எங்கேயப்பா போட்டு வாறையள்….

எத்தனை தரம் ரெலிபோன் எடுத்தனான். என்னத்துக்குத் தான் இந்தக் கண்டறியாத ரெலிபோனைக் கொண்டு திரியிறையளோ. ஒரு அந்தர ஆபத்துக்கு தொடர்புகொள்ள முடியாமல் கிடக்கு…

வரவேற்பு நல்ல அமர்களமாய் இருந்தது. எத்தனை தரம் சொல்லியிருப்பேன் வேலையால் களைச்சு வரும் போது உடனே ஒன்றும் கதைக்காதையுங்கோ என்று. யாரும் கேட்டால் தானே…

ஒருவாறு கோபத்தை அடக்கிய படியே சோபாவில் அமர்ந்து கொண்டேன்.

கொக்கா நாலு… ஜஞ்சு தரம் ரெலிபோன் எடுத்தவ….. ஏதோ அலுவல் போலிருக்கு. எனக்கொன்றும் சொல்லவில்லை உங்களை உடனடியாக வரட்டாம்…என்றும், ஆனால் அவவின் கதையிலே உசாரைக் காணவில்லை, முன்பென்றால் வலு சந்தோசமாயக் கதைக்கிறவ….. என்னவோ தெரியவில்லை… எதுக்கும் ஒருக்கா கெதியாப் போட்டு வாங்கோ… என்றபடி பக்கத்தில் தேத்தண்ணியை வைத்து விட்டு குசினிக்குள் போய் மறைந்து கொண்டாள்.

என்ன குடியே முழுகிப் போய்ச்சு…..

ஏதோ அம்மாவிற்கு காசு அனுப்ப வேண்டும் போலிருக்கும் இல்லாவிட்டால் சொந்தக்காரர் ஏதும் உதவி கேட்டு வந்திருப்பினம். வேறு என்ன பெரிசா ஒன்றும் இருக்காது, அப்படி ஏதும் அவசரம் என்றால் இங்கே சொல்லியிருப்பா… தானே… என நினைத்தபடி அப்படியே சோபாவில் அயர்ந்து சரிஞ்சு விட்டேன்.

என்ன பிரச்சினை என்றாலும் நல்லதோ கெட்டதோ  அந்தப்பிரச்சினை தீரும் வரை ரெலிபோன் அடித்துக் கொண்டே இருப்பாள்.

ஏதோ நல்ல காலம். அக்காவும் அத்தானும் பிள்ளைகளும் எங்களுக்குப் பக்கத்தில் இருப்பதால் ஒருவருக்கொருவர் நல்ல உதவி. மற்றச் சகோதரர்கள் போல் சண்டைப்பட்டு இருக்கக் கூடாது என்பதற்காக ஒரு நகரத்திலே இருந்தாலும், கிட்ட இல்லாமல் கொஞ்சம் தள்ளியே இருக்கிறேன்.

நல்ல கால நிலையாக இருந்ததால் நடந்தே அவள் வீட்டுக்குப் போனேன். முகமெல்லாம் வாடி சோர்ந்து குறுகிப் போய் ஏதோ வருத்தக்காறி போல் துவண்டு நின்றபடியே என்னை வரவேற்றாள்.

என்ன ஏதோ அவசரமாய் வரச் சொன்னனீயாம்….அப்படி என்ன.. என்றபடி சோபாவில் அமர்ந்து கொண்டேன்.

வாயிலே கையை வைத்தபடி சத்தம் போட்டுக் கதைக்காதே என்ற சிக்கினலைத் தந்தபடியே திறந்திருந்த அறைக்கதவுகளைச் சாத்திவிட்டு மீண்டும் வந்து அமர்ந்து கொண்டாள்.

எங்கே பிள்ளைகள் என வினவ.. முத்தவள் அறையிலே இருக்கிறாள் என்றும் அவன் விளையாடப் போனவன் இப்ப வருகிற நேரமாச்சு என்றும் கடைசியும் அறையுக்குள்ளே நின்று கேம் விளையாடுகிறான் என்றும் பதிலுரைத்தாள்.

