""கார்கில் போரில் இறந்துபோன இராணுவச் சிப் பாய்களுக்காகக் கட்டப்பட்ட ஆதர்ஷ் கூட்டுறவு சங்க வீடுகளை, அரசியல்வாதிகளும், முன்னாள் இராணுவத் தளபதிகளும், உயர் அதிகாரிகளும் விதிமுறைகளை மீறியும் மாற்றியும் வளைத்துப் போட்டுக் கொண்டார்கள்; அந்த அடுக்குமாடிக் குடியிருப்பு சுற்றுப்புறச் சூழல் விதிகள், கடற்கரை ஒழுங்காற்றுச் சட்டம், நகர்ப்புற வளர்ச்சி விதிகளை மீறிக் கட்டப்பட்டுள்ளது'' என்பதைத் தாண்டி, ஆதர்ஷ் கூட்டுறவு சங்க ஊழல் பற்றி ஊடகங்கள் எழுதுவது கிடையாது. ஆனால், ஆதர்ஷ் ஊழல் அரசியல்வாதிகள் அதிகார வர்க்கத்தின் முறைகேடுகள், ஊழலை மட்டும் குறிக்கவில்லை. அதையும் தாண்டி, மும்பய் மாநகரில் நிலவும் குடியிருப்புப் பிரச்சினைகள் பற்றிய உண்மைகளையும்; மும்பய் மாநகரின் பொது இடங்களை ரியல் எஸ்டேட் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள கார்ப்பரேட் நிறுவனங்கள், அரசியல்வாதிகள் அதிகார வர்க்கத்தின் உதவியோடு தமக்குச் சொந்தமாக்கிக் கொண்டு வருவதையும் உணர்த்துகிறது.

 

ரியல் எஸ்டேட் அதிபர்கள் மும்பய் நகரின் பொது இடங்களை நிழல் உலக மாஃபியாக்களின் உதவியோடு ஆக்கிரமிக்கும் போக்கு 1970களில் தொடங்கியது. இது, இன்று ரியல் எஸ்டேட் அதிபர்கள் அரசியல்வாதிகள் அதிகார வர்க்கக் கூட்டணியாக வளர்ந்திருப்பதோடு, மகாராஷ்டிர மாநில அதிகாரத்தையும் கைப்பற்றிக் கொண்டுவிட்டது.

 

1980க்குப் பின் மகாராஷ்டிர மாநில முதல்வர் நாற்காலியில் அமர்ந்த ஒவ்வொருவருமே நகர வளர்ச்சித் துறையைத் தமது கையில் வைத்துக் கொண்டு, இந்த ரியல் எஸ்டேட் கார்ப்பரேட் நிறுவனங்களின் பகற்கொள்ளைக்காகச் சட்டங்களை வளைத்திருக்கிறார்கள், மாற்றியிருக்கிறார்கள், மீறியிருக்கிறார்கள். குறிப்பாக, 1989இல் மகாராஷ்டிர முதல்வராக இருந்த சரத் பவார் அரசுக்குச் சொந்தமான 285 காலிமனைகளைத் தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனங்களிடம் ஒப்படைப்பதற்கு ஏற்றவாறு சட்டத் திருத்தம் கொண்டு வந்தார். இதன் பின் ரியல் எஸ்டேட் மாஃபியாக்கள் இந்த அரசியல் ஆதரவைப் பயன்படுத்திக் கொண்டு, முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு மும்பய் நகரின் பொது இடங்களை வளைத்துப் போட்டுக் கொள்ளத் தொடங்கினார்.

 

இதனையடுத்து 2001இல், மகாராஷ்டிர நகர வளர்ச்சி சட்டத்திலுள்ள ஓட்டையைப் பயன்படுத்திக் கொண்டு, மும்பய் நகரில் மூடப்பட்டுக் கிடக்கும் ஜவுளி ஆலைகளின் நிலங்களை ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் கைப்பற்றிக் கொள்வதற்கு ஏற்றவாறு சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டது. இச்சட்டத் திருத்தத்திற்கு உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளித்ததோடு, 285 ஏக்கர் ஆலை நிலத்தில் ஆடம்பர அடுக்குமாடிக் குடியிருப்புகளையும், வர்த்தக வளாகங்களையும் கட்டி விற்பதற்கு ரியல் எஸ்டேட் மாஃபியாக்களுக்கு அனுமதியும் அளித்தது. இந்த உத்தரவு அந்த ஆலை நிலங்களின் ஒரு பகுதியில் குடியிருந்து வந்த தொழிலாளர்களின் குடும்பங்களை நகரத்தை விட்டே துரத்தியதோடு, இனி ஏழைகள் மும்பய் நகரில் வீடு கட்டிக் குடியிருப்பதற்குத் துண்டு நிலம்கூடக் கிடைக்காது என்ற நிலையை ஏற்படுத்தியது.

