தொடக்கக் குறிப்புகள்

இன்றைய சூழலில் தமிழ்த் தேசியவாத அரசியல் வேறுபட்ட இரு திசைவழிகளிற் பயணிக்கிறது. ஒன்று மகிந்த ராஐபக்ச தலைமையிலான இலங்கை அரசாங்கத்தைப் போர்க் குற்றவாளியாக்கிச் சர்வதேச நீதிமன்றில் தண்டனை வாங்கிக் கொடுப்பது. மற்றது இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி உரிமைகளைப் பெற்றுக்கொள்வது. முன்னது புலம்பெயர்ந்த தமிழர்களாலும் பின்னது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாலும் முன்னெடுக்கப்படுகின்றன. ஆனால் போரால் பாதிக்கப்பட்ட அப்பாவித் தமிழ் மக்கள் தங்களது அன்றாடத் தேவைகளையே நிறைவேற்ற முடியாமல் அல்லற் படுகிறார்கள். இன்று தமிழ் மக்களின் தேசிய இனப் பிரச்சினை தேசிய இனமொன்றின் மீதான தேசிய இன ஒடுக்கலாகவும், அதற்கெதிராக போராட்டம் சுயநிர்ணய அடிப்படையிலான ஒரு தீர்வுக்கான போராட்டமாகவும் கருதப்படுவதற்கு மாறாக ஒரு மனித உரிமைப் பிரச்சினையாகவே பேசப்படுகிற ஒரு சூழ்நிலை உருவாக்கப் பட்டிருக்கிறது. இவை குறுகியகால நோக்கிலும் நீண்டகால நோக்கிலும் தமிழ்த் தேசிய இனத்தின் இருப்பிற்கே சிக்கல்களை உருவாக்கவல்லவை.

 

 

இன்று தமிழ்த் தேசிய இனம் ஒரு அபாயகரமான திருப்புமுனையை எதிர்நோக்கி நிற்கிறது. தமிழ் மக்களின் பிரச்சினை பற்றிச் சர்வதேசத்தினது கவனத்தை ஈர்ப்பது என்ற போக்கின் வழியாகத் தமிழ் மக்களின் பிரச்சினையின் அடையாளத்தை மாற்றுகிற அபாயம் சாத்தியமாகி வருகிறது. இது மிக ஆபத்தானது. தமிழ் மக்களின் பிரச்சினையை, வெறுமனே ஒரு மனிதாபிமானப் பிரச்சினையாகவும் அகதிகள் பிரச்சினையாகவும் எல்லாரிடமும் கருணையை எதிர்பார்த்துக் கையேந்தி நிற்கிற ஒரு சமூகத்தின் மீதான கழிவிரக்கமாகவும் ஒடுக்குகிற திசையை நோக்கி நாம் திரும்பிக் கொண்டிருக்கிறோம்.


கொசோவோ பற்றியும், சர்வதேச நீதிமன்றம் பற்றியும், இந்தியா பற்றியும், அமெரிக்கா பற்றியும் நம்பிக்கைகள் வளர்க்கப் படுகின்றன. ஒரு விடயத்தை நாம் நினைவில் வைத்திருப்பது பொருத்தமானது. கொசோவோ பிரிவினையைச் சர்வதேச சமூகம் ஏற்கிற காரணத்தால் வேறெங்கும் அது அதையொத்த பிரிவினையை ஏற்கப் போவதில்லை. வங்கதேசப் பிரிவினையை இயலுமாக்கிய இந்தியா, பிற இடங்களிலெல்லாம் பிரிவினையை எதிர்த்தே வந்துள்ளது. நேபாளம் இந்திய மேலாதிக்கத்திற்கு முரணாக நடக்கத் தொடங்கியவுடன் நேபாளத்தின் தராய் (Terai) பிரதேசத்தில் பிரிவினையை முடுக்கி விட்டு, தனது நலனை இந்தியா காத்துக் கொண்டது. லிபியாவில், பென்காசியைத் தளமாகக் கொண்டு, நேட்டோ படைகளின் உதவியோடு ஆட்சி மாற்றத்துக்காகத் தாக்குதல் நடாத்துகிற, மாற்றரசாங்கத்தைத் தனது நலனுக்காக அங்கீகரிக்கின்ற சர்வதேச சமூகம்; அதே செயலை வெறெங்கும் இலகுவில் செய்யாது. அவ்வாறு செய்வதாயின் அது முற்றிலும் தனது நலன் சார்ந்த நடவடிக்கையாகவே இருக்க முடியும்.