என்னக்கா என்ன…? அத்தானுடன் ஏதும் பிரச்சினையே….? அவசரமாய் வரச் சொன்னனியாம்…

நேற்றுப் பிடிச்சு நான் நித்திரையும் இல்லாமல் நிம்மதியும் இல்லாமல் சாப்பிடக் கூட மனமில்லாமல் திரியுறன். ஒரு கையும் ஓடலே… காலும் ஓடலே….

அது தான் என்னென்று சொல்லன் அக்கா… எனக்கும் மிக அந்தரமாயும், உடனே அறிய வேண்டும் போலும் இருந்தது.

நான் அவருக்கக் கூடச்  இன்னும் சொல்லவில்லை. அறிஞ்சா கொண்டு தொலைத்துப் போடுவார், என்று ஒரு தயக்கத்துடன்  தலையைத் தொங்கப் போட்டுக் கொண்டாள்.

ஏதோ சொல்ல முடியாத பிரச்சினை ஒன்று அவள் மனதில் இருந்து குமைகின்றது என்பதை மட்டும் என்னால் ஊகிக்க முடிந்தது.

ஏதோ ஒரு குண்டைத் தூக்கிப் போடப் போறாள்… அது என்ன குண்டோ…. யார் தலையில் விழப்போகின்றதோ என்பது தான் தெரியாமலும் இருந்தது.

அவளைப் புரிந்தவளாய் நானும் கொஞ்ச நேரம் மௌனம் காத்தேன்

கடைசிப் பொடியனின் கேம் விளையாட்டின் சத்தம் கொஞ்சம் பலமாய்க் கேட்கிறது.

தம்பி…நேற்று……இவள் பெரியவள் அறையினுள் ஏதோ எடுக்கவென்று போனனான், அவளும் எதிர்பார்த்திருக்க மாட்டாள். அவள் கொம்பியூட்டரில்…ஏதோ ஆபாசப்படம் போலே ஒன்று பார்த்துக் கொண்டிருந்தாள். நான் திகைச்சுப் போனேன். எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. இருந்தும் கண்டும் காணது போல் அப்படியே உடனே வெளியேயும் வந்து விட்டேன், எனச் சொல்லி விட்டு கண்கள் பனித்தபடி ஒன்றுமே பேசாது நின்றாள்.

யாரும் அறிஞ்சா எங்கடை குடும்ப கௌரவம் மானம் மரியாதை எல்லாம் போய் விடும், நினைக்க நினைக்க வேதனையாகவும்; விரக்தியாகவும் இருக்கு. அது தான் உனக்கு எடுத்தனான்.

எனக்கும் இதயம் திக்திக்கென்று அடித்துக் கொண்டது. என்ன தான் இருந்தாலும் என் அக்காவின் மகள் அல்லவா. தூக்கி கொஞ்சி விளையாடிய என் செல்லக் குழந்தை. என்னை மாமனாக்கிய முதல் மருமகள்;. எங்கள் குடும்பத்தின் முதல் வாரிசு. மனம் நொந்து கொண்டேன்.

இருந்தாலும் ஒருவாறு சுகாரித்துக் கொண்டு… அக்காவையும் கவலைப்பட விடக் கூடாது என்பதையும் மனதிற் கொண்டு   ம்…ம்….ம்… இது தானா… நான் ஏதோ பெரிய பிரச்சினை என்று பயந்தே போனேன். இதுக்குப் போய்… இருந்தாலும் இதைச் சின்னப் பிரச்சினை என்று எடுத்துக் கொள்ளவும் முடியாது எனச் சமாளித்த வாறு…

அக்கா ஒரு நல்ல விசையம்.. நீ கண்டு கொண்டாலும் அது பற்றி அவளுடன் ஏதும் கதையாது காட்டிக் கொள்ளாது வந்தது மிகவும் ஆரோக்கியமானதும் புத்திசலித்தனமானதும். அப்படிக் கதைச்சு சண்டைப்பட்டிருந்தால் அவளை ஒரு உளவியல் பாதிப்புக்கு ஆளாக்குவதோடு, அவளை எங்களிடமிருந்தும் எங்கேயோ அந்நியப்படுத்தியிருப்பாய். ஆனால் நல்லது நீ அப்படி நடந்து கொள்ளாதது.

