ஈழ விடுதலைப் போராட்டம்: "துரோகிகளும் இனவிரோதிகளும்"

இலங்கைத் தமிழ் மக்களின் அரசியலில் முதன்முதலில் "துரோகி" என்ற சொல்லை அறிமுகப்படுத்தி வைத்தவர்கள், முதலாளித்துவ நலன்களைப் பிரதிபலித்த "அகிம்சை" தமிழ் பாராளுமன்றத் தலைமைகளே ஆவர். "சமூகவிரோதி" என்ற சொல்லை தமிழ் மக்களின் அரசியலில் அறிமுகப்படுத்தி வைத்தவர்கள் ஈழவிடுதலைப் போராட்ட ஆயுதக் குழுக்களைச் சேர்ந்தவர்களாவர். இலங்கை அரசியலில் முதலாளித்துவ நலன்களைப் பிரதிபலித்த சிங்கள பாராளுமன்ற தலைமைகள் தமது குறுகிய பாராளுமன்ற நலன்களுக்காக சிங்கள பேரினவாதத்தை வளர்த்து மக்களின் வாக்குகளை பெறுவதில் வெற்றி கண்டிருந்தனர். ஆனால் பாராளுமன்ற ஆசனங்களைக் குறிவைத்து அரசியலை மேற்கொண்ட முதலாளித்துவ நலன்களைப் பிரதிபலித்த தமிழ்த் தலைமைகளோ அவர்களின் ஆரம்பகாலங்களில் தமிழ் குறுந்தேசியவாதத்தை வளர்ப்பதில் வெற்றி பெற்றிருந்தபோதும் கூட, பெரும்பான்மையான தமிழ்மக்களின் ஆதரவையோ பெரும்பான்மை தமிழ் மக்களின் வாக்குகளையோ அவ்வளவு இலகுவாகப் பெற்று பாராளுமன்ற ஆசனங்களை கைப்பற்ற முடிந்திருக்கவில்லை.

 

 

 

சிங்கள பெரும்பான்மை இனக்கட்சிகளுடன் இணைந்து போட்டியிட்ட தமிழர்கள் பலர் வடக்கு கிழக்கு தமிழ்ப் பிரதேசங்களில் வெற்றியீட்டிக் கொண்டிருந்தனர். இவர்கள் குறுந்தேசியவாத தமிழ்த் தலைமைகளுக்கு பெரும் சவாலாக விளங்கினர். இதனால் தம்மை "ஜனநாயக" வாதிகளாகவும் "அகிம்சா" வாதிகளாவும் காட்டிக் கொண்ட தமிழ்த் தலைமை தமக்கெதிரான அரசியல் கருத்துக்கொண்டோரை தமது கருத்துக்கள் மூலம் ஒருபோதும் வெற்றி கொள்ள முடியாது எனக் கண்டதால், தமக்கெதிரான கருத்துடையோரையும், தமக்கெதிரான அரசியல் பார்வை கொண்டோரையும் "துரோகிகள்" என்றும் தமிழ்மக்களின் இனவிரோதிகள் என்றும் பிரச்சார மேடைகளில் பேசி "துரோகி" அரசியலை தமிழ்மக்கள் மத்தியில் ஆரம்பித்து வைத்தனர்.