தலிபான்களை ஒழித்துக்கட்டுவதற்காக என்று ஆப்கானிஸ்தானில் தொடங்கிய போர் வெல்லப்பட முடியாது என்று அறிந்த பின்பு, அமெரிக்கா, தலிபான்களுடன் இரகசியமாகப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுகிறது. ‘கடைசிப் பயங்காரவாதியையும் தேடிக் கொல்லும் வரை “பயங்கரவாதத்திற்கெதிரான யுத்தம் தொடரும்” என 2001 இல் கங்கணங்கட்டிய அமெரிக்க அதிபர் புஷ்ஷின் சொற்கள் எங்கே போயின?  இன்று அமெரிக்கா ஆப்கானிலிருந்து வெளியேற முயல்கிறது. தனது நலனைக் காக்க அமெரிக்கா எதுவும் செய்யும் என்பதற்கு இது இன்னொரு உதாரணம்.

இன்று மத்திய கிழக்கில் நடக்கிற மக்கள் போராட்டங்கள் பற்றித் தமிழ் மக்களின் நிலைப்பாடு என்ன? தமிழ்த் தலைமைகள் என்று சொல்லப்படுபவற்றின் நிலைப்பாடு என்ன? நாம் யாருடைய பக்கத்தில் நிற்கிறோம்? நிச்சயமாக, நம் முன்னுள்ள தெரிவு ஒபாமாவுக்கும் ஒஸாமாவிற்கும் இடையிலானதல்ல. அல் க்ஹைடாவோ வேறெந்த மதவாத, இனவாத அமைப்போ ஏகாதிபத்திய எதிர்ப்பை மையமாகக் கொண்டு போராடவில்லை. எனவே தான் ஒடுக்கு முறைக்கு எதிரான போராட்டங்கள் யாவும் அவற்றின் பரந்துபட்ட ஒற்றுமைக்கான பொதுக் காரணிகளைத் தேட வேண்டும். அத் தேடலுக்கான உடனடியான களங்களில் உள்ள பலஸ்தீன, லிபிய, சிரிய மக்கள் மீதான தாக்குதலுக்கு எதிர்ப்புத் தெரிவிப்பது முக்கியமானது. ஆயுதமேந்திய எதிரியை ஆயுதமேந்தாமற் போரிட இயலாது. எந்த ஆக்கிரமிப்பிற்கும் எதிராகவும் சாத்வீகம் வென்றதில்லை. ஆனாலும் உரிமைப் போராட்டம் என்பது ஆயுதங்களால் மட்டும் வெல்லப் படுவதல்ல. ஆயுதங்களை விட அரசியல் முக்கியமானதும் அடிப்படையானதும் ஆகும். இதை உணராத எந்தவொரு விடுதலைப் போராட்டமும் வெற்றி பெற்றதில்லை. இன்றைய நிலையில் நமக்குத் தேவையானது வெகுசன மக்கள் இயக்கங்களை உருவாக்குவதே. ஏனெனில் ஆயதப் போராட்டங்களை விட முக்கியமான சமூகப் பணி ஒன்றை அவை ஆற்றுகின்றன. அவை மக்களை ஒன்று திரட்டுகின்றன. மக்கள் கெஞ்சி இரந்து மன்றாடக் கூடாது. நின்று நிமிர்ந்து தமக்கு உரியதைக் கேட்டுப் போராட வேண்டும். அதற்கு மக்களை ஒருங்கிணைக்கும் பணி அவசியமாகிறது. இதற்கு நேபாளம் நல்லதொரு உதாரணமாக விளங்குகிறது.

தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம் அடிப்படையிலேயே சிக்கல்களை உருவாக்கிக் கொண்டதன் பலாபலன்களே நாம் இன்று காணும் தமிழ்த் தேசியவாத அரசியல். விடுதலைப் போராட்டங்கள் அறம் பற்றியன. அறஞ்சார்ந்த பார்வையால் வழிநடத்தப்படாத விடுதலைப் போராட்டங்கள் தோல்வியை சந்திப்பது தவிர்க்க முடியாதது. எல்லாவற்றிலும் மேலாகத் தமிழர் ஒரு ஒடுக்கப்பட்ட சமூகம் என்ற உண்மை இன்னமும் நமக்கு உறைக்கவில்லை. இன்னமும் ஆண்ட பரம்பரைக் கனவுக்குள் திரும்பத் திரும்ப அமிழ்த்தப்படுகிறோம். நம்மிற் சிலருக்கு அந்தக் கனவுக்கும் நிச வாழ்வுக்கும் வேறுபாடு தெரியாது. அதன் விளைவாக, உரிமைக்கான போராட்டம் விடுதலைக்கான போராட்டமாக வளர்ந்த பின்பு, இப்போது இருப்பிற்கே போராட வேண்டிய நிலையில் தமிழ்ச் சமூகம் உள்ளது. தமிழ்ச் சமூகம் தனது விடுதலைக்கான பொறுப்பை முற்றிலும் தன் வயமாக்காதவரை தவறுகள் தவிர்க்க இயலாதவை. இந்தப் பின்னணியில் விடுதலைப் போராட்டங்களில் சர்வதேசத்தின் வகிபாகம் பற்றியும் புதிய உலக ஒழுங்கின் நிகழ்நிலைகளையும் முன்னிறுத்தும் நோக்கில் இக்கட்டுரை எழுதப்படுகிறது.


ஒடுக்கப்பட்ட சமூகங்களும் அந்நியத் தலையீடும்


ஒடுக்கப்பட்ட ஒரு சமூகம் என்ற வகையில் தமிழ்ச் சமூகத்தின் நிலை என்ன? தன்னையொத்த நிலையில் உள்ள உலகின் பிற மக்கள் யார், தன்னை யாருடன் அடையாளப்படுத்துவது என்பன போன்ற விடயங்களிற் சரியான முடிவுகளை வந்தடைய நமக்கு உலக நிலைமைகள் பற்றிய உண்மைகள் தெரிய வேண்டும். நமது வரலாறு பற்றிய உண்மைகள் தெரிய வேண்டும். அவை ஏன் நமக்குச் சொல்லப்படுவதில்லை என்பதை நாம் விசாரிக்க வேண்டும்.ஊடகங்கள் எவற்றைச் சொல்லுகின்றன என்பதை விட எவற்றைச் சொல்லாமல் தவிர்க்கின்றன என்பது முக்கியமானது. உலகில் நீதியையும் நியாயத்தையும் மனித உரிமையையும் மதிக்கிற எல்லாரது நட்பும் தமிழ் மக்களுக்கு தேவையானதும் பயனுள்ளதும் என்பதில் மறுப்பில்லை. ஆனால், அந்த நட்பு ஈவோருக்கும் இரப்போருக்கும் இடையிலான உறவாக இருக்கக்கூடாது. அது சமத்துவத்தின் அடிப்படையில் அமைய வேண்டும். ஒடுக்குமுறைக்குத் தொடர்பான எப் பிரச்சினையும் கருணையினால் தீர்க்கப்பட்டதில்லை. தமிழின விடுதலைக் குத்தகைக்காரர்கள் எவராலும் தமிழ் மக்களின் விடுதலையைப் பெற்றுத்தர இயலாது என்கிற உண்மையை நாம் மறந்துவிடலாகாது.

நாம் ஒடுக்கப்பட்ட ஒரு சமூகம் என்பதை நாம் உணராதவரை, எம்மாற் பயனுள்ள திசையிற் பயணிக்க இயலாது. இன்று வடக்கு கிழக்கில் உள்ள மக்கள் மிக அடிப்படையான பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்கிறார்கள். அண்மைய உலக உணவுத்திட்ட அறிக்கை, இலங்கையிலே உணவுப் பாதுகாப்பு மிகவும் குறைந்ததும் போஷாக்கில்லாத உணவை அதிகளவில் உட்கொள்பவர்களைக் கொண்டதுமான மாவட்டமாக கிளிநொச்சியை இனங் கண்டிருக்கிறது. அங்கு மோசமான உணவுப் பற்றாக்குறை நிலவுகிறது. வடக்கில் 166,000 குடும்பங்களுக்கு நிரந்தர இருப்பிடங்கள் தேவைப்படுகின்றன. வேலையில்லாப் பிரச்சனையும் குடும்பத்தலைவர்களாகப் பெண்களைக் கொண்ட குடும்பங்கள் அதிகளவில் இருப்பதும் பாரிய பொருளாதார, சமூகப் பிரச்சனைகளை உருவாக்குகிறது. மக்கள் சார்ந்த இப் பிரச்சனை தனிநாட்டையோ போர்க்குற்றங்களையோ பற்றியதல்ல. பாதிக்கப்பட்டவர்களுக்கு அன்றாட வாழ்க்கையே போராட்டமாகத்தான் இருக்கிறது.