தன் கண்களைத் துடைத்தபடியே என்னை நிமிர்ந்து பார்த்தாள். பெரிய எதிர்பார்ப்புடனும் ஒரு பதிய நம்பிக்கைக்காகவும் ஏங்குபவள் போல் என்னை உற்றுப் பார்த்தபடியே இருந்தாள்.

அக்கா இன்று இந்த குழந்தைகளையும் கொம்பியூட்டரையும் பிரிக்க முடியாத அளவிற்கு விஞ்ஞானமும் உலகமும் வளர்ந்து விட்டது. இதற்கான தேவைகளும் கூடி விட்டது. கல்வி பொருளாதாரம் அரசியல் என்று அனைத்துத் துறைகளிலும் இந்தக் கொம்பியூட்டரின் ஆதிக்கமும் வளர்ச்சியும் கூடிக்கொண்டே போகும் நிலையில் பள்ளிக்கூட படிப்பு வீட்டு வேலைகள் என்றும் கொம்பியூட்டாரானது தவிர்க்க முடியாதுள்ளது.

நிலமையும் உலகமும் அப்படி மாறிவிட்டது. இதிலே எங்களுடைய பிள்ளைகளும் விதிவிலக்கானவர்கள் அல்ல.  படிப்புக்காகத் தான் அல்லது பொழுது போக்கிற்காகத் தான்  என்றாலும் முளுநேரமும் அதனோடு இருந்து அடிமையாவதற்கு அனுமதிக்கக் கூடாது.

இன்றைய பிள்ளைகள் உந்தக் கொம்பியூட்டரை இருபத்தினாலு மணி நேரமும் கட்டிப்பிடிச்சுக் கொண்டு கிடப்பதாலே அன்பென்றால் என்ன பாசமென்றால் என்ன உணர்ச்சிகள் அற்ற வெறும் சடங்கள் போலவே வாழ்வதோடு வெளியிலே போய் ஓடியாடி விளையாடாமல் வீட்டுக்குள்ளேயிருந்து மந்தமாகி, வருத்த துன்பங்களுக்கும் ஆளாக வேண்டி வரும் அபாய நிலைக்கே தள்ளப்படுவார்கள்

இன்றைக்கு இந்த இணையத் தளங்கள் என்றால் என்ன என்பது  பற்றிய அறிவும் உங்கே என்ன தான் நடக்குது என்று பெரும்பாலான பெற்றோர்கள் இது பற்றித் தெரிந்திருப்பதில்லை. ஏதோ கொம்பியூட்டரில் பிள்ளைகள் இருந்தால் படிச்சுக் கொண்டு தான் இருக்குதுகள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவ்வளவுக்கு பிள்ளையளின் மேல் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள்.

அது நல்லது அப்படித்தான் இருக்கவும் வேண்டும். ஆனால் இடைக்கிடை தெரிந்தும் தெரியாதது போல அவர்கள் மேல்கண் வைத்திருக்கவும் வேண்டும்.

ஓன்றுமே பேசாது வாயடைத்துப் போனவளாய் மௌனம் காத்துக் கொண்டாள்.

ஏதோ செய்யாத பிழை ஒன்றைச் செய்து விட்டவள் போல் தலையைக் குனிந்து கொண்டு இது பற்றி யோசியாமல் இருந்து விட்டேனே என்றும் வேதனை கொண்டாள்.

அவள் ஏதோ சொல்ல வாயெடுத்தாள்… ஆனால் முடியாமல் நீயே… சொல் என்ற மாதிரி என்னையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

அக்கா…… இதை விட மிகவும் முக்கியமானது இந்தப் பதின்ம வயதுப் பிள்ளைகளுடன் இந்த வயதில் ஏற்படும் உடல்ரீதியான உளரீதியாக மாற்றங்கள் பற்றியும் இந்த வயது நிலையில் ஏற்படும் கோளாறுகள் பற்றியும் கதைக்க வேண்டும்.