இந்தத் "துரோகி" அரசியல், நிலப்பிரபுத்துவ எச்ச சொச்சங்களுடன் கூடிய " பிற்பட்ட" பொருளாதார, சமூக, அரசியல், கலாச்சாரத்தைக் கொண்ட தமிழ்மக்கள் மத்தியில் இலகுவாகப் பற்றிக் கொண்டதில் வியப்பேதும் இல்லை. குறிப்பாக, தமிழர் விடுதலைக் கூட்டணியினரின் தேர்தல் பிரச்சாரமேடைகள் குறுந்தேசியவெறியை வளர்ப்பதற்கான பாசறைகளாக மாறியிருந்தன. தமிழ் இனம் பற்றிய "ஆண்ட பரம்பரை" ப் பெருமைப் பேச்சுக்களும், சிங்கள இனம் பற்றிய ("சிங்களவரின் தோலில் செருப்புத் தைத்துப் போடும்", "சிங்களவரின் இரத்தத்தில் நீந்தித் தமிழீழம் காணுவோம்") கீழ்த்தரமான வெறியூட்டும் பேச்சுக்களும் தமிழ் இளைஞர்களின் இரத்தத்தை சூடேற்றியது மட்டுமல்லாமல் அவர்களை கூட்டணியினர் "துரோகி" என்று சுட்டிக்காட்டியவர்களுக்கெதிராக செயற்படவும் வைத்தது. இதில் இளைஞர்கள் தனிநபர்களாகவும், சிறுகுழுக்களாகவும், செயற்படலாயினர். தமிழ் மக்கள் குறுந்தேசிய வெறியூட்டப்பட்டு மாற்றுக்கருத்துள்ளோரையும் மாற்று அரசியல் சிந்தனையுடையோரையும் " துரோகி" என முத்திரைகுத்தும் "துரோகி" அரசியலில் வளர்க்கப்பட்டனர். தமிழர் விடுதலைக்கூட்டணியினரின் கருத்துக்களல்லாத, கொள்கைகளல்லாத அனைத்துமே தமிழ்மக்களின் நலன்களுக்கு எதிரானவை, துரோகத்தனமானவை என தமிழர் விடுதலைக் கூட்டணியினர் கற்பித்தனர்.

தமிழர் விடுதலைக் கூட்டணியினரின் இந்தக் கற்பித்தல் பெரும்பலனை தமிழ்மக்களுக்கு கொடுக்காமல் விட்டிருந்த போதும் தமிழர் விடுதலைக் கூட்டணியினருக்கு பெரும்பலனைக் கொடுத்திருந்தது. தமிழர் விடுதலைக் கூட்டணியினரால் "துரோகி" களாக சித்தரிக்கப்பட்டவர்கள், காண்பிக்கப்பட்டவர்கள், தமிழ் இளைஞர்களால் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். இந்தத் "துரோகிகள்" கொலைக் கலாச்சாரம் - "துரோகி" அரசியல் கலாச்சாரம் - யாழ்ப்பாண மேயரும், யாழ்ப்பாணப்பிரதேசத்துக்கான சுதந்திரக்கட்சி அமைப்பாளருமான அல்பிரட் தம்பிராஜா துரையப்பாவை 27-07-1975 இல், அன்று "மீசை கூட முளைத்திராத" சிறுவனாகிய வேலுப்பிள்ளை பிரபாகரன் சுட்டுக்கொலை செய்ததிலிருந்து ஆரம்பமாகியது. வேலுப்பிள்ளை பிரபாகரன் போன்ற "மீசை கூட முளைத்திராத" ஆயிரக்கணக்கான தமிழ் இளைஞர்களின் இரத்தத்தை சூடேற்றியதில் தமிழர் விடுதலைக் கூட்டணியினர் வெற்றி பெற்றனர்.

தமிழர் விடுதலைக் கூட்டணியினரால் "துரோகி" யாக சித்தரிக்கப்பட்ட யாழ்ப்பாண மேயர் அல்பிரட் துரையப்பா கொலையால் தமிழர் விடுதலைக் கூட்டணியினர் புளகாங்கிதம் அடைந்தனர். தமது "ஜனநாயக" வழியிலான பாராளுமன்ற ஆசன அரசியல் பாதையை "துரோகி" அரசியல் அகலத்திறந்து விடுவதைக் கண்டனர். யாழ்ப்பாண மேயர் அல்பிரட் துரையப்பாவிடம் காணப்பட்ட மாற்று அரசியல் கருத்து மட்டுமே அவர் "துரோகி" எனச் சித்தரிக்கப்பட்டு கொலை செய்யப்படுவதற்கு ஒரே காரணமாய் அமைந்திருந்தது. அல்பிரட் துரையப்பா கொலையால் விளைந்த பயன்களை அறுவடை செய்த தமிழர் விடுதலைக் கூட்டணியினர் " துரோகி" அரசியல் தமது எதிர்காலத்துக்கு – தமிழ் மக்களின் எதிர்காலத்துக்கு அல்ல – அத்தியாவசியமானதும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட வேண்டியதொன்றும் என உணர்ந்தனர். தமிழர் விடுதலைக் கூட்டணியினரால் தொடர்ச்சியாக "துரோகிகள்" சுட்டிக்காட்டப்பட்டு அவர்கள் அழித்தொழிக்கப்பட்டனர் அல்லது துப்பாக்கிக் குண்டுகளுக்கு அஞ்சி அரசியல் அரங்கிலிருந்து வெளியேறினர். ஜக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த பொத்துவில் எம்.பி கனகரட்ணம், சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த வட்டுக்கோட்டை எம்.பி தியாகராசா, சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த நல்லூர் எம்.பி அருளம்பலத்தின் காரியதரிசி தங்கராசா(கோண்டாவில்), ஜக்கிய தேசியக் கட்சியின் வவுனியா அமைப்பாளர் புலேந்திரன், ஜக்கிய தேசியக் கட்சியின் யாழ்ப்பாண அமைப்பாளர் ராஜசூரியர் ஆகியோர் தமிழர் விடுதலைக் கூட்டணியினரின் "துரோகி" அரசியலில் பலி கொள்ளப்பட்டனர். சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த நல்லூர் எம்.பி அருளம்பலம் கொலைமுயற்சியிலிருந்து தப்பியபின்னர் அரசியல் அரங்கிலிருந்து வெளியேறினார்.

