதன் அரசியல் விளைவு என்ன? சரி இந்தியா இயக்கத்துக்கு உதவியதா? அமெரிக்கா கடாபிக்கு எதிரான சக்திகளுக்கு உதவியதா? இது "விடுதலை"யில்லையா?

31. கியூபா விவகாரத்தில் "அமெரிக்காவோடு நடத்திய பேச்சுவார்த்தையில் கியூபாவை நேரடியாக பங்கு பெற செய்திருக்க வேண்டும். மற்றும் ஏவுகணையை கியூபாவில் இருந்து அகற்றி இருக்கக் கூடாது என்று மாத்திரமே விமர்சித்தாரே தவிர, நீங்கள் சமுக ஏகாதிபத்தியம் உங்கள் உதவி கியூபாவுக்கு கூடாது என்று விமர்சிக்கவில்லை." இதன் அடிப்படையில்தான் சீனா அணுகியதா?

32."இரண்டாவது உலகயுத்தத்தை கையாள ஸ்டாலின் போய் ஹிட்லருடன் ஒப்பந்தம் செய்தது, நடைமுறை அரசியலில் அன்று அவசியமாய் இருந்த ராஜதந்திரம் தானே!" வர்க்க அரசியல் கடந்த வெறும் ராஜதந்திரமா?

33. "தத்துவங்களையும், கோட்பாட்டையும் யதார்த்த வாழ்வோடு இணைக்காத எந்த அரசியலும் ஏட்டுச் சுரக்காய் தான் வேறில்லை" வாழ்வோடு இணையாத தத்துவங்கள் கோட்பாடுகள் சரியானதா? அங்கு "ஏட்டு சுரக்காய்" இல்லையா? புலித் தேசியம் சார்ந்த தத்துவங்கள் கோட்பாடுகள் வாழ்வோடு அதாவது (சாதிய, சுரண்டல் ..) இணையாத ஒன்றா? அதை மறுப்பது ஏட்டுச் சுரக்காயா?

34. "சோவியத் ஒரு சமுக ஏகாதிபத்தியமாக மாறியதன் பின்னர் தான், சேகுவேரா கியூபாவின் தொழில் மந்திரியாக மொஸ்கோ சென்று, மொஸ்கோவின் தூதுவராக அல்ஜீரியா தேசிய விடுதலை அமைப்பை நேரடியாக சென்று சந்தித்தது ஒரு புரட்சிகரமான செயல்பாடல்லவா! இவரும் என்ன ஏகாதிபத்தியத்தின் கைக்கூலியாகவா சென்றார்?" கைக்கூலியாகத் தான் சென்றார் என்பது பொய்யா? ஏன் "அல்ஜீரியா தேசிய விடுதலை அமைப்பை நேரடியாக சென்று சந்திக்க" வேண்டி வந்தது? "புரட்சிகரமான" செயற்பாட்டுக்காகவா?

 

இப்படி கேள்விகள் இதற்குள் பற்பல.

 

பி.இரயாகரன்

30.10.2011

 

பின் இணைப்பு : இலக்கியாவின் கட்டுரை முழுமையாக

 

கடாபி ஏகாதிபத்தியத்தின் கைக்கூலியா?

கடாபி ஒரு ஏகாதிபத்தியத்தின் கைக்கூலி என்னும் கருத்து பெரிதாக முன்வைக்கப்பட்டு விவாதிக்கப்படுகின்றது. ஆனால் அதற்கான ஆதாரங்கள் எதையும் முன் வைக்கப்படவில்லை. ரயாகரனுடைய கட்டுரையிலும் தெளிவான ஆதாரங்கள் எதுவும் இல்லை. நமது பார்வையில் சமகாலத்தில் தூக்கி எறியப்பட்ட சர்வாதிகாரர்களுள் கடாபி மாறுபட்ட செயட்பாட்டாளராக, அதாவது உள்நாட்டில் சர்வாதிகாரியாகவும், குறிப்பிடத்தகுந்த நிர்வாகியாகவும், ஒரு வலதுசாரி அரபுத் தேசியவாதிக்கு இருக்க முடியாத சர்வதேசப்பார்வையும் கொண்டவராக இருந்ததற்கான ஆதாரங்கள் குவிந்து கிடக்கின்றன. ஏகாதிபத்திய ஊடகங்களின் கூக்குரலில் மூளைச் சலவை செய்யப்பட்டவர்களாக நாம் சிந்திக்க முடியாது.