 

அசோக் சவான், மகாராஷ்டிர மாநில வருவாய்த் துறை அமைச்சராக இருந்தபொழுதுதான், ஆதர்ஷ் கூட்டுறவு சங்க வீடுகளைத் தனியாரிடமும் விற்பதற்கு ஏற்றவாறு சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டது. இந்தச் சட்டத் திருத்தத்தைப் பயன்படுத்திக் கொண்டுதான் அசோக் சவானின் மாமியாரும், கொழுந்தியாளும், முன்னாள் இராணுவத் தளபதிகளும், அதிகார வர்க்கக் கும்பலும், புதுப் பணக்காரர்களும் அக்குடியிருப்பிலுள்ள வீடுகளை வளைத்துப் போட்டனர்.

 

அசோக் சவான் மகாராஷ்டிர மாநில முதல்வராக ஆன பின், ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் தாம் கட்டி வரும் அடுக்குமாடிக் குடியிருப்பு வளாகங்களில் பொது மக்கள் பயன்படுத்துவதற்கு ஏற்ற பூங்காக்களை அமைத்துக் கொடுத்தால், அக்குடியிருப்புகளின் கட்டுமான பரப்பை (Floor Space Index) அதிகப்படுத்திக் கொள்ளலாம் என்ற சட்டத்திருத்தத்தைக் கொண்டு வந்தார். இச்சட்டத் திருத்தம் பொதுமக்களுக்குப் பயன்பட்டதைவிட, ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் தெற்கு மற்றும் மத்திய மும்பய் நகர்ப் பகுதிகளில் 87 இலட்சம் சதுர அடி நிலத்தைச் சட்டபூர்வமாகவே ஆக்கிரமித்துக் கொள்வதற்குத்தான் பயன்பட்டது.

 

 

அடிக்கட்டுமான வசதிகளை மேம்படுத்துவது என்ற பெயரில் அசோக் சவான் அறிவித்த திட்டங்கள் அனைத்துமே ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் பகற் கொள்ளைக்கான திட்டங்கள்தான். மகாராஷ்டிர மாநிலத் தலைமைச் செயலகத்தை 4,000 கோடி ரூபாய் செலவில் புதுப்பிப்பது, பாந்த்ரா காலனியைப் புதுப்பிப்பது, மும்பய் துறைமுக இணைப்புச் சாலைத் திட்டம் ஆகியவற்றைக் கைப்பற்றிக் கொள்வதில் காங்கிரசுக்கும் அதனின் கூட்டணிக் கட்சியான தேசியவாத காங்கிரசுக் கட்சிக்கும் இடையேயும், ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்கு இடையேயும் பெரும் அடிதடியே நடந்ததாவும், சவான் முதலமைச்சர் பதவியில் இருந்து தூக்கியெறியப்பட்டதற்கு இந்தப் போட்டியும் ஒரு முக்கிய காரணம் என்றும் தற்பொழுது செய்திகள் கசிந்து வெளிவந்துள்ளன.

 

 