இன்று இலங்கையில் எயிட்ஸ் விரைவாகப் பரவும் மாவட்டங்களில் ஒன்றாக யாழ்ப்பாணம் இருக்கிறது. வேலைவாய்ப்பின்மையும் வறுமையும் பலரைப் பாலியல் தொழிலில் ஈடுபடுத்துகிறது. அவர்களைச் சுரண்டித் தங்களது தேவைகளைத் தீர்த்துக் கொள்பவர்களாக இருப்பவர்களில் பெரும்பாலோர் வெளிநாடுகளில் இருந்து வரும் தமிழர்களே என்று ஒரு அறிக்கை கூறுகிறது. அவ்வறிக்கையின்படி யாழ்ப்பாணத்தில் இது ஒரு வரன்முறையான தொழிலாக மாற்றமடைந்ததற்கும் இனியும் அது தொழிலாக தொடரப் போவதற்குமான முக்கியமான இரண்டு காரணிகளாக வறுமையையும் வெளிநாட்டிலிருந்து வருகின்றவர்களையும் இனம் காணுகிறது.

இவையெல்லாம் தமிழ்ச் சமூகம் இன்று எதிர்நோக்கும் பாரிய சவால்கள். ஒரு பண்பட்ட சமூகமாக எம்மைத் தக்கவைப்பதே சிக்கல்கள் மிகுந்ததாக இருக்கும் நிலையில் நாம் ஆண்ட பரம்பரைக் கனவுகளிலும் வெளிநாட்டில் உள்ள தமிழர்களின் பொருளாதார பலம் பற்றிய நம்பிக்கைகளிலும் இருக்கிறோம். இவற்றில் எதுவுமே மிகக் கொடிய யுத்தத்திலிருந்து மக்களைக் காப்பாற்றவில்லை, யுத்தத்தின் இறுதிக் கட்டத்திற் பொதுமக்களின் படுகொலையைத் தடுக்கவில்லை, மூன்று இலட்சம் மக்கள் முட்கம்பி வேலிகளுக்குப் பின்னால் ஒரு வேளை உணவுக்காக கையேந்த நேருவதைத் தடுக்கவில்லை. இவை எல்லாம், நாம் ஒடுக்கப்பட்ட ஒரு சமூகம் என்பதை நாம் உணரத் தவறியதன் விளைவுகளே.

தமிழ் மக்களின் விடுதலைக்கான போராட்டம் என்பது தனியே ஆயுதப் போராட்டம் என்ற ஒற்றைப் பரிமாணக் கண்ணோட்டத்தையே போராளி அமைப்புக்கள் கொண்டிருந்தன. அதன் விளைவுகளை இலங்கையில் உள்ள தமிழர்கள் எல்லோரும் அனுபவிக்கிறார்கள். இந்த இடத்தில் தான் பிற போராட்டங்களிடமிருந்து நாம் கற்றுக் கொள்வது பயனுடையதாகிறது. நேபாள மாஓவாதிகள் வெறுமனே ஆயுதப் போராட்டம் மட்டும் நடத்தவில்லை. அவர்கள் காணிச் சீர்திருத்தம், பெண்ணுரிமை, சாதிய ஒழிப்பு, இன சமத்துவம் போன்ற பல வேறு நடவடிக்கைகளையும் மேற்கொண்ட அதே வேளை, மக்களின் கூட்டு முற்சியால் ஒரு நெடுஞ்சாலை உட்பட்ட நிர்மாண வேலைகளையும் முன்னெடுத்துள்ளனர். இவை ஒரு விடுதலைப் போராட்டம் கொண்டிருக்க வேண்டிய பண்புகள். சீன, வியற்நாமிய, பிலிப்பினிய கம்யூனிஸ்ற்றுக்கள் உட்பட்ட மாக்ஸிய லெனினியர்கள் யாவரும் எல்லாக் காலத்திலும் அமைதியான முறையில் நியாயமான தீர்வுகளைப் பேச்சுவார்த்தைகள் மூலம் பெற ஆயத்தமாகவே இருந்துள்ளனர். வீணான உயிரிழப்புக்களைத் தவிர்ப்பதில் மிகுந்த அக்கறையுடன் இருந்து வந்துள்ளனர். போராட்டம் என்பதை அவர்கள் பல வேறு தளங்களிலும் மேற்கொள்ள ஆயத்தமாயிருந்துள்ளனர். அமைதியாக வென்றெடுப்பதை எதிரி குழப்புவான் என்று அறிந்து, எச்சரிக்கையுடன் செயற்படுவதும் குழப்புகிற சூழ்நிலையில் தேவைக்கேற்ப ஆயுதம் ஏந்தியோ ஏந்தாமலோ போரிடுவதுமே மாக்ஸிய லெனினிய போராட்ட அணுகுமுறை.