பெற்றோர்களாகிய நீங்கள் தான் பாலியல் சம்பந்தமான பிரச்சினைகளையும் அதன் நன்மை தீமைகள் பற்றியும் எடுத்துரைத்து தெளிவுபடுத்த வேண்டும். அதிலும் குறிப்பாக பெண்பிள்ளைகளுடன் தாய்மாராகிய நீங்கள் தான் மனம் விட்டும் வெளிப்படையாகவும் கதைக்க வேண்டும்.

செக்ஸ் என்பது ஒரு குற்ற உணர்வு…அது பற்றிக் கதைக்கக் கூடாது.. எங்களுடைய கலாச்சாரத்திலே இதுவெல்லாம் எங்கேயோ மறைத்து வைக்கப்பட்ட விடையங்கள்.. என்றும், தாய் பிள்ளைகள் இது பற்றிக் கதைக்கலாமா….? என்று நீயும் உன்னைப் போன்ற பெற்றோர்களும் நினைப்பார்களாக இருந்தால் இன்னும் சொல்ல முடியாத நினைக்க முடியாத பல கஸ்ரங்களை பெற்றார்களாகிய நாங்களெல்லாம் சந்திக்க வேண்டி வரும்.

எங்களின் குழந்தைகள் தானே என நினைத்துக் கதைப்பதன் மூலம் தான் அவர்கள் முறை தவறிப் வழிதவறிப் போகாமலும் இருக்க வாய்ப்புக்கள் அதிகமாகும். இங்கே நிறையப் பிள்ளைகள் இரட்டை வாழ்வு தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். வீட்டுக்குள்ளே ஒரு மாதிரியும் வெளியிலே இன்னொரு மாதிரியும், இது தவிர்க்கவும இயலாதுள்ளது.

நாங்கள் ஊரில் வாழ்ந்த வாழ்வு போலல்ல இந்த வெளிநாட்டு வாழ்க்கை முறைகள். அல்லது அப்படியான கால நேரங்களுமல்ல. நாங்கள் விரும்பியோ விரும்பாம்பலோ கூடாது என நினைக்கும் அனைத்து குப்பை கூழங்களும் எம் வீட்டைத் தேடி தானே வந்து கொண்டு தான் இருக்கின்றது. பிள்ளைகள் படிப்பு அல்லது விளையாட்டு என இருந்தாலும் இந்த வயது வந்தவர்களுக்கான என்ற இணையத் தளங்கள் தானாய் வந்து திறந்து கொள்ளும் வாய்ப்புக்கள் நிறையவே இருக்கின்றது.

இது வியாபார உலகமக்கா… இவங்கள் தங்கள் விளம்பரங்களுக்காகவும் விற்பனைகளுக்காகவும் இப்படியெல்லாம் செய்து வைத்திருப்பதனால் ஒன்றுமே தெரியாத இந்த அப்பாவிக் குழந்தைகள் இதிலே போய் மாட்டிக்கொள்ளுகின்றார்கள். பின்னர் சில பேர் அதிலேயே மூழ்கிப் போய் அடிமையாகின்றார்கள். இது தான் உண்மையும் கூட.

இப்பொழுது இவைகளை நிவர்த்தி செய்வதற்கான தொழில்நுட்ப முறைகளும் வந்துள்ளது. பின்னர் அதைக் குழப்ப இன்னொன்றும் வரும். இது தான் இன்றைய உலகம்.

என்னடா சும்மா என்னைப் போட்டுக் குழப்புகிறாய். நீ சொல்லச் சொல்ல எனக்கு என்னென்று தான் இதுகளைக் கொண்டிழுக்கப் போறேனோ…தெரியவில்லை. கண்டறியாத உலகத்திலே இருந்து கொண்டு….. மனம் சலித்தவளாய்.. குறைபட்டுக் கொண்டாள்.