லாவாசா கார்ப்பரேஷன் என்ற கார்ப்பரேட் ரியல் எஸ்டேட் நிறுவனம், புனே நகருக்கு அருகே மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் ஒரு புதிய நகரினை அமைக்க அனுமதி கோரி மகாராஷ்டிர அரசிடம் விண்ணப்பித்ததையடுத்து, இந்நிறுவனத்திற்கு அனுமதி கொடுக்கும் வகையில் அம்மாநில அரசின் மலை வாசஸ்தல கொள்கையில் பல்வேறு திருத்தங்கள் செய்யப்பட்டன. இந்த நிறுவனம் விதிகளை மீறாமல் நகரினை அமைக்கிறதா என்பதைக் கண்காணிக்க அரசால் அமைக்கப்பட்ட சிறப்புத் திட்ட ஆணையத்தின் உறுப்பினர்களாக லாவாசா கார்ப்பரேஷனின் தாய்க் கம்பெனியான ஹிந்துஸ்தான் கட்டுமான நிறுவனத்தின் ஊழியர்களே நியமிக்கப்பட்டதோடு, லாவாசா கார்ப்பரேஷனின் உயர் அதிகாரியே அந்த ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார். சுற்றுப்புறச் சூழல் விதிகளையும், கடற்கரை ஒழுங்காற்றுச் சட்டத்தையும் மீறிக் கட்டப்பட்டுள்ள  ஆதர்ஷ் அடுக்குமாடிக் குடியிருப்பை இடிக்க உத்தரவிட்டுள்ள சுற்றுப்புறச் சூழல் அமைச்சகம், அதே போல பல விதிமுறைகளையும் சட்டங்களையும் மீறி முறைகேடான முறையில் கட்டப்பட்டுவரும் லாவாசா நகரினை இடிக்க உத்தரவிடவில்லை. அதற்கு மாறாக, எவ்வளவு விதிமுறைகள் மீறப்பட்டுள்ளனவோ, அதற்கு ஏற்றபடி அபராதம் கட்டிவிடுமாறு லாவாசாவிற்கு உத்தரவிட்டுள்ளது. மைய அரசு லாவாசாவிடம் இப்படிக் கருணை காட்டுவதற்கு காரணம், லாவாசா கார்ப்பரேட் நிறுவனம் என்பது மட்டுமல்ல; காங்கிரசின் கூட்டணிக் கட்சியான தேசியவாத காங்கிரசின் தலைவரும் விவசாயத் துறை அமைச்சருமான சரத் பவாரின் குடும்பத்திற்கும் லாவாசாவிற்கும் இடையேயுள்ள நெருக்கமும் காரணமாகும்.

 

லாவாசா மேற்குத் தொடர்ச்சி மலையை ஆக்கிரமித்துக் கொள்வதற்கும், அதனின் முறைகேடுகளுக்கும் அனுமதி அளித்துள்ள ஆளும் கும்பல், மும்பய் நகர்ப்புற சேரிகளை ஒவ்வொன்றாக இடித்துத் தள்ளுவதோடு, அங்கு தகரக் கொட்டகைகளைப் போட்டுக்கொண்டு குடியிருந்து வரும் உழைக்கும் மக்களை ஆக்கிரமிப்பாளர்கள் என முத்திரை குத்தித் துரத்தி வருகிறது. இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், சேரிகளில் குடிசை போட்டு வசிக்கும் உழைக்கும் மக்களை பிக் பாக்கெட் திருடர்கள் என அவமானப்படுத்தித் தீர்ப்பெழுதியது, மும்பய் உயர் நீதிமன்றம்.

 

மும்பய் நகருக்குள் கூலித் தொழிலாளர்கள் குடியிருந்து வரும் பகுதிகள், இன்று சேரிகளைப் புதுப்பிப்பது என்ற திட்டத்தின் அடிப்படையில் கட்டுமான கார்ப்பரேட் நிறுவனங்களிடம் சட்டபூர்வமாகவே தாரைவார்க்கப்பட்டு வருகின்றன. ஏறத்தாழ 10 இலட்சம் பேர் வசித்து வரும் ஆசியாவிலேயே மிகப்பெரிய நகர்ப்புறச் சேரியான தாராவியைக்கூட இவர்கள் விட்டுவைக்கப் போவதில்லை. தாராவியைப் புதுப்பிப்பதற்காக 15,000 கோடி ரூபாய் பெறுமான திட்டமொன்றை உருவாக்கி வைத்திருக்கிறது, மகாராஷ்டிர அரசு. மும்பய் நகரின் மையமான பகுதியில் 200 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ள 50,000 கோடி ரூபாய் பெறுமான இந்த நிலத்தை ஆக்கிரமித்துக் கொள்ள ரிலையன்ஸ் உள்ளிட்ட பல்வேறு கார்ப்பரேட் நிறுவனங்களிடையே இப்பொழுது நாய்ச்சண்டை நடந்து வருகிறது.