நேபாள மக்கள் போராட்டம் நமக்குச் சொல்லும் பாடங்கள் பல. வெறுமனே ராணுவப் பதிலடிகள் மூலம் தமிழ் மக்களின் இருப்பைப் பாதுகாக்க இயலாது. இது இன்று வரையிலான போராட்ட அனுபவம். மக்களின் பாதுகாப்பையும் நலன்களையும் முதன்மைப் படுத்துகிற விதமாகக் காரியங்கள் மேற்கொள்ளப்பட்ட காலங்கள் இருந்துள்ளன. ஆனாலும் அவை மக்களை முதன்மைப் படுத்துகிற முறையில் மேற்கொள்ளப் பட்டதாகக் கூற இயலாது. தமிழ் மக்களுக்குத் துரோகமாக நடக்கிறவர்கள் எனக் கருதப்படும் எல்லாரையும் அழித்தாலும் விடுதலையை வெல்ல இயலாது. மனிதர்களது தவறுகளை அவர்களது சூழ்நிலைகளில் வைத்துப் பார்ப்பதும் அவர்களை விடுதலைப் போராட்டத்தின் தரப்பிற்கு வென்றெடுப்பதும் ஒரு விடுதலைப் போராட்டத்தின் முக்கியமான தேவை. இவ் விடயத்தில், தமிழ் மக்களின் நலனும் பாதுகாப்பும் பற்றி அக்கறையுள்ள அனைவருமே கவனங் காட்டவேண்டும். தவறின், தமிழ் மக்களே அதனால் மிக அதிகம் இழப்போராக இருப்பர். நாம் எம் போன்ற ஒடுக்கப்பட்ட சமூகங்களின் போராட்டங்களில் இருந்து கற்க வேண்டும். ஆனால், தமிழ் மக்களுக்கு ஆண்டாண்டு காலமாயக் காட்டப்பட்டுவந்துள்ள உதாரணங்கள் மோசமானவை. 1960களில் நமக்கு முன்னுதாரணமான நாடாக இஸ்ரேல் காட்டப்பட்டது. இஸ்ரேல் இயற்றி வந்த கொடுமைகள் பற்றியோ இஸ்ரேலின் உருவாக்கம் எவ்வளவு அநீதியானது என்றோ நமக்குச் சொல்லப்பட்டதில்லை. அத்துடன், நமது நிலைமை, இஸ்ரேலினால் மிகக்கொடுமையாக ஒடுக்கப்படுகிற பலஸ்தீனர்களுக்கும் அராபியர்களுக்கும் ஒப்பானது என்பதும் நமக்குச் சொல்லப்படவில்லை. அதற்கும் அப்பால், இஸ்ரேலின் முன்னுதாரணம் நம்மிடையேயுள்ள ஆண்டபரம்பரைக் கனவுகளின் வெளிப்பாடே. அவ்வாறான விடுதலையை ஒருவேளை தமிழ் சமூகம் வென்றிருக்குமாயின், இஸ்ரேல் போல ஏனைய இனங்களையும் சிறுபான்மையினரையும் கொடூரமாக ஒடுக்கும் சமூகமாகத் தமிழ்ச் சமூகம் இருந்திருக்கக் கூடும். அது நிகழவில்லை.