நீயேன் சும்மா சலித்துக் கொள்ளுகிறாய்….சும்மா வெறும் சமூகத்தையும் மட்டுமே குறை சொல்ல முடியாது. பெற்றோராகிய உன்னிலேயும் தான் நிறையப் பிழைகள் இருக்கின்றது. அதை நீ  கடைசி வரையும் ஏற்றுக் கொள்ள மாட்டாய் என்று தெரியும், ஆனால் உண்மையும் கூட அது தான்.

ஓன்றும் சொல்ல முடியாதவளாய் என்னை முறைச்சுப் பார்த்தாள். கோபம்  கொள்ள திராணியற்று.. ஏக்கத்துடன் பாத்தாள்

அக்கா உனக்கு நான் எத்தனை தரம் சொல்லியிருப்பேன் இவளை வெளியிலே இடைக்கிடை விடுவிடு என்றும், மற்றவர்களோடு பழகவிடு என்றும்.

வெள்ளைக்காரப் பிள்ளையளோடு விளையாடப் போனால் கண்டதையும் பழகிக் கெட்டுப் போடுங்கள் என்றாய். எங்களுடைய மற்றப் பிள்ளைகளுடன் விளையாடப் போனால் அவை அது என்றும், இவை இது என்றும் வீட்டுக்குள்ளே வைச்சு அடைச்சு வைத்தாய்.

அவளும் சினேகிதம் என்று ஒருத்தரும் இல்லாமல் வெளியிலே போய்வர நட்புக்களும் இல்லாவிட்டால் இப்படியான பிரச்சினைகளில் தான் போய் மாட்டிக் கொள்ள வாய்ப்புக்கள் ஏற்படும்.

வெறும் மதிப்பெண்கள் எடுப்பதிலே மாத்திரம் தான் கவனம் இருக்க வேண்டும் என்றும் அதுவும் மற்றவர்களை விட கூட எடுக்க வேண்டும் என்றும் அவளைப் படி படி என்று ஆக்கினைப்படுத்தும் நீயோ அல்லது உன்னைப் போன்ற பெற்றோர்களோ… இந்தக் குழந்தைகளுக்கும் வேறு விருப்பங்கள் வெறுப்புக்கள் இருக்கின்றது என்பதையும் மனதில் வைத்துக் கொள்ள  வேண்டும்.

இன்றைக்கு இவள் வயதொத்த மற்றப் பிள்ளைகள் தங்கள் வயதொத்த எதிர்பாலருடன் கைகோத்தும் இரவு பகலென்றும் பொழுது போக்கென்றும் திரிவது கூட எங்கள் பிள்ளைகளுக்கு பெரிய பாதிப்புக்களை ஏற்படுத்தலாம்.

அப்படித் திரிய அனுமதிக்க வேண்டும் எனச் சொல்ல வரவில்லை. ஆனால் அவர்களின் சில விருப்பு வெறுப்புக்களுக்கு சில வரையறைகளுடன் விளக்கங்கள் கொடுத்தும் அவர்களை அனுமதிப்பதே நல்லது.

இல்லை தெரியாமல் தான் கேட்கிறன் பிள்ளை யூனிவசிற்றி என்று வெளியிலே படிக்கப் போனால் அதுகள் தனிச்சுத் தான் இருக்கப போகுதுகள்… நாங்கள் எல்லாம் ஒவ்வொரு நாளும் போய் என்ன செய்யினம் என்று பார்த்துக் கொண்டு தான் இருக்க முடியுமோ… அல்லது அதுகளைக் கட்டுப்படுத்தத் தான் முடியுமோ….

ஏன்னக்கா நான் ஏதோ சொல்லிக் கொண்டிருக்கிறேன்.. ஒன்றும் பேசாது இருக்கிறாய்.

என்னத்தைச் சொல்ல… அங்கே தான் எல்லாவற்றையும் பறிகுடுத்துதிட்டு வந்து இங்கே வாழலாம் என்று நினைச்சுக் கொண்டிருக்க, கடைசியிலே இங்கே எல்லாவற்றையும் பறிகொடுத்து விடுவேனோ என்று பயமாயிருக்கிறது.

