யுத்தத்தில் வென்றவர்கள், தமிழ்மக்களை வெல்லவில்லை. யுத்தத்தில் வென்றவர்களை, தமிழ்மக்கள் மீளத் தோற்கடித்து இருகின்றார்கள். புலிகள் தான் அனைத்துப் பிரச்சனையும் என்றவர்கள் முன், இன்று தமிழ்மக்கள் பிரச்சனையாகியுள்ளனர். இனங்களுக்கு இடையில் அமைதியும், சமாதானமும் தோன்றிவிட்டது என்று கூறியது எங்கும் பொய்யாகியுள்ளது. வடக்கின் "வசந்தம்", கிழக்கின் "உதயம்" என்ற மகிந்தவின் பாசிசச் சிந்தனைக்கு, செருப்படி கிடைத்திருக்கின்றது.

 

 

மக்களை மிரட்டியும், கையூட்டுக் கொடுத்தும், பெண்களைக் கொண்டு ஆபாசக் கூத்துக் காட்டியும், தமிழ்மக்களை தேர்தல் மூலம் வெல்ல முனைந்தது பேரினவாதம். இராணுவ இயந்திரத்தைக் கொண்டு, கொலைகார புலனாய்வுப் பிரிவைக் கொண்டும், கூலிக் குழுக்களைக் கொண்டும், அரசு ஆடாத ஆட்டம் கிடையாது. இந்த அடாவடித்தனம் மூலம் கணிசமான வாக்கைப் பெற முனைந்த அரசு, படுதோல்வியைச் சந்தித்தது. இது வடக்கு கிழக்கு எங்கும் நடந்தேறியுள்ளது.

பிள்ளையான், கருணா, டக்ளஸ் என்று கூலிக்கு மாரடிக்கும் கூட்டம் காட்டிய ஜனநாயகம் போலியானது, புரட்டுத்தமானது என்பதையும் மக்கள் வெளிப்படுத்தியுள்ளனர். இது வடக்கின் வசந்தமல்ல, கிழக்கின் விடிவுமல்ல என்பதையும், மக்கள் தங்கள் வாக்களிப்பு மூலம் காட்டியுள்ளனர்.

மக்கள் தங்கள் சொந்த உணர்வுகளை சுதந்திரமாக வெளிப்படுத்த முடியாத அச்சமும், பீதியும் கொண்ட சூழலில், பேரினவாத அரச பாசிசம் மண்ணைக் கவ்வியுள்ளது.

இப்படி பேரினவாத அரசுக்கு எதிராக வெற்றிபெற்ற கூட்டமைப்பு மீதான நம்பிக்கை மீது மக்கள் வாக்களிக்கவில்லை. மாறாக அரசுக்கு எதிரான வாக்களிப்பே கூட்டமைப்பின் வெற்றியாக மாறியது. இதற்கு வெளியில் மக்களுக்கு வேறு தெரிவில்லை என்பதே இதன் பின்னுள்ள மற்றொரு உண்மையாகும்.

இடதுசாரியத்தின் பெயரில் சிலர் இந்த வெற்றியை யாழ்ப்பாணத்து (சாதிய) மரபு சார்ந்த ஒன்றாகக் காட்டுவதன் மூலம், பேரினவாதத்தின் தோல்விக்கு அரசியல் விளக்கம் கொடுக்க முற்படுகின்றனர். வன்னி, கிழக்கு, வடக்கில் ஒடுக்கப்பட்ட சாதிகள் வாழும் பிரதேசங்கள் எங்கும், அரச பாசிசம் தோற்கடிக்கப்பட்டு இருக்கின்றது என்பதுதான் உண்மை. இது அரசு மீதான இலங்கை தழுவிய பொது அதிருப்தி சார்ந்த ஒன்றல்ல. வடக்கு கிழக்கு அல்லாத பிரதேசத்தில் அரசு தோற்கவில்லை.

ஆக வடக்கு கிழக்கில் அரசு சந்திக்கும் தோல்வி, பேரினவாதத்தின் அரசியல் விளைவால் நடக்கின்றது. அரச பாசிசம் இராணுவ கண்காணிப்பின் கீழ் நடத்தும் இனவழிப்பு தான், தமிழ் மக்களின் தொடர்ச்சியான அரசியல் எதிர்வினையாகும்;.

யாழ் மையவாதத்துக்கு எதிராக கிழக்கு மக்கள் உணர்வுகளை தூண்டிய குறுகிய அரசியல் கூட, பேரினவாதத்தின் கீழானதாக கருதுமளவுக்கு கிழக்கு மக்களின் விழிப்புணர்ச்சியுள்ளது.

இன்று மக்கள் நிவாரணத்தையும், மீள் கட்டமைப்பையும் எதிர்பார்ப்பதாக கூறுகின்ற பேரினவாத புரட்டு அரசியல் தோற்றுப்போய் இருக்கின்றது.

அரசுக்கு அடங்கி இணங்கிப் போவதன் மூலம், உரிமைகளை கெஞ்சி பெறவேண்டும் என்ற சோரம் போகும் அரசியல் மண்ணைக் கவ்வியுள்ளது.

இதன் அர்த்தம் கூட்டைமைப்பு, இதை மாற்றாக பிரதிநிதித்துவம் செய்வதாக அர்த்தமல்ல. மக்கள் வேறு தெரிவின்றி அரசை தோற்கடித்த செயலாகும்;. இதனால் தான் கூட்டமைப்பு வென்றது. மக்கள் தமக்காக போராடும் அமைப்பை உருவாக்காத வரை, பேரினவாதம் தொடரும் வரை, மக்கள் வேறு வழியின்றி கூட்டமைப்பை தொடர்ந்து தெரிவு செய்வது என்பது தொடரத்தான் செய்யும்.

இன்று தமிழ் மக்களுக்கு இந்த சமூக அமைப்பில் குறைந்தபட்சமான ஒரு தீர்வையும், இயல்பான யுத்த மீள்கட்டமைப்பை செய்தாலே போதும், இந்த அரசியல் சூழல் தானாக மாறிவிடும். அரசு இதை மறுப்பதன் மூலம் பேரினவாதத்தை தமழ் மக்கள் மேல் திணிப்பதன் விளைவை தான், இந்த தேர்தல் முடிவுகள் எடுத்துக் காட்டுகின்றது. வேறு எதையுமல்ல. இது எமக்கு எதை எடுத்துக் காட்டுகின்றது என்றால், மக்கள் தமக்காக போராடும் அமைப்பை உருவாக்கும் பணி எம்முன் இருப்பதைத்தான்.

பி.இரயாகரன்

24.07.2011