இஸ்ரேலுக்குப் பின்னர் தமிழ் மக்களுக்கு முன்னுதாரணமாக வங்க தேசத்தின் (பங்ளாதேஷ்) பிரிவினை காட்டப்பட்டது. பங்ளாதேஷ் விடுதலையை வென்று வழங்கிய இந்தியா தமிழீழ விடுதலையையும் வென்று தரும் என்ற கனவு ஊட்டி வளர்க்கப்பட்டது. அங்கு இந்தியப் படைகளும் அவர்களது எடுபிடிகளும் பங்ளாதேஷில் மக்கள் இயக்கங்களைக் கட்டியெழுப்பியிருந்த கம்யூனிஸ்ட்டுகளைத் துடைத்தெறிந்தது பற்றி யாரும் கவலைப் படவில்லை. இந்தியாவின் எடுபிடியான முஜிபுர் ரஹ்மான் மக்களாதரவை முற்றாக இழந்து படுகொலைக்கு ஆளாகும் வரை, நமக்கு நல்லதொரு உதாரணமாகக் காட்டப்பபட்டு வந்தார். தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம் இப்போதுங் கூடக் கணிசமான அளவுக்கு இந்தியாவின் எடுபிடிகளின் கைகளிலேயே இருக்கிறது. நாம் நமது அனுபங்களிலிருந்து கற்றுக்கொண்டது போதாது போலத் தெரிகிறது.

இலங்கையில் சனநாயகமும் மனித உரிமைகளும் பேணப்பட வேண்டும் என்று அமெரிக்கா அடிக்கடி சொல்வதைத் தமிழர்கட்கு ஆதரவான நிலைப்பாடாக எவரும் கருதுவது அபத்தமானது. ஆயினும் தமிழ்ப் புத்திஜீவிகளும் தமிழ்ப் பத்திரிகைகளும் அவ்வாறான முடிவுகட்குத் தான் வருகிறார்கள். இலங்கைக்குக் கேடானதும் இலங்கை அரசுக்கு எதிரானதும் தமிழருக்கு நல்லதாக அமைய அவசியமில்லை. அதிலும் முக்கியமாகத், தமிழரைக் காரணங்காட்டிக் குறுக்கிடுகிற எவரும் தமிழரின் நன்மை கருதிக் குறுக்கிடவில்லை என்பதை நாம் நன்கு நினைவிலிருத்த வேண்டும். இன்று இலங்கையில் அந்நியக் குறுக்கீடு நிகழுமாயின் அது ஆட்சி மாற்றத்துக்குரியதாக இருக்குமே தவிரத் தமிழர்களுக்கு உரிமைகளை வென்று தருவதற்கானதாக இராது. அவ்வாறான அந்நியக் குறுக்கீடு இன்னும் கொடூரமான ஒடுக்குமுறையைக் கட்டவிழ்த்து விடக்கூடிய ஆட்சியொன்றிற்கே வழிவகுக்கும். அதிலும் அதிகம் பாதிக்கப் படுவோர் தமிழராகவே இருப்பர். அந்நியக் குறுக்கீடு எதுவும் மோசமான பின்விளைவுகளையே ஏற்படுத்தும் என்பதில் ஐயம் வேண்டாம்.


சுயநிர்ணய உரிமை

இன்று உலகத்தில் எற்பட்டிருக்கின்ற தேசியப் பிரச்சனைகளை நோக்கும் போது தேசியவாதத்தின் வளர்ச்சியை முதலாளித்துவத்தின் வளர்ச்சியுடன் இணைத்து பார்க்க வேண்டும். ஒரு காலத்தில் முதலாளித்துவம் தேசியவாதத்தை ஆதரித்தது. அதே முதலாளித்துவம் ஏகாதிபத்தியமாக வளர்ச்சியடைந்த பின்பு, தேசிய இன ஒடுக்கலை மேற்கொண்டு இன விடுதலையை எதிர்த்தது. தேசிய இனப் பிரச்சினையில் ஏகாதிபத்தியத்திற்கு ஒரு கொள்கையிருக்கின்றது: தனது வசதிக்கேற்ப சில இனவிடுதலைப் போராட்டங்களை அது ஆதரிக்கும் சில இனவிடுதலைப் போராட்டங்களை அது எதிர்க்கும். இன்று ஆதரித்ததை நாளை எதிர்க்கவுங் கூடும். அவ்வாறு தான் அது சுயநிர்ணய உரிமைக் கோட்பாட்டைத் தனது நலனுக்கேற்றவாறு பயன்படுத்தி வந்துள்ளது. சுயநிர்ணய உரிமை, அவ்வாறு மாறுபடக்கூடிய வியாக்கியானங்களை உடையதாக இருக்க முடியாது. இந்த இடத்தில், சுயநிர்ணய உரிமைக் கோட்பாட்டைத் தங்களுக்கு வசதிக்கு ஏற்றுவாறு திரிப்பவர்களின் நோக்கங்கள் முக்கியமாகின்றன.