மேயர் அல்பிரட் துரையப்பாவும், கொலை செய்யப்பட்ட ஏனைய பாராளுமன்ற அரசியல்வாதிகளும் துரோகிகளா?

மேயர் அல்பிரட் துரையப்பா

வட்டுக்கோட்டை எம்.பி தியாகராசா

இந்தக் கேள்வி, இன்றைய காலகட்டத்தில் - தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமை முள்ளிவாய்க்காலில் தோல்வியைத் தழுவிய பின்னான காலகட்டத்தில் - தமிழ் மக்கள் மத்தியில் எழுப்பப்பட வேண்டியதொன்றாகும், விவாதிக்கப்பட வேண்டியதொன்றாகும், விடைகாணப்பட வேண்டியதொன்றாகும். இத்தகையதொரு கேள்வி தமிழ் மக்களிடத்தில் எழுப்பப்படாவிடில், விவாதத்துக்கு உள்ளாக்கப்படாவிடில், இதற்கான விடை காணப்படாவிடில், தமிழ்மக்கள் தமது அரசியலில் கானல் நீரை நோக்கி ஓடுபவர்களாகவே இருப்பர் என்பதில் சிறிதும் ஜயமில்லை. வட்டுக்கோட்டைத் தீர்மானமும் அதன் பின்னரான தமிழர் விடுதலைக் கூட்டணியினரின் "தமிழீழமே தமிழர்களுக்கான ஒரே தீர்வு" என்ற எழுச்சிப் பிரச்சாரங்களும் தென்றலுடன் கலந்துவந்து எமது காதுகளில் தேனாக இனித்திருந்த காலமது. "உதய சூரியன் கிழக்கில் உதிக்கும், தமிழீழம் நாளை மலரும்" என தமிழர் விடுதலைக் கூட்டணியினர் வானதிர முழங்கிய காலமது. தமது கருத்துக்களுக்கு மாற்றான கருத்துள்ளவர்கள், தமது அரசியலுக்கு மாற்றான அரசியல் வழிமுறை கொண்டவர்கள் அனைவரும் "துரோகிகள்" எனவும், தமிழ் சமூகத்திலிருந்து பிடுங்கி எறியப்படவேண்டிய களைகள் எனவும் பிரச்சார மேடைகளில் பகிரங்கமாகப் பேசி "துரோகிகள்" பட்டியல் போட்ட காலமது. தமிழர் விடுதலைக் கூட்டணியினரின் உணர்ச்சி பொங்கும் " தமிழீழம்" குறித்த மேடைப் பேச்சுக்களை முன்வரிசையிலமர்ந்து ஆவலுடன் செவிமடுத்து வந்த பாடசாலை மாணவனான நானும் என் போன்ற ஆயிரக்கணக்கான மாணவர்களும் இளைஞர்களும், தமிழர் விடுதலைக் கூட்டணியினரால் "துரோகி" களாக சுட்டிக்காட்டப்பட்டவர்கள் தமிழ் சமூகத்திலிருந்து களையெடுக்கப்பட வேண்டும் என்ற கருத்தில் உடன்பாடு கொண்டவர்களாகக் காணப்பட்டோம்.