விடயத்துக்கு வருவோம். நான் எனது கட்டுரையில் கடாபியை ஒரு சோசலிஸ்ட் ஆகவோ, கொமினிஸ்ட் ஆகவோ நான் கருதி எழுதவில்லை. கடாபிக்கு அரசியலில் எந்த கோட்பாடோ, தத்துவமோ, வரையறையாக இருக்க வேண்டும் என்று யாரும் எதிர்ப்பாகவும் முடியாது. கடாபி செய்த அரசியலில் இருந்து தான் நாம் அவரை வரையறை செய்ய முடியும் என நான் நம்புகின்றேன்.

இங்கே பிரச்சனை என்னவெனில் சோவியத் யூனியனின் தேவையை ஒட்டியே கடாபியின் வரலாறு உருவானது என்று ரயாகரன் நிறுவ முனைவது ஒரு வரலாற்று புரட்டு. ஒரு முதலாளித்துவ அரசியல்வாதி, ஒரு சமுக ஏகாதிபத்தியத்தின் உதவியை நாடுவது எந்த கோட்பாட்டு ரீதியாகவும் தவறென்று நிறுவ முடியாது. கடாபி போன்ற அரசியல் சக்திகள் சோவியத் யூனியனின் எடுபிடிகளாக செயல்பட்ட வரலாறு இல்லை. மாறாக இரண்டு (கடாபி சோவியத் யூனியனின்) சக்த்திகளின் தேவையை பூர்த்தி செய்யும் ஒரு சந்தர்ப்பவாத கூட்டு என்றே கணிப்பிட முடியும். நாடுகளுக்குள் சங்கிலித் தொடர் போன்ற உறவுள்ள சர்வதேச அரசியலில், ஏகாதிபத்தியத்தோடு உறவுள்ள ஒரு நாடு ஏகாதிபத்தியத்தின் கைக்கூலி என்றும், சமூக ஏகாதிபத்தியத்தின் சார்புள்ள நாடு அதன் கைக்கூலி என்றும் வரையறுக்க விஞ்ஞான பூர்வமான அளவுகோல் அவசியமாகின்றது.

கியூபா அமெரிக்காவால் மிரட்டப்பட்டுக் கொண்டிருந்த வேளையில், இதே சமுக ஏகாதிப்பத்தியம் கியூபாவில் ஏவுகணைத்தளம் அமைத்து அதை வாசிங்டனை குறிவைத்து நிறுவியது. அவ்வேளை அமெரிக்கா சோவியத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி ஏவுகணைத்தளத்தை அகற்றச் செயதது. இதை தோழர் மாவோ விமர்சித்து மொஸ்கோவுக்கு கடிதம் எழுதினார். அதில் அமெரிக்காவோடு நடத்திய பேச்சுவார்த்தையில் கியூபாவை நேரடியாக பங்கு பெற செய்திருக்க வேண்டும். மற்றும் ஏவுகணையை கியூபாவில் இருந்து அகற்றி இருக்க கூடாது என்று மாத்திரமே விமர்சித்தாரே தவிர, நீங்கள் சமுக ஏகாதிபத்தியம் உங்கள் உதவி கியூபாவுக்கு கூடாது என்று விமர்சிக்கவில்லை. மொஸ்கோ அளித்த பதிலில், நாங்கள் ஏவுகணையை கியூபாவில் இருந்து அகற்றிநோமே தவிர ஏவுகணை மொஸ்கோவில் தயாராக இருக்கின்றது. தேவை ஏற்பட்டால் அது மொஸ்கோவில் இருந்து பறக்கும். ஆனால் பறக்கும் தூரம் மாத்திரமே வித்தியாசம் மற்றப்படி கியுபா பற்றிய கொள்கையில் எமக்கு எவித மாற்றமும் இல்லை என்றது. (ஆதாரம் மாபெரும் விவாதம்).