ஒரு உரிமையைக் கொண்டவர், அதை ஏன் எப்போது பிரயோகிக்க வேண்டும் என்பதை ஆராயாமல், ஒரு உரிமை இருப்பதால் அது பிரயோகிக்கப்பட்டே ஆகவேண்டும் என்று சிலர் ஏன் சொல்கிறார்கள்? அந்த உரிமை பிரயோகிக்கப்படாமை அந்த உரிமையின் இழப்பல்ல. பிரிந்து போகும் உரிமை கோரிப் போராடுவோர் பிரிவினைக்காகப் போராடுவோரினின்று தெளிவாகவே வேறுபடுகிறார்கள்.முன்னையோர் இணைந்து வாழும் வாய்ப்பைக் கருத்திற் கொண்டு போராடுகிறார்கள்: பின்னையோர் எவரிடமும் பிரிந்துபோகும் உரிமையைக் கேட்காமற் பிரிவினைக்காகவே போராடுகிறார்கள். எனவே இவ்வாறான அடிப்படை வித்தியாசங்களை எளிதாக அலட்சியம் செய்துவிட்டுப் புனையப்படும் “சுயநிர்ணயம் = பிரிவினை” என்ற சூத்திரம் தவறான முடிவுகளுக்கு இட்டுச் செல்லும். அவ்வாறு புனைபவர்கள் தெரிந்து திட்டமிட்டே அதைத் செய்கிறார்கள். இனங்களிடையே நல்லுறவு ஏற்படுபது அவர்களது நலன்களுக்குக் தீங்கானது. எனவே சுயநிர்ணய உரிமையைப் பிரிந்து போவற்கான உரிமை மட்டுமே என வியாக்கியானம் செய்வதன் மூலம் சகல இனங்களுக்குமான சுயநிர்ணய உரிமைகள் மறுக்கப்பட அவர்கள் வழிசெய்கிறார்கள்.

பிரிந்துபோகும் உரிமையின் அங்கீகாரம் பிரிவினையை ஊக்குவிக்கும் நோக்கையுடையதல்ல. மாறாக அது ஒன்றுக்கு மேற்பட்ட தேசிய இனங்கள் சுயவிருப்பின் பேரில் ஒன்றாக வாழும் வாய்ப்பைப் பலப்படுத்தும் நோக்கையுடையது. அதன் காரணமாகவே சுயநிர்ணய உரிமை என்பது பிரிவினையே என்று கூறுவோர் சுய நிர்ணய உரிமை என்பதன் கருத்தைத் திரிக்கிறார்கள். அதாவது ஒன்றைச் செய்யும் உரிமையை அதைச் செய்யும் நிர்ப்பந்தமாக மாற்றுகிறார்கள்.

தேசிய இனங்களின் பிரச்சினை, முக்கியமாகத் தேசிய அரசாக அமையும் வாய்ப்பில்லாத தேசிய இனங்களின் பிரச்சனை, இன்று மேலும் கவனமான பரிசீலனையை வேண்டி நிற்கிறது. சுய நிர்ணயம் என்பதன் பொருள் ஒரு தேசம் பிரிந்துபோகும் உரிமையை எந்த நிலையிலும் மறுக்காத விதமாக மேலும் விரிவுபடுத்தபட வேண்டிய தேவையை நாம் எதிர்நோக்குகிறோம். தேசிய இனம் என்ற பதத்தின் பொருளை மேலும் விரிவுபடுத்த வேண்டிய தேவையும் ஏற்படுகிறது. தேசிய இனங்களாக அடையாளங்காண முடியாத ஒடுக்கப்பட்ட சமுதாயப் பிரிவுகளது உரிமைகள் தொடர்பாகவும் தெளிவான கருத்துக்கள் அவசியமாகின்றன. தேச அரசுகள் முக்கியத்துவமிழந்து வரும் புதிய உலக ஒழுங்கில் புதிய சவால்களை நாம் எதிர்நோக்குகிறோம்.