இப்ப தானே உந்தக் கண்டறியாத சண்டை முடிஞ்சு போச்சு….  அங்கே போய் இதுகளைக் கூட்டிக் கொண்டு போய் ஊரிலே இருக்கலாம் போல் தோன்றுகிறது, அது தான் யோசிக்கிறேன். என்றாள்.

அக்கா உன்னை நினைக்க எனக்கு சிரிக்கிறதோ அழுகிறதோ என்று தெரியவில்லை. இந்தப் பிரச்சினையை நினைத்தக் கொண்டு ஊருக்குப் போகப் போகிறாய் என்று சொல்ல…..

இன்றைக்கு எங்கடை நாட்டிலேயிருந்து வருகின்ற செய்திகளைக் கேள்விப்படும் போது நம்பவே முடியாமல் இருக்கின்றது.  அதுவும் எங்களுடைய சின்னப்பிள்ளைகள் பற்றிக் கேள்விப்படும் போது மிகுந்த கவலையாகவும் இருக்கின்து. அவ்வளவு மோசமாம்.

ஒரே சிசுக் கொலைகள் என்றும் முறைகேடான கருத்தரிப்புக்கள், பாலியல் வன்முறைகள் என்றும் எங்கு பார்த்தாலும்  இதே செய்திகள் தான். வழிக்கு வழி இன்ரநெற் கபேகளும், தெருக்குத் தெரு தியேட்டர்களும் தானாம்.

முன்பு போர் என்றும் மண் மீட்பென்றும், பிள்ளைகளைக் கொண்டு போய் சீரழிச்சாங்கள். இப்ப உலகமயமாக்கல் என்றும் மேற்கத்தியக் கலாச்சாரங்கள் என்றும் அரசாங்கமும் அதற்குத் துணையான சக்திகளும் மிஞ்சியிருக்கிற எங்கடை பிள்ளைகளை நாசமாக்கிக் கொண்டிருக்கிறாங்கள்.

அவளின் முகமெல்லாம் மீண்டும் வாடி வதங்கி சுருங்கிக் கொண்டது. அவளை சமாதானப்படுத்துவது போல் அக்கா நீ ஒன்றையும் யோசித்துக் கவலைப்படதே, இது உனக்குமட்டும் தான் உள்ள பிரச்சினை என்று மட்டும் எண்ணி விடாதே…

இன்றைய பல பெற்றோர்கள் பிள்ளைகளினால் ஏற்படும் பதிய புதிய பிரச்சினைகளை நாளுக்கு நாள் சந்திச்சுக் கொண்டு தான் இருக்கின்றார்கள்.

சில பேர் பிள்ளைகளின் எத்தனையோ பிரச்சினைகள் தெரிந்தும் கதைக்க முடியாமலும் அதைத் தீர்க்க முடியாமலும் தங்கள் மனதுக்குள்ளேயே வைத்துப் புகைந்து மனநோயாளர்களாக மாறிக் கொண்டிருக்கின்றார்கள்.

இது எங்களுக்கு ஆரம்ப நிலை தான். நீ ஒன்றுக்கும் யோசியாதே.. என்றபடி எழுந்து போய் அவளின் தோழைத் தட்டிக் கொடுத்த போது இலேசான புன்னகையால் அவள் முகம் பிரகாசம் அடைந்தது.

மீண்டும் வழமையான அக்கா போல் காட்சியளித்தாள்.

சந்தர்பம் பார்த்து நான் பிள்ளையுடன் போய் கதைத்து அவளுக்கு தகுந்த மாதிரி விளங்கப்படுத்துவேன். இது பற்றி அத்தானுடனும் கதைத்து பிரச்சினையைப் பெரிதாக்காமல் இருந்து கொள் எனக் கூறி விட்டு வெளியே இறங்கி நடக்கத் தொடங்கினேன்.

நாளை வளர்ந்து வரும் எங்கள் குழந்தைகளையும் அதனால் ஏற்படப் பேகும் பிரச்சினைகள் பற்றியும் யோசித்த படியே நடையைக் கட்டினேன்.

வானிலே நடசத்திரங்கள் மெதுவாய்த் தலைகாட்டத் தொடங்கியது.

 

நிலாதரன்

26/05/2011