சேலம் மாமாங்கத்திலுள்ள ஜி.டி.பி. கிரானைட்ஸ் நிறுவனத்தில் தொழிற்சங்கம் அமைத்த ஒரே காரணத்திற்காக, கடந்த அக்டோபர் 2007இல் இந்நிறுவனத்தைச் சேர்ந்த 53 தொழிலாளர்கள் திடீர் வேலைநீக்கம் செய்யப்பட்டனர். இச்சட்டவிரோத வேலை நீக்கத்துக்கு எதிராகவும், கடந்த மூன்றாண்டுகளுக்கும் மேலாக வேலையிழந்த தொழிலாளர் குடும்பங்கள் பட்டினியால் பரிதவிப்பதை உணர்த்தியும் மாவட்ட ஆட்சியரிடமும் தொழிலாளர் துறையிடமும் பலமுறை மனு கொடுத்தும் கூட, இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. உண்ணாவிரதம், கண்டன ஆர்ப்பாட்டம், மனிதச் சங்கிலி எனத் தொழிலாளர்கள், தமது குடும்பத்தோடு பல போராட்டங்களை நடத்திய போதிலும் ஆலை நிர்வாகமோ, அதிகார வர்க்கமோ அசைந்து கொடுக்கவில்லை.

 

 

இந்நிலையில் கடந்த 3.1.2011 அன்று மக்கள் குறைதீர்க்கும் முகாம் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்தபோது, பு.ஜ.தொ.மு.வின் ஜி.டி.பி. கிளைச் சங்கத்தைச் சேர்ந்த 70 தொழிலாளர்கள் தமது குடும்பத்துடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து மீண்டும் மனு கொடுத்தனர். இதுவரை 12 முறை மனு கொடுத்த போதிலும் எந்த நடவடிக்கையும் எடுக்காத ஆட்சியர் சந்திரகுமார், நிர்வாகத்திடம் பேசிவிட்டுப் பொங்கலுக்குப் பிறகு சொல்வதாக மீண்டும் தட்டிக் கழித்தார். கடந்த மூன்றாண்டுகளாக இதையே சொல்லி ஏய்த்து வருவதை அனைவரின் முன்பாகப் போட்டுடைத்த ஜி.டி.பி. கிளைச் செயலாளர் தோழர் கண்ணன், ""நீங்கள் சொல்கிற தேதியை எழுதிக் கையெழுத்து போட்டுக் கொடுங்கள்'' என்று கோரினார்.

 

ஆத்திரமடைந்த ஆட்சியர், ""நீ யார்? யாருக்கிட்டே பேசிக்கிட்டு இருக்கேன்னு தெரியுமா?'' என்று அதிகாரத் திமிரில் சீற, உடனே அனைத்துத் தொழிலாளர்களும் ""இன்றே எங்களுக்கு ஒரு முடிவைத் தெரிவியுங்கள்; உங்கள் அதிகாரத்தைக் கொண்டு ஜி.டி.பி முதலாளியை உடனே அழைத்துப் பேசுங்கள்'' என்று கூறி, அப்படியே தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதை ஊடகங்கள் படமெடுப்பதைக் கண்ட ஆட்சியர், ""என்ன, ரகளை பண்றீங்களா? வெளிய வர முடியாத செக்சன்ல தூக்கி உள்ள போட்ருவேன்!'' என்று மிரட்டிப் பார்த்தும் பலனில்லாததால், அனைவரையும் கைது செய்ய உத்தரவிட்டார். ஆட்சியர் அலுவலகத்தில் இப்படியொரு போராட்டத்தைப் பார்த்திராத அதிகாரிகளும் ஊழியர்களும் அதிர்ச்சியில் உறைந்து போயினர்.

 

பெண்கள், குழந்தைகளோடு கைது செய்யப்பட்டு ஒரு திருமண மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டிருந்த தொழிலாளர்கள், போலீசார் கொடுத்த மதிய உணவை மறுத்து உண்ணாநிலை போராட்டத்தை மேற்கொண்டனர். கைதான தொழிலாளர்கள் அன்று மாலையில் விடுவிக்கப்பட்டனர். ""குடும்பத்துடன் கைது செய்யப்பட்ட ஜி.டி.பி. தொழிலாளர்களை விடுதலை செய்!'' என்ற முழக்கத்துடன் நகரெங்கும் ஒட்டப்பட்ட சுவரொட்டிகளும், நாளேடுகளில் வெளியான செய்திகளும் இந்நியாயமான போராட்டத்தை மக்களிடம் பிரச்சாரப்படுத்தியதால், தலைமைச் செயலகத்திலிருந்து சேலம் மாவட்ட ஆட்சியரிடம் விளக்கம் கேட்டு நெருக்குதல் கொடுக்கப்பட்டதாக அதிகாரத் தாழ்வாரங்களிலிருந்து தகவல் கசிந்துள்ளன.

 

இப்போராட்டத்தின் விளைவாக, கடந்த ஜனவரி 1920 தேதிகளில் மாவட்ட ஆட்சியரின் முன்பாக பேச்சுவார்த்தைக்கு வந்த ஜி.டி.பி. நிர்வாகத்தினர், சங்கத்தின் முன்னணியாளர்கள் 8 பேரைத் தவிர மற்றவர்களை வேலைக்கு எடுத்துக் கொள்வதாகக் கூறியதை பு.ஜ.தொ.மு. ஏற்க மறுத்துவிட்டது. நிர்வாகத்தினர் இது பற்றிப் பரிசீலித்து மீண்டும் பேச்சுவார்த்தைக்கு வருவதாகத் தெரிவித்துள்ளனர்.

 

தொழிலாளர் உரிமைகளும் தொழிற்சங்க உரிமைகளும் பறிப்பு, திடீர் வேலைநீக்கம், பழிவாங்குதல்கள் எனத் தொடரும் முதலாளித்துவப் பயங்கரவாதத்தையும், அதற்குத் துணைநிற்கும் அதிகார வர்க்கத்தையும், மறுகாலனியாக்கம் என்றால் என்ன என்பதையும் ஜி.டி.பி. கிரானைட் தொழிலாளர்கள் தங்களது போராட்டத்தின் மூலம் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளனர். முதலாளிகளின் கொட்டத்துக்கும் அதிகார வர்க்கத்தின் திமிருக்கும் எத்தகைய போராட்டங்களின் மூலம் பதிலடி கொடுக்க வேண்டும் என்பதையும் பு.ஜ.தொ.மு. தலைமையிலான தொழிலாளர்களின் இப்போராட்டம் நிரூபித்துக் காட்டியுள்ளது. பு.ஜ. செய்தியாளர், சேலம்.