ஒரு தேசிய இனம் ஒரு தேசமாக அல்லது ஒரு தேசிய அரசாக அமைவதற்குச் சில நடைமுறைச் சாத்தியமான தேவைகள் உள்ளன. அதற்குரிய தொடர்ச்சியான ஒரு பிரதேசம் முக்கியமான ஒரு தேவை. அவ்வாறு எப்போதுமே இருக்கவேண்டிய நிர்ப்பந்தம் இருந்ததில்லை.  தேசிய இனப் பிரச்சனை தொடர்பான கொள்கைகள் ஆதிவாதிகள், நாடோடிகள் போன்ற சமுதாயப் பிரிவினரைப் போதிய கணிப்பிலெடுக்கத் தவறியதன் காரணமாக இம் மக்களது உரிமைகள் உலகெங்கும் நாளாந்தம் பறிக்கப்பட்டு வருகின்றன. இலங்கையின் வேடர் சமுதாயத்தின் பிரச்சினையோ நாடோடிகளின் நிலைமையோ தேசிய இனப் பிரச்சினையின் ஒரு பகுதியாகவேனும் இதுவரை கருதப்படாமை கவனிக்கத்தக்கது.

இன்னொரு அம்சம் மிகவும் அடிப்படையானது. ஒரு மக்கள் பிரிவு தேசிய இனமாக அடையாளங் காணப்பட்டால் அதற்குச் சுய நிர்ணய உரிமை உண்டு. சுய நிர்ணய உரிமை என்றாற் பிரிந்து போகும் உரிமை. பிரிந்து போகும் உரிமையைப் பிரயோகிக்கும் வசதி இல்லாத ஒரு மக்கள் பிரிவுக்குச் சுய நிர்ணய உரிமையை அதன் முழுமையான அர்த்தத்தில் அனுபவிக்க முடியாது என்பது உண்மை. அதனால் அவர்கட்குத் தம் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் உரிமையே இல்லை என்றாகிவிடுமா? அக் காரணத்தால் அவர்கள் ஒரு தேசிய இனமாக இல்லாது போய்விடுவார்களா? ஒடுக்கப்பட்ட ஒரு தேசிய இனம் ஒடுக்கப்பட்ட ஏனைய தேசிய இனங்களுக்கான சுய நிர்ணய உரிமையை மறுக்கிற போது, தனது சுயநிர்ணய உரிமையை ஏனைய இனங்கள் ஏற்க மறுக்கிற சூழலை அது உருவாக்குகிறது. இது தீங்கானது. இவை விடுதலைப் போராட்டத்தின் வெற்றிக்கான பாதையில் பாரிய தடைக்கல்லாக அமையக்கூடும்.

நிறைவாக


தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம் இன்று தவிர்க்க இயலாத ஒரு வரலாற்றுத் தேவை. ஆனால் அது ஆயுதம் தாங்கிய போர் என்ற ஒற்றைப் பரிமாணத்திலிருந்து விடுபட வேண்டும். அதைப் பரந்துபட்ட மக்கள் போராட்டங்களாகவும், வெகுசன அரசியல் இயக்கமாகவும் விரிவுபடுத்துவதற்கான வழிகள் தேடப்பட வேண்டும். அதன் மூலமே தமிழ் மக்களிடையே அதிகபட்ச போராட்ட ஒற்றுமையையும் பங்குபற்றலையும் பெற இயலும். தோழர்களும், சமூக அக்கறையும் துணிவுமுள்ள பத்திரிகையாளர்களும் தொழிற் சங்கவாதிகளும் துன்புறுத்துப்படுவது பொது எதிரியின் வலிமையின் அடையாளமல்ல. அவை எதிரியின் இயலாமையின் வெளிப்பாடுகள். அதைக் கண்டு நாட்டின் சனநாயக முற்போக்கு சக்திகள் தயங்கி நின்றால், நாடு ஃபாஸிஸத்தை நோக்கித் தள்ளப்படுவது தவிர்க்க இயலாதது. இந்த நாட்டில் உள்ள மக்களாலேயே நாட்டின் தேசிய இனப் பிரச்சினையையும் மனித உரிமைப் பிரச்சினைகளையும் சனநாயகப் பிரச்சனையையும் தீர்க்க இயலும். வெளியிலிருந்து வரக்கூடிய எந்தக் குறுக்கீடும் பிரச்சினைகளை மோசமாக்குவதுடன் இருக்கிற ஒடுக்குமுறையை விட மோசமான ஒடுக்கு முறைக்கே இட்டுச்செல்லும். இது சோதனை மிகுந்த காலமாகத் தோன்றலாம். ஆனால் இதுவே எதிர்காலத்தின் வெற்றிகட்கான உறுதியான அத்திவாரங்களை இடுவதற்கான காலமுமாகும்.


16/07/2011

இதழ் 10,  செம்பதாகை இதழ்