அன்றைய காலகட்டத்தில் அரசியல் என்றாலே தமிழரசுக்கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணியினரின் மேடைப்பேச்சே அரசியல் என்றறிந்திருந்த எமக்கு கூட்டணியினரின் மேடைப் பேச்சுக்கள் தமிழ்மக்களின் உண்மையான விடுதலையின்பாலான விமோசனத்தின்பாலான பேச்சுக்களாகவே இனம் கண்டோம். யாழ்ப்பாண மேயர் அல்பிரட் துரையப்பா கொலை செய்யப்பட்டபோது "தமிழர்களின் துரோகி கொல்லப்பட்டு விட்டான்" என மாணவர்கள், இளைஞர்கள் உட்பட தமிழ் மக்களில் பெரும்பான்மையோர் பெருமைப்பட்டுக் கொண்டனர். தொடர்ச்சியாக "துரோகிகள்" கொன்றொழிக்கப்பட்டனர். தமிழ் சமூகத்தில் இருந்து களைகள் பிடுங்கி எறியப்படுவதாக மகிழ்ச்சி அடைந்தோம். இந்த "துரோகி" ஒழிப்பை அல்பிரட் துரையப்பாவில் ஆரம்பித்து வைத்த வேலுப்பிள்ளை பிரபாகரன் உட்பட இது போன்ற செயல்களில் ஈடுபட்ட தனி நபர்களும் "ஹீரோ"க்களாக தமிழ் சமூகத்தாலும் இளைஞர்களாலும் பார்க்கப்பட்டனர். அல்பிரட் துரையப்பாவில் கருவுற்ற "துரோகி" ஒழிப்பு அரசியல் ஈழ விடுதலைப் போராட்ட இயக்கங்களுக்குள் மாற்று கருத்துடையோரை "துரோகி"களாக்கி அழிப்பதிலும், பின்னாட்களில் தமிழீழ விடுதலைப்புலிகளால் தாமல்லாத, தமது கருத்துக்களுடன் உடன்படாதவர்களை "துரோகி"களாகக் காட்டி அழிப்பதென முள்ளிவாய்க்கால் வரை நீண்டு சென்ற வரலாறாகியது. எழுபதுகளிலும் எண்பதுகளின் ஆரம்பத்திலும் நாம் பாடசாலை மாணவர்களாக, இளைஞர்களாக இருந்தோம். தமிழர் விடுதலைக் கூட்டணியினரின் பேச்சுக்கள் எமக்கு வேத வாக்காக இருந்தன. இதில் ஆச்சரியப்படுவதற்கு எதுவுமில்லை. இளமையின் துடிப்பும், வேகமும், அரசியல் என்றால் என்ன வென்று தெரியாத நிலை, அனுபவ முதிர்ச்சியின்மை என்பவை இதற்கு காரணமாக இருந்தன

ஆனால் கடந்தகால எமது ஈழவிடுதலைப் போராட்ட அனுபவங்களுக்குப் பின்பும், தமிழ் மக்கள் அதிகளவில் புலம் பெயர்ந்து வாழும் மேற்கு ஜரோப்பிய, வட அமெரிக்க நாகரீக சமுதாயத்தின் அரசியல், சமூக, கலாச்சார விழுமியங்களை நாம் நடைமுறையில் கண்டுணர்ந்த பிற்பாடும், தம்மை "முன்னேறிய பிரிவினர்" என அழைத்துக் கொள்வோரில் ஒரு பகுதியினர் - ஒரு பகுதியினர் மட்டுமே – தமது இரத்தத்துடனும் சுவாசத்துடனும் கலந்துவிட்ட "துரோகி" அரசியலிலிருந்து துண்டித்துக்கொள்ள முடியாதவர்களாகக் காணப்படுகின்றனர் என்பது கசப்பான ஒரு உண்மையாகும்.

"துரோகி" அரசியல்: மேற்கு ஜரோப்பிய, வட அமெரிக்க நாகரீக சமுதாயத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியதென்ன?