சோவியத் யூனியன் ஒரு சமுக ஏகாதிபத்தியமாக மாறியதன் பின்னர், சர்வதேச அளவில் தேசிய விடுதலைக்காக போராடிய பல நாடுகளுக்கு உதவி உள்ளது. அதில் பல்வேறுபட்ட நாடுகள் இதே சமுக ஏகாதிபத்தியத்தின் உதவியோடு விடுதலை அடைந்துள்ளன. இதில் சரியும், தவறும் சமமாகவே நடந்துள்ளது. இதே சமுக ஏகாதிபத்தியத்தின் உதவியோடு தான் வியட்னாம் விடுதலை அடைந்தது. கோசிமின் கூட உங்கள் பார்வையில் ஏகாதிபத்தியத்தின் கைக்கூலி தான். சோவியத் ஒரு சமுக ஏகாதிபத்தியமாக மாறியதன் பின்னர் தான், சேகுவேரா கியூபாவின் தொளில் மந்திரியாக மொஸ்கோ சென்று, மொஸ்கோவின் தூதுவராக அல்ஜீரியா தேசிய விடுதலை அமைப்பை நேரடியாக சென்று சந்தித்தது ஒரு புரட்சிகரமான செய்யல்பாடலவா! இவரும் என்ன ஏகாதிபத்தியத்தின் கைக்கூலியாகவா சென்றார்?

இரண்டாவது உலகயுத்தத்தை கையாள ஸ்டாலின் போய் ஹிட்லருடன் ஒப்பந்தம் செய்தது, நடை முறை அரசியலில் அன்று அவசியமாய் இருந்த ராஜதந்திரம் தானே! ஸ்டாலினை ஹிட்லரின் கைக்கூலி என்று வரையறுக்கலாமா? தத்துவங்களையும், கோட்பாட்டையும் யதார்த்த வாழ்வோடு இணைக்காத எந்த அரசியலும் ஏட்டு சுரக்காய் தான் வேறில்லை. குசுழுடுஐNயுவு ( யேவழையெட டுiடிநசயவழைn குசழவெ ழுக ஊhயன)இ ஐசுயுஇ Pடுழுஇ ழேசவாநசn ஆயடi சுநஎழடரவழைn இவர்களுக்கான நிதி உதவியை செய்ததும். Pழுடுஐளுயுசுஐழு (ளுயாசயறi யெவழையெட டுiடிநசயவழைn ஆழஎநஅநவெ) முழு நிதி உதவியை செய்து மொரோக்கொவிடமிருந்து விடுதலைபெற உதவியமை, ஆபிரிக்க யூனியனுக்கு எதியோபியா செலுத்த வேண்டிய அங்கத்தவர் பணத்தை 15மூ தொடச்சியாக செலுத்தியமை, நைபீரீயாவுக்கு கூ65,000,000 ஐnஎநளவஅநவெ Pசழதநஉவ ஆக இனாமாக வழங்கியமை, ளுழரவா யுகசiஉயn யேவழையெட ஊழபெசநளள இக்கு தேவையான டநபயட நஒpநளெநள + கiயெnஉயைட ளரிழசவ.

இது எல்லாம் சமுக ஏகாதிபத்தியமாகிய சோவியத்தின் கைகூலியாகவா கடாபி இவை அனைத்தையும் செய்தார்? இது கடாபியினுடைய சர்வதேச பார்வையை நிருபிக்கவில்லையா? கடாபியினுடைய ஆட்சி பற்றியும் அவருடைய சர்வாதிகாரம் பற்றியும் என்னுடைய முன்னைய இரண்டு கட்டுரையிலும் குறிப்பிட்டுள்ளேன். தயவு செய்து இதை வாசிப்பவர்கள் என்னுடைய 21-22 திகதி இட்ட இரண்டு கட்டுரைகளையும் வாசிக்கவும்.

 

இலக்கியா

25 -10 -2011