மீண்டும் தமிழக சட்டசபையில் நடந்த கேலிக்கூத்து. மீண்டும் ஈழ மக்களின் அவலத்தை வைத்து பிழைப்புவாதிகள் அரசியல் கூத்து நடத்துகின்றனர். தமிழக மக்களையும், ஈழ மக்களையும் ஏமாற்றும், மற்றொரு வரலாற்றுத் துரோகம்.

இலங்கை மீதான பொருளாதாரத் தடைக்கான கோரிக்கை, அரசியல் மோசடியாகும். நடைமுறைச் சாத்தியமற்ற பூச்சாண்டித்தனமாகும். கண்கட்டுவித்தை மட்டுமின்றி, கானல் நீராகும்.

 

 

 

இதற்கு மாறாக உண்மையில் தமிழக அரசினால் சாத்தியமான, இலங்கை அரசுக்கு நெருக்கடி கொடுக்கக் கூடிய தீர்மானங்கள் கொண்டு வந்திருக்க முடியும். ஆம் நாங்கள் முன்மொழிகின்றோம், முடிந்தால் அதை முன்வையுங்கள் பார்ப்போம்.

1. தமிழகத்தில் இலங்கைப் பொருளுக்கான பொருளாதாரத் தடையை முன்வையுங்கள்.

2. தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு ஏற்றுமதியாகும் பொருட்களை தடை செய்யுங்கள்.

இந்தத் தீர்மானத்தை கொண்டு வாருங்கள் பார்க்கலாம். இதை தமிழகத்தில் அமுல் செய்யமுடியும். இதை எல்லாம் ஜெயலலிதா கொண்டு வரவில்லை. இதைக் கொண்டு வரும்படி ஜெயலலிதாவை தமிழினவாதிகள் கோரவுமில்லை. இதனடிப்படையில் அவர்கள் போராடப் போவதுமில்லை. இதை தமிழகத்தில் அமுல் செய்து கொண்டு, மத்திய அரசை கோருவது தானே நியாயம். இதை செய்யும் அரசியல் நேர்மை எதுவும் இந்தக் கூட்டத்திடம் கடுகளவு கூட கிடையாது.

மக்களிடம் இலங்கைப் பொருட்களை வாங்குவதை பகிஸ்கரிக்கக் கோருவதையும், ஏற்றுமதி இறக்குமதிக்கு எதிராக தமிழக அளவில் போராடாமல் இருப்பதன் மூலம், ஜெயலலிதாவின் கானல் நீரை ஒரு தீர்வாக வாழ்த்தி கும்மியடிக்கின்றனர் தமிழினவாதிகள்.

அரசியல் அனாதையாகும் புலத்துப் புலிகளும், குறுந்தேசிய தமிழினவாதிகளும், இதைக் காட்டி சாமியாடுகின்றனர். நல்லகாலம் பிறக்கப் போகுது என்று, குடுகுடுப்பைக்காரன் போல் குடுகுடுத்துக்கொண்டு குறி சொல்லுகின்றனர்.

இப்படி எது சாத்தியமற்றதோ, எது இலங்கை அரசுக்கு நெருக்கடி தராதோ, அதை ஒரு தீர்மானமாக கொண்டு வருகின்றனர். கானல் நீரை நோக்கி ஓடும் மந்தைகள் போல், மக்களை ஏய்க்க ஒரு தீர்மானம். இப்படி தமிழக மற்றும் ஈழ மக்களை ஏய்க்கக் கூடிய, மோசடிகளை தங்கள் தீர்மானமாக கொண்டு வருகின்றனர். கடந்தகால தமிழக சட்டசபையில் முன்வைத்த ஈழத் தீர்மானங்கள் போல் இதுவும் மற்றொரு மோசடிதான்

 

பி.இராயாகரன்

08.06.2011