மேற்கு ஜரோப்பிய, வட அமெரிக்க நாகரீக சமுதாயத்தின் அரசியல், சமூக, கலாச்சார விழுமியங்களைப் பற்றிய புரிதலைப் பெறுவதற்கு வட அமெரிக்க நாடான கனடாவின் உதாரணத்தை எடுத்துக்கொள்வது போதுமானதாக இருக்கும் என நினைக்கின்றேன்.

கனடாவில் "செவ்விந்தியர்" அல்லது "பூர்வீகக் குடிகள்" என அறியப்பட்டவர்கள் ஆயிரக்கணக்கான வருடங்களாக வசித்துவந்திருந்த போதும் கனடா ஒரு குடியேற்ற நாடாகவே உலக அரங்கில் அறியப்பட்டுள்ளது. ஜரோப்பிய குடியேற்ற வாசிகளின் வருகையைத் தொடர்ந்து (1497 முதல் ஆயிரக்கணக்கில் ஆங்கிலேயரின் வருகை; 1790 முதல் ஆயிரக்கணக்கில் பிரஞ்சுக்காரரின் வருகை) இன்றைக்கு நாமறிந்த கனடா எனும் நாட்டின் பல்வேறு மாகாணங்களும் வளர்ச்சியடையத் தொடங்கின. இதில் கியூபெக் மாகாணம் பிரெஞ்சு மொழிபேசும் மக்களை பெரும்பான்மையாகக் கொண்டதாகவும், நியூபிரன்ஸ்விக் மாகாணம் ஆங்கிலம் பிரெஞ்சு ஆகிய இரு மொழிகளையும் பேசும் மாகாணமாகவும், ஏனைய மாகாணங்கள் ஆங்கில மொழியை பேசுவோரை பெரும்பான்மையாகக் கொண்டதாகவும் விளங்கின. ஜரோப்பிய குடியேற்றவாசிகளின் வருகையிலிருந்தே இன்றைய ஒவ்வொரு மாகாணங்களும் தனித்தனியான, சுயாட்சியுடைய அரசுகளாக, நிர்வாக அலகுகளைக் கொண்டதாகவே செயற்பட்டுவந்த அதேவேளை பொருளாதார ரீதியிலும், அரசியல் ரீதியிலும் பலம் பெற்று வளர்ந்து வந்தன. மாகாணங்களின் முதலாளித்துவ வளர்ச்சியும், அவற்றின் முன்னேற்றமும் உறுதியானதும் பலமானதுமான ஒரு மத்தியப்படுத்தப்பட்ட அரசை வேண்டி நின்றது.

இதனால் ஏற்கனவே தனித்தனியே நிலவிய சுயாட்சி கொண்ட மாகாண அரசுகளான ஒன்றாறியோ, கியூபெக், நியூபிரன்சுவிக், நோவாகொசியா ஆகிய நான்கு மாகாணங்களும் எந்தவித நிர்ப்பந்தமுமின்றி, மக்களின் சுயவிருப்பின் அடிப்படையில் DOMINION OF CANADA என 1867 இல் ஒன்றிணைந்து இன்றைய கனடாவுக்கு அடிக்கல் நாட்டி வைத்தனர். இந்த நான்கு மாகாணங்களும் ஒன்றிணைந்ததால் மக்களுக்கு ஏற்பட்ட அனுகூலங்களைக் கண்ட ஏனைய மாகாணங்களும் தமது சுயவிருப்பின் பேரில் DOMINION OF CANADA வில் ஒன்றிணையத் தொடங்கின. 1905 ம் ஆண்டு சஸ்கச்சுவான், அல்பேட்டா மாகாணங்கள் ஒன்றிணைந்தபோது அனைத்து மாகாணங்களும் ஒன்றிணைந்த ஒரு பலமான கனடா நாடு உருவானது. ஆனால் 1869 இல் தமது சுயவிருப்பில் DOMINION OF CANADA வில் இணைந்துகொண்ட பிரெஞ்சு மொழியைப் பேசும் கியூபெக் மக்கள் தாம் தாம் பெரும்பான்மையான ஆங்கிலம் பேசும் மக்களைக் கொண்ட கனடாவிற்குள் மொழிரீதியாக, பொருளாதாரரீதியாக, அரசியல் ரீதியாக, கலாச்சார ரீதியாக நசுக்கப்படுவதாக உணரத்தலைப்பட்டனர்.

