குறுகிய சிந்தனையும் நம்பிக்கைளும், அதைச் சார்ந்த இனவாத அரசியல் எல்லாம், மக்களின் சொந்த நடைமுறை மூலம் மறுப்புக்குள்ளாகின்றது. மக்கள் மேலான ஒடுக்குமுறை என்பது வெறும் இனம் சார்ந்ததல்ல. இதை மகிந்த குடும்ப சர்வாதிகாரம் தன் சொந்த நடைமுறை மூலம் எடுத்துக் காட்டுகின்றது.

இராணுவ ஆட்சியின்றி இலங்கையில் மகிந்த குடும்பத்தின் ஆட்சி இனி நீடிக்க முடியாது. இராணுவரீதியாக நாட்டை ஆளும் தயாரிப்புகள் ஆங்காங்கே அரங்கேறி வந்த நிலையில், தொழிலாளர் போராட்டத்தை இராணுவத்தைக் கொண்டு ஒடுக்கத் தொடங்கியுள்ளது.

 

 

 

இதுவரை காலமும் இராணுவம் என்றால் அது புலியை ஒடுக்கும் சிங்கள தேசபக்தர்கள் என்று, சிங்கள மக்களை நம்பவைத்தது போல் அல்ல என்பதை அந்த மக்கள் தங்கள் சொந்த நடைமுறை மூலம் உணருகின்றனர். இதை அவர்கள் தங்கள் சொந்த நடைமுறை மூலம் தான் உணர்ந்தனரே ஒழிய, குறுந் தமிழ்தேசியம் இதை அவர்களுக்கு விளக்கியிருக்கவில்லை. மறுபக்கத்தில் தமிழ் குறுந்தேசியம் சார்ந்து தமிழ் மக்கள் நம்பியது போல், இது சிங்கள இரணுவமல்ல என்பதை அந்த மக்கள் போராடித்தான் தமிழ் மக்களுக்கு நிறுவிக் காட்டுகின்றனர். குறுந் தமிழ்தேசியம் அந்தளவுக்கு தமிழ் மக்களை மந்தையாக்கி வைத்துள்ளது. தொழிலாளர் போராட்டத்தை ஒடுக்குகின்ற இராணுவம், அனைத்து மாயையையும் களைந்திருக்கின்றது.

இந்த இராணுவம் என்பது மக்களை ஒடுக்கும் கருவி. இது இனம், மதம், நிறம் என்று எதையும் பார்ப்பதில்லை. ஆளும் வர்க்க நலனுக்காக, மக்களை ஒடுக்கும் கருவி. அதனால் அது இனம் நிறம், மதம் சார்ந்து அனைவரையும் ஒடுக்கும். அதனால் தான் இது மகிந்த குடும்ப நலன் சார்ந்தும், ஆளும் வர்க்கம் நலன் சார்ந்தும் மக்களை ஒடுக்குகின்றது.

சிங்கள மக்களை ஒடுக்கும் காட்சிகள், யுத்தத்தின் பின்னான வெற்றி கொண்டாட்டங்கள் ஊடாக இலங்கையில் அரங்கேறுகின்றது. தமிழ் குறுந்தேசியம் இராணுவம் பற்றி கூறிய கூற்றுகள் அனைத்தும் இன்று பொய்யாகின்றது.

ஓய்வூதிய போராட்டத்தை மிருகத்தனமாகவே ஒடுக்கிய அரசு, அவர்கள் மேல் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியது மட்டுமன்றி துப்பாக்கிப் பிரயோகமும் செய்தது. இதை அடுத்து அதில் கொல்லப்பட்டவரின் உடலை, போராடிய மக்கள் தங்கள் சொந்த உணர்வுடன் அடக்கம் செய்ய முடியாத வண்ணம் இராணுவத்தைக் கொண்டு அரசு நல்லடக்கம் செய்கின்றது. தன் அதிகாரம் மூலம் குடும்பத்தை மிரட்டியும், நீதிமன்றத்தை வளைத்தும், இராணுவத்தைக் குவித்தும், தன் குடும்ப சர்வாதிகாரத்தை மக்கள் மேல் திணிக்கின்றது.

கொன்றவர்கள் தங்கள் இராணுவ அதிகாரம் மூலம் பிணத்தைப் புதைக்கின்றனர். மக்கள் இதற்கு எதிராக கிளர்ந்து போராடாத வண்ணம், மக்கள் தம் கோரிக்கைக்காக போராட முடியாத வண்ணம், எங்கும் இராணுவத்தை குவித்து மிரட்டுகின்றது.

இப்படி இலங்கையில் போராடும் ஜனநாயகம் மறுக்கப்படுகின்றது. மக்கள் தங்கள் கருத்தை சொல்லும் உரிமை கூட இன்று இலங்கையில் கிடையாது. இந்த நிலையில் தங்களை இந்த மக்கள் தான் ஜனநாயக பூர்வமாக தெரிவு செய்ததாக கூறுகின்ற, தேர்தல் சார்ந்த ஜனநாயக கேலிக்கூத்தை இதனுடாக நாம் உரசிப் பார்க்கமுடியும்.

ஓய்வூதியத்தின் பெயரில் அந்த மக்கள் சிறுக சிறுகச் சேமித்த சேமிப்பைத் திருடி, அதில் ஒரு பகுதியைக் கொண்டு பிச்சை போடமுனையும் அரசு, இராணுவத்தை கொண்டு ஏற்றுக்கொள்ளுமாறு மக்களை அச்சுறுத்துகின்றனர்.

தமிழன் சிங்களவன் என்ற கோட்டைத் தாண்டி, அரசுக்கு எதிராக மக்கள் போராட வேண்டிய படிப்பினையை இந்த சம்பவம் அழகாக எடுத்துக் காட்டுகின்றது. இதைவிடுத்து தமிழன் சிங்களவன் என்று கோட்டைக் கீறி முன்னிறுத்துகின்ற அரசியல் என்பது, மக்களுக்கு எதிரானது. இன்று மகிந்த குடும்பம் தன் ஆட்சியையும், இராணுவத்தையும் சிங்கள நலன் சார்ந்ததாக காட்ட முனைகின்ற அதே தளத்தில்தான், குறுந் தமிழ்தேசியமும் காட்ட முனைகின்றது.

ஆனால் சிங்கள மக்கள் அப்படிக் கருதவில்லை என்பதை, தங்கள் சொந்தப் போராட்டம் மூலம் அரசுக்கு எதிராக போராடிக் காட்டுகின்றனர். தமிழ்மக்கள், சிங்கள மக்களுடன் கைகோர்க்க வேண்டிய வரலாற்றுக் கடமைக்கு தடையாக தமிழ் குறுந்தேசியம் உள்ளது.

இதை தமிழ்மக்கள் தூக்கியெறிவதன் மூலம் தான், அரசுக்கு எதிராக சிங்கள மக்களுடன் தமிழ் மக்கள் சேர்ந்து போராடமுடியும். இதன் மூலம் தான், தமிழ் மக்கள் தங்கள் உரிமைகளையும் வென்றெடுக்க முடியும். இதைவிட வேறு எந்த வழியிலும் சாத்தியமில்லை.

 

பி.இரயாகரன்

05.06.2011