 

காங்கிரசு தேசியவாத காங்கிரசு கூட்டணி மட்டுமல்ல, எதிர்க்கட்சியான சிவசேனா பா.ஜ.க. கூட்டணியும் மும்பய் மாநகராட்சியில் தமக்குள்ள பெரும்பான்மை பலத்தைக் கொண்டு, பொது இடத்தை ஆக்கிரமிப்பதில் தமக்குரிய பங்கைப் பெற்று வருகிறது. பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு முன்பு பா.ஜ.க. சிவசேனா கூட்டணி மகாராஷ்டிர மாநிலத்தை ஆண்டு வந்தபொழுது, ஜவுளி ஆலை நிலங்களைக் கட்டுமான கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு விற்பதில் அதிகாரத் தரகனாகவே செயல்பட்டது. மேலும், அப்பொழுது முதல்வராக இருந்த சிவசேனாவின் மனோகர் ஜோஷியும் பால் தாக்கரேயின் மருமகன் ராஜ் தாக்கரேயும் இணைந்து 450 கோடி ரூபாய்க்கு தாங்களே மில் நிலங்களை விலைக்கு வாங்கி, ரியல் எஸ்டேட் வியாபாரத்திலும் இறங்கினர். இதன் மூலம் தமக்கு வாக்களித்த, மூடப்பட்ட மில் தொழிலாளர்களின் முதுகில் குத்தியது, பா.ஜ.க. சிவசேனா கூட்டணி. அரசின் பக்கபலத்தோடு ரியல் எஸ்டேட் மாஃபியாக்கள் நடத்தி வரும் இந்த ஆக்கிரமிப்பின் விளைவாக நகர்ப்புறச் சேரிகள் மட்டுமல்ல, தெற்கு மற்றும் மத்திய மும்பய் நகரில் இருந்து வரும் மத்தியதர வர்க்கக் குடியிருப்புகளும் ஒன்றன் பின் ஒன்றாக மறைந்து வருகின்றன. மும்பய்க்கு வெளியே வனப் பகுதியாகவும், விவசாய விளைநிலங்களாகவும், பழங்குடியின மக்களின் வசிப்பிடமாகவும் இருந்து வந்த வாசா விரார் பகுதி இன்று கட்டுமான நிறுவனங்களின் கைகளுக்கு மாறிச் சென்றுவிட்டது. மும்பய் மாநகருக்குள் பணக்காரர்கள் மட்டுமே குடியிருக்க முடியும், வர்த்தக நிறுவனங்களை நடத்த முடியும் என்ற நிலைமையை ரியல் எஸ்டேட் மாஃபியாக்கள் அரசியல்வாதிகள் அதிகார வர்க்கக் கூட்டணி உருவாக்கி விட்டது.

 

இந்தக் கூட்டணி நடத்திவரும் நில ஆக்கிரமிப்பு, ஊழல், அதிகார முறைகேடுகளுள் ஒரு சிறு துளிதான் ஆதர்ஷ் கூட்டுறவு சங்க வீட்டு ஊழல். ஆதர்ஷ் ஊழல் போன்று 170 வீட்டு மனை ஊழல் வழக்குகள் இவை அனைத்தும் சேரிகளைப் புதுப்பிக்கும் திட்டம் தொடர் பானவை மும்பய் நகர நீதிமன்றங்களில் மட்டும் நடந்து வருகின்றன. இந்த ஊழல்களைத் தனிப்பட்ட நபர்கள்தான் வெளிக்கொணர்ந்து நடத்தி வருகின்றனர். தனது ஊழல்களையும் அதிகாரமுறைகேடுகளையும் அம்பலப்படுத்திவரும் தன்னார்வத் தொண்டர்களைக் கொலை செய்துவிடும் அளவிற்கு ரியல் எஸ்டேட் மாஃபியாக்களின் பயங்கரவாதம் மும்பய் நகரில் தலை விரித்தாடுகிறது. மைய அரசு, ஆதர்ஷ் குடியிருப்பைத்தான் இடித்துதள்ள உத்தரவிட்டிருக்கிறதேயொழிய, பொது இடங்களை ஆக்கிரமித்து வரும் இந்தப் பகற்கொள்ளைக் கூட்டணியை ஒழித்துக் கட்ட சிறு துரும்பைக்கூட எடுத்துப் போடவில்லை என்பது இங்கு கவனிக்கத்தக்கது. · குப்பன்