இதனால் "கியூபெக் கட்சி" என்ற கட்சியை உருவாக்கி தாம் கனடாவில் இருந்து பிரிந்து போவதற்கான வேலைத்திட்டங்களையும் பிரச்சாரங்களையும் மேற்கொண்டனர். கனடாவில் உள்ள ஜந்து பிரதான கட்சிகளான கன்சர்வேட்டிவ் கட்சி, லிபரல் கட்சி, புதிய ஜனநாயகக் கட்சி, கியூபெக் கட்சி, கிறீன் கட்சி போன்ற ஜந்து கட்சிகளிலும் பிரெஞ்சு மொழி பேசும் கியூபெக் மக்கள் அங்கம் வகிக்கின்றனர். கனடாவின் மிகவும் பிரபல்யம் வாய்ந்த பிரதம மந்திரிகளும் அமைச்சர்களும் பிரெஞ்சு மொழி பேசும் கியூபெக்காரர்களாக இருந்துள்ளனர், இருந்தும் வருகின்றனர். பாராளுமன்றத்துக்கான தேர்தல்களின் போது கட்சிகள் தமது அரசியல் கொள்கைகள், வேலைத்திட்டங்களை முன்வைத்து பிரச்சாரங்களில் ஈடுபடுகின்றனர். பிரெஞ்சு மொழி பேசும் கியூபெக் அரசியல்வாதிகள் மாற்றுக்கட்சிகளில் அங்கம் வகிக்கும் கியூபெக்கர்களையோ, கனேடிய அரசில் அங்கம் வகிக்கும் கியூபெக்கர்களையோ அரசியல் கருத்துக்கள் மூலமும், கொள்கைகள் வேலைத்திட்டங்கள் மூலமே எதிர்கொள்கின்றனர். அனைத்துக் கட்சிகளிலும் அங்கம் வகிக்கும் கியூபெக்கர்கள், அவர்களின் தலைவர்கள் ஒரே மேடையில் பகிரங்கமாக தமது கருத்துக்களை முன்வைத்து வாதிடுகின்றனர். பாராளுமன்றத் தேர்தலில் தோல்வி கண்டவர்கள் தமது தோல்வியை ஒப்புக் கொண்டு வெற்றி பெற்றவரை வாழ்த்தி வழிவிடுகின்றனர். கனடாவில் இருந்து பிரிந்து சென்று தனியரசு அமைக்க கியூபெக் மக்கள் ஜனநாயகரீதியில் இரண்டு தடவை கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பு நடத்தினர். 1980 ம் ஆண்டில் நடைபெற்ற கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பில் பிரிந்து செல்வதற்கு ஆதரவாக 40 வீத வாக்குகளைப் பெற்றும், 1995 ஆம் ஆண்டு நடைபெற்ற கருத்துக்கணிப்பில் பிரிந்து செல்வதற்கு ஆதரவாக 49 வீத வாக்குகளைப் பெற்றும் தோல்வியடைந்தனர். ஆனால் இந்தத் தோல்விகளுக்குப் பின்பும் கியூபெக் அரசியல்வாதிகளோ, அல்லது கியூபெக் மக்களோ இதுவரை யாரையும் சுட்டுவிரலைக்காட்டி "துரோகி" என குறிப்பிட்டது கிடையாது. ஏன்? இதுதான் கல்வியில் வளர்ச்சியடைந்த, கலாச்சாரரீதியில் வளர்ச்சிபெற்ற, அரசியலில் முதிர்ச்சியடைந்த, ஜனநாயக விழுமியங்களைப் பின்பற்றுகின்ற கலாச்சாரத்தை கொண்ட பிரெஞ்சு மொழிபேசும் கியூபெக் மக்களின் பண்பாடும், இவர்களிடமிருந்து தமிழ் சமுதாயமும், தமிழ் அரசியல்வாதிகளும் கற்றுக்கொள்ள வேண்டியது நிறையவே உண்டு.

 

தொடரும்.

 

1. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 1

2. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 2

3. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 3

4. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 4

5. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 5

6. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 6

7. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 7

8. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 8

9. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 9

10. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 10

11. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 11